பூப்பெய்தாத சிறு பெண் சிவனுக்கா?

பிப்ரவரி 16-28

– திராவிடப்புரட்சி

 

பூப்பெய்தாத சிறு பெண் சிவனுக்கு_  கடவுளுக்கு எப்படித் திருமணம் செய்துவைக்கப்படுகிறாள் என்பதைக் கீழ்கண்ட செய்திகள் மூலமாகத் தெரிந்து கொள்ளலாம். இளகிய மனம் கொண்டோர் படிக்கக்கூடாத கொடுமை இது. பல பெண்கள் தமது மூடநம்பிக்கைகளின் காரணமாக தங்கள் மகள்களுடைய கன்னிமையை தமது கடவுளர் விக்கிரகங்களுள் ஒன்றுக்குத் தாரை வார்த்துத் தந்து அர்ப்பணிக்கிறவர்களாக இருக்கிறார்கள். அந்தப் பெண்ணுக்குப் பன்னிரெண்டு வயது ஆன உடனேயே, அந்த விக்ரகம் இடம் பெற்றுள்ள வழிபாட்டுத் தலம் அல்லது மடத்துக்கு அவளை அழைத்துக்கொண்டு சகலவிதமான மரியாதைகளுடன் போவார்கள். அந்தப் பெண்ணுக்குத் திருமணம் செய்விக்கப்படுவதற்கு முந்தைய நல விழாவொன்றை அவளது உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் ஒன்றுகூடி எடுக்கின்றனர்.

அவ்விடத்தின் கதவுக்கு வெளிப்பக்கமாக, மிக கடினமான கருங்கல்லால் ஆன ஒரு சதுரமான பீடம் ஓர் ஆள் உயரத்திற்கு அமைக்கப்பட்டிருக்கும். அதைச் சுற்றிலும் மரப்பலகைகளினால் ஆன தட்டிகள் வைக்கப்பட்டு அதனுள் பீடம் கண் மறைவாக இடம் பெற்றிருக்கும். இவற்றின் மீது பல எண்ணெய் விளக்குகள் வைக்கப்பட்டு அதனுள் அவை இரவில் எரிக்கப்படும். விழாவுக்காக மரப்பலகைகளை பட்டுத் துணித் துண்டுகளால் அலங்கரித்திருப்பார்கள். வெளியே உள்ள மக்கள் உட்புறம் நடப்பவற்றைக் காணமுடியாதபடி அத்துணிகள் உட்புறம் செருகப்பட்டு மறைப்பாக அமைக்கப்பட்டிருக்கும். மேலே சொல்லப்பட்ட கருங்கல்லின் மேல், குனிந்த நிலையில் இருக்கும் ஒரு மனிதனின் உயரத்திற்கு மற்றொரு கல் இருக்கும். அதன் நடுவே உள்ள துளையில் கூர்முனையுள்ள ஒரு குச்சி செருகி வைக்கப்பட்டிருக்கும்.

அக் கன்னிப்பெண்ணின் தாயார், தனது மகளையும் உறவுக்காரப் பெண்கள் சிலரையும் அழைத்துக்கொண்டு மரப்பலகைகளால் ஆன அந்த இடத்திற்குள் போய்விடுவாள். பிரமாதமான பூசைகளுக்குப் பின் உள்ளே நடந்த நிகழ்வு பார்வையில் படாததால் எனக்குச் சொற்பமான அறிவே உள்ளது, அந்தப் பெண், கல் துளையுள் செருகப்பட்டிருந்த கூர்முனையுள்ள குச்சியைக் கொண்டு தனது கன்னித்திரையை தானே கிழித்துக்கொள்வாள். கசியும் குருதியை அந்தக் கற்களின் மேல் சிறிய துளிகளாகத் தெளித்துவிடுவாள். அத்தோடு அவர்களின் விக்கிரக ஆராதனையும் நிறைவடையும்.

கண்ணால் கண்ட விவரங்களை இவ்வாறு பதிந்திருப்பவர் துவார்த்தே பார்போசா.

மேற்கண்ட செயல் மூலம் நமக்குத் தெரியவருவது, கடவுளான சிவனின் பிரதிநிதிக்கு, பூப்பெய்துவதற்கு முன்னரே அப்பெண் திருமணம் செய்து வைக்கப்பட்டிருக்கிறாள் என்பதே. இது வெளிப்படையாக ஆண்குறி (லிங்க) வழிபாட்டுடன் தொடர்புடையதாக இருக்கிறது. சிவனுக்கு இத்தகைய பெண்களைத் திருமணம் செய்து வைப்பதற்குச் சமமான ஒரு சடங்காக இது கருதிக்கொள்ளப் பட்டிருக்கக்கூடும் என்று துவார்த்தே பார்போசா தெரிவிக்கிறார்.

பிற்காலத்தில், ஒரு சுபயோக சுபதினத்தில், இதர ஆலய ஊழியர்கள் அனைவரின் முன்னிலையிலும் இந்தச் சடங்கு நிகழ்த்தப்பட வேண்டும் என்று காட்டாயமாகியிருக்கிறது.

ஆயிரக்கணக்கான பருவமெய்தாத சிறு குழந்தைகளைப் பாலியல் வல்லுறவு கொள்ளவைத்துள்ள இந்துக் கடவுள்களை நினைத்தால் இவற்றைக் கடவுள்களாக ஏற்றுக்கொள்ள முடியுமா? நாகரிகமடைந்த இந்தக் காலத்திலும், இந்து மதம் குறித்த புரிதல் இல்லாமல், தன்னை இந்துவாக _ பெருமையாகக் கருதும் ஒவ்வொருவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்! முகநூலில்  இந்தக் கொடூர  செய்தியைப் பதிவு செய்திருந்தேன். அதனைப் படித்த சில தோழர்கள்  இதற்கு ஆதாரம் இருக்கிறதா? என்று கேட்கிறார்கள்!

இதற்கான ஆதாரம், முனைவர் கே.சதாசிவன் அவர்களின் ஆய்வு நூலான தமிழகத்தில் தேவதாசிகள் என்ற நூலில் உள்ளது.

அந்த நூலை அவர் சாதாரணமாக கதை வடிவில் வெளியிடவில்லை என்பது கூடுதல் சிறப்பு. நூற்றுக்கணக்கான ஆதாரங்களை அள்ளிக் கொடுத்துள்ளார் நூலில். இந்த நூலை எழுதியுள்ள கே.சதாசிவன் அவர்கள் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறை மேனாள் பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர், கலைப்புல ஆசிரியர் குழு. இவருடைய எம்.ஃபில் மற்றும் முனைவர் பட்டப்படிப்புகள் தேவதாசி முறை பற்றியவை. சமூகவியல் மற்றும் புதைபொருள் இயல் ஆகியவற்றிலும் இவர் கல்விபுல பட்டங்கள் பெற்றவர்.

தேவதாசிகள் தொடர்பாக 145 கட்டுரைகள் எழுதியுள்ளார். 20ஆ-ம் நூற்றாண்டின் படைப்புத்திறன் படைத்த அறிவுஜீவிகள் 2000 பேரில் ஒருவர் என கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தினால் 2001ஆம் ஆண்டில் தேர்வு செய்யப்பட்டவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *