ஜெபம்-ஜெயம்-தருமா? – 2

பிப்ரவரி 16-28

விசா பாலாஜி – மலையாள வேளாங்கண்ணி வங்காள பான் பீபி

– சு.மதிமன்னன்

விசாவுக்கும் விநாயகனாம்

மருத்துவம், பொறியியல் போன்ற கல்விகளைக் கற்றுத் தருவதற்கு ஒவ்வொரு மாணவனுக்கும் இலட்சக்கணக்கில் அரசுகள் செலவு செய்கின்றன. அவர்களின் செலவுக்கு மக்களின் வரிப்பண வருவாய் செலவு செய்யப்படுகிறது என்பது சொல்லித் தெரிய வேண்டுவதில்லை. படித்து முடிந்ததும் அவர்களின் சேவையை ஏழை எளிய இந்திய மக்கள் பயன்படுத்திக் கொள்ள எதிர்பார்ப்பதும் தவறல்ல. ஆனால், நடைமுறை என்ன? உயர்ஜாதிப் பையன்களும் வசதி வாய்ப்புள்ள பணக்காரப் பையன்களும் அமெரிக்காவுக்கு ஓடிப்போய் நிறையப் பணம் சம்பாதித்துத் தம் பெண்டு, பிள்ளைகளுக்குச் செலவு செய்தும் சேமித்து வைத்தும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இத்தகைய வாய்ப்பு வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு அனைவருக்கும் கிட்டுவதில்லை. அமெரிக்காவின் விசா கிடைப்பது மிகவும் கடினமாக இருக்கிறது. இதைப் பயன்படுத்திக் காசு பார்க்கும் வேலைக்குக் கடவுளைப் பயன்படுத்துகிறது புரோகிதப் பார்ப்பனக் கூட்டம்.

விசா பாலாஜி என்று ஒரு கடவுளை உற்பத்திசெய்து விட்டார்கள். அய்தராபாத் நகரில் உள்ள இக்கோயிலை 11 முறை சுற்றி வந்தால் அமெரிக்கா போவதற்கு விசா கிடைத்துவிடுமாம். விசா கிடைத்த பிறகு 108 முறை சுற்றி வந்து வேண்டுதலை நிறைவு செய்து நன்றிக் கடனைக் கழிக்க வேண்டுமாம். மனிதன்தான் கடவுளைக் கற்பித்தான் என்று பெரியார் சொன்னது சரிதானே!

வருமானம் பிரதானம்

இந்தப் புளுகை அவிழ்த்து விட்டுக் காசு பார்க்கும் காரியத்தில் இறங்கி இருப்பவர்கள் மதபூஷி சவுந்தரராஜன் மற்றும் சீனுவாச ராகவாச்சாரி எனும் இரண்டு பார்ப்பனர்கள். உண்டி வருமானம் முழுவதும் இவர்கள் இரண்டு பேரின் தொப்பைக்கே! வருமானம் ஆயிரக்கணக்கில். பார்த்தது அரசாங்கம். இந்து அறநிலையப் பாதுகாப்புச் சட்டப்படி ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரத்திற்குமேல் இருப்பதால் உண்டியல் வருமானத்தை அரசுக்குச் செலுத்த வேண்டும் என்றது. கோயிலும் உண்டியலும் நிருவாக அதிகாரியின் கட்டுப்பாட்டுக்கு வரும் என்று கூறியது. பார்ப்பனப் பெருச்சாளிகள் இரண்டும் என்ன செய்தன தெரியுமா? 2001ஆம் ஆண்டில் உண்டியலை எடுத்துவிட்டார்கள். நேரடியாக வருமானம் அவர்கள் கையில்/வாயில்/வயிற்றில்/பையில் போய்ச் சேர்ந்து கொண்டிருக்கிறது. கடவுளைப் பரப்புகிறவன் அயோக்கியன் என்று தந்தை பெரியார் சொன்னது சரிதானே!

இந்தப் பித்தலாட்டம் தொடங்கப்பட்டது 1983ஆம் ஆண்டில்தான்! என்றாலும் கோல்கொண்டா கோட்டையைவிடப் பழசு என்று கதைகட்டி விட்டுள்ளனர். இதை நம்பி 4 ஆயிரம் பேர் நாள் ஒன்றுக்கு வருகிறார்கள். அமெரிக்க நாடு கண்டுபிடிக்கப்பட்டு மக்கள் குடியேறி சுமார் 300 ஆண்டுகள் ஆகின்றன. அறிவியலில், பணத்தில் பெரிய நாடாகி ஏறத்தாழ 150 ஆண்டுகள் இருக்கும். அந்த நாட்டுக்குப் போகவேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டு 50_60 ஆண்டுகள்தான் ஆகின்றன. விசா முறைக்கும் அதே வயதுதான். இந்த நிலையில் முகலாயர் காலத்து கோல்கொண்டா கோட்டையைவிட மூத்தது என்ற கதையை நம்பி நான்காயிரம் பேர் போகிறார்கள் என்றால், கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி எனப் பெரியார் சொன்னது சரிதானே!

அரேபியக் கடவுள்

வங்காளப் புலிகள் வாழும் இடம் சுந்தரவனக் காடுகள். கங்கை_பிரம்மபுத்திரா நதிகளின் டெல்டா பகுதியான சுந்தரவனம் உலகின் பெரிய டெல்டா. இந்தக் காடுகளில் புலிகள், சதுப்புப் பகுதிகளில் முதலைகள், கொடிய பாம்புகள், மனிதர்கள் வாழ்கின்றனர். விறகுகளை வெட்டியும், காட்டுப் பொருள்களைச் சேகரித்தும் வாழ்க்கையை ஓட்டும் ஏழை மக்கள் புலிகளுக்குப் பயந்து கிலியுடனே வாழும் சோகம்! இவர்களைக் காத்து வருவது பான் பீபி எனும் கடவுளாம்! முசுலிம் பெயராக இருக்கிறது என்று திகைக்கிறீர்களா? ஆம், சரிதான்! அது அரபிப் பெயர்தான்! புலிகளின் அரசன் தட்சினராய் என்பவனைக் கொல்லும் சக்தி படைத்த கடவுள் அரபு நாட்டிலிருந்து இறக்குமதியானதுதான்! முசுலிம் பக்கீர் ஒருவருக்குப் பிள்ளை இல்லையாம். அல்லா அவருக்குக் காட்சி தந்து பிள்ளைகளைப் பெற்றுக் கொடுத்ததாம். பிள்ளைகளை வளர்த்து சுந்தரவனத்திற்கு அனுப்பிட வேண்டும் என்பது நிபந்தனையாம். இரட்டைப் பிள்ளைகள் பிறந்தனவாம். பெண்ணுக்குப் பெயர் பான்பீபி. ஆணுக்குப் பெயர் ஷா ஜங்லி. இரண்டுக்கும் சுந்தரவனத்தில் கிடைக்கும் களிமண்ணால் ஆக்கப்பட்ட பொம்மைகள். இந்திய பாணி/ இந்துமத பாணியில் உடைகள். கோயில்கள். இதைக் கும்பிடாமல் யாரும் வீட்டை விட்டு வெளியே போக மாட்டார்கள். இந்தப் பக்தர்களில் இந்து, கிறித்துவ, முசுலிம் மதத்தவர் எல்லாரும் அடக்கம்.

அண்ணன், தங்கை கடவுள்களில் தங்கை பான்பீபி கையில் துக்கி எனும் குழந்தை உண்டு. யாருக்குப் பிறந்ததோ, அதன் சொந்தக்காரர்கள் புலிகளின் அரசனுக்குப் பலியாகக் காட்டில் விட்டுவிட்டுப் போய்விட்டனராம். பான்பீபி குழந்தையைத் தூக்கிக் கையில் வைத்துக் கொண்டு இருக்கிறதாம்.
அச்சப்பட்டவன் ஆண்டவனைக் கற்பித்து விட்டான்!

நாய்க்கு சீமைச்சரக்கு

குஜராத் மாநிலத்தில் அகமதாபாத்தில் பைரவநாதர் கோயில். பைரவர் என்றால் நாய். நாயும் கடவுள்தான் இந்துமதத்தில். இந்தக் கோயிலும் கடவுளும் ஞாயிற்றுக் கிழமைகளில் போதையில் தள்ளாடும். குஜராத் மாநிலத்தில் மது விற்பனை கிடையாது. வெளிப்படையாக இல்லாமல் கள்ளச்சாராய விற்பனை கனஜோர்! இல்லாவிட்டால் கடவுளுக்கு எப்படிச் சாராயம் தருவது? இந்தியச் சரக்கு இந்தக் கடவுளுக்குக் கூடாதாம்! அந்நியச் சரக்குதான் தரப்பட வேண்டுமாம்! அதுவும் கிடைக்கிறது. மோடியும் அதன் புகழ்பாடும் அருவிகளும் கவனிக்க வேண்டும்.

அந்நிய மது அருவிபோல் கொட்டுகிறது குஜராத்தில்!

ஞாயிற்றுக் கிழமை மாலை! கோயிலில் ஏராள கூட்டம். அர்ச்சனைத் தேங்காய்கள் வெளிப்படையாகச் சேகரிக்கப்பட்டு, படைத்து உடைத்து, ஒருபாதியைப் பக்தர்களிடம் கொடுத்து விடுவார்கள். இங்கிலீஷ் சாராயம் கமுக்கமாக வாங்கிக் கொள்ளப்படும். அளவு முக்கியமல்ல, ஓர் அவுன்ஸ் இருந்தால்கூடப் போதும். அர்ச்சகர் ரகசியமாக வாங்குவார். ஓர் அவுன்ஸ் சாராயத்தை விக்கிரகத்தின் மீது ஊற்றிவிட்டு மீதியை ஒருபக்கமாக வைத்துக் கொள்வார். அவருக்கு அது! பாதித்தேங்காயைத் திருப்பித் தருவதுபோல இதைத் திருப்பித் தரவே மாட்டார். தேவ அமிர்தம் அல்லவோ!

இந்தப் பூசை எதற்காம்? காதல் வெற்றி, கருத்தரித்தல், நல்ல வேலை என இப்படிப்பட்ட வேண்டுதல்கள். நடந்துவிட்டால் மீண்டும் பாட்டில் மதுவுடன் திரும்ப வருவார்களாம்!

குஜராத்திகள் மாமிசம் சாப்பிட மாட்டார்களாம்! மது குடிப்பார்களாம் அவர்களின் கடவுள்! கோயிலில் கற்ப்பூர வாடைக்குப் பதில் சீமைச்சாராய வாடைதான்!

மலையாள வேளாங்கண்ணி

கேரளா, பைத்தியக்காரர்கள் வாழும் இடம் என்றார் விவேகானந்தன். கொச்சித் துறைமுகத்தின் கழிமுகப் பகுதியில் வள்ளர் பாதம் எனும் சிறுதீவு. அதில் ஒரு கிறித்துவக் கோயில். கருணை மேரிக்கான கோயில்! பொம்மை போர்ச்சுகல் நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்டது. 1676இல் நடந்த வெள்ளத்தில் கோயிலே மூழ்கடிக்கப்பட்டுவிட்டது. திவான் புதுப்பித்துக் கட்டிக் கொடுத்தார். புளியாத் ராமன் வலியச்சன் எனும் இந்து. அவரைப் பெருமைப்படுத்தும் வகையில், செப்டம்பர் 24இல் கோயிலின் விளக்குகளை ஏற்றும் உரிமை அவரின் குடும்பத்தாருக்கு இன்றளவும் தரப்படுகிறது.

1752ஆம் ஆண்டு மே 23இல் படகில் போய்க் கொண்டிருந்த மீனாட்சி அம்மாவும் அவளது ஒரு வயதுக் குழந்தையும் படகில் பயணித்து எர்ணாகுளம் போகும்போது படகு கவிழ்ந்து மூழ்கிப் போனது. தேடிப் பார்த்து பிணம்கூட கிடைக்காமல் போனது. ஆனால், அன்றிரவு பாதிரியின் கனவில் மீனாட்சி அம்மாவும் குழந்தையும் கடலுக்கு அடியில் இருப்பதாகத் தெரிந்ததாம். தேடிப் பார்த்ததில் அவர்கள் இருவரும் உயிருடன் மீட்கப்பட்டனராம்! கதை விடுவதில் இந்துக்களுக்குச் சளைத்தவர்கள் அல்லர் கிறித்துவர்கள் என்றுதான் கூறமுடியும்! வேளாங்கண்ணி மாதா கோயில் மண்டபம் மாதிரி வள்ளர்பாதம் மாதா கோயிலிலும் மீனாட்சி அம்மா, குழந்தை படம் வரைந்து  வைத்து இன்றளவும் ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.

அற்புதங்கள் ஆண்டு ஒன்றுக்கு 15 வீதம் நடக்கின்றன என்று அளக்கிறார் பாதிரி தண்ணி காட்(THANNIKOTT)! தண்ணி காட்டுகிறார் அல்லவா!

நெருப்புத் தெய்வம்

அரேபியர்களின் தாக்குதலுக்குப் பயந்து பாரசீக நாட்டை விட்டுத் தப்பி ஓடிய பார்சிகள் கட்டிய நெருப்புக் கோயில் (FIRE TEMPLE)இருக்குமிடம் குஜராத் மாநிலம் உதவடா எனும் இடம்! 1742ஆம் ஆண்டு அக்டோபர் 28இல் கட்டினார்களாம்! பார்சிகளின் சிறப்பான ஒன்பது கோயில்களில் இதுவும் ஒன்று.

கோரிக்கை வைத்து வேண்டிக்கொள்வது பார்சிகள் ஜெரராஷ்டிரிய மதத்தில் கிடையாது. மனதில் இருக்கும் ஆசைகள் நிறைவேறும் பட்சத்தில் அவர்களின் கடவுளுக்கு நன்றிக் காணிக்கை செலுத்துவார்களாம்! இசுலாமியர்களுக்கு மெக்கா போல, பார்சிகளுக்கு உதவடா கோயிலாம்!இருக்கட்டுமே!

ஃபிரான்சின் லூர்து மேரி

ஃபிரான்ஸ் நாட்டில், லூர்து எனும் ஊரின் கேவ் நதிக்கரையில் பெர்னாடெட் சவுபிரியஸ் எனும் 14 வயதுப் பெண்ணுக்கு 18 முறை காட்சி தந்தாளாம் கன்னி மேரி எனும் ஏசுவின் தாய்! இந்தக் கதையைச் சொன்னதற்காக அச்சிறுமி புனிதர் (SAINT) ஆக்கப்பட்டாள்.

அவ்வூரிலுள்ள ஊற்று நீர் சகல நோய்களையும் தீர்க்கும் சக்தி பெற்றது என்ற கதையைக் கத்தோலிக்கர்கள் கட்டி விட்டனர். கடந்த 155 ஆண்டுகளில் இந்தக் கதையை நம்பி சுமார் 20 கோடிப்பேர் இந்த ஊருக்குப் புனித யாத்திரையாக வந்துள்ளனர். சுமார் 70 அற்புதங்களை லூர்துமேரி நிகழ்த்தியுள்ளதாக கத்தோலிக்கத் திருச்சபை கூறுகிறது. சும்மா, கதை விடாதீர்கள் என்ற அறிவுலகக் கருத்துக்கு இணங்க, குணம் பெற்றவர்கள் மருத்துவர் குழுவின் முன்பாக சோதனை செய்துகொள்ள வேண்டும் என்று ஏற்பாடாகியது. 1947 முதல் 1990 முடிய 1000 பேர் ஆஜராகினர். அவர்கள் கூற்று சோதிக்கப்பட்டு 944 பேர் கூறுவது பொய் என நிரூபிக்கப்பட்டது.

மற்றையோர் அதுவரை சாப்பிட்ட மருந்துகளின் காரணமாகக் குணமடைந்து இருக்கலாம்தானே! கடவுள் குணப்படுத்துகிறது என்றால் மருத்துவர்கள் ஏன்? மருத்துவமனைகள் ஏன்? மருத்துவம் சொல்லித்தரும் கல்லூரிகள் ஏன்? இவற்றையெல்லாம் கத்தோலிக்கக் கிறித்துவர்களே நடத்துவது ஏன்? அவர்களின் கடவுளின் மீது, அதன் சக்தியின்மீது அவர்களுக்கே நம்பிக்கை இல்லையா?
சிக்கன வேண்டுதல்

ஒடிசா மாநிலம் கல்பதார் கிராமத்தில் உள்ள பொகாரி பாபா கோயிலில் பக்தர்கள் தங்கள் கோரிக்கைகளைக் கடிதம் மூலம் எழுதி அனுப்புகிறார்கள். வீண் செலவு மிச்சம்.

கருநாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள தொட்ட கணேச குடி (நந்திகோயில்) எனும் கோயிலில் பக்தர்கள் தங்கள் வேண்டுதலை மாட்டின் (பொம்மைதான்) காதில் கூறுகிறார்களாம்! செவிடன் காதில் சங்கு ஊதுவதைவிட மோசமான மடத்தனம்!

டெல்லியில் ஃபெரோஸ் ஷா கோட்லா மசூதியில் கடிதம் எழுதலாம், சுவர்களில் நாணயத்தை வைத்தும் பால் ஊற்றியும் இனிப்பு, பழங்கள், மாமிசம் வைத்தும் கெட்ட ஆவிகளை விரட்டலாமாம்! காட்டு விலங்காண்டித்தனம் அல்லவா!

டெல்லி அனுமன் கோயிலுக்குக் கடிதம் மூலம் வேண்டுதல் செய்யலாம். பூசாரி கடிதத்தைப் படித்து காற்று வழியாகக் கடவுளுக்கு அனுப்புவாராம்! அனுமனே காற்றுக்குப் பிறந்ததுதானே!

கான்பூரில் உள்ள காளிகோயிலில் பூட்டு காணிக்கை செலுத்தி வேண்டுதல் செய்யப்படுகிறதாம்! பரவாயில்லை, கடலூர் மாவட்டம் திட்டக்குடிக்குப் பக்கத்தில் உள்ள கிராமத்தில் செருப்பு கட்டி வேண்டுதல் செய்யப்படுகிறது!

ஆந்திராவில் புட்டபர்த்திக்கு அருகில் உள்ள புளியமரத்திடம் பக்தர்கள் கோரிக்கை சொல்கின்றனர். அவர்கள் கேட்பதைப் புளியமரம் செய்கிறதாம்! புளியுடன் கூடுதல் பலனோ?

சிக்கிம் மாநிலம் கிச்சியோபைரியில் உள்ள ஏரியில் ஒரு முழுக்குப் போட்டால், நினைப்பது நடக்குமாம்! அழுக்கும் போகிறது, ஆசையும் நிறைவேறுகிறதோ? பவுத்தக் கொள்கை எப்படிப் போய்விட்டது பார்த்தீர்களா?

உத்திரப் பிரதேசம், அரித்வாரில் உள்ள மானசாதேவி கோயில் மரத்தில் கயிறு கட்டினால் ஆசை நிறைவேறிவிடுமாம். கோயிலின் கடவுளின் (மானசா) பெயரே ஆசை என்பதால் நல்லாத்தான் கயிறு திரித்திருக்கிறார்கள்!

டெல்லி நிஜாமுதீன் தர்காவின் சன்னல்களில் சிவப்புக் கயிறு கட்டித் தொங்க விட்டால் நினைப்பது நடக்குமாம்! வேலைப்பாடு உள்ள ஜன்னலை மறைத்து சிவப்பு நூல்கள் உள்ளன. ஆசைகளும் அவரவர் மனதில் அப்படியே கிடக்கின்றனவா எனும் விவரம் பக்தர்களால் தெரிவிக்கப்படவில்லையாம்!

அரியானா மாநிலம், குருட்சேத்திராவில் உள்ள சையத் இப்ராகிம் பாதுஷா வழிபாட்டிடத்திற்கு சுவர்க்கடிகாரம் தந்து வேண்டிக் கொண்டால், குறித்த நேரத்தில் ஒரு இடத்திற்குப் போக முடியுமாம்! வண்டி குறித்த நேரத்திற்குப் போக தர்காவுக்கு எதற்குக் கடிகாரம்? வண்டி ஓட்டிக்கல்லவா தரவேண்டும்!

கேரளாவில், மலயாட்டூர், செயின்ட் தாமஸ் கோயிலுக்கு கனமான மரச்சிலுவை தாங்கி நடந்தால், குழந்தை பிறக்குமாம்! தங்கச் சிலுவை அணிந்த பாதிரியர்கள் உலகம் முழுவதுமே கர்ப்பதானம் செய்யும் கைங்கர்யத்தில் ஈடுபடும் செய்தி நாறுகிறதே! கனமான சிலுவை எதற்கு?

புரட்சிக்கவிஞர் பாடினாரே! பெருமதங்கள் எனும் பீடை பிடியாதிருக்க வேண்டும்

ஒரு மதமும் வேண்டாம் – தம்பி

உண்மை உடையார்க்கே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *