– ந.தேன்மொழி
சாணிக்குப் பொட்டிட்டு
சாமியென்று கூத்தாடி
வாசலிலே குத்தவைச்சு
வாழை இலையிட்ட
எனதருமைச் சகோதரியே!
சாணியதை நீமிதித்தால்
சாமியென்று சொல்வாயா?
சாணமென்று சொல்வாயா?
மலையுடைத்துப் பாறையாக்கி
சிலைவடித்து சாமியென்றாய்
நட்டகல்லையும் விடவில்லை
நெடுமரமாய் விழுந்திட்டாய்
அம்மன்தாலி அறுந்ததென
அய்யன் சொன்னான் கோவிலிலே
ஆளுக்கொரு புதுத்தாலி
அணிந்தீர் அவசரமாய்
தன்தாலி அறுமென
தெரியாத சாமியிடம்
அடகு வைத்தாய்
உன்தாலியை சகோதரியே!
காவியுடைக் கயவர்கள்
காலடியில் சரணம்
சாமியென்று சொல்லி
அம்மணமாய் அவனாட
அவன்முன்னே மண்டியிடும்
மானமிழந்த சகோதரியே
பக்தியோடு பாம்புக்குப்
பால்வார்க்கும் பெண்ணினமே
பச்சிளம் குழந்தையை
பக்தியென்ற பேராலே
பாவியவன் ஏறிமிதிக்க
பால்நெஞ்சு பதறலையா?
பார்த்தவிழி துடிக்கலையா?
இப்படியொரு வேண்டுதலை
சாமியவள் கேட்டாளா?
கேட்கும் அவளுன்
சாமியா சகோதரியே?
எத்தனை சாமிகள்
எத்தனை ஆயுதங்கள்
பெண்மானம் தனைக்காக்க
எந்தசாமியும் வரவில்லை
எத்தனை ஆயுதங்கள்
இருந்தாலும் என்ன
எந்தசாமியும் நம்மைக்
காப்பாற்ற வாராது
சாமிக்கே காவல்
நாம்தானடி சகோதரியே
உணர்ந்து கொள்ள
இன்னும் எத்தனை
பெரியார் தேவை
சொல்லடி சகோதரியே!
தள்ளுபடி
வியாபாரம்
அர்ச்சகர்
ஆனந்த கிருஷ்ணனுக்கு ஆகம விதிகளெல்லாம் அத்துப்படி!
ஆனாலும் அதெல்லாம் இப்போது தள்ளுபடி!
ஆனந்த சயனத்திலிருக்கும் ஆதிகேசவனுக்கு வியர்க்கிறதாம்?!
ஏ.சி. எந்திரம்
கண்டுபிடித்தது
மாட்டுக்கறி உண்ணும்
மிலேச்சன் கேரியர்!
கருவாட்டு வியாபாரி
கந்தசாமியிடம்,
அதில பாருங்கோ,
ஆண்டவனுக்கு….ஹி ஹி
என்று சொல்லி ஆட்டையப் போட்டு
அதை கர்ப்பக் கிரகத்தில்
போட்ட பின்னே அலுப்பில்லாமல் போகிறது…
அர்ச்சகர் கேரியர் !
– க.அருள்மொழி, குடியாத்தம்.
கடவுள் எதற்கு?
காலைக் கடன்களைக்
கழிப்பது முதல்
இரவு படுக்கை விரித்து
இல்லாளுடன் இணைவது வரை
எல்லா வேலைகளையும்
நானேதான் செய்கிறேன்!
இடையில் எனக்கு
கடவுள் எதற்கு?
– கு.நா.இராமண்ணா, சீர்காழி
ராசிக்கல்
சாலையில்
வாகனப் புழுதியினூடே
தார்ப்பாய் விரித்து
ராசிக்கல் விற்பவருக்கும்,
தொலைக்காட்சி நிறுவனத்தின்
குளிர்சாதன அறையிலமர்ந்து
கேமராவுக்கு முன்
ராசிக்கல் விற்பவருக்கும்,
இடையே உள்ள
பொருளாதார இடைவெளியில்
நழுவி விழுகிறது
ராசிக்கல் மீதான நம்பிக்கை.
– பா.சு.ஓவியச்செல்வன், சென்னை
அவன் கடவுளாம்!
மண்ணைத் தின்பானாம்!
வெண்ணை தின்பானாம்!
பெண்ணைத் தின்பானாம்!
அவன் பெயர் கண்ணனாம்!
அவன் கடவுளாம்! நான் சொல்லல…
நான் சொல்லல…
நான் சொல்லவே இல்லை!
– ஞா.சந்திரகாந்த், திருச்சி