இன்றைய உலகில் மின்சாரத்தின் பயன்பாடு அதிக அளவில் உள்ளது. அதற்கான உற்பத்தித் திறனோ மிகவும் குறைவாக உள்ளது. இத்தகு நிலையில் சூரிய சக்தியைப் பயன்படுத்தி மின்சாரத்தைத் தயாரித்தனர். இதில், கிரிஸ்டலைன் சிலிகான் என்ற விலை உயர்ந்த பொருளும், பிளாட்டினத்தைவிட 10 மடங்கு அதிக விலை கொண்ட SpiroOmeTAD என்ற பொருளும் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு மாற்றுப் பொருளாக கேட்மியம் சல்பைட் பயன்படுத்தி குறைந்த விலையில் தயாரிக்கப்படும் சோலார் பேனல்களின் உற்பத்தித் திறனோ மிகவும் குறைந்த அளவில் உள்ளது.
தற்போது பெரோஸ்கைட் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் முறையினை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள். இது, பூமியில் அதிக அளவில் கிடைப்பதுடன், விலையும் மிகவும் குறைவு. பெரோஸ்கைட்டைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் சோலார் பேனல்கள் மிகவும் மெல்லியதாக இருப்பதால் பெரிய கட்டிடங்களில் வெயிலை மறைக்கப் பொருத்தப்படும் கருப்புக் கண்ணாடிக்குப் பதில் இதனைப் பயன்படுத்தலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள். சாதாரண சோலார் பேனல்களைவிட இரு மடங்கு மின்சாரத்தை உருவாக்கி நீண்ட தூரத்துக்கு எந்தவிதப் பாதிப்புமின்றிக் கடத்தும் சிறப்பினை பெரோஸ்கைட் பேனல்கள் பெற்றுள்ளமை இதன் தனிச்சிறப்பு.
ஒரு வாட் மின்சாரத்துக்கு 46 ரூபாய் என்ற இன்றைய சோலார் பேனல்களின் விலையினை 31 ரூபாய்க்குள் கொண்டு வந்தால் உலகில் உள்ள அனைத்துக் கார்களும் பெட்ரோலை விட்டுவிட்டு சோலார் கார்களாக மாறிவிடும்.
இன்ஹேபிடேட் என்ற அறிவியல் பத்திரிகை பெரோஸ்கைட் பேனல்கள் விற்பனைக்கு வந்தால் ஒரு வாட் மின்சாரம் 6 ரூபாயாகிவிடும் என்றும், சயின்ஸ் டெக் டெய்லி என்ற தொழில்நுட்பப் பத்திரிகை நாம் நினைத்துப் பார்க்க முடியாத மின்சாரப் புரட்சியை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளன.
ஒரு ஃபிலிம் போன்ற தகட்டில் பெயிண்ட் அடிப்பது போல இதனை உருவாக்கிவிடலாமாம். அடுத்தகட்ட வளர்ச்சியில், இது பேனலாக விற்பனை செய்யப்படாமல் சோலார் பெயிண்ட்டாக மாறவும் வாய்ப்பு உள்ளதாம். காருக்குப் புதுசா பெயிண்ட் அடித்தாலே போதும்…, பின்னர் பெட்ரோல் போடும் வேலையே இருக்காதாம்.