தசரதன் – இராமன் இராமாயணம்

பிப்ரவரி 16-28

– தந்தை பெரியார்

சென்ற இதழில் `கெடுவான் கேடு நினைப்பான் என்பது பற்றி தந்தை பெரியார் அவர்கள் நாத்திகப் பார்வையில் விளக்கம் அளித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக, ஆத்திக நோக்கில் இராமாயணத்தை உதாரணமாகக் கொண்ட பகுத்தறிவுக் கருத்து இந்த இதழில்…

ஆனால், இந்த வியாசத்தில், இப்பழமொழிக்கு (கெடுவான் கேடு நினைப்பான்) நாஸ்திக சம்பிரதாயமான கருத்தை ஆதாரமாக எடுத்துக் கொள்ளாமல்

ஆஸ்திக சம்பிரதாயமான கருத்தை ஆஸ்திகர்கள் என்பவர்களே சரியானபடி ஏற்றுக் கொள்ளுகின்றார்களா என்ற பிரச்சினையை முக்கியமாய் வைத்து வேடிக்கை முறையில், இராமாயணத்தின் நடவடிக்கை எப்படிப்பட்டது; அதைப் பிறர் எப்படி மதிக்கிறார்கள் என்கின்றவற்றை எடுத்துக் காட்டவும், இந்தப் பழமொழி ஆஸ்திக சம்பிரதாயப்படி பார்ப்பவருக்கு இராமாயணம் என்பது ஒரு படிப்பினையாகும் என்பதைக் காட்டவும் எழுதப்பட்டதாகும்.

இராமாயணப் புராணத்தின் கதைப்படி  தசரதனும், இராமனும், பரதனுக்குக் கேடு நினைத்ததால் கெட்டார்கள் என்பது இவ்வியாசத்தின் கருத்தாகும்.

இராமாயணக் கதைப்படிக்கு தசரதனுக்கு நான்கு ஆண் பிள்ளைகள். இவற்றுள் இராஜ்ஜியப் பட்டமானது பரதனுக்குச் சொந்தமானது. எப்படி எனில், பரதனுடைய தாயாராகிய கைகேயியை தசரதன் மணக்க ஆசைப்பட்டு, கேகய ராஜனிடம் சென்று அவனது பெண்ணான கைகேயியை தனக்குத் தரும்படிக் கேட்க, கேகய மன்னன், தசரதனின்  யோக்கியதையையும், நடத்தையையும் தெரிந்து, உனக்கு ஏற்கெனவே பல ஆயிரக்கணக்கான மனைவிகள் இருப்பதால் நான் என் மகளை உனக்குக் கொடுக்க முடியாது என்று மறுத்துவிட்டான். இதற்குத் தசரதன், அந்தப் பெண்ணின் மேல் ஆசையால், கேகய மன்னனிடம் வணங்கி, அய்யா எனக்கு எத்தனை மனைவிகள் இருந்தாலும், உன் மகளையே நான் பிரதான மனைவியாய்க் கொள்வேன். உன் மகள் வயிற்றில் பிறக்கும் பிள்ளைக்கே ராஜ்ஜிய பட்டாபிஷேகம் செய்வேன் என்று வாக்குத் தத்தம் செய்து கொடுத்து கைகேயியை மணந்து கொண்டான்.

அந்தப்படி மணந்து கொண்ட தசரதன் கைகேயியையே பிரதான நாயகியாக அனுபவித்து வந்து, அவள் மூலம் ஓர் ஆண் குழந்தையையும் (பரதனை) பெற்று, அது வளர்ந்து பெரியதாகி பட்டத்துக்கு யோக்கியமானவுடன் தசரதன் கெட்ட எண்ணங் கொண்டு, அதாவது ராஜ்ஜிய பட்டாபிஷேகத்தைப் பரதனுக்குக் கொடுக்காமல், இராமனுக்குக் கொடுக்க வேண்டுமென்று நினைத்துவிட்டான்.

இந்தவிதமான கெட்ட எண்ணம் தசரதனுக்கு உண்டாகும்படியாகவே இராமனும், மிக்க தந்திரமாக யோக்கியன் போலவும், தகப்பனாருக்கு மிகவும் வேண்டியவன் போலவும் நடந்து வந்ததுடன், தகப்பனாரின் ஆசைக்கு ஏற்ற வண்ணமாகவும் நடந்து வந்திருக்கிறான்.

இருவரின் கெட்ட எண்ணமும் முதிர்ந்து, கடைசியாக ஒருநாள் பட்டத்துக்கு (பரதன் வாக்குறுதிப்படி) உரியவனாகிய பரதனை அவன் பாட்டனார் ஊருக்கு அனுப்பி விட்டு, அவன் இல்லாத சமயம் பார்த்து திடீரென்று ஒரே நாளில் இராமனுக்குப் பட்டாபிஷேகம் செய்வதாய் ஏற்பாடு செய்து அவசர அவசரமாய் (திருட்டுத்தனமாய்) பட்டாபிஷேகக் காரியங்கள் செய்து சூழ்ச்சி செய்துவிட்டான்.

ராஜ்ஜியப் பட்டமானது பரதனுக்கு வெகு காலத்துக்கு முந்தியே தன் தகப்பனால் வாக்குக் கொடுக்கப்பட்டு விட்டாய் விட்டது என்பது இராமனுக்குத் தெரிந்திருந்தும், அதைச் சிறிதாவது இராமன் லட்சியம் செய்து தகப்பனிடம் மறுத்துக் கூறாமலும், அதுதான் போகட்டுமென்றாலும், சரியொத்த சகோதரனான பரதன் ஊரில் இல்லாதபோது இப்படிப்பட்டதொரு முக்கியமான காரியத்தைச் செய்வது யோக்கியமான காரியமாகாது என்றாவது தகப்பனுக்குப் புத்தி கூறாமலும், தான் புத்தி கூறியும் தகப்பன் ஒரு சமயம் இராமனின் யோசனையை ஒப்புக் கொள்ள மாட்டேன் என்று சொல்லி இருந்த போதிலும் கூட, பட்டத்துக்கு உரியவனும் என் அன்புள்ளவனுமான சகோதரன் பரதன் இல்லாமல் இப்படிப்பட்ட காரியத்திற்கு நான் சம்மதிக்க மாட்டேன் என்று ராமன் ஒரு வார்த்தையாவது சொல்லாமலும், ஆளில்லாத சமயம் பார்த்து, திடீரென்று தகப்பன் சொன்னவுடன், தானும் சம்மதித்து, பேராசையுடன் பட்டம் கட்டிக் கொள்ள இசைந்தான் என்றால், இவ்விருவரும்,  அதாவது தசரதனும், இராமனும் பரதனுக்குக் கேடு நினைத்தார்கள் என்ற முடிவின் பேரில் ஆஸ்திகர்கள் கொள்கைப்படியே, கேடு நினைத்தவர்கள் கெடாமல் இருக்க முடியாது என்பதை ஆஸ்திகர்கள் எல்லோரும் ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும்.

அன்றியும் இந்தச் சூழ்ச்சியை அறிந்த கைகேயியானவள், அதாவது பரதனுடைய தாயாரானவள், தன் புருஷனான தசரதனுக்குப் பல விதத்தில் எடுத்துச் சொல்லியும், பிடிவாதம் செய்தும், ஒன்றும் கேட்காமல் தசரதன் இவ்வுண்மைகளை மறைத்து கைகேயியைக் கெட்டவளாக்கி உலகம் முழுவதும் கைகேயியை நிந்திக்கும்படிச் செய்து தன் காரியத்தைச் சாதித்துக் கொள்ள முயற்சிக்கிறான்.

இச்சூழ்ச்சியும், பிடிவாதமும் எல்லாம் இராமன் அறிந்திருந்தும், பட்டாபிஷேகத்தை ஒத்தி வைக்கக்கூட தகப்பனுக்கு யோசனை சொல்லாததால் கடைசியாக, கேடு நினைத்தவர்கள் கெட வேண்டியதாகவே நேர்ந்துவிட்டது.

அதாவது எவ்விதம் என்றால், தசரதன் தனது சூழ்ச்சி வெளிப்பட்டு விட்டதால் இனி தான் அரசனாய் இருந்து ஆட்சி புரிவதில் உலகம் தன்னை மதிக்காது என்றும், இகழும் என்றும் கருதி தற்கொலை செய்து கொண்டு இறக்க வேண்டியவனேயாகி விட்டான்.

இராமனுடைய பேராசையையும், சூழ்ச்சியையும் நன்றாய் அறிந்த கைகேயி, இராமனை ராஜ்ஜியத்திற்குள் இருக்க விட்டால் பரதனுக்கு ஏதாவது கேடு செய்து விடுவான் என்று கருதி, ராஜ்ஜியத்தை விட்டு வெளியேறும்படிச் செய்துவிட்டாள். ஆனால், இராமன் இந்தப் பழியுடன் வேறு எங்கும் போய் வாழ்வதற்கு முடியாமல் காட்டிற்குப் போக வேண்டியதாய் முடிந்து விட்டது. காட்டிற்குப் போனாலும் அங்கும் சும்மா இராமல், மறுபடியும் எப்படியாவது, அயோத்திக்கு வந்து அரசாள வேண்டும் என்கின்ற ஆசையை வைத்துக் கொண்டு அதற்கு வேண்டிய சூழ்ச்சிகளை எல்லாம் செய்து, பரதனையும் மோசம் செய்து தனது செருப்பைக் கொடுத்தனுப்பி அந்தச் செருப்பை வைத்து தன் பேரால் அரசாள வேண்டும் என்று சொல்லி, ராஜ்ஜிய சுதந்திரத்தைத் தனக்கு ஆக்கிக் கொள்ள நினைத்ததால், காட்டிலும் இராமனுக்குப் பல தொந்தரவுகள் ஏற்பட்டதோடு, இராமனால் கைகேயிக்கு எவ்வளவு கெட்ட பேர் ஏற்பட்டதோ, அதைவிட அதிகக் கெட்ட பேரும், இழிவும், இராமன் பெண் ஜாதியான சீதைக்கும் ஏற்பட்டது.

சீதையை இராவணன் தூக்கிக் கொண்டு போனதும், இராமன் இராவணனைச் சூழ்ச்சியால் கொன்றதும், எப்படியென்றால், இராவணனைக் கொன்றுவிட்டால் அந்தப் பட்டம் இராவணன் தம்பியாகிய விபிஷணனுக்குக் கொடுப்பதாகவும், வாலியைக் கொன்று அந்தப் பட்டத்தை வாலியின் தம்பி சுக்ரீவனுக்குக் கொடுப்பதாகவும், இப்படியெல்லாம் தில்லுமுல்லும் செய்து ஜெயித்தவன், பெண் ஜாதி சீதையை அழைத்து வந்ததும், அவள் இராமன் வைத்து வாழ முடியாமல் இராமனாலேயே சீதைக்கு விபசார தோஷம் கற்பிக்க வேண்டிய நிலை ஏற்பட்டும், பிறகு அதைக்கூட லட்சியம் செய்யாமல் சேர்த்துக் கொண்டும், அப்படிச் சேர்த்துக் கொண்டதும் விபசார தோஷத்தைப் பொருட்படுத்தாமலோ, அல்லது விபசார தோஷத்துக்குச் சீதை ஆளாகவில்லை என்ற பரிசுத்த எண்ணத்தோடோ அல்லாமல், தான் பட்டாபிஷேகம் செய்து கொள்ளும் போது பெண் ஜாதி இல்லாமலும், அல்லது பெண்ஜாதியை விபசார தோஷத்திற்காக வெளிப்படுத்தி விட்ட இராமன் என்கின்ற பழியுடன் இருக்கக் கூடாது என்றும் கருதி தனக்குப் பட்டாபிஷேகம் ஆகும்வரை கூட வைத்திருப்பதுபோல் பாசாங்கு செய்து, பட்டாபிஷேகம் ஆனபின் சீதையினது கர்ப்பத்தைச் சந்தேகப்பட்டு, தானாய் தன்னினதாய் இருக்கக் கூடாது என்று கருதி, அதற்கும் ஒரு சூழ்ச்சி செய்து, அதாவது சீதையின் கர்ப்பத்தைப் பற்றி ஏதோ ஓர் வண்ணான் குற்றம் சொன்னதாக ஏற்பாடு செய்து, ஏனென்றால், அந்தப்புரத்தில் ஸ்திரீகள் கர்ப்பவதியாய் இருக்கும் சேதி வெளியில் முதல் முதல் வண்ணார்களுக்குத்தான் தெரியுமாதலால், அந்த வண்ணான்தான் சொன்னான் என்றால், உலகோரும் சீதையும் நம்புவார்கள் என்று அவன் மீது பழி போட்டு, பெண் ஜாதியைக் கர்ப்பத்துடன் காட்டுக்கு அனுப்ப வேண்டியதாகி, காட்டில் அந்தம்மாள் (சீதை) இராமன் இல்லாமலேயே ஒட்டக்கூத்தன் பாட்டிற்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்பது போல் மற்றொரு பிள்ளையும் பெற்றுக் கொள்ள நேர்ந்து, அந்த இரண்டு பிள்ளைகளாலேயே இராமன் யுத்தத்தில் தோல்வி அடைந்து, கடைசியாக இவ்வளவு வியாகூலங்களுடனும், கஷ்டங்களுடனும், பழிகளுடனும் இராமன் சாக வேண்டியதாக ஏற்பட்டது.
இராமன் என்றைய தினம் பரதனை ஏய்த்து ராஜ்ஜியப் பட்டாபிஷேகம் பெற வேண்டுமென்று நினைத்தானோ, அன்று முதல் சாகும் வரை துக்கத்தையும், அவமானத்தையும், கஷ்டத்தையுமே அதிகமாய் அடைந்தான் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆகவே, கெடுவான் கேடு நினைப்பான் என்னும் பழமொழியை ஆஸ்திக தர்மப்படி நம்புகின்றவர்கள், இராமாயணக் கதையை இப்பழமொழிக்கு ஓர் உதாரணமாகக் கொள்ள ஒப்புக் கொள்ள வேண்டும். அப்படிக்கில்லா விட்டால், இக்கேடு நினைத்த தசரதன், இராமன் இருவரும் ஏன் கேடு அடையவில்லை என்பதற்குச் சமாதானம் சொல்ல வேண்டும். தசரதனும், இராமனும் கேடு நினைக்கவில்லையென்றால், துன்பங்களும், தொல்லைகளும் அவர்களுக்கு ஏன் ஏற்பட்டனவென்பதற்காவது சமாதானம் சொல்லியாக வேண்டும்.

– குடிஅரசு 12.11.1933.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *