இந்தியாவில் நடைபெற்ற சில பயங்கரமான குண்டுவெடிப்புகளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தக் குண்டுவெடிப்பு வழக்கில் காவித் தீவிரவாதிகளின் நேரடித் தொடர்பு ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டு சாது பிரஞ்யா தாக்கூர் என்ற பெண் சாமியார், அசிமானந்தா, இந்திய ராணுவப் படையில் உயரதிகாரியாகப் பொறுப்பு வகித்த சிறீகாந்த் புரோகித் மற்றும் தயானந்த் பாண்டே போன்றோர் கைதாகி சிறையில் உள்ளனர்.
இவர்கள் அனைவருமே ஆர்.எஸ்.எஸ்.சின் நேரடித் தொடர்பிலிருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சம்ஜோதா விரைவு தொடர்வண்டி குண்டுவெடிப்பில் கைதான அசிமானந்தா என்ற சாமியார் ஹரியானா மாநிலம் அம்பாலா சிறையில் உள்ளார்.
அசிமானந்தா சாமியார், இன்று மத்தியில் ஆட்சி அமைக்கத் துடித்துக் கொண்டிருக்கும் பாரதிய ஜனதா கட்சியை இயக்கிக் கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸின் தலைவர் மோகன் பகவத் தான் தீவிரவாதத் தாக்குதல்களுக்குக் காரணமானவர் என்று பேட்டி கொடுத்துள்ளார். வழக்கம்போல இது ஒரு பொய்யான ஆதாரமில்லாத செய்தி என்றும் சில தேச விரோத சக்திகளுக்கு வளைந்து கொடுக்கும் கட்சிகளின் சதிச் செயல் என்றும் பா.ஜ.க. கூறியது. இந்தச் செய்தி பற்றி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில், காரவான் இதழுக்காக இந்தச் செய்தியைச் சேகரித்த இணை ஆசிரியர் லீனா கீதா ரகுநாத் கூறியபோது,“இந்தச் செய்தி அனைத்தும் உண்மையே. இது அவரிடம் இருந்து வாய்மொழியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
எந்த விசாரணைக்கும் இந்தக் குரல் பதிவைக் கொடுக்கத் தயார் என்றார். ஹரியானாவில் அம்பாலா சிறையில் உள்ள அசீமானந்தாவை சிறை அதிகாரிகளின் அனுமதியின் பேரில் சந்தித்துப் பேட்டி எடுத்தேன். மேலும் பேட்டியை அவரது அனுமதியின் பேரில்தான் குரல் பதிவு செய்தேன் என்று கூறியுள்ளார். காரவன் இதழ் அசிமானந்தாவின் குரல் பதிவை 7.2.2014 அன்று வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.