திசைகள் நான்கென்கிறார் ஆசிரியர்
சூரிய உதயம் மறைவு
கிழக்கு மேற்கென்றும்
சூரியனின் இடவலமென
தெற்கையும் வடக்கையும் புரிந்து கொள்கிறாள் சிறுமி
திசையெட்டும் கொட்டுமுரசே
பாடம் நடத்துகிறார் ஆசிரியர்
வடகிழக்குப் பருவமழை
தென்மேற்குப் பருவக்காற்று
தென்கிழக்கு ஆசிய நாடுகள்
வடமேற்குத் திசையில் நகரும் காற்றென
திசைகள் எட்டையும் மனதில் நிறுத்துகிறாள்
கணக்கு வகுப்பில் காம்பஸ் வைத்து வட்டம் வரைகிறாள்
குறுக்கும் நெடுக்கும் கோடுகள் இடுகிறாள்
காகிதத்தின் மேல்பகுதியே
வடக்கெனக் கற்றதைவைத்து
நாற்திசைகளைக் கண்டுகொள்கிறாள்
மேலும் இருகோடுகள் கிழித்து
எட்டுத் திசைகளைக் குறிக்கிறாள்
சற்றே நிதானித்த சிறுமி மேலும் குறுக்கு வெட்டாக பல கோடுகள் போடுகிறாள்
முடிவற்று கோடுகளை அருகருகே வரைந்தவாறிருக்கிறாள்.
ஒரு வட்டத்திற்குத்தான் எத்தனை விட்டங்கள்
ஒவ்வொரு ஆரமும் ஒரு திசை நோக்கி.
இக்கோடுகள் செல்லும் திசைக்கெல்லாம்
பெயர் இன்னும் வைக்கவில்லையாவென
வினவுகிறாள் ஆசிரியரிடம்.
கணக்கு நோட்டில் கிறுக்கக்கூடாதென்றவாறே
பிரம்பை உயர்த்துகிறார் ஆசிரியர்.
– கவின்மலர் (முகநூலிலிருந்து)