உலகத்தின் மிக அதிகமான செலவில் கட்டப்பட்ட வீடு, பயன்படுத்தப்படாமல் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. முகேஷ் அம்பானி கட்டியுள்ள அந்த வீட்டில் குடியேறினால் அவர்களுக்குக் கெடுதல் வரக்கூடும் என்று அஞ்சுகின்றனர்.
27 மாடிகளைக் கொண்டு பலநூறு கோடிகளை முழுங்கியுள்ள அந்தக் கட்டிடத்திற்கு அன்டில்லா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சீனத்து ஃடெங் சூயி என்று சொல்லப்படும் மனையடி சாத்திரம் போன்றுள்ள இந்திய வாஸ்து சாத்திரத்தின்படி அந்தக் கட்டிடம் அமையவில்லையாம்.
சென்ற ஆண்டு நிறைவெய்திய அந்த வீடு மும்பையில் விண்ணை முட்டி நிற்கும் அளவிற்கு ஆக்கிரமித்து அழகு செய்கிறது. 29 பில்லியன் அமெரிக்க டாலர்களைக் கொண்டு கட்டப்பட்ட அந்த வீடு, உலகின் ஒன்பதாவது பணக்காரர் என்று ஃபோபர்ஸ் பத்திரிகையால் கணிக்கப்பட்ட, இந்தியாவின் மிகப் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானியால் கட்டப்பட்டதாகும்.
ஆடம்பரம் நிறைந்த அந்தப் புது வீட்டில் அம்பானியும் அவரது மனைவி நீடாவும் இரண்டு குழந்தைகளும் ஏன் இன்னும் குடியேறவில்லை என்பது பற்றி பல யூகங்கள் முளைத்து வந்துள்ளன.
அந்த ஆடம்பர சொகுசு மனையில் ஹெலிகாப்டர்கள் இறங்கக்கூடிய மூன்று தளங்களும் ஆறு மாடிகளில் கார் நிறுத்தும் வசதிகளும் பல நகரும் தோட்டங்களும் இடம் பெற்றுள்ளன.
வாஸ்து சாத்திரத்தில் கூறப்பட்டுள்ள இந்தியக் கட்டுமான வழிகாட்டுதல்களை மீறி இந்தக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளதாக அம்பானி குடும்பத்தினர் கருதுவதால், அந்த வீட்டில் குடிபுகுந்தால் அவர்கள் அதிர்ஷ்டம் (நல்வாய்ப்பு) சாபத்திற்கு ஆளாகும் என அஞ்சிக் குடிபுக மறுப்பதாகக் கூறப்படுகிறது.