தமிழர்களை உயர்த்திப் பிடித்த திராவிடர் திருநாள்

பிப்ரவரி 01-15

தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் 20ஆம் ஆண்டு விழா, திராவிடர் திருநாள் _ தமிழ்ப் புத்தாண்டு _ பொங்கல் விழா மற்றும்  திராவிடர் இயக்க தளபதி சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்களின் 125ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா, சென்னை பெரியார் திடலில் ஜனவரி 17, 18, 19 மிகவும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

நெய்தல் நிலத்தினைப் பிரதிபலிக்கும் விதத்தில் பெரியார் திடல் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

தமிழர்களின் பண்பாட்டைப் போற்றும் வகையில் அலங்காநல்லூர் பறை இசை, கரகாட்டம், ஒயிலாட்டம், சில ஆட்டம், பெரிய மேளம் உள்ளிட்ட நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகளும், கயிறு இழுத்தல், உறியடி உள்ளிட்ட மக்கள் விளையாட்டுகளும் களைகட்டின. அதே மூன்று தினங்களும் சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன்  விளையாட்டுத் திடலில் பெரியார் வீர விளையாட்டுக் கழகம் சார்பில் மாநில அளவிலான சடுகுடு(கபாடி)ப் போட்டி ஆண்,-பெண் இருபாலருக்கும் நடைபெற்றது. வெகு உற்சாகத்துடன் நடந்த இப்போட்டிகளில் தமிழகத்தின் முன்னணி அணிகள் பங்கேற்றன. ஆண்கள் பிரிவில் முதல் பரிசை (ரூ50,000) சென்னை ஜெய்பவானி  அணியும், இரண்டாம்  பரிசை (ரூ30,000) சென்னை மாவட்ட கபாடி கழக  அணியும், மூன்றாம் பரிசை 2 அணிகள் (தலா ரூ.10,000) சாய் சென்னை, சென்னை மாநகர காவல்துறை அணிகளும் பெற்றன. பெண்கள் பிரிவில் முதல் பரிசை (ரூ50,000) சென்னை குயின்ஸ் அணியும், இரண்டாம் பரிசை (ரூ.30,000) சென்னை மாநகர காவல்துறை அணியும், மூன்றாம் பரிசை 2 அணிகள் (தலா ரூ.10,000) எத்திராஜ் கல்லூரி, ஜே.பி.ஏ.எஸ். அணிகளும் பெற்றன.

தமிழ்ப் புத்தாண்டு விழாவின் சிறப்பு அம்சமாக, பல்வேறு துறைகளில் உயர்ந்து நிற்கும் தமிழர்கள் 9 பேருக்கு பெரியார் விருது அளித்துச் சிறப்பிக்கப்பட்டது. இவ்விருதுகளை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் வழங்கிப் பாராட்டினார். அவர் தனது உரையில், திருநங்கைகளையும், தேவதாசிகளையும் ஒதுக்கி வைத்த சமுதாயத்தைத் தகர்த்த இயக்கம்தான் திராவிடர் இயக்கம் என பெருமிதம் கொண்டு பேசினார்.

விருது பெற்றோர் ஏற்புரையில் தமது எண்ணங்களை எடுத்தியம்பினர். ஆங்கிலப் பத்திரிகைத் துறையில் சிறந்து விளங்கும்  இதழாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வம் ஏற்புரை வழங்கும்போது, திராவிடர் இயக்கத்திற்கும், சிறந்த பத்திரிகையாளராக இருப்பதற்கும் என்ன உறவு என்று பார்த்தால் அடிப்படையில் இருக்கக் கூடியது சமூகநீதி என்ற ஒரே ஒரு விஷயம்தான். யார் ஒருவன் இந்தச் சமூகத்தில் சமூகநீதி நிலைபெற வேண்டும் என்று நினைக்கின்றானோ, யார் ஒருவன் சமூகநீதி குறிப்பிட்ட மக்களுக்கு மட்டும் சொந்தமில்லை அனைவருக்கும் சொந்தமானது என்று பரந்த பார்வை கொள்கின்றானோ அவனே சிறந்த பத்திரிகையாளனாக இருக்க முடியும். என்னைப் பொருத்தவரையில் சுயமரியாதை இயக்கம் என்பது அடிப்படையில் ஒரு மனிதனாகச் செயல்படுவதற்கான பார்வையைக் கொடுத்திருக்கிறது, என்று முழங்கினார்.

தமிழில் சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவரான இமையம் ஆற்றிய உரை, மானுடத் தந்தை பெரியாருக்கு ஒவ்வொரு தமிழனும் நன்றிக்கடன் பட்டவன் என்பதை எடுத்துக்காட்டியது. அவர் பேசும்போது, இந்த ஏற்புரையை நான் நன்றியுரையாகவே கருதுகிறேன். இந்த நன்றியுரை என்னுடைய தந்தைக்கு அல்ல, தாய்க்கு அல்ல, என்னுடைய சகோதரருக்கு அல்ல, தந்தை பெரியாருக்கு. காரணம், என்னுடைய தந்தை, தாய் நான் படிக்க வேண்டும் என்று விரும்பவில்லை. நான் மனிதனாக இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பவில்லை. மூடநம்பிக்கைகளை எனக்குள் விதைத்தார்கள். நானும் இந்தச் சமூகத்தில் ஒரு மனிதனாக, பழுத்த மனிதனாக, நாகரிகமிக்க மனிதனாக, சுயசிந்தனைமிக்க மனிதனாக இருக்க வேண்டும் என்று பெரியார் விரும்பினார்.    இன்று பல்வேறு மேடைகளில் பல்வேறு சமூகத்தினருடன் அமர்ந்து பேசுகிறேன். இதற்குக் காரணம் தந்தை பெரியார். அதற்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்.    நான் திடலுக்கு இன்று முதன்முதலாக வந்தவன். 1976, 77இல் நான் ஆறாம் வகுப்புப் படித்தேன். ஆறாம் வகுப்புப் படித்தபோது சென்னை பூக்கடை பஸ்டாண்டுகிட்ட பழம் விற்கக்கூடிய ஒருவர் சொன்னார். நமக்கு நல்லது செய்றவரு பெரியார், கலைஞர். உண்மையிலேயே அதற்கு முன்னால் பெரியார் யாருன்னு தெரியாது. கலைஞர் யாருன்னு தெரியாது. அன்று அவர் விதைத்த விதைதான் இன்றுவரை வீணாக்காமல் விஷப்படுத்தாமல் எனக்குள் வளர்ந்துகொண்டே வருகிறது. என் மகன்களுடன் விருத்தாச்சலம் மாநாட்டில் கலந்துகொண்டேன். இரவு 11 மணிக்கு என்னுடைய மகனிடம் சொன்னேன். உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் யாருக்காவது கடன்பட்டிருக்கிறீர்கள் என்றால், அது தந்தை பெரியாருக்குக் கடன்பட்டிருக்கிறீர்கள் என்பதை மறக்காதீர்கள் என்றார்

எள்ளல் நடையில் சமூக அவலங்களைத் தோலுரிக்கும் எழுத்தாளர் பாமரன் தனது பாணியிலேயே பேசத் தொடங்கினார். இந்தியாவில் பொதுவாக விருது என்பது கொடுக்கப்படுவதாக இல்லை. வாங்கப்படுவதாகவே இருக்கிறது. ஏனென்றால், ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொரு எழுத்தாளனும் லேகியம் விற்பனையைவிட பிரமாதமான ஆளாக இருக்கான். ஆனால், இந்த விருது நிச்சயமாக உண்மையிலேயே வித்தியாசமானது. நான் ஆசிரியரைப்பற்றியோ திராவிடர் கழகத்தைப் பற்றியோ எந்த இடத்திலும் புகழ்ந்து எழுதவில்லை. கிண்டல் பண்ணி திட்டி வேணும்னா எழுதியிருக்கேன். உண்மையிலேயே ஆசிரியரின் பெருந்தன்மைதான் என் மனதில் உரைத்தது. நான் இப்படித் திட்டி, கிண்டல் பண்ணி ஒரு சங்கராச்சாரியாரையோ, ஆரியத்தையோ, எழுதியிருந்தால் அவர்கள் என்னை எப்படி நடத்துவார்கள்? என்ற கேள்வி மனதில் தோன்றிற்று!    ஆசிரியர் அவர்கள் பி.ராமமூர்த்திக்கு மறுப்பாய் எழுதிய விடுதலைப்போரும் திராவிடர் இயக்கமும் என்கின்ற புத்தகத்தை என்னால் இன்றுவரை மறக்க முடியாது. எனக்கு முதன்முதலில் கிடைத்த விருது தந்தை பெரியார் விருது என்பதை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன். பெரியார் நாத்திகர்களுக்கு மட்டும் தலைவர் அல்ல, ஆத்திகர்களுக்கும் அவர்தான் தலைவர் என்பதை உணர்ந்தேன்.

ஜாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டோம். இன்று எனக்குக் கிடைத்திருக்கிற விருது என்னுடைய தோழர்கள் அனைவருக்குமே கிடைத்ததாக நினைக்கிறேன் என்று உற்சாகம் ஊட்டினார்.

தமிழ்நாட்டின் ஊர்கள் தோறும் ஆவணப்படம், குறும்படம் எடுப்பது பற்றிய பயிற்சிப் பட்டறைகளை நடத்திவரும் நிழல் திருநாவுக்கரசு தனது ஏற்புரையில், தமிழர் திருநாள் திராவிடர் நன்னாளில் எனக்கு இந்த விருதினை அளித்ததற்கு எனது நன்றியினை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.    நான் ஆறு வயதாக இருந்தபோது தாராசுரத்தில் பெரியார் பேசும்போது முதன்முதலாக கேட்டிருக்கிறேன். மறைக்கப்பட்ட இசையாளர்களை ஒவ்வொரு முறை எழுதும்போதும் அய்யா கருத்துகள் ஒரு பக்கம் உறுதுணையாக இருக்கும். தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் மறைக்கப்பட்ட தமிழ் இசையைக் கொண்டுவரும்போது எழுதிய முன்னுரை இன்றுவரை ஒரு வழிகாட்டியாய் இருக்கிறது. தமிழர்கள் எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் அங்கே அவர்களை பார்ப்பனர்கள் நம்மை விடமாட்டார்கள். அதை அவர்கள் பிடுங்கிக் கொள்வார்கள். அந்த வரிசையிலேயே இந்தக் குறும்படத் துறையையும் எடுத்துக்கொள்ளப் பார்த்தார்கள். ஆனால், நாங்கள் விடவில்லை. அதில் பெரும்பாலும் தமிழ் இளைஞர்களை உருவாக்கி வருகிறோம். இதனால் அந்த வெறுப்பு அவர்களுக்கு இன்றுவரை இருக்கிறது.

நமது நோக்கமே அறிவினைப் பரவச் செய் என்பதுதான். அதனைச் செய்துவரும் பணியைத் தொடர்ந்து செய்திட இந்த விருது ஊக்கப்படுத்துகிறது, என்றார்

மாற்றுப்பாலினமான திருநங்கைகளின் வாழ்வுக்காக பல்வேறு சாதனைகள் புரிந்துவரும் பிரியா பாபு, தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் திராவிடர் திருநாளில் பெரியார் விருது கிடைத்ததை நான் ரொம்பப் பெருமையாக நினைக்கிறேன். இந்த விருதைப் பெறுவதில் இரண்டு விதமான மகிழ்ச்சி. ஒன்று, பொங்கல் திருநாளில் திருநங்கைகளுக்கு ஒரு புதிய வெளிச்சம் இந்த விருதின் மூலம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இரண்டாவது, என்னுடைய தேடலுடைய அடுத்த பயணத்தை நோக்கிப் பயணிக்கிறேனோ அப்படிங்கிறதுதான். என்னுடைய வாசிப்பு குறைவுதான். பெரியாரைப் பற்றிப் படித்திருக்கிறேன். அப்போதிருந்தே ஒரு தேடல் இருந்து கொண்டே இருந்தது. திருநங்கைகள் குறித்து என்னதான் பேசியிருப்பார் பெரியார் என்று எல்லாரிடமும் கேட்டேன். தெரியலை. ஒருவேளை அதன் தொடர்ச்சியாகத்தான் இந்த இடத்துல இந்த விருது கிடைத்திருக்குதுன்னு நினைக்கிறேன். .ஒவ்வொரு திருநங்கையும் தனக்கு வாய்ப்புக் கிடைக்கும்போது சாதிக்க முடியும் என்பதுதான் உண்மை. நாங்கள் மூன்றாவது பாலினம் இல்லை. நாங்கள் மாற்றுப் பாலினம். நீங்கள் தெருவில் பார்க்கிற ஒவ்வொரு திருநங்கையும் குடும்பத்தால் ஏதோ ஒரு வகையில் புறக்கணிக்கப்பட்டவர்கள் என்று கூறினார்.

இசை உலகில் உலகம் முழுதும் பயணம் செய்து தமிழர்களின் பண்பாட்டு இசை வடிவமான தாளக் கருவிகளின் ஓசைகளைப் புதுவிதமாய் வழங்கிவரும் இசை அமைப்பாளர் டிரம்ஸ் சிவமணி, சிறுவயதில் இருந்தே இசையோடு வளர்ந்தவன் நான். சென்னை பேசின் பிரிட்ஜ் பகுதியில் வளர்ந்தவன். என் வீட்டுப் பக்கத்தில் ஒரு சுடுகாடு இருந்தது. அங்கு வாசிக்கப்படும் பறை இசை என்னுள் இசையைப் புகுத்தியது. அதனைக் கேட்கும்போது அருமையாக இருக்கும். அப்படி என்னுள் ஆர்வம் கலந்து வளர்ந்ததுதான் இசை. இன்று உலகம் முழுதும் சென்று நிகழ்ச்சி நடத்துகிறேன். இந்த நிலையில் எனக்கு பெரியார் விருது அளித்தது மிகவும் மகிழ்ச்சி என்றவர் எனக்கான விருதினை என் தாயாரிடம் கொடுங்கள் என்று கேட்டுக் கொண்டார். அதற்கொப்ப, டிரம்ஸ் சிவமணியின் தாயார் விருதினைப் பெற்றுக் கொண்டார். தமிழர்களின் அறிவியல் புனைவு எழுத்தாளர்கள் மிகவும் குறைவே. அவர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர் எழுத்தாளர் தமிழ்மகன். நமது உண்மை இதழில்  ஆல்பா, கடவுள் 2 ஆகிய தொடர்களை எழுதியுள்ள இவர் தற்போது ஆனந்த விகடனில் ஆப்பரேசன் நோவா என்ற அறிவியல் தொடரை எழுதி வருகிறார். எழுத்தாளர் தமிழ்மகன் தனது ஏற்புரையில், “பெரியார் விருது பெறுவதற்காக நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். முதன்முதலில் விஞ்ஞானத் தொடரை எழுதுவதற்கு உண்மை இதழ்தான் வாய்ப்பளித்தது. நான் பெரியார் நூலக வாசகர் வட்டத்தில் 100க்கும் மேற்பட்ட கூட்டங்களில் பங்கேற்றிருக்கிறேன். இலக்கியவாதிகள் வட்டாரத்தில் பேசப்படுபவர் பெரியார்தான். கேரளா பக்கம்போய் வைக்கம் வீரர் என்று சொன்னா விழுந்து விழுந்து சிரிப்பார்கள் என்று நிறையப் பேர் எழுதினார்கள். சேரன்மாதேவியில் வ.வே.சு.அய்யர் இந்த மாதிரி அந்த ஏற்றத்தாழ்வு பார்த்ததே இல்லைன்னு எழுதுறாங்க.    தொடர்ந்து பெரியாரை மட்டும்தான் காலந்தோறும் எழுதிக்கொண்டே இருக்கிறார்கள் என்றார். திரைப்படக் கலைஞராக, பின்னணிக் குரல் கொடுப்பவராக, நகைச்சுவை நடிகராக மிளிர்பவர்  எம்.எஸ்.பாஸ்கர். அவர் பேசும்போது, “நான் இறை நம்பிக்கை உள்ளவன். மூடநம்பிக்கை இல்லாதவன். என்னை வந்து இறைவனைப் பிடிக்குமா? தமிழைப் பிடிக்குமா என்று கேட்டால் தைரியமாகச் சொல்வேன், தமிழைத்தான் பிடிக்கும் என்று. எதுவாக இருந்தாலும் கூர்ந்து கவனித்தல்  மிகவும் முக்கியம். பணிவாக இருப்போம், எந்த நிலையிலும் நம்முடைய சுயமரியாதையை விட்டுக் கொடுக்காமல் இருப்போம் என்பதை மட்டும் கூறிக்கொள்கிறேன் என்றார்.

தற்காலத் தமிழ் ஆளுமைகளில் முக்கியமானவர் பேராசிரியர் அ.மார்க்ஸ். சமூக நல்லிணக்கம், மதவெறி எதிர்ப்பு, மனித உரிமைகளுக்காக தொடர்ந்து இயங்கி வருபவர். அவர் பெரியார் விருது பெற்றுக்கொண்டு ஆற்றிய உரையில், நான் விருது இதுவரை வாங்கியது கிடையாது. எனக்கு எந்த நிறுவனங்களும் விருது கொடுக்கத் தயாராக இல்லை. ஆனால், பெரியார் திடலில் பெரியார் விருது கொடுக்கிறேன் என்று சொன்னவுடன் நான் எந்த மறுப்பும் கூறாமல் வந்து பெற்றுக்கொண்டேன். மிகுந்த பெருமையுடன் மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொள்கிறேன். சிறு பத்திரிகைகள் என்பன இன்று மிகவும் நவீனமாக இலக்கியத்தை வளர்த்தவை என்று சொல்லக்கூடியவை. குறிப்பாக மணிக்கொடி என்ற ஒரு பத்திரிகை பற்றி எல்லோரும் சொல்வார்கள். மணிக்கொடி காலம் என்றெல்லாம் சொல்வார்கள். அதுதான் நவீன இலக்கியத்தினுடைய தொடக்கப்புள்ளி என்று குறிப்பிடுவார்கள். அந்த  மணிக்கொடி பத்திரிகை கடைசிவரை சூனா மானா காலிகள் என்று சொல்லி சுயமரியாதைக் காலிகள் என்று உருவாகி வந்து திராவிட இயக்கத்தைத் தொடர்ச்சியாக திட்டியும் அவமதித்தும் எழுதிக் கொண்டிருந்த பத்திரிகை. அதை முதன்முதலாக எடுத்து வெளிக்கொணர்ந்து அம்பலப்படுத்தினேன்.  அன்று முதல்  கிட்டத்தட்ட 1992 வரை வெளிவந்த சிறு பத்திரிகைகள் எதிலும் பெரியார் என்பதைத் தவிர தமிழ்நாட்டின் ஒரிஜினல் சிந்தனையாளரைப் பற்றி ஒருவரிகூட எழுதியதுமில்லை. ஆய்வுக்கு எடுத்துக் கொண்டதுமில்லை. முதன்முதலாக நிறப்பிரிகையில்தான் நாங்கள் பெரியார் தொடர்பாக ஒரு விவாதத்தை எடுத்து வைத்தோம். அது மட்டுமல்ல, பெரியாரின் மாற்றுச் சிந்தனைகள் என்பன எப்படி இன்றைய நவீனமான பிரெஞ்சுத் தத்துவவியலாளர்கள் சொல்லக்கூடிய சிந்தனைகளுக்குச் சமமாக இருக்கிறது என்பதை நிறுவி ஒரு பெரிய சலசலப்பைத் தமிழ்நாட்டில் ஏற்படுத்தினோம் 30 ஆண்டுகளுக்கு முன்னதாக, 18, 19ஆம் நூற்றாண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்ட திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் போன்ற சிந்துவெளி நாகரிகம் போன்ற கண்டுபிடிப்புகள் ஒரு மிகப்பெரிய சுயமரியாதை உணர்வை தமிழ் மக்கள் மனதில் ஏற்படுத்தியது என்று எழுதினேன்.  இன்று சொந்தமாக நமக்கு ஒரு பண்பாடு இருக்கிறது, அதை வெற்றிகரமாக ஒரு அரசியலாக மாற்றியது  பிராமணரல்லாதார் இயக்கம்தான் என்று கூறினார்.

பொங்கல் விழா என்பது திராவிடர்களின் திருநாளாகக் கொண்டாடப்படுவதுடன், தமிழர்களின் பண்பாட்டு விழுமியங்களை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லவும், தன்னம்பிக்கையோடு உருவாகி வளர்ந்துவரும் தமிழர்களை உயர்த்திப் பிடிக்கும் நிகழ்வாகக் கொண்டாடவேண்டும் என்பதை இந்த விழா எடுத்துக் காட்டியது.

-தொகுப்பு: பிரபாகர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *