ஆண்டவன் துணை
– தில்லை வில்லாளன்
எழுத்தாளர், பேச்சாளர், மக்களவை உறுப்பினர், வழக்குரைஞர், சட்ட நுணுக்கம் தெரிந்த நிதியாளர்… என பன்முகங்களில் மிளிர்ந்தவர். சிறுகதை, நாவல், நாடகம், கட்டுரை எழுதுவதில் திறமை பெற்றவர். 20 வயதிற்குள் 6 நாவல்களை எழுதி நூல் வடிவம் கொடுத்த பெருமைக்குரியவர். தம்பி வில்லாளன், என்னிடம் கற்க வேண்டியவைகள் அத்தனையும் கற்ற பிறகுதான் இங்கு வந்திருக்கிறார். என பேரறிஞர் அண்ணாவால் புகழப்பட்டவர். தம்பி, பூமாலை, முன்னணி போன்ற வார இதழ்களை நடத்தியவர் என பல்வேறு பரிமாணங்களுடன் திகழ்ந்த தில்லை வில்லாளன் திராவிட இயக்கப் படைப்பாளிகளுள் முதன்மையானவர்.
வாங்க தம்பி, அய்யா கடுதாசி இப்பத்தான் கிடைச்சது. என்னமோ தப்புச்சீங்க, அது போதும்!
இருமல் வியாதின்னாலே எம வியாதின்னுதான் நினைக்கணும். ஏதோ ஆண்டவன் துணையாலே தப்பிப் பிழைச்சேன்
கந்தசாமி, தனது பெட்டி படுக்கைகளை வண்டிக்காரக் கண்ணுசாமி சுமந்துவர உள்ளே நுழைந்தான். அவனை அப்பாசாமிப் பிள்ளை வரவேற்றார். வந்து நுழைவதற்குள்ளாகவே உபசார வழக்குக் கெடாமல் கேள்வியைப் போட்டார். கந்தசாமியும் தக்க விடையிறுத்தான்.
ஆமானுங்க, சின்ன அய்யா பிழைச்சது என்னமோ பூர்வசென்ம புண்ணியந்தானுங்க அதுவும் அந்த டாக்டரு இன்னும் ஒருமாசம் ஏதாவது கிராமத்தில் தங்கிவிட்டு வாங்கன்னுட்டாரு
கண்ணுசாமி கிருபாநந்தவாரியம் (அளப்பு) பண்ணினான் இப்படி!
அதுக்கென்ன, ஒரு மாசமென்ன, ஒரு யுகம் வேண்டுமானால் தம்பி தங்கியிருக்கட்டும், என்னாலான எல்லா வசதிகளையும் செய்து தருகிறேன் என்று பிள்ளை தமது அன்பை வார்த்தைகளால் அளந்து காட்டினார்.
சாமிபுரம் ஒரு பட்டிக்காடு. ஆனால் அங்கு இயற்கை அன்னையின் கதகளி நடந்த வண்ணமே இருக்-கும். -இயற்கையின் புன்னகை மின்னலிடும். அவளின் கோபம் அங்குக் கூப்பிட்டாலும் வருவதில்லை. ஆகவே பலர், அதுவும் அரசியல் பணியாற்றும் பெரியவர்கள் ஓய்வு பெற்று உல்லாசப் பொழுது கழிக்க அங்கு வந்து தங்குவர். அந்த வட்டத்திற்கு அது ஒரு ஊட்டி! படித்த பெருமக்களின் யாத்திரை செல்லும் புண்ணிய க்ஷேத்திரம் என்று கூறக்கூடிய நாத்திகத் திருப்பதி! அதாவது இங்கு மொட்டை அடிக்கக் கோவில் இல்லை. ஆனால் சுற்றிவரச் சோலைகளும், கண்களின் குளுகுளுப்பை அதிகப்படுத்தும் பசுமைநிறம் வழியும் வயல்களும், அந்திப் பொழுதில் நகரும் அறைபோன்ற படகுகளில் உல்லாசப் பொழுது கழிக்க வசதியான ஆறும் உண்டு.
அங்கு அப்பாசாமிப் பிள்ளை பெரிய பணக்காரர். அந்த ஊரின் ஹிட்லர் அவர்! அவர் பேச்சைக் கேட்டுத்தான் சாமிபுரம் மக்கள் எதையும் செய்வர். அவர் நிஜாம் தர்பார் செய்து வந்தார். அவருடைய நெருங்கிய நண்பர் முத்துசாமி முதலியார். அவரது மகன் கந்தசாமி இருமல் நோயால் தாக்கப்பட்டு இரும்பு உடல் இளைத்துத் துரும்பாகி விட்டான். தீராத வல்வினையைத் தீர்த்து வைத்தான் ஒரு கோவிந்தன். அவன் திருப்பதியில் இல்லை, மதனப் பள்ளியில்! ஆமாம், மதனப் பள்ளியிலுள்ள மருத்துவமனையில் உள்ள மனோகர் என்ற சூட்டிகையான ஒரு இளம் எம்.பி.பி.எஸ்! அவரது கட்டளைப்படி ஓய்வு பெறத் தன் மகனைச் சாமிபுரத்திற்கு வண்டிக்காரக் கண்ணுசாமியுடன் அனுப்பி வைத்தார் முதலியார்.
முத்துசாமி முதலியார் தன் மகன் நோய் தீர்ந்ததற்குக் காரணம் மனோகர் மட்டுமல்ல, திருப்பதி வெங்கடாசலபதியும்கூட என்று தீர்மானித்து ஒரு தீர்த்த யாத்திரைத் திட்டம் போட்டார்! ஆனாலும் மனோகரின் கட்டளையை மீற முடியவில்லை. ஆகவேதான் சாமிபுரத்திற்கு முதலில் அனுப்பினார்.
* * *
கூடத்திலே போட்டிருந்த சாய்வு நாற்காலியில் அப்பாசாமி படுத்துக் கொண்டிருந்தார். கந்தசாமி எதிரிலிருந்த நாற்காலியில் உட்கார்ந்திருந்தான். பிள்ளை எதையெதையோ கேட்டுக் கொண்டிருந்தார். அவர்கள் உரையாடிக் கொண்டிருக்கையிலேயே ஒரு மின்னல் தோன்றி மறைந்தது. அங்கே ஒரு பூங்கொடி வந்து போனாள். கந்தசாமியின் கண்கள் படம் பிடித்துவிட்டன அந்த நடமாடும் அஜந்தாவை!
கல்லி, காப்பி கொண்டு வா
பிள்ளைவாள் கட்டளையிட்டார். அதில் தந்தையின் குரல் தொனித்ததாகக் கந்தசாமி கற்பனை செய்து கொண்டான்.
காப்பி வந்தது. அவள் நிற்கவில்லை.
இவள் என் ம……
அவர் முடிப்பதற்குள் கந்தசாமி முந்தினான்.
ஒரே மகள்தானா?
அவர் சிரித்தார். அவர் சிரிப்பில் ஆழ்ந்த கருத்திருந்தது. அவர் முகம் பளிங்கு போல அடுத்தது காட்டிக் கொண்டிருந்தது.
இவள் என் மனைவி, மூன்றாந்தாரம்
அவரது குரலில் அழுத்தம் அதிகமிருந்தது.
கந்தசாமியின் உள்ளத்தில் ஏதோ ஒரு எண்ணம் படர்ந்தது. அதுதான் இராட்சதக் கல்யாணம் என்று கூறுகிறார்களே, அது போன்ற ஒரு முரட்டு ஆசை பிறந்தது.
எனக்கொரு குழந்தை வேண்டும், மூன்றாந்தாரங் கட்டியும் ஒரு பிஞ்சு…. என்று பெருமூச்சு விட்டார்.
ஆண்டவன் துணையிருந்தால் எல்லாம் நடக்கும்
சாமி கண்திறந்து பார்க்கவில்லையே!
இப்படிப் பேசிக் கொண்டிருக்கையில் கந்தசாமி தங்குவதற்கென்று விடப்பட்ட மேல்மாடி அறையைத் தூய்மைப்படுத்திச் சாமான்களை எல்லாம் வைத்துவிட்டுக் கண்ணுசாமி வந்தான்.
இந்த அகண்ட அண்டத்தில் பிறந்த
எந்தப் பிண்டமும் உண்டு உறங்கிட
வந்த வினைதீர்த்து வாழ்ந்திட
அந்த ஆண்டவன் துணை வேண்டுமடா!
என்று பாடினான். அதில் யாப்பிலக்கணம் விலா எலும்பொடிந்து மற்ற எலும்புகளும் நொறுங்கி வேதனையால் அழுது கொண்டிருந்தது.
கந்தசாமியின் பருவ ஆசை வளர்ந்தது. அவனது நொந்து போன உடலில் காம எண்ணம் வந்து குடியேறிவிட்டது. கல்யாணியை எப்படியும் அன்று இரவே சந்தித்துவிடுவது என்று தீர்மானித்தான். ஆனால் காலம் காற்றாக ஓடவில்லை. மணி முள்ளும், மணித்துளி முள்ளும் இறக்கை கட்டிப் பறக்கவில்லை. கிழவன் கோலூன்றி நடப்பதுபோலவே தெரிந்தது. அப்படி இப்படியாக இரவு வந்து சேர்ந்தது! எல்லோரும் உணவுண்டு உறங்கினர். கந்தசாமி மெதுவாக மாடிப்படி வழியாக இறங்கினான். யாரோ பக்கத்தறையில் பேசுங் குரல் கேட்டது. உற்றுக் கேட்டான்.
சாமி, என்னை இந்த நரகத்திலிருந்து காப்பாற்று. கிழவன் முகத்தைப் பார்த்துக் கொண்டிருக்க என்னால் முடியவில்லை. என் தலைவிதி இப்படி வந்து மாட்டிக் கொண்டேன். ஒரு குழந்தையைக் கொடுத்தால் அதனுடன் என் பொழுது இன்பமாகக் கழியும். இன்று வந்திருக்கும் வாலிபரின் துணையினால் என் விருப்பத்தை நிறைவேற்ற வரம் கொடு
கந்தசாமியின் காதுகளில் இவ்வார்த்தைகள் தெளிவாகக் கேட்டன. அவனால் அவனையே நம்பமுடியவில்லை. அவன் ஒரு ஹேவ்லக் எல்லிஸின் உலகில் நடப்பதாக எண்ணினான். மெதுவாக எட்டிப் பார்த்தான். கல்யாணி ஈசன் படத்தின் முன் நின்று கொண்டிருந்தாள். அவன் மெதுவாக உள்ளே நுழைந்தான். கல்யாணி திரும்பினாள். திடுக்கிட்டாள். அவள் முகத்தில் வடலூர் வாடை அடித்தது!
அந்தக் கிழம் உயிருடன் இருக்கிறவரை இந்த வீட்டில் எதையும் செய்ய முடியாது. வேண்டுமானால் எங்காவது வெளியில் சந்திக்கலாம் என்று கூறிக்கொண்டே போய்விட்டாள்.
கந்தசாமி ஏமாற்றத்துடன் திரும்பினான். படுக்கை அவனுக்குத் தூக்கத்தைத் துணையாக்க வில்லை. மனோன்மணீயக் கனவுகளை இழுத்து வந்துவிட்டது.
* * *
நாட்கள் ஓடின. கந்தசாமியின் திட்டங்கள் மாறிக்கொண்டே இருந்தன. கடைசியில் ஒரு யோசனை பட்டது. உடனே வெளியில் கிளம்பினான். சாமிபுரத்திலுள்ள முனீசுவர சாமி கோவில் பூசாரி கோவிந்தசாமியைக் கண்டான்.
பூசாரி, ஒரு உதவி
முனிசாமி சந்நிதியில் கேட்டவரம் கிடைக்கும்
அப்பாசாமிப் பிள்ளை வீட்டு அம்மா இங்கு வருவதுண்டல்லவா?
வெள்ளிக்கிழமை தோறும் வருவார். வேலைக்கார வள்ளியம்மாவுடன்
கந்தசாமி ஏதோ காதில் மந்திரம் ஓதினான். பூசாரியின் கண்களில் அந்த ஒரு கணத்தில் ஓராயிரம் உணர்ச்சி நிறங்கள் அள்ளி வீசி விடப்பட்டிருந்தன! பிறகு பணம் பாய்ந்தது! இனி காரியம் தடங்கல் படுமா? அதுதான் பாதாளம் மட்டும் பாயுமாமே, சாதாரண பூசாரியின் மனதிலே புக எவ்வளவு நேரமாகும்?
பூசாரி கோவிந்தசாமிப் பிள்ளையைப் பேட்டி கண்டான். அவர் அவனை அன்போடு வரவேற்றார்.
நம்ம, பக்கிரிசாமிக்கு ஒரு பயல் பிறந்திருக்கிறான்
இத்தனை வருடங்களுக்குப் பிறகு….
எல்லாம் முனிசாமியின் அருள். அவன் பெண்டாட்டி வெள்ளிக்கிழமை தோறும் சாமி சந்நிதியில் படுத்திருந்தாள்
ஓகோ, அப்படியா…?
கொஞ்ச நேரம் அமைதி நிலவியது.
அப்ப நம்ம கல்யாணியை ஏன் சாமி கோவிலில் படுக்கச் சொல்லக் கூடாது?
பிள்ளையே கேட்டார்.
அதற்கென்ன, அப்படியே செய்யுங்க
பூசாரியின் சாணக்கியம் வெற்றிப் புன்னகை புரிந்தது! பிறகு பிரிந்தான்; அதுவும் செலவுக்குச் சில்லரையும் பெற்றுக் கொண்டு! சாமியின் துணையால் அன்று அவனுக்கு அதிக வரும்படி கிடைத்து விட்டது என்று வரவு செலவுக் கணக்குப் போட்டுக் கொண்டே வீடு சென்றான்.
* * *
அன்று வெள்ளிக்கிழமை. இரவு எட்டு மணிக்கு எல்லா வேலைகளையும் முடித்துக் கொண்டு கல்யாணியையும், வள்ளியம்மையையும் முனிசாமி கோவிலுக்கு அனுப்பிவைத்தார் அப்பாசாமிப் பிள்ளை. கந்தசாமியின் உள்ளமோ அகண்ட இந்துஸ்தான் போல் ஒரு ஆட்சிக்கு உள்பட முடியாத அளவு உப்பி வீங்கியது! தனது திட்டம் இவ்வளவு எளிதில் நிறைவேறி விடும் என்று நினைக்கவில்லை. அதுவும் ஈசனின் திருவருள் என்று எண்ணி மனதிற்குள்ளாகவே பூசை செய்தான். ஏற்கெனவே வேலைக்காரக் கண்ணுவை முதல் இரவுக்கு வேண்டிய பூஜைப் பொருள்களை வாங்கிக் கொண்டு கோவிலுக்குப் போகப் பணித்திருந்தான். கல்யாணியும் தனது பலநாள் வேண்டுகோளுக்கிணங்கி சாமி கண் திறந்து இந்தக் காரியத்தை நடத்தி வைக்கிறார் என்று எண்ணிப் பூரித்துப் போனாள்.
முனிசாமியின் கோவிலில் இருள் கவ்விக் கொண்டிருந்தது. பூசாரி வீட்டை நோக்கி நடந்தான். கண்ணுசாமி பழ வகைகளுடன் கோவிலினுள் நுழைந்தான். இதே நேரத்தில் கந்தசாமி போர்வையை எடுத்து மூடிக்கொண்டு வெளியில் கிளம்பினான்!
வானத்திலே திடீரென்று மின்னல்… … பிறகு இடி, இடிமேல் இடி! மழை, சொற்பொழிவாளர்களின் அழகுப் பேச்சைப் போல இடைவிடாது சொரியத் தொடங்கிவிட்டது! நிற்பதாகத் தெரியவில்லை.
இந்தச் சமயம் தவறினால் மறுபடியும் அந்த இன்பத் திருட்டு நடத்த முடியாது. ஏனெனில் அடுத்த இரண்டு நாட்களில் சொந்த ஊர் திரும்ப வேண்டும். ஆகவேதான் கந்தசாமி துடித்தான். இருமல் புரட்சி இயக்கம் ஆரம்பித்துவிடும் போலிருந்தது. அந்தச் சமயத்தில் அப்பாசாமியும் வந்து சேர்ந்தார்.
பயிர்களுக்கு நல்ல காலம். சாமியில்லாமலா பொழுது விடியுது, பொழுது போகுது! நீங்க போய்ப் படுங்க. இருமல் துவங்கிக்கப் போகுது! என்றார்.
கந்தசாமி வேறு வழியின்றி உள்ளே சென்றான். இரட்டைத் தாழ்ப்பாளை இழுத்து மாட்டினார் பிள்ளை!
கோவிலில் கல்யாணி என்ன செய்கிறாளோ? என்று கூறிக்கொண்டே படுத்தார். உறங்கிவிட்டார்.
அதே நேரத்தில்….?
கல்யாணி காத்திருந்தாள். காலம் போய்க் கொண்டிருந்தது. மழையோ நிற்கவில்லை! வள்ளியம்மாவைப் பார்த்தாள். அவள் தலைவியின் முகத்தைப் பார்த்தாள். இருவரும் கொஞ்ச நேரம் பேசாமடந்தையாயினர். பிறகு வேலைக்காரியின் காதில் எதையோ சொன்னாள். அவள் மின்சாரத்தினால் தாக்குண்டவள் போலக் காணப்பட்டாள். பிறகு எழுந்து போனாள்.
தே, உன்னை அம்மா கூப்பிடறாங்க என்றாள். வேறொரு திசையில் மறைந்தாள்.
கண்ணுசாமி கல்யாணியிடம் சென்றான். பேசினான். அவள் தொட்டாள்…. …. இன்பம் கொள்ளை, கொள்ளை! கந்தசாமிக்காக வடித்துக் கொட்டியிருந்த இன்பச் சோற்றையெல்லாம் குண்டோதரத்தனம் பண்ணினான் வண்டிக்காரக் கண்ணுசாமி! அப்பாசாமியின் நெடுநாள் ஆசை அந்த ஒரு இரவில் நிறைவேறிற்று! காத்திருந்தவன் பெண்ணை நேற்று வந்தவன் கொண்டுபோனான் என்பது போலக் கண்ணுசாமிக்கு அனா விலாசம் அடித்தது! முனிசாமி துணை நின்றார்!