சென்னைக் கடற்கரை படைத்த சரித்திரம்
தலைவர்களை ஒருங்கிணைத்த அன்னை மணியம்மையார் இரங்கற் கூட்டம்
அன்னை மணியம்மையார் இரங்கல் பொதுக்கூட்டம் 28.3.78 அன்று இரவு ஏழரை மணியளவில் சென்னைக் கடற்கரையில் உள்ள சீரணி அரங்கில் டாக்டர் ராஜா சர். முத்தையா செட்டியார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அனைத்துக் கட்சித் தலைவர்களும் பங்கேற்று கண்ணீர் உரையாற்றிய இந்த மாபெரும் கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கில் பொதுமக்கள் திரண்டிருந்தனர். திராவிடர் கழகம் சார்பில் நடத்தப்பட்ட இக்கூட்டத்தில் இறுதிவரை கட்டுப்பாடாய் கழகத் தோழர்களும் பொதுமக்களும் குழுமியிருந்தனர்.
வரலாற்று மாட்சிக்குரிய இக்கூட்டத்தில் பங்கேற்பதற்கென்றே வெளியூர்களிலிருந்தும் கருஞ்சட்டைக் குடும்பங்கள் வந்திருந்தன. சீரணி அரங்க மேடையில் – அனைத்துக் கட்சித் தலைவர்களையும் ஓரணியில் இணைக்கும் சக்தி பெற்ற தந்தை பெரியாரின் உருவப்படம் மாட்டப்பட்டிருந்தது. மேடையின் முன்புறத்தில், அய்யா அவர்களின் ஆயுளை நீடித்துக் காத்த – தந்தை பெரியாரவர்களின் மறைவுக்குப் பிறகும் இந்த இயக்கத்தைக் காக்கும் பெரும் பணியை ஏற்றுக்கொண்ட அம்மா அவர்களும், அய்யா அவர்களும் சேர்ந்து இருக்கும் படம் வைக்கப்பட்டிருந்தது. அய்யா – அம்மா அவர்களின் உருவத்துடன் – லட்சியப் பயணத்தைத் தொடருவோம் என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகள் – கம்பங்களில் கட்டப்பட்டிருந்தன. கடற்கரைச் சாலையிலிருந்து சீரணி அரங்கு வரும் வரை உள்ள பாதையின் இருபுறங்களிலும் திராவிடர் கழகக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறந்து கொண்டிருந்த காட்சி, ராணுவப் பாசறையுள் நுழைவது போன்ற உணர்வினை ஏற்படுத்தியது.
சரியாக ஏழரை மணிக்கு நிகழ்ச்சி தொடங்கியது.
கழகப் பொருளாளர் கா.மா. குப்புசாமி அவர்கள் டாக்டர் ராஜா. சர். முத்தையா செட்டியார் அவர்களை இக்கூட்டத்திற்குத் தலைமையேற்று நடத்தித் தருமாறு முன்மொழிந்தார். தென் ஆற்காடு மாவட்ட கழகத் தலைவர் பண்ருட்டி நடேசன், தென் சென்னை மாவட்ட தி.க. தலைவர் எஸ்.பி. தெட்சிணாமூர்த்தி ஆகியோர் வழிமொழிந்தனர். பிறகு டாக்டர் ராஜா சர். முத்தையா செட்டியார் தலைமையேற்று உரையாற்றினார். டி.எல். மகராஜன் அவர்கள் – அம்மா அவர்களைப் பற்றிய பாடல் ஒன்றை உருக்கமாகப் பாடினார். இரங்கற் கூட்டத்தில் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்., எதிர்க்கட்சித் தலைவர் கலைஞர், அ.தி.மு.க. அவைத்தலைவர் நாவலர், தி.மு.க. பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன், எம். கல்யாணசுந்தரம் எம்.பி. (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி), மேலவை துணைத் தலைவர் ம.பொ.சி., அம்பிகாபதி எம்.எல்.ஏ. (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி), ரா. மார்க்கபந்து எம்.எல்.ஏ. (உழைப்பாளர் கட்சி), முன்னாள் முதல்வர் பக்தவத்சலம் (காங்), அப்துல் லத்திப் (முஸ்லீம் லீக்), ஜி. கருப்பையா மூப்பனார் (இ.காங்.), வரதராசன் (மார்க்சிஸ்ட்) ஆகியோர் உரையாற்றினர்.
பல்வேறு கட்சித் தலைவர்கள் ஆற்றிய இரங்கல் உரையை இங்கே தருகின்றேன். ஏனெனில், அம்மா அவர்களின் தலைமைப் பணி எவ்வாறு தந்தை பெரியார் அவர்களுக்குப் பெருந்துணையாக அமைந்திருந்தது என்பதை அறிந்துகொள்ள ஏதுவாக அமையும் என்பதற்காக.
முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் தனது இரங்கலுரையில் குறிப்பிட்டதாவது:
உங்களை எல்லாம் மீண்டும் சந்திக்க வாய்ப்புக் கிடைத்திருக்கிறது என்றாலும் இப்படிப்பட்ட சந்திப்பு தேவைதானா என்கிற அளவுக்கு இரங்கல் கூட்டத்தில் பேசுகிற வாய்ப்பு ஏற்பட்டமைக்காக உண்மையிலே நாம் அனைவரும் கலங்கத்தான் செய்வோம்.
ஒரு தாய், பெண் என்ற பெயரோடு, குழந்தைப் பருவத்திலிருந்து _ பிறந்ததிலிருந்து, வாழ்வு முடிகிறவரை சோதனைக்கும் சிக்கல்களுக்கும் வேதனைகளுக்கும் உலுக்கல்களுக்கும் இடையில் தன் கடமையை ஆற்றுகின்ற கட்டாயத்தில் இருக்கிற இந்தக் காலத்தில், பெண்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்ற நிலையை உருவாக்கி, நல்லதையே நினைப்பதைக்கூட உயர்ந்த நிலையிலிருப்பவர்கள்தான் நினைக்க முடியும் என்ற நிலையை உருவாக்கிய அந்தக் காலத்தில், அய்யா பெரியார் அவர்கள் தன்னுடைய தன்மானக் கொள்கைகளை எடுத்துக்காட்டி அதைப் பின்பற்ற வேண்டியவர்கள் யார் யார், எதற்காக எப்படிப் பின்பற்ற வேண்டும் என்பதை எல்லாம் அவருக்கே உரித்தான முறையில், அவருக்கே தெரிந்த நல்ல மொழியில், அவருக்கே உள்ள கூட்டத்தில் வந்திருக்கிறவர்களை எல்லாம் கடிந்துபேசி தனது எண்ணத்தை வெளியிடுகிற ஒரே ஒரு தலைவர் அய்யா அவர்கள். அய்யாவையும் எண்ணி, அய்யாவை மணந்துகொண்ட அன்னையையும் எண்ணி நமது கடமையைச் செய்வதற்காக இங்கே கூடியிருக்கிறோம் என்பதை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம். நாம் கூடியிருப்பது, அய்யா அவர்களின் மனைவியாக இருந்த அன்னை அவர்களுடைய நம்பிக்கை வாழ்க என்று கூறுவதற்காக!
அம்மாவின் தியாகம்
அதுமட்டுமல்ல; தனது இளம் வயதில் எந்த இளம் பெண்ணும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது தவிர்க்க முடியாத இயற்கையின் கட்டளையாகும். அது நியாயம்தான் என்று உலகம் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலையில், எந்த சுகத்தையும் எதிர்பாராமல், தன்னுடைய வாழ்க்கையை அய்யா அவர்களிடம் ஒப்படைத்து, தன்னுடைய இளமைக்குத் தேவையான எதைப்பற்றியும் அவர்கள் விரும்பாமல், கொள்கைக்காக பணிவிடை செய்து, அய்யா அவர்களை எத்தனை ஆண்டுகள் இந்த நாட்டுக்கு உயிரோடு காத்து வைத்திருக்க முடியுமோ அந்த அளவுக்கு உழைத்துக் காத்தவர்கள் என்பதை எண்ணும்போது, மணியம்மையார் அவர்களை தமிழ் உலகம், தன்மான உலகத்திற்குச் சொந்தமான எந்த உலகமாக இருந்தாலும் பொதுவுடைமைக்குச் சொந்தமான எந்த உலகமாக இருந்தாலும் மறக்காது என்பதை நான் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
இயக்கத்தைக் கட்டிக் காத்தார்
நல்ல மக்கள் எதைச் செய்தாலும் தெரியாமல் செய்தால்கூட, நன்மைகள் பலருக்கு ஏற்படுவது உண்டு. அதுபோல் அய்யா அவர்கள் மணியம்மையாரைத் தேர்ந்தெடுத்து, அய்யா அவர்கள் போனபிறகும் அந்த இயக்கத்தைக் கட்டிக் காப்பதற்காக உழைத்த அந்தத் தாயை எண்ணும்போது, உண்மையிலேயே மருத்துவமனையிலே நான் அவர்களைக் கண்டபோது கலைஞர் குறிப்பிட்டதுபோல நானும் அதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.
உடல் நோயுற்றாலும்
அந்த மருத்துவர் சொன்னார்: இது 11ஆவது முறையாக அவர்களுக்கு மாரடைப்பு வந்திருக்கிறது என்று. 10 முறை வந்தபிறகும் மருத்துவர்கள் சொல்லியும் அம்மையார் அவர்கள் சொன்னார்களாம், நூறாவது ஆண்டு அய்யா பிறந்த நாள் விழாவைப் பார்த்துவிட்டு நான் செத்துவிட்டால் போதும் என்று சொன்னார்களாம். அதைத்தான் இங்கே கலைஞரும் குறிப்பிட்டார், அப்படிப்பட்ட உடல்நிலையிலும், மருத்துவர்கள் சொல்லியும் கேட்காமல், தன் உடலைப்பற்றியும் கவலைப்படாமல் ஊர் ஊராகச் சென்று கொள்கையைப் பிரச்சாரம் செய்ய முயன்றார்கள். அதன் விளைவாக இன்று நம்மைவிட்டுப் பிரிந்தார்கள். உருவத்திலே நம்மிடையே இல்லாமல் மறைந்தாலும் கருத்தை நம்மிடையே விட்டுவிட்டுச் சென்றிருக்கிறார்கள். தாய்மார்களுக்கு நல்ல செய்தியைச் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.
மரமும் விழுதும்
இந்த இயக்கம் விழுதுவிட்டுப் பரவி, ஆங்காங்கே வளர்ந்திருக்கிறது என்று கலைஞர் அவர்கள் குறிப்பிட்டார்கள். நான் ஒன்றைச் சொல்வேன், அந்த விழுதுகள் உறுதியாக பூமியில் பதிந்துவிடுமானால், மத்தியிலே இருக்கிற அடிமரம் இத்துப்போனால்கூட, அதைக் காப்பாற்றுகிற அளவுக்கு விழுந்த விழுதுகள் மண்ணிலே ஊன்றி, மரத்தைக் காப்பதை நான் பல்வேறு இடங்களிலே பார்த்திருக்கிறேன். அப்படி விழுது விட்டிருப்பதால்தான், அந்த மரங்கள் நன்றாகப் பாதுகாக்கப்பட்டிருக்கின்றன என்பதை கலைஞரைப் போன்றவர்கள், என்னைப் போன்றவர்கள் பார்த்திருப்பதால், உண்மையிலே விழுது விடுவதன் விளைவாக, அந்த மத்தியக் கொள்கை, மய்யக் கொள்கை காப்பாற்றப்படும் என்பதைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
விட்டுக்கொடுக்க மாட்டோம்
அனைத்திந்திய அண்ணா தி-.மு.கழகத்தின் சார்பாக, நான் முதலமைச்சர் என்கின்ற நிலையிலே இங்கே சொன்னாலும்கூட, அதனுடைய பொதுச் செயலாளர் என்கின்ற முறையிலும் இங்கே நான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். சமுதாயத்தில் உள்ள சீர்கேடுகளை மாற்ற _ நீக்க, அதை எங்கிருந்து அனுப்ப வேண்டுமோ, அங்கே அனுப்ப அனைத்திந்திய அண்ணா தி.மு.கழகம் தவறாது என்பதை இங்கே நான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
மெல்லத் தின்றால் முள்ளையும் தின்னலாம் என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஆகவே கொஞ்சம் அவசரப்படாமல் நாங்கள் செயல்படுவோமே தவிர, எந்தக் காலத்திலும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்பதை இங்கே நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
நினைவுச் சின்னம்
அனைத்திந்திய அண்ணா தி.மு.கழகம் இரங்கல் கூட்டத்திலே கலந்து தாயை வணங்குகிற வகையில் அம்மையாரை வணங்குகிறோம். தந்தையால் ஊக்குவிக்கப்பட்ட, ஊட்டச்சத்தான கொள்கைகளை _ சமுதாய சீர்திருத்தக் கொள்கைகளை என்றும் நம் மனதில் பதிகின்ற வகையில் அ.தி.மு.கழகம் தங்களால் ஆன அனைத்தையும் செய்யும். விரைவில் தமிழக அரசு, அய்யாவையும் அன்னையையும், எந்தவகையில் போற்றிப் பாராட்ட வேண்டுமோ, அந்தவகையில் சரியான முடிவெடுத்து, உறுதியான நிலைமையில், திட்டவட்டமான வகையில், நேர்மையான முறையில் ஆவன செய்யும் என்பதை, முதலமைச்சர் என்கின்ற முறையிலும், அ.இ.அ.தி.மு.கழகத்தின் பொதுச்செயலாளர் என்ற முறையிலும் தெரிவித்துக் கொள்கிறேன். அனைத்திந்திய அண்ணா தி.மு.கழகம் அய்யாவின் கொள்கைகளை, அன்னை விட்டுச் சென்ற கொள்கைகளை, பெண்கள் அனைவருக்கும் சம உரிமை வேண்டும் என்ற கொள்கைக்காக எங்கள் கழகமும், எங்கள் கழகத்தை நடத்திச் செல்லும் அனைவரின் சார்பாகவும், நான் சொல்லிக் கொள்கிறேன். இந்த அரசும், இந்த அமைப்பும் அந்தக் கடமையை நிச்சயமாகச் செய்யும்.
முதல் ஆசான் பெரியார்க்கு இது இரங்கல் கூட்டம். இந்தக் கூட்டம் பெரியவர்களுக்கு, நாம் வணங்குகிறவர்களுக்கு, நாம் யாரை உயர்ந்த ஸ்தானத்திலே வைத்துப் போற்றுகிறோமோ அந்தப் போற்றப்படுகிறவர்கள் எந்தக் கொள்கைக்குச் சொந்தக்காரர்களோ அந்தக் கொள்கைக்கு _ அந்தக் கொள்கையைத் தந்த முதல் ஆசான் என்கின்ற வகையில், அதைத் தந்தவர் என்கின்ற வகையில் அய்யா அவர்களுக்குக் காட்டுகிற மரியாதையாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட மரியாதையைக் காக்கும் வகையில் இறுதிவரை அமைதியாக இருந்து கேட்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
நான் அண்ணா அவர்களையும் நாவலர் அவர்களையும் முதன்முதலில் சந்திக்கக் காரணமாக இருந்தவர் நடிகமணி டி.வி.நாராயணசாமி அவர்கள். இவர்கள் மூலமாகத்தான் நான் அய்யா அவர்களையும் அன்னையார் அவர்களையும் சந்தித்தேன்.
பச்சை அட்டைக் குடிஅரசு
என்னுடைய வாழ்க்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தித் தந்த கலைவாணர் அவர்கள்தான் முதன்முதலாக 1935ஆம் ஆண்டு குடிஅரசு பத்திரிகையைப் படிக்குமாறு என்னிடம் சொன்னார்கள்.
1935ஆம் ஆண்டு நான் சினிமாத் துறைக்கு வந்தபோது நான் படிக்க ஆரம்பித்த பச்சை அட்டைக் குடிஅரசு என்று சொல்லப்படுகிற அந்த வார இதழை நான் படித்தபோது, எவ்வளவு வேகமாக மாறியிருப்பேன் என்பதையும் சிறு வயதில் வீட்டிலே எவ்வளவு வேகமாகப் பேசியிருப்பேன் என்பதையும் எண்ணிப் பார்க்கும்போது அந்த எழுத்துக்கும் கருத்துக்கும் எவ்வளவு வலிமை இருந்தது என்பதை நான் உணர்கிறேன். அதைப்போல சிறந்த கருத்துகளை இங்கே பலர் பேச இருக்கிறார்கள். நீங்கள் கூட்டம் முடிந்து எழுந்து செல்லும்போது, புதிய மாற்றத்தைப் பெற்றவர்களாக, மாறிய மனத்தைக் கொண்டவர்களாக புதிய சிந்தனை பெற்றவர்களாக எழுந்து செல்லவேண்டும். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்க வீறுகொண்டெழுந்த புதிய இளைஞர்களாக ஒவ்வொருவரும் ஆக வேண்டும் என்று கேட்டுக்கொண்டு, அய்யா அவர்களின் புகழ் ஓங்குக, அம்மையாரின் நினைவும் நமது மனதில் நிலை நிறுத்துக என்றுகூறி அண்ணா வாழ்க என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார். பின்பு, தி.மு.கழகத் தலைவர் கலைஞர் அவர்கள் உரையாற்றும்போது,
மறைந்த நம்முடைய அன்னை மணியம்மையார் அவர்களுக்காக நடைபெறுகின்ற இந்த இரங்கல் கூட்டத்தில் எனக்கு முன்னால் பேசிய பல கட்சிகளின் தலைவர்கள், மறைந்தவர்கள் வகுத்த கொள்கைகளை மறவாமல், அவர்கள் வழிநடக்க நம்மால் இயன்ற முயற்சிகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை எடுத்துக் கூறியிருக்கிறார்கள்.
இருண்டு கிடந்த தமிழகத்து மண்ணில் ஒளிக்கதிராகத் தோன்றிய தந்தை பெரியார் அவர்களுக்கு வாழ்க்கைத் துணைவியாக _ பொது வாழ்விற்குத் துணையாக இருந்து நம்மையெல்லாம் ஏங்கவைத்துவிட்டு மறைந்து விட்டவர்கள்தான் அன்னை மணியம்மையார்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த என்னுடைய நண்பர் அம்பிகாபதி எடுத்துக்காட்டியதைப் போல, தமிழ்ச் சமுதாயத்திலே மண்டிக்கிடக்கின்ற மூடநம்பிக்கை நோய்களைத் தீர்க்க பெரியார் அவர்கள் தந்த மருந்து கசப்பு மருந்தாக அமைந்தது என்றாலும், அந்தக் கசப்பு மருந்தைத் தந்த தந்தை பெரியாரும் இன்றில்லை. அந்த மருந்தைத் தேனிலே குழைத்து அருந்தச் செய்கின்ற பக்குவத்தை உருவாக்கிய பேரறிஞர் அண்ணாவும் இன்றைக்கில்லை.
பெரும் பொறுப்பு
தமிழ்ச் சமுதாயம் எனும் குழந்தையை மடியிலே தூக்கிப் போட்டு, மருந்தைப் பாலடையில் குழைத்து, வாயிலே புகட்டிய அன்னையாக இருந்த மணியம்மையாரும் இன்றில்லை.
ஆனால், தமிழ்ச் சமுதாயத்தின் நோயைத் தீர்க்கும் பெரும் பொறுப்பை இந்த மேடையில் வீற்றிருக்கிற நாமெல்லாம் எடுத்துக் கொண்டாக வேண்டும்.
இதிலே கட்சி மாறுபாடுகளுக்கோ, கட்சி வேறுபாடுகளுக்கோ இடம் இருப்பதாகவே எனக்குத் தோன்றவில்லை.
ஏனென்றால் பெரியார் அவர்கள் எடுத்துச் சொன்ன கொள்கைகளை, அவர் வழிநின்று அன்னை மணியம்மையார் அவர்கள் எடுத்துச் சொன்ன அந்தக் கொள்கைகளை இந்த மேடையிலே வீற்றிருக்கிற அத்தனை பேரும் நூற்றுக்கு நூறு முழுமையாக ஒத்துக் கொள்ளாவிட்டாலும் அந்தக் கொள்கையில் ஒவ்வொரு அம்சத்தை ஒத்துக் கொள்கிறவர்கள் இந்த மேடையில் நிச்சயமாக இருக்கிறார்கள்.
நூற்றுக்கு நூறு முழுமையாக ஒத்துக் கொண்டவர்களும் இந்த மேடையில் இருக்கிறார்கள். 90 சதவிகிதம் 80 சதவிகிதம் ஒத்துக் கொண்டவர்களும் இருக்கிறார்கள். எங்களால் முடிந்தது பத்து சதவிகிதம்தான் என்ற அளவில் பெரியாருடைய கொள்கைகளை ஒத்துக் கொண்டவர்களும் இருக்கிறார்கள்.
ஆனாலும், சதவிகிதக் கணக்கில் வேண்டுமானால் மாறுபாடு இருக்கலாமேயல்லாமல் பெரியாருடைய கொள்கை தமிழ்ச் சமுதாயத்தில் _ அவர் இருந்தாலும் இல்லாவிட்டாலும் என்றென்றும் தேவைப்படுகிற ஒரு கொள்கை என்பதை எந்தக் கட்சியிலே உள்ளவர்களும் மறுக்க இயலாது. அந்தக் காரணத்தால்தான் பெரியாரையோ -_ அன்னை மணியம்மையார் அவர்களையோ _ பேரறிஞர்களையோ _ அவர் தந்த அண்ணா அவர்களையோ _ பகுத்தறிவுக் கருத்துகளையோ கட்சி சார்பற்ற முறையில் சமுதாயத்தை முன்னேற்ற _ அனைவரும் பின்பற்ற வேண்டும் என்ற என்னுடைய வேண்டுகோளை இந்த இரங்கல் கூட்டத்தின் வாயிலாக உங்கள் முன்னால் வைக்க நான் கடமைப்பட்டிருக்கிறேன்.
_ கலைஞரின் இரங்கலுரை இன்னும் இருக்கிறது…
(நினைவுகள் நீளும்…)