பழங்கதைப் பேச்சாளர் ஒருவர், ஒருமுறை எழுதும்போது, கடவுள் சூப்பர் மார்க்கெட் முதலாளி அல்ல, அவரிடம் அது வேண்டும், இது வேண்டும் என்று கேட்கக் கூடாது என்று எழுதினார். பிரபல ஏட்டில் எழுதியதால், பல பேர் படித்திருப்பார்கள். ஆனால், எத்தனைப் பேர் அதனைப் புரிந்து அதன்படி நடக்கிறார்கள்?
மறைந்த கிருபானந்த வாரியார் கூறியதுபோல, பக்தர்கள் அதிகமாக வளர்ந்துள்ளனர், பக்தி வளர்ந்துள்ளதா? சங்கடமான கேள்விதான். வேத ஆராய்ச்சி நிலையம் வைத்திருக்கும் வேலையற்ற பசு புத்திரர்கள் இதுபற்றி ஆய்வுசெய்து முடிவை அறிவித்தால் உருப்படியான உதவியை ஆன்மிகத்திற்குச் செய்ததாக அமையும். அதை விடுத்துப் பசு மாட்டுக்குப் பிறந்தவர்கள் தொலைக்காட்சி ஊடகங்கள் வாயிலாக மூடபக்தியை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள், இந்துமதத்தின் ஆகப்பெரிய ரிஷிகளில் ஒருவரான கவுதமன் பசு மாட்டிடம் பிறந்தவன் என்றுதானே எழுதி வைத்திருக்கிறார்கள்!
பிரார்த்தனை பலன் தருமா?
கடவுளை டிபார்ட்மென்டல் ஸ்டோர் என்று நினைத்துக் கொண்டுதானே, எல்லா பக்தர்களும் வழிபடுகிறார்கள்? வேண்டிக் கொள்கிறார்கள்? பேரம் பேசுகிறார்கள்! நீ இதைச் செய்தால் நான் அதைச் செய்வேன் என்று வேண்டுவது, பேரம் அல்லாமல் வேறு என்னவாம்? காரியம் நடைபெறுவதற்குக் கடவுளுக்கு லஞ்சம் தருவதல்லாமல் வேறு என்ன பெயர், வேண்டுதலுக்கு?
ஜெபம் செய்யுங்கள், ஜெயம் உண்டாகும் என்று கிறித்துவ மதத்தினர் கூறுகிறார்கள். இறைவனிடம் கை ஏந்துங்கள், அவன் இல்லையென்று சொல்லுவதில்லை என்று பாட்டாகவே பாடிடும் பக்தர்கள், தம் கடவுளிடம் து ஆ கேட்கும்படிக் கூறுகிறார்கள். இவையெல்லாம் பலித்திருக்கின்றனவா? கேட்டது கிடைத்திருக்கிறதா? பலகோடிப் பேர் வேண்டுதலையும், பிரார்த்தனையையும் து ஆக்களையும் கடவுள்கள் நிறைவேற்றித் தந்திருக்கின்றனவா?
அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளுக்கு ஏற்படும் கதிதானே, பக்தர்களின் வேண்டுதல்களுக்கும்…! காலங்காலமாக…! ஆனாலும் வேண்டுதல்கள் நின்றபாடில்லை! அதனாலேயேகூட, அவை மூடநம்பிக்கை!
போய் வருவதே புண்ணியமாம்
கன்னடப் பார்ப்பனர் ஒருவரால் அறிமுகப் படுத்தப்பட்டு, மலையாள அரசியல் தலைவர் ஒருவரால் தரிசிக்கப்பட்டு, காணிக்கை வழங்கப்பட்ட கோயில் கொடச்காத்ரி மலையில் சவுபர்னிகா நதிக்கரையில் உள்ள மூகாம்பிகை கோயில். ஊர்ப் பெயர் கொல்லூர். இந்தக் கோயிலை மலையாளத்து காலடி எனும் ஊரில் பிறந்த (ஆதி) சங்கரன் கட்டியதாகக் கதை உண்டு. இங்குள்ள ஆற்றுநீரில் குளித்தால் புனிதமாம். அதனால் குளித்து எழுந்து தங்கத்தினால் செய்த வாள் ஒன்றைக் காணிக்கையாகத் தந்தார் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த எம்.ஜி.இராமச்சந்திரன்.
இங்கெல்லாம் போய் வருவதே புண்ணியமாம். ஊர் சுற்றி வருவதுதான் இந்திரன் எனும் கடவுளுக்கு மிகவும் பிடித்தமானது என்கிறது ரிக்வேதம். ரிக்வேத காலத்தில் உயிருடன் இருந்து இப்போது காணாமல் போய்விட்ட கடவுள்களில் ஒன்று இந்திரன். இப்படிப்பட்ட மாஜி கடவுள்கள், இந்து, ரோம, கிரேக்க, ஜப்பானிய ஷின்டோ மதங்களில் நூற்றுக்கணக்கில் உண்டு. இந்தக் கடவுள்களின் சாவுக்கு யாரும் இரங்கல் கவிதைகள் எழுதவில்லை என்பதுதான் சோகம்! நிளிஞிஷி திஹிழிணிஸிகிலி போல ஒன்றாவது எழுதியிருக்கலாமே!
புண்ணிய இடங்களா?
ஊர் ஊராகப் போய்ப் புண்ணிய க்ஷேத்திரங்களைப் பார்ப்பதைப் பற்றி கந்த புராணம் விரிவாகவே கூறுகிறது. தலைமயிரை மழித்து மொட்டையடித்துக் கொள்ளல், பட்டினி (உபவாசம்) மீன் இல்லாத எளிய உணவு உண்ணல், மது, புகையிலை பயன்படுத்தாமை, பெண் உறவு கொள்ளாமை முதலியவற்றைக் கடைப்பிடிக்க வேண்டுமாம். முக்கியமான நிபந்தனை ஒன்று உண்டு: பார்ப்பனர்களைக் கேள்வி கேட்கக் கூடாது அவர்கள் என்ன சொன்னாலும், எதைச் செய்தாலும் கேள்வி கேட்கக் கூடாது, கீழ்ப்படிய வேண்டும்!
இப்படிப்பட்ட புனித இடங்களின் பட்டியல் இது: காசி, மதுரா, அயோத்யா, பிரயாகை, பத்ரிநாத், கேதார்நாத், சோம்நாத், விஸ்வேஸ்வர், ராமேஸ்வரம், பூரி, துவாரகை, மானசரோவர் முதலியவை. தென்னாட்டில் ஒன்றே ஒன்றுதான். மற்றவை எல்லாமே வடக்கே! இதிலும் வடக்கு_தெற்கு பாகுபாடு!
செத்தால் சொர்க்கம்
இந்த க்ஷேத்ராடனத்தில் செத்துப் போகும் எல்லாருக்கும் சொர்க்கத்தில் இடம் நிச்சயம் உண்டு. அதிலும் காசியில் செத்துப் போனால், சொர்க்கத்தில் முக்கியப் பிரமுகர்கள் இருக்கும் பகுதியில் இடம் உண்டு. இது இந்துமதத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே காட்டப்படும் ஆசை! காசியில் இறப்பவர்களுக்கு முக்தி கிட்டும் என்கிறார்கள். முக்தி என்றால், இனிமேல் மறுபிறவியே கிடையாதாம். இந்தப் பிறவியோடு சரியாகிப் போகுமாம்! முன்பிறவி, பின்பிறவி என்றெல்லாம் புளுகித் தள்ளும் இந்துமதத்தில் மட்டுமே இந்த ஆசை வார்த்தை செலாவணி ஆகும்! சிதம்பரத்தைப் பார்த்தாலே முக்தி என்கிறான். திருவாரூரில் பிறந்தாலே முக்தி என்கிறான். திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி என்கிறான்! இந்த நிலையில், சுலபமாக முக்தி அடைவதை விட்டுவிட்டு, எவன் செலவு செய்து கொண்டு காசிக்குப் போய்ச் சாவது? என்கிற எண்ணத்தில் பலபேர் இப்போது காசி யாத்திரை போவதில்லை. புரோகிதத் திருமணத்தின்போது மணமகன் காசி யாத்திரை நாடகத்தில் நடிப்பதோடு சரி!
நால் வருணக் கொடுமை
வேண்டுதல் பலிக்கும் என்பதற்காகப் பலபேர் போய்வரும் கோயில்கள் இந்திய நாடு முழுவதும் பல உள்ளன. காதலர்கள் தங்களைச் சேர்த்து வைக்கும்படி வேண்டிக்கொள்ளும் முக்கிய இடமாக ராஜஸ்தான் மாநிலம், ஜோத்புர் இருக்கிறது. மன்னர் ஆண்ட இடமாக இருந்து இந்தியாவில் சேர்ந்த பகுதி ஜோத்புர். எந்த ஊருக்கும் இல்லாத அவலம் இந்த ஊருக்கு உண்டு. இந்த ஊரின் தெருக்கள் ஜாதிவர்ணம் வாரியாக அமைக்கப்பட்டுள்ளன. பார்ப்பன, சத்திரிய, வைசிய, இதரர் என வர்ணவாரியாகத் தெருக்களை அமைத்து வீடுகளைக் கட்டிக் குடியிருக்கின்றனர். வீடுகளுக்குப் பூசப்பட்ட வர்ணங்களும் அப்படியே. நீல வண்ண வீடு என்றால் பார்ப்பனர்க்குரியது. சிவப்பு வண்ணம் என்றால் சத்திரியர்க்கு. மஞ்சள் வண்ண வீடுகள் வைசியர்க்கு. இதரர்க்கு வேறு வண்ணங்கள். இந்நிலை இன்றளவும் உண்டு. நம்புங்கள், இந்தியா மதச்சார்பற்ற நாடு!
இஷ்கிய கணபதி
நீலநிற வீடுகள் நிறைந்த பகுதியில், ஆடா பஜார் எனும் இடத்தில் ஜூனி மண்டி கணபதி கோயிலுக்குத்தான் காதலர்கள் வருகிறார்கள்; வேண்டிக் கொள்கிறார்கள். மூன்றே மூன்று கற்களால் கட்டப்பட்ட கோயில். 1981இல் இதைப் புதுப்பித்துக் கட்டியவர் இஷ்கிய கணபதி என்று பெயர் வைத்தார். கடவுளுக்கே பெயர் வைக்கும் பக்தர் இவர். பா.ஜ.க. ஆட்சியில் கோட்டைவிட்ட கார்கில் போரின்போது கார்கில் பிள்ளையார் படம்போட்ட பக்தர்களை நினைவிருக்கலாம்.
ஜாதிக்கொரு வீதி, ஜாதிக்கொரு வண்ணம் பூச்சு, ஜாதிக்கொரு நீதி இருப்பதைப் போலவே, ஜாதிக்கு ஜாதி தனித்தனிக் கோயில்களும் உண்டு. ஆனால் இந்தக் கோயிலுக்கு மட்டும் அந்தக் கட்டுப்பாடு கிடையாது. சமரசம் உலாவும் இடம்! இந்துப் பெண்ணைக் காதலித்த இசுலாமியர் அஜ்மீரிலிருந்து இங்கு வந்து 16 வாரங்கள் வேண்டிக் கொண்டாராம். புதன் கிழமைகளில் வந்து வேண்டிக் கொண்டவர்களின் இஷ்டத்தைப் பூர்த்தி செய்வாராம், இஷ்கிய கணபதி! மீதமுள்ள நாள்களில் கண்பார்வை இருக்காதோ? காதுகள் கேட்காதோ? புதன் கிழமைகளில் பூந்தி, லட்டு வியாபாரம் சக்கைப் போடு போடுமாம்! இதற்காகவே இஷ்கிய கணபதிக்கு இத்தனைப் பிரச்சாரம்!
சிகரெட், விஸ்கி போதும்
லட்டும் வேண்டாம், பூந்தியும் வேண்டாம்! சிகரெட்டும் பிராந்தி/விஸ்கி போதும் என்கிறார் கோரா பாபா! உத்திரப் பிரதேச மாநிலத் தலைநகர் லக்னவ் நகருக்கு வெளியே, கிறித்துவக் கல்லறைகளுக்கிடையே கோரா பாபாவின் சமாதி இருக்கிறது. ஆம், கோராபாபா இறந்துபோன வெள்ளைக்கார ராணுவ அதிகாரி! கேப்டன் ஃபிரெடரிக் வேல் என்பவர், 1857_58இல் நடந்த சிப்பாய்க் கலகத்தின்போது கொல்லப்பட்டவர். 23 வயதே ஆன அவரது உடலை கோமதி நதிக்கரையில் புதைத்துக் கல்லறை கட்டினார்கள். அதுதான் கோராபாபாவின் கோயில்! கேப்டன் ஃபிரெடரிக் வேல் கோரா பாபா ஆக்கப்பட்டார்.
வியாழக்கிழமைகளில் நம் ஊர் தர்காக்களில் கும்பல் கூடி மந்திரித்துத் தாயத்துக் கட்டிக் கொள்வதைப்போல லக்னவ்வில் கூடுகிறார்கள். சிகரெட் பற்றவைத்து, இரண்டு தம் இழுத்து மீதி சிகரெட்டை பாபாவுக்காக கல்லறை மீது வைத்து விடுகிறார்கள். சிகரெட் பிடிக்கும் பழக்கம் இல்லாதவர்களும் குறிப்பாகப் பெண்களும் இரண்டு தம் அடித்து விட்டுத்தான் தங்கள் கடவுளுக்குத் துண்டு சிகரெட்டைக் காணிக்கை ஆக்குகிறார்கள். கால் பாட்டில் சரக்கை கல்லறையின் வெடிப்பில் ஊற்றி விடுகிறார்கள். கோரா பாபா ராஆகவே குடிப்பார் போலும்! ஜாதி, மத, வேறுபாடின்றி ஆண், பெண், குழந்தைகள் எனப் பலவகை பக்தர்களை ஆட்கொண்டுள்ளார் இந்த வெள்ளைக்காரர்! அருள் பாலிக்கிறார் என்பது இவர்களது நம்பிக்கை!
இவர்களது சொந்தக் கடவுள்கள் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை நிறைவேற்றி விட்டு, கொலை செய்யப்பட்ட வெள்ளையரை வணங்கும் இவர்களை அழைக்க, எந்தச் சொல்லைப் பயன்படுத்துவது? மூட மதியினர் என்பது போதாதே!
ராகு – கேது – காளஹஸ்தி
அமுதம் எடுப்பதற்குக் கடலைக் கடைந்ததாகப் புராணம் எழுதி வைத்துள்ளார்கள். பாம்பின் தலைப் பகுதியைப் பிடிப்பதற்குத் துணிவு இல்லாத ஆரியக் கோழைகள் அசுரர்களைப் பிடிக்கச் சொல்லி அதன்படி அமுதம் எடுக்கப்பட்டதாம். அதைப் பங்கிடும்போது பாரபட்சமாகப் பார்ப்பனர்களுக்கு மட்டுமே தந்தார்களாம். அதைக் கண்ட அசுரர்களில் இரண்டு பேர் அவாள் வரிசையில் அமர்ந்தனராம்.
கடவுள் விஷ்ணு அவர்களைத் தண்டித்ததாம். அந்த இரண்டு பேரும் ராகு, கேதுக்கள் எனவும், அவர்கள் நிழல் கிரகங்கள் என்றும் கூறி, ஜாதகம் சொல்கின்றனர். அந்த ராகுவும் கேதுவும் வழிபடத்தக்கவர்கள் என்றும் எழுதி வைத்துக் கொண்டுள்ளனர். அதற்காக ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள காளஹஸ்தி எனும் ஊருக்குப் போகவேண்டும். வாழ்க்கையில் ஏற்படும் தொல்லைகள் நீங்கி நல்ல நிலையை அடையவேண்டும் என்பதற்காக இந்த இரண்டு கிரகங்களைக் கும்பிட வேண்டுமாம். இந்தப் பக்தர்கள் தரும் காணிக்கை ஆண்டு ஒன்றுக்கு 100 கோடி ரூபாய்க்கு மேல் வருகிறது. பூசைக் கட்டணம் ரூ.300 முதல் ரூ.2500 வரை வசூலிக்கிறார்கள்.
பிரணாப் முகர்ஜி அங்கு போய்தான் குடியரசுத் தலைவர் ஆனாராம். அங்கு போய்வந்ததால்தான் இன்றைய தமிழ்நாடு முதல் அமைச்சர் அந்தப் பதவியில் இருக்கிறாராம். தமிழரான நீதியரசர் சதாசிவம் இந்தியாவின் தலைமை நீதிபதியானதே இவர்களின் தயவினால்தானாம். அளப்புக்கு அளவே இல்லாமல் புளுகித்தள்ளி கூட்டம் சேர்க்கிறார்கள்.
காளஹஸ்தி எனும் ஊர் ராகு, கேது க்ஷேத்திரம் என்ற கதை கட்டப்பட்டதே 1980க்கும் 1990க்கும் இடைப்பட்ட காலத்தில்தான் என்பதை இக்கோயில்பற்றி டாக்டர் பட்ட ஆய்வு மேற்கொண்டவர் எழுதியிருக்கிறார். பேராசிரியர் கிரண்கிரந்த் சவுத்ரி திருப்பதியில் உள்ள வெங்கடேசுவரா பல்கலைக்கழகத்தில் பணிபுரிகிறார். அவர்தான் இதுபற்றி ஆய்ந்து அறிவித்தவர்.
காளஹஸ்தி கோயில் சிவன் கோயில். இந்த லிங்கம் சுயம்புவாம். யாரும் தொடக்கூடாதாம். தொட்டால் செத்துப் போவார்களாம். கோயில் அர்ச்சகரே தொடாமல்தான் பூசை செய்கிறாராம்.
தனித்துவ தத்தாத்ரேயா
கருநாடக மாநிலம் வடபகுதியில் உள்ள ஜனகபுர் எனும் ஊரில் உள்ள பிரபலமான தத்தாத்ரேயா எனும் கடவுளின் கோயிலுக்குப் பலவகைப் பைத்தியங்கள் வருகின்றன. பக்திப் பைத்தியங்களைக் கூறவில்லை. மனநிலை பாதிக்கப்பட்ட பைத்தியங்கள் _ பெரும்பாலும் பெண்கள். இந்தப் பைத்தியங்களின் குடும்பத்தினர் யாரிடமும் பேசுவதில்லை. வெட்கமோ? நான்கு வருடங்களாக வந்து போய்க் கொண்டிருக்கிறார் வித்தல் வாலுஞ்ச் என்பவர். அவர் மகனுக்குப் பைத்தியமாம். இன்னும் தெளியவில்லை. தெளியும் அடையாளமும் இல்லை. இருந்தாலும் வந்து போகிறார். பக்தி வந்தால்தான் புத்தி போய்விடுமே!
நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் பேர் வருகின்றனர். முழுநிலவு நாள்களில் பைத்தியங்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்தைத் தாண்டுமாம். பூசாரிப் பார்ப்பனர் களின் காட்டில் நல்ல வருமான மழை!
அந்த இடத்தில் இருக்கும் பெரிய அத்திமரத்தின் காற்று பைத்தியம் தெளிய வைக்கு மாம். அங்கே உட்கார்ந்து பலரும் பாட்டுப் பாடிக் கொண்டிருக்கிறார்கள். சத்தம் கேட்கிறது. பித்தம் தெளிவில்லை. மடையர்கள் வருகை மட்டும் நின்ற பாடில்லை.
– இது போன்ற பிரார்த்தனை மோசடித் தலங்கள் இன்னும் உண்டு. அவை அடுத்த இதழில்…