நுனிப்புல்லர்களுக்கு ஆதாரங்கள் தரும் ஆய்வு நூல்!

பிப்ரவரி 01-15

நூல்: திராவிடர் கழகம் கட்சி அல்ல ஒரு புரட்சி இயக்கமே!
தந்தை பெரியார் கருத்துகள் பற்றி ஓர் ஆய்வு
ஆசிரியர்: சு. அறிவுக்கரசு
வெளியீடு: விழிகள் பதிப்பகம், சென்னை – 600 041.
செல்பேசி: 94442 65152 / 94442 44017
பக்கங்கள்: 256    விலை: ரூ.160/-

திராவிடர் கழகத்தின் செயலவைத் தலைவர் அய்யா சு.அறிவுக்கரசு அவர்களால் எழுதப்பட்டுள்ள தந்தை பெரியாரின் வரலாறு _ ஒரு புதிய நோக்கு என இந்த நூலைச் சொல்லலாம். திராவிடர் என்னும் பெயரைத் தந்தை பெரியார் தேர்ந்தெடுத்ததன் காரணத்தை  தொடங்கும் முன் விளக்கும்  நூலாசிரியர் முதல் ஆயிரம் ஆண்டுகளில் தமிழர்களிடம் மண்டிக் கிடந்த அறியாமைகளை, மூட நம்பிக்கைகளை விளக்கமாக எடுத்துரைத்து, சகுனம் பார்ப்பதான நிமித்தம் முதல் பூதம், பேய் நம்பிக்கை வரை  தமிழ் இலக்கியங்களில் எங்கெல்லாம் இவை சுட்டப்பட்டுள்ளன என்பதனைப் பட்டியலிடுகின்றார். தமிழர்தம் அடையாளத்தை, பண்பாட்டை, பழக்கவழக்கங்களை மீட்டெடுக்க வேண்டாமா? அதற்கான முன்முயற்சிதான் பெரியார் கண்ட திராவிடர் கழகம் (பக்கம் 56) என்பதனை நிறுவுகின்றார். அடுத்த ஆயிரம் ஆண்டுகளில் நிகழ்ந்தவற்றை, மொழியின் தாழ்ச்சியை, இனத்தின் வீழ்ச்சியை  தமிழர் வீட்டு வாழ்க்கை நிகழ்வுகளில், திருமணம், நினைவு நாள் போன்றவற்றில் தமிழ் இடம் பெறா நிலை எப்படி ஏற்பட்டது என்பதனை ஆய்வு நோக்கில் எடுத்து வைக்கின்றார்.

வீழ்ச்சி அடைந்த தமிழ் இனம், தனது மொழியையே தாழ்ச்சியாக நினைத்த தமிழ் இனம் தந்தை பெரியாரின் வருகையால் எப்படித் திருப்பம் அடைந்தது? என்பது குறித்தும் பொது வாழ்க்கையில் எந்தக் கொள்கைகளுக்காக 1917இல் நுழைந்தாரோ அந்தக் கொள்கைகளைக் (றிக்ஷீவீஸீநீவீஜீறீமீ) கடைசி வரையில் கைவிடாமல் உழைத்தவர், கழகத்தவரை உழைக்கச் செய்தவர் பெரியார். அந்தக் கொள்கைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக தமது நடைமுறைகளை, அணுகு முறைகளை, செயல்திட்டங்களை (றிஷீறீவீநீவீமீ) சூழலுக்கு ஏற்ப மாற்றி அமைத்துப் போராடியவர் பெரியார். அன்றைய தமிழ்ச் சமூகத்தின் நிலையை உயர்த்திட இந்தத் தந்திர உபாயங்களைக் கையாண்டார். சமூக நீதிக்காக- _ பார்ப்பனர் அல்லாதார் சமூகத்தின் நிலையை உயர்த்துவதற்காக அவர்தம் செயல்முறைகள் மாற்றப்பட்டனவே தவிர -_ உயர்வுகளை நோக்கிப் பார்ப்பனர் அல்லாத திராவிடர்களை அழைத்துச் செல்வதற்காக மாற்றினாரே தவிர- _ அவர் மாறவே இல்லை! என நூலாசிரியர் சொல்லும் உண்மையை விளக்கும் நோக்கத்தில் அமைந்த அற்புதமான ஆய்வேடாக, கருத்துப்பெட்டகமாக  இந்த நூல் அமைந்துள்ளது.

திராவிடர் கழகம் ஆட்சிக்கு வருபவர்களையெல்லாம் ஆதரிக்கும் ஒரு கட்சி என்று நுனிப்புல் மேய்வோரின் குற்றச்சாற்றுகளை மறுதலித்து, தந்தை பெரியார் இலட்சிய இலக்கிலேயே குறியாய்க் கொண்டதன் விளைவாகத்தான், இரத்தம் சிந்தாத அமைதிப் புரட்சி அறிவுப் புரட்சியாகி, ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மனித சமூகம் நம் நாட்டில் மனிதத்தன்மை, மனித உரிமைகளைப் பெற்றுத் தலைநிமிர்ந்தனர் என்பதைப் பல்வேறு கடந்த கால -_ மிகவும் அதிர்ச்சியூட்டக்கூடிய தகவல்களை அடுக்கடுக்காகத் தந்து வாசகர்களை மிகவும் சிந்திக்க வைக்கிறார். ஆழ்ந்த ஆய்வுப்பார்வை தெளிவான வெளிச்சத்தை, குழப்புபவர்களுக்கும் கும்மிருட்டில் தடுமாறுவோருக்கும் தருவதாக அமைந்துள்ளது.

– முனைவர் வா.நேரு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *