– எட்வர்ட் தபாஷ்
மத நம்பிக்கை, கோட்பாடு, பரப்புரை ஆகியவற்றுக்கு எதிராக நாத்திகர்கள் எந்த அளவுக்குக் கடுமையாக தங்கள் வாதங்களை முன்வைக்க வேண்டும் என்பது பற்றி, 2006ஆம் ஆண்டு தொடக்க நிலையில், கடவுள் நம்பிக்கை அற்றவர்கள் தங்களுக்குள்ளேயே நடத்திக் கொள்ள ஆரம்பித்த விவாதம் விரைவில் வேகம் பெற்றது. நிதானத்தையும், மென்மையையும் கடைப்பிடிக்க வேண்டும் என்று சிலர் வாதிட்டனர்.
அதாவது, கடவுள் நம்பிக்கைக்கு எதிராக கடுமையாகவும், தீவிரமாகவும் பேசுவதை ஏற்றுக் கொள்ள இயலாது என்ற கருத்தை ஜெஃப் வெளியிட்டதை எடுத்துக்காட்டாகக் கூறலாம். என்றாலும், அதற்குப் பின் வெளியிடப்பட்ட ரிச்சர்ட் டாக்கின்சின் `கடவுள் பொய் நம்பிக்கை (‘God Delusion’ of Richard Dawkins), டேனியல் டி. டென்னட்டின் மனமயக்கத்தைப் போக்குதல் (‘Breaking the spell’ of Daniel C. Dennett),கிறிஸ்டொஃபர் ஹிக்சன்சின் கடவுள் சிறப்பான ஆற்றலையோ, முக்கியத்துவத்தையோ பெற்றவரல்ல (‘Godis not great’),விக்டர் ஸ்டெஞ்சரின் மனித இனத்துக்கு நன்மை செய்யத் தவறிவிட்ட கடவுள்: உண்மையா என்றறியப்படாத கருதுகோள் (God: The failed Hypothesis) என்ற மாபெரும் நூல்கள் மனித இனத்தின் மீது ஏற்படுத்திய தாக்கத்தை, பாதிப்பை நாம் நன்றாகவே கண்டிருக்கிறோம். இந்த நூல்கள் அனைத்தும் 2004இல் வெளிவந்த சாம் ஹாரிசின் நம்பிக்கையின் இறுதிக்காலம் (‘The End of Faith’ of Sam Harris) என்ற நூலின் வரிசையில் சேர்ந்து கொண்டு நாத்திகத்தைப் பற்றிய கொள்கை விளக்க அறிவிக்கைகளை வெளியிடும் குறிப்பிடத்தக்க, முக்கியம் வாய்ந்த நூல்களின் தொகுப்பாக விளங்கியதுடன், இதற்கு முன் எப்போதும் கண்டிராத அளவில் பொதுமக்களின் கவனத்தையும் ஈர்த்தன.
நாத்திக வாதத்தின் குரலை ஒடுக்குவதற்கான காரணம் எதுவுமே இருக்க முடியாது என்பதே எனது கருத்து. இயற்கையை விஞ்சிய ஆற்றல் படைத்தவர் கடவுள் என்று மதங்கள் கூறுவதை எதிர்த்து இன்னமும் வேகம் நிறைந்த விவாதம் ஒன்றை ஆணித்தரமாகவும், வெளிப்படையாகவும் முன் வைப்பதை நான் ஆதரிக்கிறேன். மேலே குறிப்பிடப்பட்டுள்ள நூல்களைப் போன்ற இலக்கியத்தினால் சமூகம் மேன்மையே அடையும். பொதுவாக இயற்கைக்கு மாறுபட்ட கருத்துகளுக்கும், இயற்கையை விஞ்சிய ஆற்றல் கொண்ட கடவுள் ஒருவர் இருக்கிறார் என்ற கருத்துக்கும் எதிரான வாதங்களைக் கேட்டறிவதன் மூலம் சமூகம் மேம்பாடே அடையும்.
உலகம் பற்றிய நமது கண்ணோட்டத்தைப் பொதுமக்களிடையே வெளிப்படையாகப் பரப்புரை செய்யும்போது, கடவுள் நம்பிக்கை யாளர்களைவிட நாத்திகர்கள் கடுமையாக இல்லாமல் மென்மையாக நடந்து கொள்வதே சரியான, பொருத்தமான, அடக்கமான நடைமுறையாக இருக்கும் என்று சோதனை செய்யப்படாத ஒரு ஊகத்தை தங்களை அறியாமலேயே ஏற்றுக் கொண்டு, தங்களைத் தாங்களே இழிவுபடுத்திக் கொள்ளும் நாத்திகர்களை எதிர்மறையான விளைவுகளை உருவாக்குபவர்களாகவே நான் காண்கிறேன்.
மேலும், கடுமையான வாதங்களை முன் வைப்பதற்கு கொள்கை அளவில் மறுப்பேதும் தெரிவிக்காத மற்ற நாத்திகர்களும் உள்ளனர். என்றாலும், நல்ல உத்தி என்ற அடிப்படையில் இன்னமும் கட்டுப்பாடான ஒரு அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும் என்று அவர்கள் எண்ணுகின்றனர். தற்போது நாம் அழிக்க முற்பட்டிருக்கும் செல்வாக்கு மிகுந்த மதக் கலாச்சாரம் இன்னமும் எதிர்க்க இயலாத அளவு பலம் பொருந்தியதாக இருப்பதால், நமது முயற்சிகள் ஒரு வரையறைக்குள் இருக்க வேண்டும் என்று அவர்கள் கூறுவர். இந்த வாதத்தை ஏற்றுக் கொள்ள நான் மறுக்கிறேன். மத நம்பிக்கையாளர்கள் செய்வதைப் போலவே, நமது உலகக் கண்ணோட்டத்தை உறுதிபடக் கூறிக்கொள்ளும் அதே உரிமையை நாம் பயன்படுத்துவதால், நாத்திகர்களை சமூகம் ஒப்பி ஏற்றுக் கொள்வதில்லை என்றால், சமூகத்தின் இந்தப் புறக்கணிப்பே, நாம் போராடி ஒழிக்கப்படவேண்டிய ஒரு வகையான சமூக அடக்குமுறையாக இருப்பதாகும் என்று என்னாலும் வாதாட முடியும்.
நமது கருத்துகளை வெளிப்படுத்துவதில் நமக்கு நாமே கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்வதைத் தொடர்வோமேயானால், நாத்திகக் கருத்துகளை ஏற்றுக் கொள்வதற்கான சமூகச் சூழல் தானாகவே மேம்பட்டுவிடாது. மத நம்பிக்கைகளில் இருந்து மாறுபடும் நமது கருத்தினை சமூகத்தால் ஏற்றுக்கொள்ள இயன்ற வகையில் அவர்களிடம் நாத்திகர்களாகிய நாம்தான் கொண்டு சேர்க்கவேண்டும். இல்லாவிட்டால், நமது கருத்துகளை ஏற்றுக் கொள்ளும் ஓர் இணக்கமான சூழலை உருவாக்கவோ அல்லது நமது கருத்துகளை வெளிப்படுத்தும்போது அவற்றைப் பகை உணர்வுடன் தற்போது நம்பிக்கையாளர்கள் பார்ப்பது குறையவோ எள்ளளவும் வாய்ப்பிருக்கப் போவதில்லை.
இவற்றில் எதுவுமே மத நம்பிக்கையாளர்களை இழிவுபடுத்துவதாக ஆகாது. இயற்கையை விஞ்சிய ஆற்றல் கொண்ட கடவுள் ஒருவர் இருக்கிறார் என்ற கருத்தே தவறானது என்று ஏன் நாம் நம்புகிறோம் என்பதற்கான காரணங்களை வெளிப்படுத்தும்போது, நமது உணர்வுகளை, எண்ணங்களை நாம் மறைத்துக் கொள்ளத் தேவையில்லை.
மதநம்பிக்கையும், நம்பிக்கை யாளர்களும் உருவாக்கும் பகை மற்றும் எதிர்ப்பு உணர்வு ஆபத்து அற்றதல்ல
இதனைப் பற்றி இப்போது நாம் ஏன் கவலைப்படவேண்டும் என்று சிலர் கேட்கக்கூடும். பொதுமக்களிடையே நாத்திகக் கருத்துகளைப் பரப்பும் செயலை மேற்கொள்வது பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும்? உண்மையைக் கூறுவதானால், இதற்குப் பல காரணங்கள் உள்ளன:
1. நாத்திகர்கள் மீது மக்களில் பலர் காட்டும் பகை உணர்வு ஒன்றே அவர்கள் கொண்டிருக்கும் வெறுப்பு உணர்ச்சியின் ஓர் அடையாளமாகும். இத்தகைய மோசமான பிற்போக்குத்தனமான, முதிர்ச்சி அற்ற வெறுப்புணர்வை மனித சமூகம் கைவிடவேண்டியது மிகமிக அவசியமான ஒன்றாகும். உலகத்தை யாரோ கடவுள் உருவாக்கினார் என்று பார்க்காமல் உலகம், இயற்கையாக தானாகவே உருவானது என்ற கருத்தைக் கொண்டிருப்பவர்களை மக்கள் இன்னமும் நம்பாமல் இருக்கும் ஒரு சமூகம், எந்த ஒரு முடிவுக்கும் நம்மை அழைத்துச் செல்லும் ஆதாரங்களைத் தேடித் தொடரும் துணிவு உள்ளவர்களைப் பாராட்ட மறுக்கும் ஒரு சமூகம், அறிவார்ந்த – ஆரோக்கியமான சமூகமாக இருக்காது.
2. இந்த உலகை இயங்கச் செய்யும் அறிவார்ந்த ஒரு கடவுள் இல்லாத, ஒரு முடிந்து போன இயல்பியல் நடைமுறையே இந்த பிரபஞ்சம் என்றால், (இந்த உண்மையை எடுத்துக்காட்டும் ஆதாரங்கள் ஏராளமாக உள்ளன என்று என்னால் உறுதிபடக் கூறமுடியும்) இந்த உண்மை நிலை அனைத்துப் பொதுமக்களின் கவனத்துக்கும் கொண்டு வரப்பட வேண்டியது மிகமிக அவசியமானதாகும்.
3. இயற்கையை விஞ்சிய ஒரு கடவுளால் கட்டளையிடப்பட்டதில்தான் மனித இனத்தின் ஒழுக்கமே அடங்கி இருக்கிறது என்று நமது சமூகத்தில் பரவி நிற்கும் கருத்து மிகமிகத் தவறான, மோசமான, தீவிரமாகவும் கடுமையாகவும் எதிர்க்கப்படவேண்டிய கருத்தாகும்.
4. வரலாற்றுப் பூர்வமாக, தீங்கு விளைவிக்காத, கருணை உணர்வு நிறைந்த புராணக் கதைத் தொகுப்பை வழிபடுவதாக மட்டுமே மதங்கள் இருக்கவில்லை. மனிதர்கள் இறந்தபிறகு அவர்களுக்கு என்ன நேர்கிறது என்பதுபற்றிக் கொண்டிருந்த கருத்து வேறுபாடுகளினால், கடந்த பல நூற்றாண்டு காலத்தில் எண்ணற்ற மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
5. பெண்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் நாமறிந்திருக்கும் பல சமூகங்களிலும், இதற்கான காரணம் மதமாகத்தான் இருந்து வந்திருக்கிறது.
6. ஓரினப் பால் கவர்ச்சி கொண்ட மனிதர்களும், அத்தகைய உணர்வுகளைக் கொண்டிருப்பதற்கு, மற்ற மக்களைப் போன்ற உரிமைகளைச் சமமாகப் பெற்றுள்ளனர் என்ற கருத்து மீதான எதிர்ப்பும் மத மூடநம்பிக்கையில் இருந்து எழுந்ததேயாகும்.
7. 1960ஆம் ஆண்டிலிருந்து அதிக அளவிலான பாலியல் சுதந்திரத்தை மக்கள் கேட்கத் தொடங்கியபோது, அத்தகைய சுதந்திரத்திற்கான எதிர்ப்பு மதத்தினாலேயே உருவாக்கப்பட்டது.
8. 19ஆம் நூற்றாண்டு முதல் இன்றைய நாள்வரை, மனித குலத்துக்கு மிகவும் இன்றியாமையாத தேவையான குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்திற்கு மதங்கள்தான் பெருந்தடையாக இருந்து வந்துள்ளன.
9. இறுதியாக, கடந்த பல பத்தாண்டு காலத்தில், அமெரிக்கத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பரப்புரை செய்து வரும் மத போதகர்கள், மக்களுக்கு மோட்சத்தை அளிப்பதாகக் கூறிக்கொண்டு, தங்களின் பைகளைப் பெரும் பணம் கொண்டு நிரப்பி வந்துள்ளனர். தங்களின் வருவாயைப் பெருக்கிக் கொண்டது மட்டுமன்றி, தங்களைப் பின்பற்றும் பக்தர்களைக் கொண்டு, மற்ற மக்கள் அனைவரும் பாவங்கள் செய்து உழல்கின்றனர் என்று கண்டிக்கச் செய்வதன் மூலம், மக்களின் ஒழுக்க நெறி கண்காணிப்பாளர்களாகவும் தங்கள் நிலையை உயர்த்திக் கொண்டார்கள். இவற்றிலிருந்து, வரலாற்றுக் காலம் முழுவதிலும் கடவுள் நம்பிக்கை எந்த அளவுக்கு மனித குலத்திற்கு அழிவைத் தேடித் தந்துள்ளது என்பதையும், எந்த அளவுக்கு அது தொடர்ந்து அழிவைத் தேடித் தந்து கொண்டிருக்கிறது என்பதையும் எளிதாகக் காணலாம்.
மனித இனத்தின் மீதான மதத்தின் இறுக்கமான பிடி தானாக தளர்ந்துவிடாது
நாத்திகக் கொள்கைகளை பொது மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டியதன் அவசியத்துக்கான காரணங்களை இங்கு அளித்த பிறகு, இதற்கு ஒரு கடுமையான, தீவிரமான, உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியதன் தேவை என்ன என்பதைப் பற்றி சிலவற்றைக் கூற நான் விரும்புகிறேன். ஆற்றல் நிறைந்த ஒரு மாற்று இயக்கம் இல்லாமல் போனால், சமூக ஒழுக்க நெறிக் கோட்பாட்டின் மீது மதம் கொண்டிருக்கும் இறுக்கமான பிடியை அது தானாகவே ஒரு போதும் தளர்த்திக் கொள்ளாது.
நடந்து முடிந்த விளையாட்டுப் போட்டிகளில் தாங்கள் மிகவும் திறமையாக விளையாடி வெற்றி பெற்றதற்கு கடவுளின் அருளைக் காரணம் காட்டும் விளையாட்டு வீரராகட்டும், அல்லது விமான விபத்தில் தான் மட்டுமே கடவுளின் அருளால் உயிர் தப்பியதாகக் கூறிக் கொள்ளும் பயணியாகட்டும், இவ்வாறு கூறுவது தன்னைத் தவிர மற்ற பயணிகள் அனைவரும் விபத்தில் இறந்து போகவேண்டும் என்பதே கடவுளின் விருப்பம் என்று பொருள் தரும் என்பதை முற்றிலுமாக கவனிக்கத் தவறிவிடுகின்றனர். அவர்களின் கூற்றினை அப்படியே ஏற்றுக் கொள்வது ஒழுக்க நெறிப்படி பாராட்டப்பட வேண்டியதே என்று பொதுவாகவே சமூகம் கருதுகிறது. ஆனால், தக்க ஆதாரங்களையும், காரண காரியங்களையும் கொண்டு கடவுள் என்று ஒன்றுமே இல்லை என்ற சுதந்திரமான முடிவுக்கு வருவது ஒழுக்கநெறிப்படி தவறானது என்று கருதப்படுகிறது. பகுத்தறிவுச் சிந்தனை நிலை பெறவேண்டிய தேவைக்கு இது முற்றிலும் எதிரானதாகும்.
கடவுள் நம்பிக்கையைப் பற்றி, சமூகத்தினால் ஏற்றுக் கொள்ளத்தக்க முறையில் நாத்திகர்களாகிய நாம் என்ன சொல்லவேண்டும், என்ன சொல்லக்கூடாது என்பதைத் தீர்மானிக்க கடவுள் நம்பிக்கையாளர்களை நாம் அனுமதிப்பது, கோழிக்கூண்டுக்கு நரியைக் காவல் வைப்பது போன்றதாகும். நாத்திகர்களின் மனம் புண்படாத வகையில் அவர்களது கருத்துகள் பற்றி மதப் பிரச்சாரகர்கள் எவரும் மென்மையாக, வெறுப்போ கோபமோ இல்லாமல், பேசி நான் கேட்டதில்லை. கடவுள் நம்பிக்கைக்கு எதிரான தங்களது கருத்தினை நாத்திகர்கள் வெளிப்படுத்துவதில் தங்களுக்குத் தாங்களே கட்டுப்பாடுகளை விதித்துக் கொண்டு, ஒரு சமூகத்தின் பெரும்பாலான மக்களின் நம்பிக்கைகளை மாற்றுவதிலோ, சீர்திருத்துவதிலோ அல்லது தங்கள் நம்பிக்கையிலிருந்து மாறுபட்டுள்ள மக்களின் மீதான நம்பிக்கையாளர்களின் பகை உணர்வைக் குறைப்பதிலோ எந்த ஓர் இயக்கமும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வெற்றி பெற்றதேயில்லை.
– நாத்திக நெத்தியடி அடுத்த இதழிலும் தொடரும்…
தமிழில்: த.க.பாலகிருட்டிணன்