கேள்வி : டில்லி முதல்வர் கெஜ்ரிவாலின் தர்ணா போராட்ட முறை ஏற்றுக் கொள்ளக்கூடியதா? – ந.வே. பூங்குழலி, நங்கநல்லூர்
பதில் : ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல; காரணம், எதிர்க்கட்சி மனப்பான்மையை இன்னமும் விட்டொழித்து, தாம் டில்லியை ஆளும் முதல் அமைச்சர் என்ற எண்ணமே அவருக்கு இல்லாமல், வித்தை காட்டுவதாகவே அவரது பல நடவடிக்கைகள் அமைந்துள்ளன!
பதில் : டில்லிக்கு தனி மாநில அந்தஸ்து கோரிட வேண்டும்; அப்போது போலீஸ் அதிகாரம் தானேவரும்; அதைவிட்டு யூனியன் பிரதேசத்தை ஏற்று சத்தியப் பிரமாணம் செய்துவிட்டு, காவல்துறையைக் கண்டிப்பதில் – போர் – ஆடுவதில் அர்த்தமே இல்லை.
கேள்வி : இந்த ஆண்டு சென்னை புத்தகக் கண்காட்சியில் என்னென்ன நூல்கள் வாங்கினீர்கள்? புதிய நூல்களில் தாங்கள் பரிந்துரைக்கும் நூல்கள்….?
– தி. குறளரசன், காஞ்சி
பதில் : நான் செலவழித்த நேரம் குறைவே. அதற்கேற்ப சில பதிப்பகங்களைத்தான் பார்த்தேன்; அங்கே சில நூல்கள் வாங்கினேன். நான் எப்போதும் ஆண்டு முழுவதும் புத்தகம் வாங்கிக் கொண்டே இருப்பவன்; எனவே பட்டியல் வெகு நீளமானது. பரிந்துரைக்கும் நூல்கள்: பழ. அதியமானின் சேரன்மாதேவி குருகுலப் போராட்டம், பெரியாரின் நண்பர் டாக்டர் வரதராஜலு நாயுடு. ஆங்கில நூல்: David and Goliath:
Underdogs, Misfits, and the Art of Battling Giants by Malcolm Gladwell.
கேள்வி : ஓரளவு மக்களிடம் பலம் பெற்றுள்ள விஜயகாந்தின் நிலையற்ற தன்மைக்குக் காரணம், அவரது குடும்பமா? அல்லது வெளியி லிருந்து கொடுக்கப்படும் அழுத்தமா?
– மா. அறிவுமதி, வேலூர்
பதில் : இதைப்பற்றிய ஆய்வு பயனற்று நேரத்தைச் செலவழிப்பதே என்பது எனது தாழ்மையான கருத்து! தங்களின் கேள்வியில் உள்ள ஓரளவு மக்களிடம் பலம் பெற்றுள்ள என்பதே விவாதத்திற்குரியது.
கேள்வி : கொள்கைரீதியாக ஒத்த கருத்துடைய தி.மு.க.வுக்கு எதிராகவும், சட்டமன்றத்திலேயே கம்யூனிஸ்ட்களைக் கேவலமாகப் பேசியவர் களுடன் கூட்டணிக்காக அலைகிறார்களே? – ஈ.வெ.ரா. தமிழன், சீர்காழி
பதில் : ஆசை வெட்கமறியாது! பதவி ஆசை எதையும் அறியாது!!
கேள்வி : திராவிடக் கட்சிகளில் ஆரியம் ஊடுருவி அரியணை ஏறி ஆணவத்தின் உச்சாணிக் கொம்பில் நின்று, தமிழரின் அடையாளங்களைத் திட்டமிட்டு அழிப்பதற்குக் காரணம் – அன்றைக்கு சினிமா மாயை எனும் ஒட்டகத்தை, திராவிடக் கூடாரத்திற்குள் நுழையவிட்டதுதானே?
– சீர்காழி கு.நா.இராமண்ணா, சென்னை
பதில் : ஆமென்! ஆமென்க!
கேள்வி : தற்போது நடைமுறையில் உள்ள மன்மோகன் சிங்கின் திறமையற்ற ஆட்சியே மோடி விளம்பரத்திற்கும், பிரதமர் வேட்பாளராக அறிவித்ததற்கும் முழுமுதற் காரணமென்று கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்குத் தங்கள் கருத்து?
– பெ. கூத்தன், சிங்கிபுரம்
பதில் : நூற்றுக்கு நூறு உண்மை; எதிலும் காலந்தாழ்ந்த முடிவும் கரடியும் நண்பர்களும் கதையின் பாத்திரம் போன்றது; பிரதமரின் நடவடிக்கையால் ஒன்றுமில்லாதவர்களையும் ஓங்கார கூச்சல்வாதியாக்கிவிட்டது.
கேள்வி : சமூக நீதிக்கும், இடஒதுக்கீட்டுக்கும் குந்தகம் விளைவிக்கும் தமிழக அரசும், அம்மையார் அவர்களும் நடந்து கொள்கின்ற முறை பற்றி? – அ.தமிழ்மகன், சேலம்
பதில் : மக்கள் மன்றம் நின்று நிதானித்து தீர்ப்பளித்து தண்டிக்கும் என்பது உறுதி.
கேள்வி : சிதம்பரம் கோவில் தீர்ப்புக்குக் காரணம் தமிழக அரசா? அல்லது உச்ச நீதிமன்றத்தின் ஆரிய ஆதிக்க உணர்வா?
– சா.கோவிந்தசாமி, பெரம்பலூர்
பதில் : இரண்டும் இணைந்ததே! அடிப்படை _ஜெயலலிதா அரசின் தீட்சதருக்குத் திருப்பித் தரும் திருப்பணிக்கான முழு ஒத்துழைப்பும் அதற்கேற்றவாறு நீதியின் நிலைப்போக்கும்!
கேள்வி : திருமணம் செய்துகொள்ள 21 வயது வேண்டுமென்று கூறும்போது, வாக்களிக்க 18 வயது போதும் என்று கூறுவது – அரசியல்வாதிகள் தங்களுக்கு வசதியாக ஏற்படுத்திக் கொண்ட ஏற்பாடா?- ச. அன்பரசி, திருச்சி
பதில் : இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற நோக்கம் _ ஆனால் நடைமுறையில் பயணிக்க முதிர்ச்சி மேலும் தேவை என்பதால் 21ஆம் வயதே சரியானது வாக்களிக்க, என்பது அனுபவ உண்மை!.
கேள்வி : தில்லை நடராசர் கோவில் தெற்குக் கோபுர வாசலில் நந்தனுக்காக எழுப்பப்பட்ட தீண்டாமைச் சுவரை, சட்டப்படி அகற்ற முடியாதா?
– உ.கோ.சீனிவாசன், திருப்பயற்றங்குடி
பதில் : ஏன் முடியாது? மக்கள் நினைத்தால் பெர்லின் சுவர் இடிபட்டதுபோல் ஒரு நாள் இடித்துப் பொடியாகும். அதற்கு புத்தியும் மானமும் வரவேண்டும்.