கலை, நிச்சயம் மனிதனைச் சாந்தப்படுத்தக் கூடியது; சந்தோசமளிக்கக் கூடியது. மறுக்கவில்லை. ஆனால், சினிமாவுக்கு மட்டும் ஏன் நம் நாடு இந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. நாம் விவாதிக்க எத்தனையோ உண்மையான பிரச்சினைகள் காத்துக்கிடக்க, அமீர் கானா, ஷாரூக் கானா, சல்மான் கானா… இந்த மூன்று கான்களில் யார் சிறந்தவர்? என்றே விவாதித்துக் கொண்டிருக்கிறோமே… ஏன்? நாம் இன்னும் நெடுந்தொலைவு பயணிக்க வேண்டும்!
குஜராத்தில், புதிய தொழிற்சாலைகள் வந்திருக்கின்றன; நிறைய சாலைகள் அமைத்திருக்கிறார்கள்; கட்டுமானப் பணிகள் வேகமாக நடைபெறுகின்றன. ஆனால், ஒரு மாநிலத்தின் வளர்ச்சியை இவற்றை மட்டும் வைத்து அளவிட முடியாது. ஆயிரம் குழந்தைகள் பிறந்தால், மருத்துவ வசதி இல்லாமல் அதில் எத்தனை குழந்தைகள் குஜராத்தில் இறந்து போகின்றன என்பதைப் பாருங்கள். அது கேரளாவைவிட மூன்று மடங்கு அதிகம். அதேபோல கல்வி, மருத்துவம் ஆகிய துறைகளிலும் அது கேரளா, தமிழ்நாடு… ஏன் இமாச்சலப் பிரதேசத்தைவிடவும் பின்தங்கித்தான் இருக்கிறது.
மோடி, பிரதமரானால் சிறுபான்மை யினருக்குப் பாதுகாப்பற்ற உணர்வு ஏற்படும். அத்தகைய ஒருவர், நாட்டின் பிரதமராக வருவதை நான் ஏற்க மாட்டேன்!
— அமர்த்தியா சென்,
நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர்