தந்தை பெரியார் உலகமயமாக்கப் பணியில் தமிழர் தலைவர்

டிசம்பர் 01-15

– வீ.குமரேசன்

உலகில் தோன்றிய பல்வேறு சமூகப் புரட்சியாளர்களிடமிருந்து தந்தை பெரியார் வேறுபட்டவர். வெறும் கருத்துகளைச் சொல்லிவிட்டுச் சென்றவர் அல்ல தந்தை பெரியார்; மானிட முன்னேற்றத்திற்காக களம் இறங்கி, போராடி, பல்வேறு சவால்களை நேர்கொண்டு தனது வாழ்நாளிலேயே சாதனைகள் பல புரிந்தவர் தந்தை பெரியார். நடைமுறை நிலைமையிலிருந்து சமுதாயப் பணியினைத் துவக்கியவர்.

கருத்து வடிவங்களைத் தொடர்ந்து, நடைமுறை வருவது தான் உலகில் நடைபெற்ற பல்வேறு சமூகப் புரட்சிகள் உருவான வழிமுறை என இருந்த வரலாற்றைப் புரட்டிப் போட்டவர் தந்தை பெரியார். பல்வேறு நூற்றாண்டுகளாக புரையோடிப் போயிருந்த சமூக அவலங்களை நீக்கிட ஆயுதம் ஏந்தாமலே மாற்றம் ஏற்பட, சமத்துவத்திற்குப் பாடுபட்டவர் தந்தை பெரியார்.

சமூக அநீதிகளை, ஏற்றத்தாழ்வுகளை நேரடியாகப் பட்டறிந்த சிந்தனைத் தாக்கத்தின் விளைவாக கருத்துகளை ஏற்படுத்திக் கொண்டார் தந்தை பெரியார். சமுதாயப் பணி ஆற்ற அமைப்பினை நிறுவி தனது கருத்துகளைப் பரப்புரை செய்து வந்தாலும், முன்னுரிமை என வரும்பொழுது நான் கட்சிக்காரனல்ல; கருத்தாளன் என பகிரங்கமாக வெளிப்படுத்தியவர் தந்தை பெரியார்.

தந்தை பெரியாரின் சிந்தனைகள் காட்டாறு போன்றவை. சமூகச் சீரழிவுகளை எதிர்த்துப் போராடுகின்ற போக்கில், அவர் தொட்டுச் செல்லாத சமூக அழுக்குகளே இல்லை. அத்தகைய சமூகத் துப்புரவுப் பணியில் தன் வாழ்நாள் இறுதிவரை சளைக்காமல், துவளாமல், தடம்மாறிடாமல் துணிச்சலின் பேருருவாக தலைநிமிர்ந்து பயணித்தவர் தந்தை பெரியார்.

தந்தை பெரியாரின் மறைவிற்குப் பின்னர் அவர்தம் பகுத்தறிவுச் சிந்தனைகளை, தமிழகம் தாண்டி பரப்புரை செய்கின்ற வகையில் கொள்கைச் சட்டம் போட்டு அதற்கு பெரியாரியல் எனப் பெயரிட்ட பெருமையாளர் தந்தை பெரியாரின் சீடரும், கொள்கை வழித் தோன்றலுமான தமிழர் தலைவர் கி.வீரமணி ஆவார். தந்தை பெரியார்தம் செயல்பாட்டை, அவர் கைக்கொண்ட அணுகுமுறை புரிந்து கொள்ளப்பட்டதை வகைப்படுத்தியவர் தமிழர் தலைவர்.

கடவுள் மறுப்பு என்பது தந்தை பெரியாரின் கொள்கை என புரிந்து கொள்ளப்பட்டதை கடவுள் மறுப்பு தந்தை பெரியாரின் கொள்கை அல்ல; அது ஒரு அணுகுமுறை. அவரது கொள்கை மனித நேயமே என்று வகைப்படுத்தி தந்தை பெரியாரின் சிந்தனைகளைப் பாடம் போன்று படைத்தளிக்க ஆவன செய்து அந்தப் பாடத்தை நாட்டின் பிற மாநிலங்களில், வெளிநாடுகளிலும் சென்று பரப்புரை செய்வதைத் தமக்கே உரிய அணுகுமுறையில் தந்தை பெரியார் உலக மயமாக்கம் (Globalization of Periyar) என ஆவணப்படுத்தியவர் தமிழர் தலைவர்.

வாழ்நாள் கடமையாகக் கருதி தனது 81ஆவது வயது தொடங்கிய நிலையிலும் ஆர்வம் குன்றா செயல்பாட்டுச் சிங்கமாக ஆசிரியர் வீரமணி விளங்கி வருகிறார். மானிட மேம்பாட்டிற்கு ஒளிவிளக்காகத் திகழ்கிறார்.

தந்தை பெரியார் உலகமயமாக்கப் பணியில் தமிழர் தலைவர் மேற்கொண்ட பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டுப் பயணங்கள் சுவையானவை; கருத்துச் செறிவுமிக்கவை. வெளிப்படுத்திய கருத்துகள் கல்வெட்டுப் போன்றவை. தந்தை பெரியாரின் சிந்தனைகளைப் பல்வேறு தளங்களில் வகைப்படுத்தி, வடிவமைத்து – பகுத்தறிவு, நாத்திகம், சமூக நீதி, மகளிர் உரிமை மற்றும் முன்னேற்றம், மூடநம்பிக்கை ஒழிப்பு, அறிவியல் மனப்பான்மை வளர்ப்பு என தமிழர் தலைவர் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். நதித் தடங்கள் பலவாக இருந்தாலும் இறுதியில் சென்றடையும் இடம் கடல் என்பதுபோல தந்தை பெரியாரின் சிந்தனை பற்றிய பரப்புரை பல வழித் தடங்களில் நடந்தாலும் சிந்தனையின் மய்யக் கரு மனிதநேயமே.

மராட்டிய மாநிலம் – மும்பாய்

மராட்டிய மாநிலத் தலைநகர் மும்பாய் மாநகரத்தில், தானே பகுதியில் நடைபெற்ற புத்தமார்க்க மாநாட்டில் சிறப்புரை ஆற்ற தமிழர் தலைவர் அழைக்கப்பட்டிருந்தார். மாநாட்டிற்கு வருகை தந்தோர் வெள்ளை நிறத்தில் உடை அணிந்திருந்தனர். புத்த துறவிகளோ காவி நிறத்தில், இவர்களுக்கு மத்தியில் கருப்புச் சட்டைத் தலைவர் பக்குவமாகப் பேசி மதச் சடங்கு, வழிபாட்டு முறைகளை எதிர்க்கத் தோன்றிய புத்த நெறி, புத்தமதமாக மாற்றப்பட்டு நெறி தோன்றிய இந்நாட்டிலிருந்து அன்னியப்படுத்தப்பட்ட வரலாற்றை எடுத்துச் சொன்னார்.

மாநாட்டு வருகையாளர்களுக்கு உண்மை நிலை விளக்கப்பட்டது. இந்திய நாடு கண்ட முதல் பகுத்தறிவாளர் தலைவர் புத்தரே; புத்தரை மதச் சிறைக்குள்ளிருந்து மீட்க வேண்டும். அண்ணல் அம்பேத்கரின் சிந்தனைத் தடத்தில் புத்த நெறி மடைமாற்றம் செய்யப்படவேண்டும் என மதஉணர்வுமிக்க மக்கள் மத்தியில் அவர்தம் மத உணர்வினை எதிர்த்து தமிழர் தலைவர் உரையாற்றியது தந்தை பெரியாரின் துணிச்சல்மிக்க கருத்து வெளிப்பாட்டினை நினைவுகூர்ந்தது. பிற மாநிலப் பயணங்களில் பலதரப்பட்ட மக்களை அதிக அளவில் சந்திக்கும் வாய்ப்பினை உருவாக்கிக் கொள்வது தமிழர் தலைவரின் அணுகுமுறை. முதல்நாள் முற்பகல் புத்த மாநாடு; மாலை மும்பாய் வாழ் தமிழ்ச் சான்றோருக்குப் பாராட்டு; அடுத்த நாள் முற்பகல் சமூகநீதிக் கருத்தரங்கம் என இரண்டு நாள் பயணத்தை அழுத்தமாக, கொள்கைப் பரப்பலை அடர்வாகக் கொள்வதை வழக்கமாக்கிக் கொள்பவர் தமிழர் தலைவர் ஆவார்.

ஆந்திர மாநிலம் – அய்தராபாத்

ஆந்திர மாநிலம் அய்தராபாத் நகரில் சமூக நீதித் தளத்தில் தமிழர் தலைவர் பங்கேற்ற நிகழ்வுகள் பல. தமிழர் தலைவர் எந்த ஆட்சி அதிகாரத்திலும் இருப்பவர் அல்ல. தனிப்பட்ட முறையில் எவருக்கும் உதவும் நிலை அவருக்கில்லை. இருப்பினும், பணியில் இருக்கும் உயர்நீதிமன்ற நீதியரசர்கள் முதல், வழக்குரைஞர்கள் வரை அவர்மீது காட்டும் அன்பு கலந்த மரியாதை, அவர்கள் காட்டும் உடல் மொழிப் (தீஷீபீஹ் றீணீஸீரீணீரீமீ) பாங்கு, சமூகநீதிச் சவால்களை, நேர்கொள்ளும் பணி பற்றிய பரிந்துரை வேண்டல் என தமிழர் தலைவரின் சமுதாயப் பணியின் உன்னதத்தன்மையினை, உணர்ந்த நிலையினை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. தந்தை பெரியாரின் சமூக நீதி சாதனைத் தடத்தில் தங்களது மாநிலமும், அடக்கப்பட்ட மக்களுக்கும் உரிய நீதி கிடைக்க தமிழர் தலைவரின் வழிகாட்டுதல் பயனளிக்க வேண்டும் என சமூக அக்கறை சார்ந்த ஆதங்கமே ஆந்திர மாநில சமூக ஆர்வலர்கள் மத்தியில் நிலவுகிறது. அய்தராபாத் போன்ற பெருநகர் பகுதி மட்டுமன்றி, தெனாலியிலிருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள ரேபள்ளி கிராமப்புறப் பகுதியில் நடைபெற்ற சமூகநீதிக் கூட்டத்தில் தமிழர் தலைவர் பங்கேற்றபோதும் ஆந்திர மக்கள் காட்டிய ஆர்வம் அளவிலடங்காதது.

மேற்கு வங்கம் – கல்கத்தா மற்றும் வங்காள தேச எல்லைக்கருகில்

மேற்கு வங்காளத்தில் ஒரே நாளில் கல்கத்தா, வங்காளதேச எல்லைப் பகுதி என பரந்துபட்ட சமூக நீதி மாநாடுகள், மக்கள் சந்திப்பு என தமிழர் தலைவர் அண்மையில் கலந்து கொண்டார். வர்க்க பேதத்தை விட தமது பேதமே நடைமுறையில் முன்னுரிமையானது என இடதுசாரி இயக்கங்கள் சிந்தனையிலிருந்து மாறுபட பெரியார் இயக்கம் பாடுபட்டு வருவதன் வெற்றி வெளிப்பாட்டை உணர்த்துவதாக இருந்தது..

பெரியார் இயக்கப் பணியினால், தமிழர் தலைவரது தனித்துவ முயற்சியால் கல்வியிலும், வேலையிலும் இடஒதுக்கீடு 69 விழுக்காடு அளவு சட்ட வடிவில் உள்ள நிலைமை குறித்து மேற்கு வங்க மக்கள் வியப்படைகின்றனர். பல ஆண்டுகளாக இடது சாரி இயக்கத்தால் ஆளப்பட்ட மாநிலத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு 17 விழுக்காடே உள்ளது. தங்களுக்கும் பெரியார் தேவைப்படுகிறார் எனும் நிலையினை தமிழர் தலைவரது பயணம் உருவாக்கியது. வங்கிகளுக்கெல்லாம் வங்கியாக, நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தவல்ல கொள்கை வழிமுறைகளை வடிவமைக்கும் ரிசர்வ் வங்கியில் பணிபுரிகின்றவர்கள் தங்களது வளாகத்திற்கு தமிழர் தலைவர் வருகை தரவேண்டுமென்பதில் ஆர்வமுடன் இருந்தனர். தமிழர் தலைவரை அழைத்து தந்தை பெரியாரின் 135ஆவது பிறந்த நாளைத் தமிழ்நாட்டிற்கும் முன்னதாகவே கொண்டாடி விட்டனர்.

ஒடிசா மாநிலம் – புவனேஸ்வரம்

ஒடிசா மாநிலத் தலைநகர் புவனேஸ்வரத்தில் தந்தை பெரியாரின் சிந்தனைத் தொகுப்பு முதன் முறையாக ஒடியா மொழியில் புத்தகமாக வெளியிடப்பட்டது. பெரியாரங்கா ராச்சனா புத்தகத்தினை வெளியிட தமிழர் தலைவர் அழைக்கப்பட்டு இருந்தார். உத்கல் பல்கலைக்கழக வளாகத்தில், கல்வியாளர்கள், அறிஞர் பெருமக்கள், பொதுநல ஆர்வலர்கள் என பலதரப்பட்ட மக்கள் கலந்துகொண்ட புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் இந்திய பகுத்தறிவாளர் இயக்கத்திற்கு தந்தை பெரியாரின் பங்களிப்பு எனும் தலைப்பில் அறிவார்ந்த, கொள்கைச் செறிவுமிக்க உரையினை தமிழர் தலைவர் வழங்கினார். பெரியார் கொள்கை தாக்கத்திற்கு இயக்க அடிப்படையில் ஆட்படாத ஒடிசா மாநில மக்கள், தமிழர் தலைவர் உரைகேட்டு பெரியார் இயக்கம், அது அடைந்த சாதனைகள் பற்றி அறிந்து, தங்களது மாநிலத்திற்கும் பெரியாரின் தேவை பற்றி உணரத் தலைப்பட்டார்கள். புவனேஸ்வரத்திலிருந்து திரும்பிய பின்னர் ஒடிசா மக்களிடமிருந்து வந்த கடிதங்கள் அவர்களது உள்ளத்தின் வெளிப்பாட்டைப் புலப்படுத்தியது.

புத்த நெறியின் நினைவாக அமைதித் தூண்

அசோக மன்னன் கலிங்கப் போர் நடத்திய பகுதி புவனேஸ்வரத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் தயா நதிக்கரையில் உள்ளது. அசோகர் புத்த நெறியினைத் தழுவிய நினைவாக, புத்த நெறி விளக்கமாக அமைதித் தூண், தவ்லி குன்றில் எழுப்பப்பட்டுள்ளது. அதனைப் பார்வையிட்ட தமிழர் தலைவர் கூறிய புத்தர் தொடர்பான செய்தி மிகவும் அறிவுப்பூர்வமானது. தந்தை பெரியாரின் சிந்தனை, செயல் முறைகளுக்குப் பெருமை சேர்ப்பதாக அமைந்தது.

புத்தர் காலத்தில் பிரச்சாம் நடைபெற்ற பாங்கினைப் பற்றி தான் படித்த புத்தகத்தில் உள்ள ஒரு குறிப்பினை தமிழர் தலைவர் எடுத்துக் கூறினார்.

புத்தர் காலத்தில் அவரது வாய்மொழியாக வந்த நெறிகளை சீடர்கள் செவிமடுத்து அதனைப் பல இடங்களுக்கும் சென்று பிரச்சாரம் செய்து வந்தனர். ஒரு கட்டத்தில் புத்தர், சீடர்கள்  தம்மிடம் கேட்டதைச் சரியாக பிரச்சாரம் செய்கின்றார்களா என அறிந்து கொள்ள அவர்களை அழைத்து எந்த விதமாக தமது நெறியினைப் பிரச்சாரம் செய்கிறீர்கள் எனக் கேட்டுவிட்டு, மக்களிடம் அவர்கள் கூறுவதை அப்படியே திருப்பிக் கூறிட புத்தர் பணித்தார். சீடர்களும் அவ்வாறே செய்தனர். அப்பொழுதுதான் புத்தர் தாம் கூறிய செய்திகளிலிருந்து சீடர்கள் எவ்வளவு தூரம்  விலகி பிரச்சாரம் செய்கின்றனர் என்பதை அறிந்தார். வாய்மொழி வாயிலாகக் கூறக் கேட்டு பிரச்சாரம் செய்வதில் இத்தகைய விலகிச்செல்லல் இயல்புதான் என்பதை புத்தர் உணர்ந்தார்.

ஒரு சீடர், புத்தரிடம், உங்கள் காலத்திலேயே உங்களின் போதனையிலிருந்து விலகிச்செல்லும் நிலை இருந்தால் எதிர்காலத்தில் பல தலைமுறைகளைக் கடந்து பிரச்சாரம் நடக்கும் பொழுது உண்மையான போதனையை உணர்ந்து கொள்வது எப்படி? என்று வினா எழுப்பினார். அதற்குப் புத்தர், உண்மை நெறியினை அறிந்து கொள்ள ஒரே வழி மேற்கொள்ளப்படும் பிரச்சாரத்தினை பகுத்தறிவு கொண்டு ஆய்ந்து உணர்ந்தால் உண்மை நெறி தெரியவரும் என தொலைநோக்குப் பார்வையுடன் பதிலளித்தார். எதையும் பகுத்தறிவு கொண்டு ஆய்ந்து ஏற்றுக்கொள்ளுங்கள் எனும் அணுகுமுறையினை மெய்ப்பித்து மக்கள் இயக்கம் கண்ட தந்தை பெரியாரின் சிறப்பு எவ்வளவு சிறப்பானது என்பதை தமிழர் தலைவர் எடுத்துச் சொன்ன செய்தியால் அதனைக் கேட்ட அனைவருமே மனம் ஒன்றிய நிலைக்கு ஆளானோம். பகுத்தறிவு நெறி சார்ந்த பரந்துபட்ட அமைப்பு, மக்கள் இயக்கமாக தந்தை பெரியாரின் உருவாக்கத்தில் தொடங்கி, தமிழர் தலைவரின் இன்றைய வழிகாட்டுதலில் தொடர்வது பெருமையாக இருந்தது.

புவனேஸ்வரத்திலிருந்து சென்னை திரும்ப கிளம்பிய வேளையில் அரை மணி நேர இடைவெளியில், அழைப்பிற்கிணங்க அங்குள்ள பொறியியல் கல்லூரியில், மாணவர்களிடையே அறிவியல் மனப்பான்மை பற்றி அறிவுப்பூர்வமான உரையினை ஆற்றி, பெரியார் சிந்தனைகளைப் பரவலாக்கிடும் பணிக்கு தமிழர் தலைவர் அணி சேர்த்தார்.

உலகம் தழுவிய பகுத்தறிவாளர்கள் மற்றும் அமைப்புகள்

வெளிநாடுகளில் தமிழர் தலைவர் மேற்கொண்ட பயணங்களினால் பெரியார் இயக்கத்தினைப் பற்றி பிற நாத்திகர், மனிதநேயர், பகுத்தறிவாளர் அமைப்பினர் புரிந்து கொண்டுள்ள நிலை ஏற்பட்டுள்ளது. அந்த அமைப்பினர் பெரியார் இயக்கம் நடத்திய பல்வேறு மாநாடுகளில் கலந்து கொண்டு, நாத்திகர் இயக்கமானது _- மாபெரும் மக்கள் இயக்கமாக மாறி உள்ள இந்த நாட்டுச் சூழல் கண்டு வியப்படைகின்றனர்.

தமிழ்நாடு, பிற மாநிலங்கள் தழுவிய பரப்புரையாக பெரியாரின் சிந்தனைகளை, வெளிநாட்டளவில் அந்த நாட்டு பகுத்தறிவாளர் அமைப்புகளோடு, அறிஞர் பெருமக்களோடு தொடர்பு, ஒருங்கிணைப்புப் பணிகள் தமிழர் தலைவர் வழிகாட்டுதலில் நடைபெற்று வருகின்றன.

பரிணாமக் கோட்பாட்டின் தந்தையான சார்லஸ் டார்வினின் 200ஆம் ஆண்டு பிறந்த நாளினை அறிவியல் மனப்பான்மை விழாவாக நடத்துவதிலாகட்டும், நாத்திக அறிஞர்களான அமெரிக்க நாட்டு கிறிஸ்டோபர் கிட்சன்ஸ், பால்கார்ட்ஸ், மராட்டிய மாநில மூடநம்பிக்கை ஒழிப்புப் போராளி நரேந்திர தபோல்கர் ஆகியோர் மறைவிற்கு வீரவணக்கம், நினைவு போற்றுதல் நிகழ்ச்சி நடத்துவதிலும், ஒருவித மனிதநேயக் கொள்கை ஒருமைப்பாட்டோடு, பெரியார் இயக்கம்தான் உலக நாத்திகர்களுக்குத் தாய்வீடு என்பது போன்ற நிலையினை தமிழர் தலைவர் பெரியார் உலகமயமாக்கப் பணியினால் ஏற்படுத்தியுள்ளார். பெரியார் உலகத் தலைவர் என்பதன் கொள்கை விளக்கம், வெளிப்பாடு விரைந்து வருகின்ற சூழல்கள் தமிழர் தலைவரின் அயராத, அர்ப்பணிப்பு கலந்த பொது வழக்கப் பணியின் விளைவுகளே! மண்டைச் சுரப்பை உலகு தொழும் எனும் புரட்சிக்கவிஞரின், இலக்கியக் கூற்று இன்று நடைமுறை இயல்பாகிவிட்டது.

தந்தை பெரியாரை உலக மயமாக்கும் பணியின் அடுத்த விழுமியங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *