வரலாற்றில் இவர்கள்

டிசம்பர் 01-15

மோடி புகழும் படேலின் யோக்கியதை

– நா.சுதன்ராஜ்

நேரு,காந்தி,படேல்

ந்தியாவின் இரும்புமனிதர்! என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் பட்டேல் மதவாதியா? மதச்சார்பின்மைவாதியா? என்று ஒரு விவாதத்தைத் தொடங்கி இருக்கிறார் நரேந்திர மோடி. அகமதாபாத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய நரேந்திர மோடி படேலின் மதச்சார்பின்மைதான் இன்று நமது நாட்டுக்குத் தேவை என்று பேசி இருக்கிறார். அது மட்டுமல்லாது 2000 கோடி செலவில் இரும்பு மனிதருக்குச் சிலைவைக்க இரும்பு வேட்டை ஆடிக்கொன்டிருக்கிறார்.

மோடியோ பாரதீய ஜனதாவின் பிரதம வேட்பாளர். பாரதீய ஜனதாவின் கொள்கையை யாரும் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை. அப்பட்டமான மதவெறி இயக்கம்தான் பாரதீய ஜனதா. மீண்டும் ராம ராஜ்ஜியத்தைக் கொண்டு வருவதுதான் அதன் ஒரே கொள்கை. இந்த ராம ராஜ்ஜியக் கூட்டத்தின் பிரதம வேட்பாளர் மோடிக்கு படேலின் மீது இவ்வளவு பாசம் ஏன் என்றால் படேல் வேறு யாருமல்ல, மோடிக்கு முன்னோடி. அடிக்கடி மோடி நான் டீ விற்றவன் டீ விற்றவன் என்கிறார். நமது டீக்கடைக்காரர் மோடி, படேல் என்ன செய்தாரோ அதையே இவரும் செய்கிறார். எவன் எப்படிப் போனால் நமக்கு என்ன? நாம் பார்ப்பானுக்கு ஜே! போட்டால் பதவி வரும். அதுவும் பிரதமர் பதவி. இதுதான் மோடியின் கணக்கு. அதுதான் திரு படேலின் கணக்கு. அப்பட்டமாக பார்ப்பனர்களுக்கு விபீசனர் வேலை பார்த்தவர்தான் திரு படேல். அதே வேலையை இப்போது செய்து கொண்டிருப்பவர்தான் மோடி. படேலுக்கு பார்ப்பனர்களுக்காக வக்காலத்து வாங்கத்தான் தெரியுமே ஒழிய நமது சமூகக் கலாச்சாரத்தைப் பற்றி ஒன்றுமே தெரியாது.

படேலின் பார்ப்பனியம்

படேலின் யோக்கியதையைப் பற்றி 22.9.-1929 அன்று குடிஅரசில் மீன்டும் படேல் என்ற கட்டுரையில் தந்தை பெரியார் விளக்கி இருக்கிறார். சமூகத்தில் இருந்தும் அரசியலில் இருந்தும் பார்ப்பன ஏகபோகத்தை விரட்டியடித்தது சுயமரியாதை இயக்கம். தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட ஒட்டு மொத்த பெண் சமூகத்திற்கும் உரிமையும் சுதந்திரமும் மான வாழ்வையும் பெற்றுத் தந்தது தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம். பெரியாரின் சுயமரியாதை இயக்கம் வேரூன்றி இருந்த இடங்களில் எல்லாம் பார்ப்பனியத்தால் காலூன்ற முடியவில்லை. இதைப் பொறுக்காத பார்ப்பனர்கள்  படேலை அழைத்து வந்து சுயமரியாதை இயக்கத்திற்கு எதிராகப் பிரச்சாரம் செய்ய வைத்திருக்கிறார்கள். அப்போது திரு படேல் சுயமரியாதை இயக்கத்தைத் தான்தோன்றித்தனமாக விமர்சனம் செய்திருக்கிறார். தாழ்த்தப்பட்டவர்களுக்கு உழைப்பதாகச் சொல்லிக் கொண்டு ஒரு சிலர் சுயமரியாதை இயக்கம் என்பதாக ஒன்றை ஆரம்பித்து இந்திய நாட்டிற்குப் புனிதமானவைகளை அழிப்பதும், ஸ்திரீகளின் மேன்மைக்குப் பங்கம் விளைவிப்பதும், இந்து மதத்தைத் தாக்குவதும், கோடிக்கணக்கான மக்களால் பூஜிக்கப்படும் ராமனையும் சீதையையும் குற்றம் சொல்வதும், பிராமண சமூகத்தின் மீது துவேசம் உண்டு பண்ணுவதுமான காரியங்களைச் செய்து வருகிறார்கள். இதை யோக்கியமான அரசாங்கம் பொறுத்துக் கொண்டிருக்கக் கூடாது என்று பேசியிருக்கிறார். அப்போது பெரியார் மீன்டும் படேல் என்ற தலைப்பில் குடிஅரசில் எழுதிய கட்டுரையில் இன்றைய மோடிக்கும் சேர்த்து படேலுக்கு மறுப்பும் எழுதி கேள்வியும் கேட்டிருக்கிறார்.

இந்து மதம் என்றால் என்ன?

இந்து மதம் என்றால் என்ன? இந்து மதம் என்றால் என்ன? என்று மும்முறை திரு படேலைக் கேட்கின்றோம். (குடிஅரசு -22.09.1929) பெரியாரின் இந்தக் கேள்விக்கு இன்று வரை உள்ள இந்துத்துவவாதிகளால் பதில் சொல்ல முடியுமா? பதில் உண்டா? தாழ்த்தப்பட்டவர்களுக்கும் பெண்களுக்கும் இந்து மதத்தில் என்ன நிலை என்பது யாவரும் அறிந்த ஒன்றுதான். பெண்களைப் பாப யோனியில் பிறந்தவர்கள் என்று கீதையே கூறுகிறது. அவர்களை எல்லாம் எழுச்சி பெற வைத்தது சுயமரியாதை இயக்கம். அவற்றை அந்தக் கட்டுரையில் விளக்கி இருக்கும் பெரியார் இராமனையும் சீதையையும் சுயமரியாதை இயக்கம் இழித்துச் சொல்கிறது என்று கூறிய திரு படேலின் குற்றச்சாட்டிற்கு, எந்த இராமனையும் சீதையையும் என்று திரு படேல் சொல்லி இருந்தால் யோக்கியமாக இருந்திருக்கும். பார்ப்பனன் காலில் விழுந்த இராமனையா? மாமிசம் சாப்பிட்ட இராமனையா? கொலை செய்த இராமனையா? பார்ப்பனரல்லாதாராகிய சம்பூகன் எனும் சூத்திரன் கடவுளைத் தோத்திரம் தபசு செய்ததற்காகக் கொன்ற இராமனையா? சுயநலத்திற்காக தம்பியின் பேச்சைக் கேட்டுக் கொண்டு நியாயம் அநியாயம் பார்க்காமல் பாரபட்சமாய் அண்ணனைக் கொன்ற இராமனையா? வருணாசிரமத்தை ஆதரித்த இராமனையா? தன் பெண்ஜாதியை ஒரு பாமரன் பேச்சைக் கேட்டுக் கோபத்துடன் காட்டில் கொண்டுபோய் விட்டுவந்த இராமனையா? கடைசியாக பெண்ஜாதி நடவடிக்கைமீது சந்தேகப்பட்டு நெருப்பிலும் குழியிலும் இறக்கிய இராமனையா? எந்த இராமனை? எந்த இராமனை? என்று திரு படேலைக் கேட்கின்றோம். (குடிஅரசு _ -22.09.1929) பெரியாரின் இந்தக் கேள்வி படேலுக்கு மட்டுமல்ல, மோடி வரை உள்ள ராமராஜ்ஜியவாதிகளுக்கும்தான். ராமராஜ்ஜியம்! ராமராஜ்ஜியம் என்கிறார்களே இவற்றுள் எந்த இராமனின் ராஜ்ஜியம்? பதில் சொல்ல முடியுமா இவர்களால்.

பார்ப்பனருக்கும் பார்ப்பனரல்லாதாருக்கும் என்ன பிரச்சினை என்று எனக்கு விளங்கவே இல்லை என்றும் படேல் பேசி இருக்கிறார். இப்படிப்பட்ட படேலுக்கு சமுதாயத்தைப் பற்றியும் நாட்டைப் பற்றியும் என்ன அறிவு இருந்திருக்கும். இருந்திருந்தால் அது எப்படிப் பட்டதாய் இருந்திருக்கும்.

படேலின் தாழ்த்தப்பட்டவர் களுக்கு எதிரான மனப்பான்மை

படேல் பார்ப்பனியவாதி மட்டுமல்ல, ஜாதீயவாதியும்கூட. அதை அம்பேத்கர் பதிவு செய்திருக்கிறார்.

1942இல் உலகப்போரை முன்னிட்டு இந்தியர்களின் ஆதரவைப் பெறும் நோக்கோடு வைசிராய் லின்தோ பிரபு பல்வேறு பகுதியினரின் பிரதிநிதிகளையும் தம்முடைய இருப்பிடத்திற்கு அழைத்துப் பேசினார். இவ்வாறு அழைக்கப்பட்டவர்களில் ஷெட்யூல்டு வகுப்பைச் சேர்ந்தவர்களும் உண்டு. இத்தகையவர்களுக்கு வைசிராய் அழைப்பு விடுத்ததை திரு வல்லபாய் படேலால் சகித்துக்கொள்ள முடியவில்லை. இதற்குப் பிறகு அகமதாபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டமொன்றில் பேசிய திரு வல்லபாய் படேல் பின்கண்டவாறு கூறினார்:

வைசிராய் இந்து மகாசபைத் தலைவர்களை அழைத்தார், முஸ்லிம் தலைவர்களை அழைத்தார், அத்தோடு காஞ்சிகள் (எண்ணை எடுப்போர்), மோச்சிகள் (செருப்புத் தைப்போர்) போன்றோரையும்கூட அழைத்தார்.

திரு வல்லபாய் படேலின் மனக் காழ்ப்பும் வன்மமும் சுடு சொல்லும் கொண்ட தமது சொற்களால் காஞ்சிகளையும் மோச்சிகளையும் மட்டுமே குறிப்பிட்ட போதிலும் இந்த நாட்டின் அடிமட்ட  வகுப்புகளிடம் ஆதிக்க வகுப்பும் காங்கிரஸ் மேலிடமும் கொண்டுள்ள பொதுவான வெறுப்பையுமே அவருடைய உரை குறிக்கிறது என்பதில் அணுவளவும் அய்யமில்லை. (அம்பேத்கர் நூல் தொகுப்பு_16,- பக்கம்_338)

இப்படி தாழ்த்தப் பட்டவர்களை ஒரு பொருட்டாகவே கருதாத வல்லபாய் படேல்தான் தாழ்த்தப்பட்டவர்கள் விசயத்தில் சுயமரியாதை இயக்கத்தைக் குறை கூறினார் என்றால் மோடியைப்போல் படேலும் பொய் கூறத் தயங்காதவர் என்று தானே அர்த்தப்படும்.

படேலின் முஸ்லிம் மத வெறுப்பு

படேல் ஒரு ஜாதியவாதி மட்டுமல்ல, மத வெறியரும்கூட. முகமதியர்களைப் பற்றி இந்துத்வாவாதிகளுக்கு என்ன நிலைப்பாடோ அதே நிலைப்பாட்டைக் கொண்டவர்தான் திரு படேல்.

கம்யூனிஸ்ட் தலைவர்களில் ஒருவரான இ.எம்.எஸ் நம்பூதிபாட் எழுதிய நேரு கொள்கையும் நடைமுறையும் என்ற நூலில் இருந்து சில தகவல்:

சுதந்திர இந்தியாவில் இந்து முஸ்லிம் கலவரம் கோரத்தாண்டவம் ஆடிக் கொண்டிருந்த சமயம், அதிகார மையத்தை எப்படிக் கட்டமைப்பது என்று நேருவும் காந்தியும் யோசித்துக் கொண்டிருந்தபோது திரு படேலின் கருத்து என்னவாக இருந்தது என்றால்,

இந்து மாகாசபைத் தலைவர் சியாமா பிரசாத் முகர்ஜியின் ஆதரவுடன் அரசாங்கம் இந்துமதச் சார்பு கொண்டதாய் இல்லா விட்டாலும் இந்துப் பெரும்பான்மையின் நலன்களைப் பாதுகாப்பதாய் இருக்க வேண்டும் என்று கருதினார். இந்தியாவில் பணிபுரிய விருப்பந் தெரிவித்த முஸ்லிம் அதிகாரிகள்கூட இந்தியாவுக்கு விசுவாசமாக இருக்க மாட்டார்கள். ஆகவே, அவர்கள் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்பது படேலின் கருத்து. (நூல்: நேரு கொள்கையும் நடைமுறையும்,- பக்கம்- 177).

மதவெறி மனப்பான்மை இல்லாமல் திரு படேலுக்கு இப்படி ஒரு கருத்து வந்திருக்குமா? அந்தச் சமயத்தில் ஆர்.எஸ்.எஸ் கருத்தும் அதுதானே! வங்கப் பிரிவினை நிகழ்ந்த போது அங்கிருந்து இந்துக்கள் இந்தியாவை நோக்கி வெளியேறினர். அப்போது படேல்,
இந்துக்கள் கிழக்கு வங்காளத்தில் இருந்து வெளியேற நேர்ந்தால் அதே அளவு எண்ணிக்கையுள்ள முஸ்லிம்கள் இந்தியாவில் இருந்து வெளியேற்றப்படுவர் என்று இந்தியா பாகிஸ்தானை எச்சரிக்க வேண்டும் (அதே நூல்: பக்கம்- 210) என்று யோசனை கூறியிருக்கிறார். இதுதானே இந்துத்வா யோசனை.

ஆர்.எஸ்.எஸின் விபீசனர் படேல்  எல்லாவற்றுக்கும் மேலாக படேலின் விபீசனத் தன்மையை விளக்க வேண்டும் எனறால், படேல் வேறு யாருமல்ல, காங்கிரசின் முதுகுக்குப் பின்னால் ஒளிந்திருந்த ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரர். காந்தியைக் கோட்சே கொன்றான். ஆர்.எஸ்.எஸ் தடை செய்யப்பட்டது. அதன் தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர். அப்போது கோல்வால்கர் இது சம்பந்தமாக காங்கிரஸ் தலைவர்களைச் சந்திக்கிறார். அந்த இயக்கத்தின் தடையைப் போக்க காங்கிரசில் இருந்து கொண்டு மறைமுகமாக எல்லா உதவிகளையும் செய்கிறார் திரு படேல். அந்தச் சமயத்தில் செப்டம்பர் 24, -1948இல் கோல்வால்கர் திரு படேலுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அதில்,

உங்கள் அரசாங்க சக்தியும் எங்களுடைய கலாச்சார சக்தியும் சேர்ந்து கொண்டால் நாம் இந்த (கம்யூனிச) ஆபத்தை அடக்கி விடலாம்  என்று எழுதி இருக்கிறார். அதற்குப் பதில்கூறும் விதமாக திரு படேல்,

ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் காங்கிரசில் சேர்ந்து கொண்டுதான் தங்கள் தேசபக்திச் செயல்களில் ஈடுபட முடியும். காங்கிரசில் இருந்து விலகியோ அல்லது அதை எதிர்த்தோ அல்ல (அதே நூல்: பக்கம்- 210)   என்று பதில்கூறி இருக்கிறார். படேலின் இந்தப் பதிலை எப்படி எடுத்துக் கொள்வது? காந்தியைக் கொல்ல தனியாக ஒரு இயக்கம் எதற்கு? அதை காங்கிரசில் இருந்துகொண்டே செய்யலாமே! என்று எடுத்துக் கொள்வதா?

காந்தியைக் கொன்றவர்களோடு கைகோர்க்கத் தயாராய் இருந்த திரு படேலுக்கு மோடி சிலை வைக்கிறார் என்றால் ஆச்சரியம் இல்லை, சிலை வைக்காமல் இருந்தால் அது நன்றி கெட்டதனமல்லவா? இனம் இனத்தோடு சேர்ந்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *