இறுதிக்கட்டப் போரின்போது நடைபெற்ற சம்பவங்கள் குறித்து தனியாக இலங்கைக்குள் வெளிப்படைத் தன்மை கொண்ட நம்பகத்தன்மை வாய்ந்த விசாரணை நடத்த மார்ச் மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கெடு தவறினால் அய்.நா.மனித உரிமை ஆணையத்தை அணுகி சுயேச்சையான விசாரணைக்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவேன்.
– டேவிட் கேமரூன்,
பிரிட்டிஷ் பிரதமர்
இலங்கையில் நடைபெற்ற போரின்போது, மனித உரிமைகள் ஒட்டு மொத்தமாக மீறப்பட்டுள்ளதே காமன்வெல்த் மாநாட்டை மொரிஷியஸ் புறக்கணித்ததற்கு முக்கியக் காரணம். அடுத்த இரண்டு ஆண்டுகளில் மொரிஷியஸ், காமன்வெல்த் மாநாட்டை நடத்த வேண்டும் என்ற நிலையில், காமன்வெல்த் விவகாரத்தில் எங்கள் அரசு தற்போது எந்த முடிவைக் கொண்டுள்ளதோ அதே நிலைதான் நீடிக்கும்.
– நவீன் சந்திரராம் கூலம்,
மொரிஷியஸ் பிரதமர்
கல்வி மற்றும் விஞ்ஞானத் துறைக்கு எவ்வளவு முதலீடு செய்கிறோமோ அதைப் பொறுத்துத்தான் நாட்டின் எதிர்காலம் இருக்கும். ஆனால், முட்டாள் அரசியல்வாதிகள் அந்தத் துறைக்குப் போதிய பணம் ஒதுக்குவது இல்லை. இந்தியாவின் பாதுகாப்புக்காக கல்வி, விஞ்ஞானத் துறைகளில் அதிக நிதியை அரசு முதலீடு செய்ய வேண்டும். நாட்டின் பங்குக் குறியீடு தொழில் நன்றாக இருந்தால் மட்டும் நல்ல நிலையை எட்டிவிட முடியாது. நிரந்தரமான நல்ல நிலைக்கு அதிநவீன விஞ்ஞானம் மிகவும் அவசியம்.
– சி.என்.ஆர்.ராவ்,
பாரத் ரத்னா விருது பெற்ற வேதியியல் விஞ்ஞானி
இந்தியாவை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் வசிப்போரில் பெரும்பான்மையானவர்களின் நிலைமை துயரகரமாகவே உள்ளது. தாம் சென்ற பூமியில் தங்களுக்கு அங்கீகாரம் கிடைக்கவும் அதனுடன் தங்களை அய்க்கியப்படுத்திக் கொள்ளவும் அவர்கள் போராடுவது வேதனையானது. மனித உரிமை சார்ந்த இந்த விவகாரங்கள்மீது இந்தியா கவனம் செலுத்துவது அவசியம்.
– மகேந்திர பி. சவுத்ரி,
பிஜி நாட்டின் மேனாள் பிரதமர்