Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

மூடநம்பிக்கை முதுகெலும்பை முறிக்கும் மகத்தான தலைவர்

திராவிடர் கழகம் என்பது உலகிலேயே பகுத்தறிவுச் சிந்தனையை அடிப்படையாகக் கொண்ட சமூகப் புரட்சி இயக்கம்.

மானுடப் பற்றைத் தவிர வேறு எந்தப் பற்றும் எனக்கில்லை என்று சொன்ன தந்தை பெரியார் சிந்திக்கும்தன்மையின் கூர்மையே பகுத்தறிவு என்று விளக்கமும் சொன்னார்.

புத்தியைச் சம்பாதிப்பதில் போட்டி போடுக என்றும் வலியுறுத்தினார்.

மனித குல முன்னேற்றத்திற்குப் பெரும் முட்டுக்கட்டையாக இருப்பதும்  மூடநம்பிக்கைகளே.

மனிதன் மூடநம்பிக்கைகளிலிருந்து வெளியேறினால் வளர்ச்சி பெறுவான் என்பதை உணர்ந்து திராவிடர் கழகம் மக்கள் மத்தியில் பல்வேறு வகைகளிலும் பகுத்தறிவுச் சிந்தனைகளை ஊட்டி வருகிறது.

கழகம் நடத்தும் ஒவ்வொரு நிகழ்ச்சியுமே இந்த அடிப்படையிலானதே! வெறும் கூட்டங்கள், மாநாடுகள் மட்டுமல்ல, மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம் என்பதைப் பிரதானமாக மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லுகிறது.

கோவில்களில் தீக்குண்டம் இறங்குவது, தீச்சட்டி எடுத்துச் செல்லுவது, அலகுக் குத்தி சப்பரங்களை இழுத்துச் செல்லுவது என்பதை எல்லாம் செய்முறை விளக்கங்கள் மூலம் மக்களிடத்தில் தெளிவை ஏற்படுத்தி வருகிறது.

திராவிடர் கழகப் பெண்களே தீச்சட்டி ஏந்தி ஊர்வலத்தில் எடுத்துச் செல்வதைப் பொது மக்கள் நேரில் பார்த்துத் தெளிவு பெறுகிறார்கள்.

தீச்சட்டியை ஏந்திச் செல்லும் பெண்கள் கடவுள் இல்லை, இல்லவே இல்லையென்று  முழக்கமிட்டுச் செல்லுவதை ஆச்சரியமாகப் பார்த்தாலும், அந்தக் காட்சியும், நிகழ்ச்சியும் மக்கள் மத்தியில் புதிய தாக்கத்தை ஏற்படுத்தியே வருகிறது.

மூடநம்பிக்கை ஒழிப்பு  ஊர்வலத்தை மேடையில் நின்று பார்வையிடும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் அந்தத் தீச்சட்டியைக் கொண்டு வரச் செய்து தானும் தூக்கிக் காட்டுவார்.

ஈரோடு மாவட்டத்தில் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் தீக்குண்டம் இறங்குவது என்பது பிரசித்தி பெற்றது.

அதே ஊரில், மிகப் பெரிய அளவுக்குத் தீக்குண்டம் ஏற்பாடு செய்து, திராவிடர் கழக ஆண்களும், பெண்களும் கடவுள் மறுப்பு வாசகங்களை முழக்கமிட்டுக் கொண்டு நெருப்பில் நடந்து சென்றனரே! அதே ஈரோடு மாவட்டம் சென்னிமலை முருகன் கோவிலில், மாட்டு வண்டி கட்டி மலைமேல் ஏறுவது என்பதைத் தெய்வசக்தி என்று வெகுகாலமாக நம்பிக் கொண்டு இருந்தனர்.

அதே சென்னிமலை முருகன் கோவில் மலைமீது திராவிடர் கழகத் தோழர்கள் கடவுள் மறுப்புக் கூறி வண்டியை ஏற்றிக் காட்டி அப்பகுதி மக்களை மலைக்கவும் வைத்தனர்.

தந்தை பெரியார் சிலைகளை முக்கியமான பகுதிகளில் நிறுவி, அதன் பீடத்தில் கடவுள் இல்லை. இல்லவே இல்லை என்றும் கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் என்றும், பரப்புகிறவன் அயோக்கியன் என்றும் வணங்குகிறவன் காட்டுமிராண்டி என்றும், தந்தை பெரியாரின் அறிவு மொழியும் பொறிக்கப்படுகிறது.

காஞ்சிபுரம் சங்கர மடம் முன்பும், சிறீரங்கம் ரெங்கநாதன் கோவில் முன்பும் கூட, இந்த வாசகங்கள் ஒளிவீசிக் கொண்டு தானிருக்கின்றன.

ஆயிரக்கணக்கான மக்கள் நாள்தோறும் பார்த்து படித்துக் கொண்டு தானிருக்கின்றனர். வெளிநாடுகளிலிருந்து வரும் பகுத்தறிவாளர்கள் கூட இந்தக் காட்சியை மிகப் பெரிய அதிசயமாகவும் சாதனையாகவும் கருதுகிறார்கள்.

இதனை எதிர்த்து சிலர் நீதிமன்றமும் சென்றதுண்டு. சென்னை உயர்நீதிமன்றமோ அதில் ஒன்றும் தவறில்லை; பெரியார் சிலையின்கீழ் அவரது கொள்கை பொறிக்கப்பட்டிருப்பது சரியே! என்று தான் தீர்ப்பும் கூறியது.

அய்.நா.வின் யுனெஸ்கோ மன்றமும் இவற்றை அங்கீகரித்து, தென் கிழக்கு ஆசியாவின் சாக்ரட்டீஸ், புத்துலகச் சிற்பி என்று விருது அளித்துச் சிறப்பு செய்திருக்கிறது. இந்திய அரசும் அவரின் நூற்றாண்டையொட்டி சிறப்பு அஞ்சல் தலையையும் வெளியிட்டதுண்டு. 125ஆம் ஆண்டில் சிறப்பு உறையையும் வெளியிட்டுப் பெருமை பெற்றது.

தந்தை பெரியார் அவர்களின் கொள்கைத் தாக்கம் இந்திய அரசமைப்புச் சட்டத்திலேயே காண முடிகிறது. மக்கள் மத்தியில் விஞ்ஞான மனப்பான்மையை ஊட்ட வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமை என்ற வாசகம் இடைக்காலத்தில் தான் இணைக்கப்பட்டுள்ளது. 51A(h)

பகுத்தறிவுக்கு விரோதமாக அரசு நடந்து கொண்டாலும், அதனைத் தட்டிக் கேட்பது, சுட்டிக் காட்டுவது என்பதைத் திராவிடர் கழகம் அன்றாட நடவடிக்கையாகவே கொண்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகளைக் கவர அரசு சார்பு சுற்றுலா அசோகா ஓட்டலில் கைரேகை ஜோதிடர் நியமிக்கவிருப்பதாக மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் முஃப்தி முகம்மது சையத் மக்களவையில் அறிவித்திருந்தார். (29.11.1986).

அதனை எதிர்த்தும், கண்டித்தும் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் மானமிகு கி.வீரமணி அவர்கள் பிரதமர் ராஜீவ் காந்திக்குக் கடிதம் எழுதித் தடுத்து நிறுத்தினார்.

இந்திய அரசமைப்புச் சட்டம் 51A(h) பிரிவில் கூறப்பட்டு இருந்த அந்த வாசகத்தையும் அந்தக் கடிதத்தில் நினைவூட்டினார்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 51A(h) என்னும் சரத்துக்கு எதிரானது சுற்றுலாத்துறை அமைச்சரின் அறிவிப்பு. அதுவும் ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமை என்பதையும் சுட்டிக்காட்டி, அந்த முயற்சியைக் கைவிடுமாறு பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

உத்தரப்பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சிப் பீடத்தில் இருந்த சமயம்; கான்சிராம் அவர்கள் உருவாக்கிய கொள்கை முடிவு என்பது தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர்தான் இந்த நாட்டில் பெரும்பான்மையான மக்கள் (பகுஜன்) அவர்கள் கைகளில்தான் ஆட்சி அதிகாரம் வர வேண்டும் என்ற கொள்கையை முன்னிறுத்தி உத்தரப்பிரதேசத்தில் ஓர் ஆட்சியை உருவாக்கி, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணான மாயாவதியை முதல் அமைச்சர் ஆக்கிய சாதனையைச் செய்தார்.

1995 ஆம் ஆண்டில் தந்தை பெரியார் அவர்களின் 117ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவை உ.பி. அரசின் சார்பில் மூன்று நாட்கள் கொண்டாடும்படிச் செய்தார்.

உ.பி. தலைநகரமான லக்னோ நகரில் சமூக மாற்றத்திற்கான சதுக்கத்தில் (பரிவர்த்தன் சவுக்) இந்தியாவில் சமூகநீதிக்காகப் பாடுபட்ட மகாத்மா ஜோதிபாபுலே, நாராயணகுரு, சாகுமகராஜ், டாக்டர் அம்பேத்கர், தந்தை பெரியார் ஆகியோர்களுக்குச் சிலை நிறுவுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. (18.9.1995).

பெரியார் விழாவில் நாட்டின் பல திசைகளிலிருந்தும் லட்சக்கணக்கான ஒடுக்கப்பட்ட மக்கள், பார்ப்பனர் அல்லாதார் குடும்பம் குடும்பமாகக் குவிந்தனர்.

மூன்று நாள் விழா இந்தியா முழுமையும் சமூகநீதிஅலையைத் தட்டி எழுப்பியது.

அதனைத் திசை திருப்பும் வகையில், ஆர்.எஸ்.எஸ். பின்னணியோடு சந்திராசாமி என்ற பார்ப்பனர் பிள்ளையார் பால் குடித்தார் என்ற ஒரு பொய்யைத் திட்டமிட்ட வகையில் பரப்பினார். இந்த மூடநம்பிக்கையை உயர்ஜாதி ஊடகங்கள் இந்தியா முழுமையும் கொண்டு சென்றன.

அந்தச் சூழ்நிலையில் அன்றைய திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் மானமிகு கி.வீரமணிஅவர்கள் எல்லோரும் திராவிடர் கழகத்தின் பக்கம் பார்க்கும் வகையில் ஒரு யுக்தியை மேற்கொண்டார்.

சென்னை அண்ணா சாலையில் தனது முதுகில் தமுக்கைக் கட்டிக் கொண்டு, திராவிடர் கழகத் தோழர்களையும் அழைத்துக் கொண்டு தமுக்கடிப் பிரச்சாரத்தைச் செய்தார் (23.9.1995).

சிறிது நேரத்தில் அண்ணாசாலை பரபரப்பாகியது,- வாகனங்கள் தேங்கி நின்றன.

டும்! டும்! டும்!! பிள்ளையார் பால் குடிப்பதாக நிரூபித்தால் ஒரு லட்ச ரூபாய் பரிசளிக்கப்படும்! கொழுக்கட்டை சாப்பிட்டால் ரூ.2 லட்சம் பரிசளிக்கப்படும்! என்று தமுக்கடித்துக் குரல் கொடுத்தார். விடுதலை ஆசிரியர் அவர்களின் இந்தச் செயல் பொது மக்களை வெகுவாகக் கவர்ந்தது. குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தியது.

அதோடு அவர் நின்றுவிடவில்லை. பிள்ளையார் பால் குடித்தார் எனும் மோசடித்தனத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்பதை சி.பி.அய். கண்டுபிடிக்க வேண்டும். அரசு அதற்கு முன் வர வேண்டும் என்று  சென்னை உயர்நீதிமன்றத்தில் திராவிடர் கழகம் சார்பிலும், பகுத்தறிவாளர் கழகம் சார்பிலும் 200 ரிட் மனுக்களையும் தாக்கல் செய்ய ஏற்பாடு செய்தவர் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் ஆவார்.

திராவிடர் கழகத்தின் சார்பில் கிராமப் பிரச்சாரத்திட்டம் உருவாக்கப்பட்டு, பகுத்தறிவுப் பிரச்சாரம் அடைமழை போல் பொதுவாக செய்யப்பட்டு வருகிறது.

ஆங்காங்கே மூடநம்பிக்கைகள் கிளம்பும்போது அந்த இடத்திற்கே சென்று மூடநம்பிக்கைகளை எடுத்து விளக்கி, மக்கள் மத்தியில் தெளிவு ஏற்படுத்தப்படுகிறது.

மதுரையையடுத்த பேரையூரில் குழந்தைகளைக் குழியில் போட்டு மூடும் கொடுமையான  மூடத்தனம் அரங்கேற்றப்பட்டு வந்தது. அதனைக் கண்டித்து விடுதலையில் எழுதியதன் காரணமாக அது தடுத்து நிறுத்தப்பட்டது.

புதுவை மாநிலம் காரைக்காலையடுத்த அம்பகரத்தூர் என்னும் ஊரில் காளியம்மன் கோவிலுக்கு எருமைக்கடா வெட்டும் பழக்கம் இருந்து வந்தது. திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் மானமிகு கி.வீரமணி அவர்கள் தலைமையில் மறியல் செய்யப்பட்டது (1964-மே) அதனைத் தொடர்ந்து புதுவை மாநில அரசே சட்டம் போட்டு அதனைத் தடுத்து நிறுத்தியது.

நெய்வேலியில் பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் வளாகத்தில் (என்.எல்.சி.) அதிகாரிகள் அதிருத்ர மகா யக்ஞம் எனும் யாகத்தை நடத்த முனைந்தபோது அதனைத் தடுத்து நிறுத்தும் மறியல் போராட்டம் (22.1.1999) நடத்தப்பட்டது. கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டனர். சென்னை பாரத் ஓவர்சீஸ் வங்கியில் வங்கி செலவில் யாகம் நடத்தியது திராவிடர் கழகத்தின் ஆர்ப்பாட்டத்தால் தடுத்து நிறுத்தப்பட்டது (17.2.1995).

சென்னையையடுத்த பேரம்பாக்கம் என்னும் ஊரில் சுடுகாட்டில் ஒரு முள் செடியில் பேய் இருப்பதாகப் பிரச்சாரம் செய்யப்பட்டது. அதனை எதிர்த்துப் பிரச்சாரம் செய்ததோடு அல்லாமல், திராவிடர் கழக மகளிர் அணியைச் சேர்ந்தவர்கள் அந்தச் சுடுகாட்டுக்கே சென்று அந்த முள் செடியை வெட்டி ஊருக்கு நடுவே கொண்டு வந்து பகிரங்கமாக எரித்துக் காட்டினர் (ஏப்ரல் 1991).

வாடிப்பட்டி – அய்யங்கோட்டையில் பேய், பிசாசு அடித்து பெண்கள்மரணம் அடைவதாகப் பரப்பப்பட்ட வதந்தி மற்றும் மூடநம்பிக்கைகளை முறியடிக்கும் வகையில் மதுரை புறநகர் மாவட்டம் திராவிடர் கழகத்தின் சார்பில் விழிப்புணர்வுப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. (19.6.2005).

தமிழ்நாடு சட்டப் பேரவையில் நடந்த ஒரு நிகழ்ச்சியைச் சுட்டிக் காட்டுவது மிகவும் பொருத்தமாகும்.

குமரி மாவட்டத்து அழகப்பபுரத்தில் வானத்திலிருந்து பெய்த ரத்தத்துளி புரளி பற்றிய பேச்சு சட்டப் பேரவையில் எழுந்தது.(29.4.1989)

இந்திரா காங்கிரஸ் உறுப்பினர் குமரிஅனந்தன் குறிப்பிடுகையில் பகுத்தறிவு ரீதியாக இதுபற்றி ஆராயத் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி.வீரமணி சேவையைத் தமிழ்நாடு அரசு பயன்படுத்திக் கொள்ளுமா? என்று கேட்டார். இதற்குப் பதிலளித்த சட்டப் பேரவைத் தலைவர் தமிழ்க்குடிமகன், வீரமணியின் சேவை தேவையெனில், அதைப் பயன்படுத்திக் கொள்ளும்படி நானே அரசுக்குப் பரிந்துரைப்பேன் என்றார்.

அந்த அளவுக்குப் பகுத்தறிவு என்றால், நம்பிக்கை ஒழிப்பு என்றால் உடனே நினைவுக்கு வருவது திராவிடர் கழகமும், அதன் ஒப்பற்ற தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களும்தான்.

உலகப் புகழ் பெற்ற ஏடான அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் (3.11.1982) ஏடுகூட இந்த வகையில் திராவிடர் கழகம் – அதன் தலைவரின் செயல்பாடுகளை விரிவாக எழுதியதே!

– கவிஞர் கலி.பூங்குன்றன்
துணைத் தலைவர்,
திராவிடர் கழகம்