மத அழைப்பாளரா பெரியார்? – 2

நவம்பர் 16-30 - 2013

அறிவுள்ள மனிதனுக்கு அடையாளம் எது?

பெரியார் மதமாற்றத்தை எல்லோருக்குமாக முன்மொழியவில்லை. கடவுள் நம்பிக்கையோடு இருப்பவர்கள், அதே நேரத்தில் ஜாதி இழிவு வேண்டாம் என்பவர்களுக்கு மதமாற்றத்தை ஒரு வழியாகக் காட்டினார். ஒட்டுமொத்த சமுதாயத்திற்குமாக அவர் ஒருநாளும் அதைக் கூறவில்லை. அம்பேத்கர் மதம் மாறுவதாக அறிவித்தபோது, ஒரு தோழர், பெரியாருக்குக் கடிதம் எழுதி, மதத்தை மறுக்கும் சுயமரியாதைக்காரர்கள் மத மாற்றத்தை ஆதரிக்கலாமா என்று கேட்டதற்கு, பெரியார் அளித்த விளக்கத்தைப் படித்தால் இன்னும் தெளிவாக விளங்கும்.

 

வெளிப்படையாய் நாம் பேசுவதானால் அம்பேத்கரும், அவரைப் பின்பற்றுவோரும், நாஸ்திகர்களாவதற்கும், மதமில்லாதவர்கள் ஆவதற்கும் இஷ்டமில்லாமல், அவர்கள் மீது இருக்கும் தீண்டாமை மாத்திரம் ஒழிய வேண்டும் என்று ஆசைப்பட்டு அதற்காக முகமதியராகி விடலாம் என்று அவர்கள் கருதினால் அதில் நமக்கு இருக்கும் ஆட்சேபணை என்ன என்று கேட்கின்றோம்.

முகம்மதிய மதத்தில் பல கெடுதிகள் இருக்கலாம். கோஷா இருக்கலாம். கடவுள் இருக்கலாம். மூட நம்பிக்கை இருக்கலாம். மதச் சின்னம், மதச் சடங்கு இருக்கலாம். சமதர்மம் இல்லாமலுமிருக்கலாம். இதெல்லாம் யாருக்குக் கூடாது? சுயமரியாதைக் காரருக்குக் கூடாததாய் இருக்கலாம். மற்றும் பெண்ணுரிமை மாத்திரம் பேணுவோருக்கு மகமதிய மதம் வேண்டாததாய் இருக்கலாம். மூடநம்பிக்கை அனுஷ்டிக்காதவர்களுக்கும் முகம்மதிய மதம் வேண்டாததாய் இருக்கலாம். மதவேஷமும் பயனற்ற சடங்கும் வேண்டாதவருக்கு முகமதிய மதம் வேண்டாததாய் இருக்கலாம். நாஸ்திகருக்கும், பகுத்தறிவுவாதிகளுக்கும் முகமதிய மதம் வேண்டாததாய் இருக்கலாம். சமதர்மவாதிகளுக்கும், பொது உடமைக்காரர்களுக்கும் முகமதிய மதம் வேண்டாததாய் இருக்கலாம். ஆனால் தீயர்கள், பறையர்கள், புலையர்கள், நாயாடிகள் என்று அழைக்கப்படுகின்ற – ஒதுக்கப்பட்டிருக்கின்ற தாழ்த்தப்பட்டு, கொடுமைப்படுத்தப்பட்டு, நாயினும், மலத்திலும் புழுத்த விஷக் கிருமிகளிலும் கேவலமாக மதிக்கப்பட்டு வருகிற மக்களிடம் – தங்கள் மீது இருக்கும் தீண்டாமை மாத்திரம் ஒழிந்தால் போதும் என்று கருதிக்கொண்டு இருக்கும் மக்களிடம் நமக்கு வேலை உண்டா? இல்லையா என்று கேட்கின்றோம்.

உண்மையாகவே சுயமரியாதைக்காரருக்கு இந்தச் சமயத்திலும் வேலை இருக்கிறது என்றுதான் நாம் கருதுகிறோம். ஏனெனில், அவன் கிறிஸ்தவனாகி, கிறிஸ்தவப் பறையன், கிறிஸ்தவச் சக்கிலி, கிறிஸ்தவப் பிள்ளை, கிறிஸ்தவ நாயக்கன் என்று தீண்டாதவனாகவே இருப்பதைவிட, பறத்துலுக்கன் என்றோ, சக்கிலிய முகமதியன் என்றோ, தீய முஸ்லீம் என்றோ அழைக்க இடமில்லாமலும், அழைக்கப்படாமலும் இருக்கும்படியான நிலையிலும் மற்ற சமூகக்காரர்களோ மதக்காரர்களோ அவ்வளவு சுலபமாக இழிவுபடுத்தவோ, கொடுமையாய் நடத்தவோ முடியாத சுயமரியாதை அனுபவமும் உள்ள நிலையிலும் இருக்கும் ஒரு மதத்திற்கு எப்படியாவது தீண்டாமையை ஒழித்துக் கொள்ள வேண்டும் என்கின்றவன் போனால் இதில் சுயமரியாதைக்காரனுக்கு என்ன நஷ்டம் என்று கேட்கின்றோம். அன்றியும் சரி எப்படியாவது சீக்கிரத்தில் தீண்டாமையை ஒழித்துக் கொள் என்று சொல்வதிலும் என்ன தப்பு என்றும் கேட்கின்றோம்.
– குடிஅரசு 17.11.1935

ஜாதி, கடவுள், மதம் ஒழிந்த சமதர்ம சமத்துவ சமுதாயத்தையே இறுதி லட்சியமாகக் கொண்டிருந்த பெரியார், தீண்டாமையிலிருந்து விடுவித்துக் கொள்வதற்கு மட்டுமே, மதமாற்றத்தை மக்களுக்கு தாம் முன்மொழிவதாகக் கூறுகிறார். மற்றபடி முஸ்லிம் மதத்தில் உள்ள மூட நம்பிக்கை, பெண்ணுரிமை மறுப்புக் கருத்துகள் சுயமரியாதைக்காரர்களுக்கோ, பொதுவுடைமைவாதிகளுக்கோ உடன்பாடானது அல்ல என்றும் கூறுகிறார்
இசுலாம் மார்க்கம், மக்களுக்கு உபதேசிப்பதிலும், வேதவாக்கியங்களிலும் மேன்மையாக இருக்கிறது என்கிறார் பெரியார். அதனால்தான் சொல்கிறேன் இசுலாத்தை பெரியார் எதிர்க்கவில்லை, ஏற்றுக்கொண்டார் என்று அந்தப் புத்தகத்தை முடித்திருக்கிறார்.

இசுலாம் மார்க்கம் மக்களுக்கு உபதேசிப்பதிலும், வேதவாக்கியங்களிலும் மேன்மையாக இருக்கிறது என்று பேசிய பெரியார் தொடர்ந்து பேசியதை லாவகமாக மறைத்துவிட்டார் அப்துல்லாஹ்!.

இசுலாம் மார்க்கம் மக்களுக்கு உபதேசிப்பதிலும், வேதவாக்கியத்திலும், மேன்மையானதாய் இருக்கின்றது என்கின்ற திருப்தியானது மனித சமுதாயத்திற்கு எல்லா பயன்களையும் அளித்துவிடாது. ஆனால் அதன் தத்துவத்துக்கு ஒப்ப காரியத்தில் அதன் பயனை உலகத்தில் மேன்மையுறச்செய்து மக்களுக்கு நல்ல வழிகாட்டியாக்கி உலக மக்களை ஒன்றுபடுத்தவும், சகோதரத்தன்மையுடன் இருக்கவும், பகுத்தறிவுடனும், சுயமரியாதையுடனும், சுதந்திரத்துடன் வாழவும் செய்ய வேண்டும்.

எந்தக் கொள்கைக்காரனும் புத்தகத்தில் இருப்பதைக் கொண்டு, தங்கள் முன்னோர்கள், பெரியார்கள் சொன்னார்கள் என்பதைக் கொண்டு இனி உலகத்தை ஏய்க்க முடியாது. உலகம் பகுத்தறிவுக்கு அடிமையாகி, எதையும் நேரிடை அனுபவத்தைக் கொண்டு பரீட்சித்து சரிபார்க்க வந்துவிட்டது.

செட்டி முடுக்கு செல்லாது. சரக்கு முடுக்காய் இருந்தால்தான் இனி செலாவணியாகும்.

என் சரக்கைப் பரீட்சிக்கலாமா? என்கின்ற அடக்குமுறை இனி பலிக்காது. அவர் ஒஸ்தின்னு சொன்னார் ஆண்டவன் சொன்னான் என்பவையெல்லாம் அனுபவத்திற்கு நிற்காவிட்டால், காரியத்தில் நடந்து காட்டாவிட்டால், இனி மதிப்புபெற முடியாது. ஆதலால் எந்தச்சரக்கின் யோக்கியதையும் கையில் வாங்கிப் பார்த்துத்தான் மதிக்கவேண்டியதாகும். அந்த முறையில் இசுலாம் கொள்கை என்பதும், முசுலிம் மக்களின் நடத்தையைக் கொண்டும், அவர்களது பிரத்தியட்சப் பயனைக் கொண்டும்தான் மதிக்கப்பட முடியும்.

இந்துக்கள் தேர் இழுப்பதைப்பார்த்து முசுலிம்கள் பரிகாசம் செய்துவிட்டு, முசுலிம்கள் கூண்டு கட்டிச் சுமந்துகொண்டு, கொம்பு, தப்பட்டை, மேளம், பாண்டு, வாணவேடிகை செய்துகொண்டு தெருவில் போய்க்கொண்டிருந்தால் உலகம் திரும்பிச் சிரிக்காதா?

இந்துக்கள் காசிக்கும், இராமேஸ்வரத்திற்கும் போய் பணம் செலவழித்துவிட்டு பாவம் தொலைந்துவிட்டது என்று திரும்பி வருவதைப் பார்த்து முசுலிம்கள் சிரித்துவிட்டு, நாகூருக்கும், மக்காவுக்கும், முத்துப்பேட்டைக்கும் போய்விட்டு வந்து தங்கள் பாவம் தொலைந்துவிட்டது என்றால் மற்றவர்கள் சிரிக்கமாட்டார்களா?
– குடிஅரசு 9.8.1931

நாகூருக்கும், மக்காவுக்கும், பாவம் தொலைக்கச் செல்வதாகக் கூறுபவர்களை கடுமையாகச் சாடுகிறார் பெரியார். ஆனால் பெரியார் கொள்கையை 40 ஆண்டுகாலமாக கடைப்பிடித்து வந்ததாகச் சொல்லும் நூலாசிரியரோ இறைவனுக்காகக் கட்டப்பட்ட முதல் ஆலயமான கஅபாவிற்குச் சென்று உம்மா செய்தேன் என்று எழுதுகிறார்.

தீண்டாமையை ஒழிக்க தற்காலிக ஏற்பாடாக இசுலாத்தைத் தழுவச்சொன்ன பெரியார், நபிகளை இஸ்லாம் மார்க்கம் கூறுவது போன்று மகான் என்றோ அமானுஷ்யசக்தி படைத்தவர் என்றோ தான் கருதவில்லை என நபிகள்நாயகம் விழாவிலேயே பேசுகிறார். அப்படி சில நேரங்களில் நபிகளையும், கிறிஸ்துவையும் தான் மகான் என்று குறிப்பிட்டதற்காண காரணத்தையும் அவரே விவரிக்கிறார். அதோடு புத்தமதத்தைக் கை விட்டதால்தான் நாம் மானஉணர்ச்சியற்ற முட்டாள்களாக இருக்கிறோம் என்றும் கூறுகிறார்.

தோழர்களே நபி அவர்களை நான் ஒரு மகான் என்றோ, அமானுஷ்யசக்தி படைத்தவர் என்றோ கருதவில்லை. என்னைப் பொறுத்தவரையில் நபி அவர்களை ஒரு மனிதத்தன்மை படைத்த சிறந்த மனிதராகத்தான் கருதுகிறேனேயல்லாமல் அதற்கு மேற்பட்டதாகச் சொல்லப்படும் நிலையில் கருதவில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
– குடிஅரசு 23.12.1953

நபிகள் பிறந்த காலத்தில் அராபிய மக்கள் அசல் காட்டுமிராண்டிகளாகவே வாழ்ந்தார்கள். அந்தக் காட்டுமிராண்டி காலத்திலேயே, அவர் அந்தக் காலநிலைக்கு ஏற்ற வழிகாட்டினார் என்பதாலேயே, அவரை மகான் என்கிறோம். அது போலவே ஏசுநாதர். இவர்களையெல்லாம் பெரிதாகப் பேசக்காரணம், மக்களிடம் அறியாமையும், காட்டுமிராண்டித்தன்மையும் நிறைந்திருந்த காலத்தில் சொன்னார்கள் என்பதால்தான்.

மதசாஸ்திரிகள் வண்டிவண்டியாக அளப்பார்கள். ஆனால் சரித்திரத்தைப்பற்றிப் பேசினால் எவனோ வெள்ளைக்காரன் சொன்னதை நம்புகிறாயா? என்பார்கள். இவர்களெல்லாம் உள்ளபடியே மனசாட்சியை மறைத்துப் பேசுவார்கள். மக்களும், வாதாடத் தெரிந்த அளவு படித்து விஷயங்களைத் தெரிந்து கொள்ளவேண்டும் என்று எண்ணுவதில்லை. எதை எடுத்தாலும் சண்டப்பிரசண்டமாகப் பேசவேண்டும் என்பதைத் தவிர சரித்திரம், உண்மைத்தத்துவம் படித்து விஷயங்களை உணர்ந்து பேசவேண்டும் என்று நினைப்பதேயில்லை. மதம் என்றாலே மடமைதான்.
– விடுதலை 17.5.1957

புத்தரால் கூறப்பட்ட பத்துக் கோட்பாடுகளையே, கிறிஸ்து பத்துக் கட்டளைகளாகச் சுருக்கிக் கூறியிருக்கிறார். முகமதுநபிகூட ஏறத்தாழ அப்படித்தான் செய்துள்ளார். ஆகவே, எல்லா மதத்தினர்களும் புத்தக் கொள்கையினை அடிப்படையாகக் கொண்டே தங்கள் கோட்பாடுகளை வளர்க்க முயன்றிருக்கிறார்கள்.

புத்தரை அடுத்து கிறிஸ்துவும், முகமதுநபியும் தோன்றினார்கள். இவர்களுக்குப்பிறகு இந்த நாட்டில் வேறு அறிவாளிகளே தோன்றவில்லை என்று அர்த்தமா?

புத்தர் தன்னை மனிதர் என்றே கூறிக்கொண்டார். ஏசு தன்னை கர்த்தரின் தூதுவன் என்று கூறிக்கொண்டார். முகமதுநபியும் தன்னை ஆண்டவனால் அனுப்பப்பட்ட தூதன் என்று கூறிக்கொண்டார். அப்படிக் கூறிக்கொண்டதால்தான் பாமரமக்கள் அவர்களை நம்பினார்கள்.

தன்னை மனிதன் என்றே கூறிக்கொண்டு மனித சமுதாயத்திற்கு வேண்டிய பகுத்தறிவுக் கருத்துகளைக் கூறிய புத்ததர்மத்தை ஏற்றுக்கொள்ளாத காரணத்தால் தான் நாம் இன்று கடுகளவுகூட மானஉணர்ச்சி அற்றவர்களாக – முட்டாள்களாக இருக்கிறோம்.
– விடுதலை 17.1.1959

அப்துல்லாஹ் அவர்கள் தன் வாதத்திற்கு வலுச்சேர்ப்பதாக நினைத்து எடுத்துக்காட்டிய பெரியாரின் கட்டுரைகளோடு, 1925இல் காங்கிரஸை விட்டு பெரியார் வெளியேறிய காலம் முதல் 1973இல் மறையும்வரை மதத்திற்கு எதிராக அவர் பேசியும், எழுதியும் வந்த பல்வேறு கட்டுரைகளிலிருந்து சிலவற்றையும் சேர்த்து, காலவரிசைப்படியே அளித்து நூலாசிரியரின் பொய்யான வாதத்தை மறுத்திருக்கிறோம். இவற்றிற்கெல்லாம் முத்தாய்ப்பாக பெரியார் தன் இறுதிக்காலத்தில் 1972இல் விடுதலையில் எழுதிய தலையங்கம் ஒன்றே பெரியார் எந்த ஒரு மதத்திற்கோ, கடவுளுக்கோ, ஜாதிக்கோ ஏஜெண்டாக ஒருபோதும் இருக்கவில்லை என்பதையும், அப்படிக் கற்பிக்க முயலுவோரின் முகத்திரையை  இந்த ஒரு கட்டுரையே கிழித்தெறியும் என்பதையும் வாசகர்கள் உணரலாம்.

கடவுளால் ஒன்றும் பயனில்லை என்பது ஒரு பக்கமிருந்தாலும், முட்டாள்தனமான, காட்டுமிராண்டி, அயோக்கியத்தனங்கள் ஒழிக்கப்படுவதற்காகவாவது கடவுள் மதம் ஒழிக்கப்பட வேண்டாமா? என்று கேட்கிறேன்.

ஒழுக்கத்துறையில், அறிவுத்துறையில், இவ்வளவு கேடுகள் இருப்பது மாத்திரமல்லாமல் பொருளாதாரத் துறையில் எவ்வளவு கேடுகள், நட்டங்கள் ஏற்படுகின்றன? இந்தக் கேட்டிற்குப் பயன் என்ன?

அயோக்கியர்கள், மடையர்கள், சோம்பேறிகள் பிழைக்கிறார்கள். மக்களை ஏய்க்கிறார்கள். என்பதில்லாமல் நற்பயன் என்ன என்று கேட்கிறேன்? சமுதாயம் எவ்வளவு பிரிவுற்று சின்னாபின்னப்பட்டுக் குதறிக்கிடக்கிறது?

எதற்காக இந்து, எதற்காக கிறித்தவம், எதற்காக முசுலிம், முதலிய மதங்கள் வேண்டும்? இவர்களுக்குத் தனித்தனி வேதம், செய்கைகள் முதலியன எதற்காக தேவையாக இருக்கின்றன? இவைகளால் பிரிவினை உணர்ச்சியல்லாமல் சமுதாயத்திற்கு நலமென்ன? என்று கேட்கிறேன்.

இவற்றால் மனிதனின் அறிவுகெட்டு, வளர்ச்சி பாழாகி, இந்த இருபதாம் நூற்றாண்டிலும் மனிதன் அறிவிற்கும், சிந்தனைக்கும் ஏற்றபடி வளராமல் தேங்கிக் கிடக்கிறான். இது எவ்வளவு பெரிய கேடு?

ஆகவே, தன்னைப் பகுத்தறிவுள்ள மனிதன் என்று உணர்ந்த எவனும், மனித சமுதாயத்துக்கு ஏதாவது தொண்டு செய்யவேண்டும் என்றால், தன் வாழ்நாளில் ஏதாவது நல்ல காரியம் என்று கூறிக்கொள்ள வேண்டுமானால் கடவுள், மதம், வேதங்கள் ஒழிக்கப்பட தன்னால் கூடியதைச் செய்யவேண்டும். இதுதான் அறிவுள்ள மனிதருக்கு அடையாளம் என்பது என் கருத்து.

– விடுதலை தலையங்கம் 18.10.1972.

பகுத்தறிவுள்ள மனிதன், கடவுள்- மதம்- வேதங்கள் ஒழிக்கப்பட தன்னால் கூடியதைச் செய்யவேண்டும். அதுதான் அறிவுள்ள மனிதனுக்கு அடையாளம் என்று தந்தை பெரியார் தனது 92ஆம் வயதிலும் தனது கருத்தை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார்.

பெரியார் கொள்கையும், இயக்கமும், புத்தகங்களும் வாழும்மட்டும் பெரியாரை எந்தக் கொம்பனாலும் திரிக்க முடியாது!. தங்கள் வசதிக்கு பெரியாரை வளைக்கப் பார்க்கும் குதர்க்கவாதிகள் இனியாவது தங்கள் ஈனச்செயல்களை நிறுத்தட்டும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *