போனஸ் என்பது வேறு, ஊக்கத்தொகை என்பது வேறு. ஊக்கத்தொகை ஒரு தொழிலாளரைப் பாராட்டியோ, குடும்பத் தேவைகளுக்காகவோ கொடுக்கப்படும். ஆனால் இந்தியாவில் மட்டும்தான் முக்கியமான பண்டிகைக் காலங்களில் அனைவருக்கும் போனஸ் கொடுப்பது சட்டமாகிவிட்டது.
உலகில் எந்த நாட்டிலும் இல்லாத இந்தப் பழக்கம் ஏன் இந்தியாவில் வந்தது.
வரலாற்றுப் பார்வை:
திருவிழாக் காலங்களில் தரும் ஊக்கத்தொகை குறித்து கல்வெட்டிலோ அல்லது வாய்மொழிப் பாடல்களிலோ எந்த ஒரு குறிப்பும் கிடையாது. போனஸ் என்ற ஒன்று ஆங்கிலேயர் வருவதற்கு முன்பு விரும்பத்தகாத ஒன்றாக இருந்துள்ளது.
தேவதாசிகளின் கேளிக்கைகளுக்குப் பணம் தேவைப்பட்டது. அப்படி அவர்கள் பணத்தை வாங்கிய பழக்கத்தில் இருந்து போனஸின் வரலாறு தொடங்குகிறது.
மேடையில் ஆடுவது, செல்வந்தர்களுக்குத் தங்கள் உடலைப் படைப்பது போன்றவைகளின் மூலம்தான் தேவதாசிகளுக்கு வருமானம் கிடைத்தது.
முக்கியப் பண்டிகைகளின்போது தேவதாசிகள் தங்கள் கேளிக்கை இல்லங்களுக்கு வந்து செல்லும் செல்வந்தர்களைத் தேடிச் செல்வர். திருவிழா கொண்டாட வேண்டும் என்று கூறி தங்களின் கோரிக்கையைக் கூறுவர். ஆரம்ப காலத்தில் தங்கக் காசுகளைக் கொடுத்துவந்த செல்வந்தர்கள், பணம் புழக்கத்திற்கு வந்த பின்னர் பணமாகக் கொடுத்தனர்.
செல்வந்தர்கள் இவர்களுக்கு எப்பொழுதும் கொடுப்பதைவிட பண்டிகைக் காலங்களில் ஒருமடங்கு அதிகமாகத் தந்தார்கள். ஆனால், செல்வந்தர்கள் தங்களிடம் வேலை செய்யும் பணியாளர்களுக்கு இதேபோல் பணம் கொடுக்க மாட்டார்கள். பணியாளர்களும் தங்களுக்கு வழங்கவேண்டும் என்று கேட்க வெட்கப்படுவார்கள். காரணம், செல்வந்தர்கள் என்ன காரணத்திற்காக தேவதாசிகளின் உதவியாளர்களுக்குப் பணம் கொடுக்கிறார்கள் என்று தெளிவாக தெரியும் போது பலர் முன்னிலையில் வாங்க வெட்கப்படுவார்கள். ஆனால் பணியாளர்கள் ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் பொருளாகவோ பணமாகவோ வாங்கிக்கொண்டு சென்றுவிடுவார்கள்.
ஆங்கிலேயர்கள், அவர்களின் கம்பெனிகளில் பணியாற்றும் அனைவருக்கும் போனஸ் கொடுக்கும் முறையை உருவாக்கினார்கள். தமது முதலாளியிடம் வாங்குவதை அசிங்கமாக நினைத்து ரகசியமாக வாங்கிக்கொண்டு வந்த தொழிலாளர்கள் ஆங்கிலேயர்களிடம் வாங்குவதை அசிங்கமாக நினைக்கவில்லை. காரணம், அவர்கள் எல்லோர் முன்னிலையிலும் அனைவருக்கும் சரிசமமாகக் கொடுத்தார்கள்.
ஆங்கிலேயர்களின் போனஸ் என்னும் சூழ்ச்சி: 1854இ-ல் இந்தியத் துணைக்கண்டத்தில் உள்ள சில குறுநில மன்னர்கள் ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனியின் படையின் முன்பு அடிபணிந்தனர். பெரும்பாலானோர் எதிரியின் பலத்தைக் குறைத்து மதிப்பிட்டு போரிட்டு மாண்டுபோனார்கள். முதன்முதலாக சூரத்தில் பருத்தி ஆலை அமைத்த ஆங்கிலேயர்கள் பண்டிகை கொண்டாடும் பொருட்டு போனஸ் எனப்படும் தொகையை அனைத்துத் தொழிலாளர்களுக்கும் கொடுக்கும் திட்டத்தைக் கொண்டுவந்தார்கள்.
இந்தப் பழக்கம் மெல்ல மெல்ல அனைத்து பிரிட்டிஷ் நிறுவனங்களுக்கும் பரவ ஆரம்பித்தது. கம்பெனி கைகளில் இருந்து இங்கிலாந்தின் ஆளுமைக்குள் வந்த பிறகு இந்தியாவின் முதல் ஷிமீநீக்ஷீமீணீக்ஷீஹ் ஷீயீ ஷிணீமீ யீஷீக்ஷீ மிஸீபீவீணீ என்ற பதவியில் இருந்த லார்ட் எட்வார்டு ஸ்டான்லி என்பவர் போனஸ் முறையை ஒழுங்குபடுத்தி இந்தியன் பில் என்ற ஒரு மாதிரி அரசியல் அமைப்புச் சட்டம் ஒன்றை அவசர கதியில் 1858-இல் உருவாக்கி தொழிலாளர்களுக்கான ஊக்கத்தொகை என்ற பெயரில் திருவிழாக் காலங்களில் கொடுக்க வழிவகை செய்தார். அங்கிருந்து தொடங்கியதுதான் இன்றைய போனஸ். இந்த போனஸ் திட்டம் பிரிட்டிஷ் அரசுக்கு ஒரு நன்மையைக் கொடுத்தது. அவர்கள் நாட்டில் உள்ளது போல் தனிநபர் ஊக்கத்தொகை என்று வருடம் முழுவதும் அழுவதைவிட ஒரே நாளில் கொடுத்துவிட்டு அதை அப்படியே பின்புறமாக பிடுங்கும் வசதியை ஏற்படுத்திவிட்டது.
டாடா நிறுவனங்களும் போனஸும்:
ஆங்கிலேயர்களின் நிறுவனம் கொடுத்ததைக் கண்டவுடன் அப்போதைய இந்தியாவின் பெரிய நிறுவனமான டாடா குழுமம், வேண்டாவெறுப்பாக போனஸ் தொகையைக் கொடுக்கவேண்டி இருந்தது. அதே நேரத்தில் டாடா நிறுவனம் ஒரு தந்திர உத்தியைக் கையாண்டது. போனஸைக் கொடுத்த கையோடு முக்கிய விழாக்காலங்களில் தங்களின் நிறுவன ஊழியர்களுக்கு தங்களால் சுட்டிக்காட்டப்படும் கடைகளில் மட்டும் சிறப்புச் சலுகையில் பொருட்கள் தரப்படும் என்ற திட்டத்தைக் கொண்டுவந்தது. இதன் விளைவு, மிகவும் சாமர்த்தியமாக 10 ரூ போனஸாக கொடுத்து 15 ரூ கடைக்காரர்களிடம் இருந்து கமிசனாக வாங்கிவிடுவார்கள். இந்த பச்சை வியாபார உத்தியை ஆரம்பித்தவர் ஜாம்செட்ஜி டாடா அவர்களின் பொருளாதார ஆலோசகராக இருந்த சைரஸ் மக்வானே. ஆனால் ஜாம்செட்ஜியின் புதல்வர் சர் துரோபாய்ஜி டாடா, தொழிலாளர்களை ஏமாற்றும் இந்தத் திட்டத்தைத் தடுத்து தங்களது நிறுவனமே இலவசமாக இனிப்பு, பரிசுப்பொருள், உடைகள் மற்றும் போனஸ் தொகை என தொழிலார்களுக்கு முக்கிய பண்டிகைக் காலங்களில் கொடுக்க ஆரம்பித்தார்.
பிரிட்டிஷ்காரர்கள் இவருக்கு சர் பட்டம் கொடுத்ததன் முக்கியக் காரணம் தொழிலாளர் மீது இவர் காட்டிய இந்த மனிதாபிமான செயல்தான் என்ற வரலாற்றுத் தகவலை ரத்தன் டாடா தனது பணிஓய்வு சிறப்புக்கூட்டத்தில் கூறியுள்ளார். அவரவர்களுக்கான உற்பத்தித் திறனுக்கு ஏற்ப போனஸ் தொகையைக் கொடுக்க ஆரம்பித்தார்கள்.
மைசூர் சமஸ்தானமும் போனஸும்:
சுதந்திரத்திற்கு முன்பு மைசூர் சமஸ்தானத்தின் கீழ் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு போனஸ் கொடுக்கக் கூடாது என்று நல்வாடி கிருஷ்ன ராஜ சன்னிதானம் என்ற மன்னர் ஆணையிட்டார். அவர் போனஸ் கொடுப்பதால் கஜானா காலியாகும், செய்யாத வேலைக்கு எதற்காக பணம் தரவேண்டும், பண்டிகைகளை வசதியிருந்தால் கொண்டாடுங்கள், இல்லை என்றால் வேடிக்கை பாருங்கள் என்று உத்தரவிட்டார்.
அதேவேளையில் பண்டிகைக் காலங்களில் சில நற்காரியங்களையும் செய்துவந்தார். இவரின் இந்த போனஸ் பற்றிய சிந்தனை வேடிக்கையாகத் தெரிந்தாலும், நிதானமாகப் பார்த்தால் முற்போக்கான சிந்தனையாகும். (இவர்தான் பெண்களுக்கான சொத்துரிமைச் சட்டத்தை இந்தியாவில் முதன்முதலில் தனது மைசூர் மாகாணத்தில் கொண்டுவந்தவர்).
விரும்பாவிட்டாலும் போனஸ்:
ஒருவருக்கு ஒருவர் சமமாக ஊதியம் வாங்கும் போது ஊக்கத்தொகை அல்லது போனஸ் என்பது எதற்குத் தேவைப்படும் என்பதை இங்கே கேள்வியாகக் கேட்டால், போனஸ் என்பது ஏமாற்றும் ஒரு செய்தியாகத் தெரியும்.
தொழிலாளர்களுக்குத் திடீர் என வரும் நோய், இதர குடும்பத் தேவைகளுக்கு வாங்கும் முன்பணம் குழந்தைகளின் கல்வி, சில அத்தியாவசிய செலவுகள் இந்த போனஸ் எனப்படும் முன் பணத்தில் வராது.
சரி, இந்த போனஸ் வாங்கி என்னதான் செய்கிறார்கள்?
ஆடம்பரச் செலவுதானே, அதை எத்தனை பேர் சேமிக்கின்றார்கள் என்று பார்த்தோமானால் அதுவும் மிகவும் அரிதாகத்தான் தெரிகிறது. மகாகருமிகூட போனஸை செலவு செய்யத் தயங்குவதில்லை. இந்த போனஸ் என்பது எப்படியான ஏமாற்று வேலை என்று புரிகிறதா?
கேளிக்கை காலங்களில் கேளிக்கைக்கு உட்படும் பொருட்கள் அனைத்தும் அரசின் சிறப்பு வரியின் கீழ் வரும். மற்ற நாட்களில் நாம் வாங்கும் ஒரு பொருள் 50-ரூபாய் என்றால் கேளிக்கை காலங்களில் அதன் விலை 75 ரூபாயாக இருக்கும். இதில் அரசின் சிறப்பு வரிகளையும் சேர்த்தால் 80-ரூபாய் ஆகிவிடும். அதாவது, போனஸ் மாதிரி உங்களுக்கு முன்பு கொடுத்து பின்பு உருவி எடுக்கும் வேலை. ஆங்கிலேயர் எந்தத் திட்டத்தோடு போனஸைக் கொண்டு வந்தார்களோ அதே திட்டம் இன்று இந்திய அரசால் தொடரப்பட்டு வருவது வேடிக்கையான ஒன்றுதான்.
இந்தியா போன்ற ஏழைகள் அதிகமாக வாழும் நாட்டில் திடீரென ஒரு தொகை வருவது ஊழியர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் ஒரு வித மகிழ்ச்சியை ஏற்படுத்தும். பெரியார் கூறிய சமத்துவமான உலகம் வரும்வரை போனஸ் என்பது மக்கள் விரும்பாவிட்டாலும்கூட தேவையான ஒன்றாகிவிட்டது.
உழைக்கும் மக்களின் தேவைகளைப் பூர்த்திசெய்வது நிறுவனங்களின் கடமையாகும். உலகம் எங்கும் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் வருடாந்தர உற்பத்தி விகிதத்திற்கு ஏற்ப லாப மற்றும் ஈட்டுத்தொகையைத் தொழிலாளர்களுக்குப் பங்கிட்டுக் கொடுக்கும். இதனடிப்படையில் ஊக்கத்தொகை மற்றும் இதர உதவித்தொகைகளைப் பங்கிட்டுக் கொடுப்பதைப் பெறுவது சட்டப்படி தொழிலாளர்களின் உரிமையாகும். சட்டப்படி கிடைக்கும் இந்த வரவைச் சேமித்து, தேவைப்படும் போது பயன்படுத்துவது சிறந்ததாகும். ஆனால், பெரும்பாலானோர் பண்டிகைக் காலங்களில் கிடைக்கும் இந்தத் தொகையை அதிசய வரவு போல் நினைத்து, ஆடம்பரமாகச் செலவு செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள்.
தற்போதுள்ள சூழலில் பல வணிக நிறுவனங்கள் புதிய உத்திகளைக் கையாண்டு பணத்தைத் பிடுங்கும் வேலைகளைச் செய்துகொண்டு இருக்கின்றன. பண்டிகைக் காலங்களில் வாங்கும் பொருட்கள் பொரும்பாலும் தேவையற்ற பொருட்களாகவும் ஆடம்பரமிக்கதாகவும் தான் உள்ளன. நமது உழைப்பிற்குக் கிடைத்த பணத்தை, பண்டிகைக் காலங்களில் விரயம் செய்யாமல் சிக்கனமாக இருந்து நமது குழந்தைகளுக்கும் சிக்கனத்தைக் கற்றுக் கொடுப்போம்.
Reference
1. Muvalur Ramamirthammal’s Web of Deceit: Devadasi Reform in Colonial India By Muvalar Ramamirthammal, Kalpana Kannabiran, Vasantha Kannabiran
2. The Scandal of Empire: India and the Creation of Imperial Britain
Pressnote: Ratan Tata Retirement 31-08-2012
3. History of the Princely State of Mysore. Orient
Blackswan publication