வீட்ல ராமன், வெளியில கிருஷ்ணன் என்ற தலைப்பில் ஒரு சினிமாப் படம் வந்தது. மனைவிக்கு மதிப்புத் தந்து, பயந்து நடந்து கொள்ளும் ஒருவன், வெளி உலகில் எப்படி பெண் பித்தனாக, வெறியனாக நடந்துகொள்கிறான் என்பதை நடிகர் (சிவக்குமார்) வெளிப்படுத்துவார். இந்தப் படம் தெரிவித்த செய்தி என்ன?
ஒருத்தனுக்கு ஒருத்தி என்று வாழும் மனிதர்கள் ராமனைப் போல எனக் கூறுவார்கள். எல்லா அரசர்களையும் போல, ராமனும் பல மனைவிகளைக் கொண்டிருந்தான் என்பதை வெள்ளி நாக்கு சீனிவாச சாஸ்திரி அம்பலப்படுத்தி உள்ளார் என்பது வேறு செய்தி. இருந்தாலும் ராமன் மீது அப்படி ஒரு கருத்து உண்டு.
பதர் போன்ற பகவான்
ஆனால், கிருஷ்ணன் கதை என்ன? ஒரே சமயத்தில் 9 ஆயிரம் கோபிகையருடன் கலவி செய்த கதையை பாகவதம் கூறும். 9 ஆயிரம் கிருஷ்ணன்களாகிக் கலவி செய்தானாம். 18 ஆயிரம் பேர்கள் ஆணும் பெண்ணுமாக உடலுறவில் ஈடுபட்டதைப் பாகவதம் கூறும் நேர்த்தியை பாகவத மேளா நடத்தும் பார்ப்பனர்கள், பாகவதர்கள், தூர்தர்ஷன், சங்கரா தொலைக்காட்சியில் காலட்சேபம் செய்யும் வேளுக்குடிகள் விவரிக்கும்போது கேட்கும் கிருஷ்ண பக்தர்கள் வாயில் எச்சில் ஒழுகும்.
இதன் பொருள் என்ன? கிருஷ்ணன் எனும் கடவுள் பொம்பளைப் பொறுக்கி என்ற கொச்சை வார்த்தையால் வருணிக்கப்பட வேண்டிய பதர்தானே!
கடவுள் என்ற நிலையில் வைத்து கவுரவிக்க வேண்டிய அளவுக்குத் தகுதியானவனா?
இப்படித்தான் வாழவேண்டும் என்று அளவுகோல்போல் வாழக் கூடியவர்களுக்கு கடவுள் ராமன் _ எப்படியும் வாழலாம் என்ற இழி பிறவிகளுக்கு உதாரணமான கடவுள் கிருஷ்ணன் என்று கவிஞர் கண்ணதாசன் கூறினார்! அர்த்தமுள்ள இந்துமதம் எழுதியவர் அவர்! முத்தய்யா எனும் தன் பெயர் இருக்க, கண்ணதாசன் என்ற பெயரைச் சூடிக்கொண்ட கவிஞர். கண்ணன் அவரைக் கவர்ந்ததும் அவர் பெயருக்குக் காரணியாக அமைந்த அவரது தனிவாழ்க்கையும் தனிக்கதை. என்றாலும் அவர் போன்ற ஆத்திகச் சிகாமணிகளால் அற்பன் என்று கூறப்பட்டவன்தானே கிருஷ்ணன்!
ராதா அத்தை அல்லவா?
ராதா கல்யாணம் என்று பாகவதர் காலட்சேபம் நடத்துவார். ருக்மணி கல்யாணம் என்று ஒருவர் பிரசங்கம் செய்வார். பாமா விஜயம் எனப் பாடுவார் ஒருவர். சத்ய பாமா _ ருக்மணி சண்டையைச் சிலாகித்துப் பாடுவார் வேறொருவர். ஜாம்பவதி என்ற மனைவியை அறிந்தவர்கள் சிலரே!
ஒரு ஆணுக்கு இத்தனை மனைவிகளை இணைத்துப் பாடுகிறோமே என்று பாகவதர்களுக்கும் வெட்கமோ குற்ற உணர்வோ கிடையாது. கேட்கும் பக்தர்களுக்கும் அறிவோ, மானமோ கிடையாது என்பது தெரிந்த சங்கதியே!
ஆண்களில் சிலர் ராதாகிருஷ்ணன் என்றே பெயர் வைத்துக் கொள்கிறார்கள். கிருஷ்ணனின் மனைவி பெயரையும் சேர்த்தே தன் பெயராக வைத்துக் கொள்கிறார்கள். அத்தகைய தனிச் சிறப்பு பெற்ற கிருஷ்ணனின் மனைவி ராதா, கிருஷ்ணனின் மனைவியா? கிருஷ்ணன் தாலி கட்டிய மனைவியா? முறையாகக் கல்யாணம் செய்து கொண்ட மனைவியா?
பக்தர்கள் பதில் கூறட்டுமே! கிடையாதே! பின் ராதா யார்? கிருஷ்ணனின் அத்தை! அப்படி இருக்கும்போது, அத்தையை வைத்துக் குடும்பம் நடத்தியவன்தானே கிருஷ்ணன்! கல்யாணம் ஏதும் செய்து கொள்ளாமல், சும்மா வைத்துக் கொண்டவன்தானே கிருஷ்ணன்!
அடுத்தவன் மனைவியோடு…
பின் ராதை யாருடைய மனைவி? இருவேறு கதைகள் உள்ளன. ஒன்றில் அபிமன்யுவின் மனைவி. அதை முன்பு பார்த்தோம். அதிரதன் என்பவனுடைய மனைவி என்று இன்னொரு பாரதம் சொல்கிறது! அதிரதன் யார்? வேகமாகத் தேரோட்டும் அதிரதனின் மனைவியாம்! இந்த அதிரதன்தான் கர்ணனின் வளர்ப்புத் தந்தை. திருமணத்திற்கு முன்பே திருட்டுத்தனமாக குழந்தை பெற்ற குந்திதேவி, ஊரார் பழிச் சொல்லுக்குப் பயந்து குழந்தையைக் கூடையில் வைத்து ஆற்றில் விட்டாளாம். அந்தக் கூடையைக் கண்டு, எடுத்து, வளர்த்தவள்தான் ராதை! கர்ணனின் வளர்ப்புத்தாய். வேறு வகையில் கிருஷ்ணனின் அத்தை!
அத்தையோடு குடும்பம் நடத்திய குடிகேடன் கிருஷ்ணன். திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்துவரும் ஆணும் பெண்ணும் கணவனும் மனைவியும் எனக் கருதப்படலாமா எனும் வழக்கில் தீர்ப்பு வழங்கிய இந்திய உச்ச நீதிமன்றம் கிருஷ்ணனும் ராதையும் வாழ்ந்த கதையை எடுத்துக்காட்டாகக் கூறித் தீர்ப்பு அளித்துள்ளது.
ராதாகிருஷ்ணன் யோக்யதையைச் சட்டப் பூர்வமாகக் குறிப்பிட்டுக் கூறியிருப்பவர் மற்றொரு கிருஷ்ணன்தான். இந்தியாவின் தலைமை நீதிபதியாக இருந்த கே.ஜி.பாலகிருஷ்ணன்!
பாரதத்தின் வண்டவாளம்
பாரதம் படிக்காத கிருஷ்ணபக்தர்கள், ஆல் இந்தியா லா ரிப்போர்ட் புத்தகங்களையாவது படிக்கட்டும். 18 நாள் பாரதம் படித்தபோது பக்கத்தில் ஆமாம் போடுபவர்களாக இருந்தவர்கள் _ இருப்பவர்கள்தானே கிருஷ்ணனைக் கும்பிடும் பக்தர்கள்! யாருக்கு முழுக் கதை தெரியும்? பெயர் தெரிந்த நான்குபேர் தவிர, மேற்கொண்டு 16 ஆயிரம் பேர் மனைவிகள் என்கிறதே, பாரதம்! அறிவார்களா, இவர்கள்?
15ஆம் நூற்றாண்டில் வங்காளத்தில் எழுதப்பட்ட பிரம்ம வைவர்த்த புராணக் கதையின்படி, ராதா, கிருஷ்ணனை வளர்த்த தாய் என்று ஆகிறாள். சிறுவன் கிருஷ்ணனை வளர்த்தவள். இவள் வீட்டில் இருந்தபோதுதான் இவன் தீராத விளையாட்டுப் பிள்ளை! வெண்ணெய் திருடித் தின்றது ராதா வீட்டில் வளர்ந்தபோதுதான்! நவநீத (வெண்ணெய்) கிருஷ்ணன் என்ற பெயர் வந்ததே ஆயர்குல ராதையின் வீட்டு வெண்ணெயைத் திருடித் தின்று லீலை செய்ததால்தான்! இத்தகைய லீலா கிருஷ்ணன், தன்னை வளர்த்த தாயையே தாரமாக்கிக் கொண்டான் என்றால்… இந்தக் கேடுகெட்ட கதாபாத்திரம் கடவுளா?
யோசித்துப் பார்க்க வேண்டும்! தாயாக, அத்தையாக இருந்த வயதில் மூத்த பெண்ணைத் தன் மனைவியாக்கிக் குடித்தனம் நடத்திய குணக்கேடன் கிருஷ்ணன்! வங்கதேசத்து மன்னன் லட்சுமணசேனன் (1179-_1209) என்பவனது அரசவைக் கவிஞன் ஜெயதேவ என்பவன் எழுதிய இடையனின் பாடல் எனும் கவிதை ராதாவிடம் எப்படியெல்லாம் கிருஷ்ணன் நடந்துகொண்டான் என்பதைக் கூறும். ராதாவின் முன் குனிந்து அவளது காலைத் தூக்கித் தன் தலையில் வைத்துக் கொண்டாடினான் என்கிறது இந்தக் கவிதை! இப்படியும் ஒரு கடவுளா?
வஞ்சகன் கிருஷ்ணன்
குடும்ப வாழ்க்கை இவ்வளவு கோளாறுகள் நிறைந்தது என்றால், கிருஷ்ணனைப் பற்றிப் பெருமையாகப் பேசப்படும் பாரதப் போர் பற்றிய கதை நிரம்பவும் வஞ்சகம் நிறைந்தது. பாண்டவர்கள் பக்கம் சாய்ந்து நின்று அவர்கள் போரில் வெற்றி பெறவேண்டும் என்பதற்காக என்னென்ன செய்தான் என்பது எல்லார்க்கும் தெரிந்ததே. அவற்றை விவரிக்கப் போவதில்லை. போர் முடிந்து, பாண்டவர்கள் வெற்றி பெற்றபிறகு போர்க்களத்தில் நடைபெற்ற கடைசிக் காட்சி பலபேருக்குத் தெரியாத ஒன்று.
அதுதான் அர்ஜூனனை இறங்கச் சொல்லிவிட்டு கிருஷ்ணன் தேரிலிருந்து இறங்கியதும் தேர் எரிந்துபோன காட்சி! அதைத்தான் கடந்த இதழில் நாம் பார்த்தோம்.
தேரே எரிந்து போகும் அளவுக்கு அயோக்கியத்தனம் செய்து போரில் வென்றிருக்கிறோம் என்று ஒப்புதல் வாக்குமூலம் தரும் அளவிற்குத்தான் உள்ளது பாரதப் போரை கிருஷ்ணன் நடத்திய யோக்கியதை! இத்தகைய கிருஷ்ணனும் கடவுளா?
ராதா யார் மனைவி?
வேறொரு கதையின்படி, ராதா அபிமன்யுவின் மனைவி என்கிறது. அபிமன்யுவின் தந்தை அர்ஜூனன். அபிமன்யுவின் தாய் சுபத்திரை. கிருஷ்ணனின் தங்கை சுபத்திரை. தன் தங்கையின் மருமகளைத் தன் தாரமாக்கிக் கொண்டவன்தான் கடவுள் கிருஷ்ணன்!
16ஆம் நூற்றாண்டில் ரூபகோஸ்வாமி என்னும் சைதன்யரின் சீடரால் எழுதப்பட்ட சமக்கிருதக் காவியம் கூறும் கதை இது. பாதராயணனின் பிரம்மசூத்ரத்திற்கு ராமானுஜர் எழுதிய சங்கரரின் தத்துவம் எனும் நூலின் 14ஆம் பக்கத்தில் கூறப்பட்டுள்ள செய்தி இது!
என்னய்யா, குழப்பம் இது! கடவுளின் பெண்டாட்டி பற்றியே இவ்வளவு மாறுபட்ட கதைகள் என்றால்…?
தங்கையோடு கூட…
கூடுதலாக ஒரு செய்தி. சர்வம் ஜகன்னாதம் என்று வைணவச் சொல்லடை ஒன்றுண்டு. எந்த வித்தியாசமும் இல்லாதது என்று இதற்குப் பொருள் கூறுகிறார்கள். அதனை விளக்க ஒரு கதையையும் கூறுகிறார்கள்.
ஒருநாள் தங்கை சுபத்திரா அண்ணன் கிருஷ்ணனைப் பார்த்து எல்லாப் பெண்களும் உன்னை விரும்புவதற்கும் உன்னை அடைவதற்கும் என்ன காரணம்? அதை நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன் என்றாளாம். இதைச் சொல்லி விளக்க முடியாது, செய்து காட்டித்தான் விளக்க முடியும் என்று கூறித் தன் தங்கையுடன் உடல் உறவு கொண்டு விளக்கினானாம். அந்தச் செயல் நடந்த இடம் ஜகன்னாத். ஒடிஷா மாநிலத்தில் பூரி எனும் கடற்கரை நகரில் நடந்ததாம். அதனால்தான் அங்கே பெரிய கோவில். அங்கே கிருஷ்ணனுக்கு ஜகன்னாத் என்று பெயர், பூரிஜெகன்னாத் கோவில் முழுவதும், கோபுரம் முழுவதும் அசிங்கமான, ஆபாசமான உடல் உறவுச் சிற்பங்களே!
இந்தக் கோவிலுக்குள் இந்து தவிர பிற மதத்தவர் அனுமதிக்கப்படுவதில்லை. பார்சி மதத்தவரைத் திருமணம் செய்து கொண்டதால் இந்திரா காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது அவர் பிரதமராக இருந்தபோதே! இந்து மதத்தில் தாழ்த்தப்பட்டவராக ஆக்கப்பட்ட பாபாசாகேப் அம்பேத்கர் உள்ளே போக அனுமதிக்கப்படவில்லை. இத்தனைக்கும் அவர் விஷ்ணுவின் மகன் (அரிஜன்) என்றழைக்கப்பட்டார் காந்தியாரால்!
ஆனால் மிலேச்சரான மவுன்ட் பேட்டன் பிரபு அனுமதிக்கப்பட்டார். இந்த லட்சணத்தில் சர்வம் ஜகன்னாதம் என்ன வாழ்கிறது?
ஓ! நான்கு வருணங்களையும் இதே கிருஷ்ணன்தான் படைத்தவனா?
அவதாரம் அல்ல
படைத்தவன் என்றால் _ கிருஷ்ணன் கடவுளா? கடவுளின் அவதாரமா? விஷ்ணு எனும் கடவுள் இந்து மதத்தின் மூன்று கடவுள்களில் ஒன்று. இந்தக் கடவுள் 22 அவதாரங்களை எடுத்தது என்கிறது புராணம். அவற்றில் 10 அவதாரங்களை மட்டுமே சிலாகித்துப் பேசுவார்கள். அதில் ஒன்று கிருஷ்ண அவதாரம் என்கிறார்கள்.
அது உண்மையா?
பாரதத்தைத் தமிழில் மொழிபெயர்த்துத் தந்துள்ளார் கும்பகோணம் அத்வைத பண்டிதர், வேதாந்த கேசரி, மகாமகோபாத்யாய, பைங்கா நாடு கணபதி சாஸ்திரி என்பவர். அவரது மொழிபெயர்ப்பு நூல் 1930ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. அந்நூலின் 1266ஆம் பக்கத்தில் விஷ்ணுவும் நாரதனும் பேசிக் கொள்ளும் விவரம் உள்ளது. தான் எடுத்த அவதாரங்களைப் பற்றிய விவரத்தை விஷ்ணுவே கூறுவதாக வாசகம். ஓ, நாரத முனியே! என்னுடைய அவதாரங்களைக் கேள். மத்ஸ்யம், கூர்மம், வராஹம், நரசிம்ஹம், வாமனம், பரசுராமன், தாசரதிராமன், பலராமன், புத்தன், கல்கி எனத் தொடர்கிறது. (அத்யாயம் 348)
பரசுராமன் இருக்கிறான். தசரதனின் மகன் ராமன் இருக்கிறான். பலராமனும் இருக்கிறான். கிருஷ்ணனைக் காணோமே!
புத்தர் அவதாரப் பித்தலாட்டம்
பலராமனுக்கு அடுத்து புத்தன் வருகிறது. 2,560 ஆண்டுகளுக்கு முந்தைய அரசன் மகனாகப் பிறந்து புத்தராக வளர்ந்து மறைந்து சித்தார்த்தர், கவுதமர் என்றெல்லாம் பெயர் பெற்ற புத்தர் வருவது எப்படி?
புத்தர் அவதாரம் விஷ்ணு எடுத்தது என்பது அண்டத்தையே தூக்கிச் சாப்பிடும் புளுகு அல்லவா? இந்தப் புளுகு கந்த புராணத்திலும் இல்லை என்பது சொல்லடை. அத்தகைய புளுகு மூட்டையான கந்த புராணம் கூட இப்படிப்பட்ட புளுகைப் புளுக வில்லையே!
சரி, கிருஷ்ணன் அவதாரம் இல்லை என்று ஆகிறது. அப்படியானால் அவன் யார்? துவாரகையை ஆண்ட அரசன் என்கிறார்கள். மாடு மேய்த்த இடையர்குல குறும்பன் என்கிறார்கள். எது உண்மை? நிறைய செயல்கள் அவன் மாடுமேய்த்துக் கொண்டிருந்தபோது செய்தவை என்பதாகப் பழங்கதைகள் நிறைய இருக்கின்றன. அதனால்தான் அவன் ஒரு ஜாதிக் கடவுளாகக் குறுக்கப்பட்டு விட்டானோ!
அய்ரோப்பியக் கடவுள், அரபியக் கடவுள், இந்தியக் கடவுள் என்று நில எல்லைக் கடவுள்கள் (TERRITORIAL GODS) இருப்பதுபோல, ஜாதிக் கடவுள் (SECTARIAN GOD) என்பதாகவும் ஆகிவிட்டதோ, கிருஷ்ணன்?
அவர்களைத்தான் கேட்க வேண்டும்!
(தொடரும்)