இந்தப் பொண்ண வரச்சொல்லு தியாகு என்றார் படத்தின் புரடியூஸர்.
சரிங்க சார் சாயந்தரம் 6 மணிக்கு ரகிதா லாட்ஜூக்கு நான் அழைச்சுட்டு வந்துடுறேன். அங்க வச்சு மற்ற விசயங்கள் எல்லாம் பேசிக்கலாம். நான் கிளம்பட்டுமா சார்? என்றார் படத்தின் இயக்குனர் தியாகு.
மாலை சரியா 6 மணிக்கு ரகிதா லாட்ஜ் ரூம் நம்பர் 12இல் (அதுதான் புரடியூசருக்கு ராசியான நம்பர்) அந்தப் பெண், தியாகு, புரடியூசர் மற்றும் புரடியூசரின் உதவியாளர்கள் இருவர் இருந்தனர்.
அந்தப் பெண் ரொம்ப பவ்வியமாக அமர்ந்து இருந்தாள்.
என்னம்மா? நல்லா நடிக்க வருமா உனக்கு.? எதுக்கு சினிமாவுக்கு வரணும் என்று ஆசைப்பட்ட?
சார் சின்ன வயசுல இருந்தே எனக்கு சினிமா மேல மோகம். விடாம சினிமா பார்ப்பேன். ஸ்கூல் படிக்கும் போது என் ப்ரண்ட்ஸ் எல்லாம் நீ அழகா இருக்கடி..? ஹீரோயின் மாதிரி இருக்கடினு சொல்லிச்சொல்லி மேலும் எனக்கு சினிமா மேல காதல் கொள்ள வச்சுட்டாங்க. மாடலிங் போய்ட்டு இருந்தேன். ஒவ்வொரு கம்பெனியா என் புகைப்படங்களை அனுப்பினேன். நீங்க என்னை ஹீரோயினா தேர்ந்தெடுத்ததா தியாகு சார் சொன்னதும் எனக்குக் கையும் ஓடல, காலும் ஓடல சார். அப்படியே மிதக்குற மாதிரி இருக்கு என்று ஆர்வத்துடன் கண்களை அகலவிரித்து, தலையை ஆட்டி ஆட்டிப் பேசியவளை புரடியூசர் ரசித்துப் பார்த்துக்கொண்டு இருந்தார்.
சரி சம்பளம் விவகாரம் எல்லாம் பேசிக்கலாம். அப்புறம், சினிமாவுக்கு வந்துட்ட, இனிமே எல்லாவற்றையும் சமாளிக்கக் கத்துக்கணும். புதுப்படத்துக்கு வரும் பொம்பளப் பிள்ளைங்கள வச்சுட்டு விளையாடுற மாதிரி புரடியூசர் நான் கிடையாதும்மா.. ஆனா எனக்குத் தேவை விசுவாசம், என்னதான் நாம வளர்ந்தாலும் நம்ம பழைய வாழ்க்கையை மறக்கக்கூடாது. என்ன பார்க்க அழகா இருக்க.. நல்லா நடி.. அப்புறம் பாரு உன் வளர்ச்சியை. நாளைக்கு நீ வடபழனில இருக்கிற சத்யம் சினிமா அலுவலகம் வந்துடு. அங்க சூட்டிங்.. எப்போ எப்போ நடக்கும், உன் சம்பளம், என்பது பற்றி எல்லாம் நம்ம இயக்குனர் சொல்வார் கேட்டு நடந்துக்க.. படத்துல உன் கூட நடிக்கப்போகும் ஹீரோ இரண்டு படம் நல்லா நடிச்சு பேர் வாங்கி இருக்கார். அதுனால அவருக்கு இணையா நீ நடிச்சுக் கொடுக்கணும். படம் நல்லா வரணும் என்றபடி தியாகுவின் பக்கம் திரும்பி, என்னப்பா அப்போ நான் கிளம்பட்டுமா? என்றார்.
படாரென தன் காலில் விழுந்த ஹீரோயினைக் கண்டதும், என்னம்மா இது? என்றார் அதிர்வாக.
இல்ல சார் நீங்க எனக்குத் தெய்வம் மாதிரி. என்னை ஹீரோயினா செலக்ட் பண்ணியிருக்கீங்க, நான் உங்க பேரைக் காப்பாத்துவேன். உங்களுக்காக நான் என்ன வேணா செய்வேன். காலம் முழுதும் நீங்க எடுக்கும் படத்தில் நான் நடிக்கத் தயார் சார். இப்பவே கையெழுத்துக்கூட போட்டுத் தர்றேன் சார்.. என்றவளைப் பார்த்து சிரித்தபடி, கடைசிவரை இந்த மாதிரியே இரு.. அது போதும் என்று சொல்லி வாழ்த்திவிட்டு ரூமை விட்டு வெளியேறினார்.
புரடியூசருக்கு இது பதினைந்தாவது படம். இதுவரை அவர் தயாரிப்பில் வந்த அனைத்துப் படங்களும் ஹிட். அதனால் நல்ல தயாரிப்பாளர் அந்தஸ்து கிடைத்து மிக பிரபலம் ஆகிவிட்டார்.
இந்தப்படமும் ஹிட் ஆனது.
ஹீரோ, ஹீரோயின், இயக்குனர் எல்லோருக்கும் நல்ல பெயர் கிடைத்தது. புரடியூசருக்கு நல்ல வருமானம் கிடைத்தது.
இரண்டு வருடங்களுக்குப் பிறகு அந்த நடிகை ரொம்பப் பிரபலம் ஆகிவிட்டாள். நான்கு படத்தில் மூன்று படம் சூப்பர் டூப்பர் ஹிட் அதனால் கையில் ஏகப்பட்ட படங்கள் புக் ஆகி இருந்தன. இப்போது புக்கான படங்கள் நடித்துக்கொடுக்கவே இரண்டு வருடங்களுக்கு மேலாகும்.
கேரவேனுக்குள் அடுத்த சீனுக்கான டிரஸ் பண்ணிக்கொண்டு இருந்தாள் நடிகை. செல்போன் ஒலித்தது அவசரமாக யார் எனப் பார்த்தவள் தன்னை அறிமுகப்படுத்திய புரடியூசர் என்றதும், போனை சைலண்ட் மோடில் போட்டுவிட்டு சூட்டிங் ஸ்பாட்டுக்குச் சென்றுவிட்டாள்.
திரும்ப வந்து பார்த்தபோது இரண்டு மிஸ்டுகால் இருந்தது. நான்காவது முறையாக செல்போன் சிணுங்கியதும் எடுத்தவள்,
சொல்லுங்க சார் எப்படி இருக்கீங்க? என்றாள்.
நல்லா இருக்கேன்.. நீதான் எங்கேயோ போய்ட்ட. உன் வளர்ச்சி, நடிப்பு எல்லாம் பிரமிக்க வைக்குது.. போன்கூட பேசமுடியலம்மா.. ரொம்ப நல்ல விசயம் தான்.. இன்னும் தொடர்ந்து நல்லபடங்கள் நடி அப்புறம்… என்றவரிடம், சொல்லுங்க சார் என்றாள்.
இல்ல எனக்குத் தெரிந்த ஒரு டைரக்டர். நல்ல படங்கள் எடுத்தவர். ஹீரோ புக் பண்ணிட்டார். ஹீரோயினா நீதான் வேணும்னு அடம்பிடிக்கிறார். என்னிடம் சிபாரிசு செய்யச்சொல்லி வற்புறுத்தினார். நானும் நான் சொன்னா அந்தப் புள்ள உடனே சரி சொல்லிடும் என்று வாக்குக் கொடுத்துட்டேன். என்னம்மா நான் சொன்னது சரிதானே? என்றார்.
என்னம்மா?
சார் என்னோட வளர்ச்சி பற்றி தெரியாமப் பேசுறீங்க. எனக்குக் கையில இருக்குற படத்துக்கே டேட் இல்லாம அலைஞ்சிட்டு இருக்கேன். அதில வேற புதுப்படம் அது இதுனுட்டு. சார் எப்படி நீங்க என்னைக் கேட்காம சரினு சொல்லலாம். என்னால முடியாது. ப்ளீஸ் மன்னிச்சிடுங்க.. என்றபடி செல்போனை அணைத்தாள்.
புரடியூசர் காதில் மட்டும் இன்னும் கேட்டுக் கொண்டு இருந்தது. நீங்க எனக்குத் தெய்வம் மாதிரி சார், காலம் முழுதும் நீங்க சொல்ற படங்களில் நான் நடிக்கத் தயார். இப்பவே கையெழுத்துப்போட்டுத் தர்றேன்…