காவல்துறை அடக்குமுறைக்கு அஞ்சாத கருப்புச் சட்டைகள்
29.10.1977இல் திருச்சியில் நடந்த கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான அளவில் தி.க. தோழர்கள் கலந்து கொண்டனர். தஞ்சை மாவட்ட தி.க. செயலாளர் கா.மா. குப்புசாமி, தஞ்சை நகர தி.க. துணைத் தலைவர் சிவசண்முக சுந்தரம், தஞ்சை நகர தி.க. பொருளாளர் சாமி. நாகராஜன், புதுக்கோட்டை வடிவேலு (மாவட்ட துணைச் செயலாளர்) ஆகியோர் போலீசாரால் மூர்க்கத்தனமாகத் தாக்கப்பட்டதோடு, கைது செய்யப்பட்டு போலீஸ் வேனில் ஏற்றிச்செல்லப்பட்டனர்.
சாமி. நாகராஜனின் மண்டை உடைந்து ரத்தம் சொட்டச் சொட்ட போலீஸ் வேனில் ஏற்றிச் செல்லப்பட்டார்.
விடியற்காலையில் விடுதலையாயினர். இந்திராவுக்குக் கறுப்புக்கொடி காட்ட கரூரிலிருந்து ரயிலில் திருச்சி போன கழகத் தோழர்கள் தடியடிக்கு இலக்காயினர். படுகாயப்பட்டனர்.
30.10.1977 அன்று சென்னை மாநகரில் இந்திராவின் சர்வாதிகாரத்தை எதிர்த்துத் திரண்ட லட்சோபலட்சம் மக்கள் மீது, காவல் துறையினரும், ஆளும் கட்சியினரும், இந்திரா காங்கிரசாரும் கட்டவிழ்த்து விட்ட காலித்தனத்தால் தமிழினத்தின் ரத்தம் வெள்ளமாய்ப் பாய்ந்தது.
காலை 6 மணி முதல் தொடங்கிய தடியடி, கண்ணீர்ப் புகை தொடர்ந்து நடத்தப்பட்டு வந்தது. சென்னைக்குள் இந்திரா வருமுன்பே அடக்குமுறைகள் ஏவப்பட்டன. ஒவ்வொரு ரயில் வண்டி நிலையத்திலும் காங்கிரசார், ஆளும் கட்சியினர், போலீசார் துணையோடு, வந்திறங்கிய தோழர்களையெல்லாம் அடித்து நொறுக்கினர். கிண்டியிலும், சைதையிலும் எச்சரிக்கை ஏதுமின்றி திடும் என துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதால் அரசுத் தகவல்படி மூவர் உயிரிழந்தனர். காட்டுமிராண்டித் தாக்குதலுக்குப் பலியாகி ரத்தம் வழிய வந்த தோழர்கள் பலருக்கு விடுதலை அலுவலகத்தில் மாவட்ட மாணவர் கழகத் தோழர்கள் பரபரப்புடனும் பரிவுடனும் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
அனகாபுத்தூர் பேருந்தில் வந்த கழகத் தோழர் ஒருவரைச் சூழ்ந்து தாக்கியது போலீஸ். அத்தோடும் விடாமல் விரல் இழந்த காலோடு ஓடித்தொலையுமாறு கூச்சலிட்டு விரட்டினார்கள். தடையை மீறி கறுப்புக் கொடிக் கிளர்ச்சி நடத்தப் போவதாக கழகத்தலைவர் அம்மா அவர்கள் அறிவித்ததைத் தொடர்ந்து காலை எட்டரை மணியளவில் நான் மற்றும் தோழர்கள் ஒரு வேனிலும், கழகத் தலைவர் மற்றும் தோழர்கள் ஒரு வேனிலும் புறப்பட்டுச் சென்றோம்.
முதலில் நான் மற்றும் தோழர்கள் தடையை மீறிச் செல்வது என்றும் அவர்கள் கைது செய்யப்பட்டால், அதைத் தொடர்ந்து கழகத் தலைவர் அம்மா அவர்களும், தோழர்களும் தடையை மீறுவது என்றும் முடிவு செய்யப்பட்டது. தந்தை பெரியார் வாழ்க; சர்வாதிகார இந்திராவே திரும்பிப் போ என்று கூடியிருந்த கழகத் தோழர்களின் உணர்ச்சி முழக்கங்களோடு இரு வேன்களும் புறப்பட்டுச் சென்றன.
சைதாப்பேட்டை மறைமலை அடிகள் பாலத்திற்கருகே வேன்கள் போலீஸ் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டு அனைவரும் கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டு சைதாப்பேட்டை காவல் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டனர். கழகத்தலைவர் அம்மா, நான் மற்றும் கைதான கழகத் தோழர்கள் விவரம் வருமாறு:
புலவர் இமயவரம்பன் _ மத்தியக் கமிட்டி உறுப்பினர், ஏ. பெருமாள் _ வ.ஆ.மாவட்டக் கமிட்டி உறுப்பினர், ஏ.டி.கோபால் _ வ.ஆ. மாவட்டக் கழக செயலாளர், சி. இலக்குமணன் _ திருவாரூர் நகர தி.க. துணைத் தலைவர், என். வடிவேலு _ தஞ்சை மாவட்ட தி.க. அமைப்பாளர், கே. ராசமாணிக்கம் _ மாயவரம் நகர தி.க. தலைவர், என். ரகுபதி _ மாயவரம் நகர தி.க. செயலாளர், எஸ். சிவசங்கரன் _ திருவாரூர் நகர தி.க. தலைவர், எஸ்.கண்ணன் _ திருவண்ணாமலை நகர தி.க. தலைவர், கல்யாணி _ மஞ்சக்குடி _ குடவாசல் வட்டம், இரா.ராசையன் _ மன்னை வட்ட தி.க. செயலாளர், எஸ்.பி.தெட்சணாமூர்த்தி _ தென்சென்னை மாவட்ட தி.க. தலைவர், கா.அய்யாசாமி _ குடந்தை வட்ட தி.க. செயலாளர், எஸ். ராசாங்கம் _ முத்துப்பிள்ளை மண்டபம் தி.க. தலைவர், குடந்தை வட்டம், கு. ராமகிருஷ்ணன் _ கோவை மாவட்ட தி.க. செயலாளர், எஸ். இன்பலாதன் பி.எஸ்.சி., பி.எல்., சிவகெங்கை, கு. கிருட்டிணன், தி.க., கோ.வேந்தன் _ குடியாத்தம் தி.க. தலைவர், காட்டுசாகை குப்புசாமி _ தென்னாற்காடு மாவட்ட தி.க. துணைச்செயலாளர்.
சைதாப்பேட்டை மறைமலை அடிகள் பாலத்தருகே கழகத்தலைவர் அம்மா அவர்கள், தோழர்களுடன் நானும் வேனில் சென்றபோது தடுத்து நிறுத்தப்பட்டோம்.
அப்போது அவ்வழியே வெள்ளைச் சட்டை அணிந்து கொண்டிருந்த ஒரு நபரை சைதாப்பேட்டை டிராபிக் சார்ஜெண்ட் வெள்ளைச்சாமி மூர்க்கத்தனமாக அடித்துக் கொண்டிருந்தபோது, அம்மா அவர்கள் வீதியில் ஒன்றும் செய்யாமல் நடந்து போகிறவரை ஏன் வீணாக அடிக்கிறீர்கள்? என்று கேட்டதற்கு, அந்த சார்ஜெண்ட் வெள்ளைச்சாமி வேனுக்கருகில் வந்து அம்மா அவர்களைத் தாக்க கைத்தடியுடன் ஓடோடி வந்தார்.
சொல்லத்தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தினார். அன்று டெபுடி கமிஷனர் தேவாரம், இந்த நிகழ்ச்சியை நேரில் பார்த்துக் கொண்டிருந்தும் அந்த சார்ஜெண்டை ஒன்றும் சொல்லவில்லை. திரு. தேவாரம், அம்மா அவர்களையும் என்னையும் மற்றும் தோழர்களையும் பார்த்து, யூ ஆர் அண்டர் அரஸ்ட் என்று சொல்லி அந்த சார்ஜெண்டையே அங்கு நிறுத்திச் சென்றுவிட்டார்.
சார்ஜெண்ட் நடந்து கொண்ட முறையைக் கண்டு ஆத்திரப்பட்ட இயக்கத் தோழர்களை அமைதிப்படுத்தி, நான், நம் தோழர்களைக் காவலுக்கு அழைத்துச் சென்றேன். டிப்டி கமிஷனர் தேவாரம் என்பவர் என்னைப் பார்த்து, மி ஷ்வீறீறீ யீவீஸீவீலீ ஹ்ஷீ ஷீயீயீ (உன் கதையை முடித்து விடுவேன்) என்று அலறினார்.
தி.மு.கழக சார்பில் கறுப்புக் கொடி கிளர்ச்சிக்கு தலைமை தாங்கவிருந்த ஆற்காடு வீராசாமி, நீலநாராயணன், சீதாபதி ஆகியோர் கைதானதைத் தொடர்ந்து, கலைஞர் கருணாநிதி, பேராசிரியர் க.அன்பழகன், சாதிக்பாட்சா ஆகியோர் கறுப்புக் கொடிகாட்ட கிண்டி சென்று கொண்டிருந்தபோது சைதாப்பேட்டையில் கைது செய்யப்பட்டனர்.
முன்னாள் அமைச்சர்கள் ப.உ.சண்முகம், கண்ணப்பன், நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.வி.பி.ஆசைத்தம்பி மற்றும் முக்கியத் தோழர்கள் கைது செய்யப்பட்டனர். சென்னை கறுப்புக் கொடி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள செங்கோட்டை பாசஞ்சரில் வந்த கருஞ்சட்டைத் தோழர்களை செங்கற்பட்டு ஸ்டேஷனில் தேடித்தேடி காங்கிரசாரும், அண்ணா தி.மு.க.வினரும் தாக்கினர். அப்போதைய முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்கள் ஆவார்; அவர் காட்டிய விசுவாசம் இப்படி?
புரட்சித் தலைவர் வாழ்க! இந்திரா காந்தி வாழ்க! என்ற கோஷங்களும் தாக்குதல் நபர்களின் கூச்சலில் ஓர் அம்சம். அ.இ.அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஒருவர் இந்த வன்முறையை முன்னின்று நடத்தினார். போலீசும் இவர்களின் எடுபிடியாய்ச் செயல்பட்டது. ரயிலிலிருந்து இறக்கப்பட்ட 161 கருஞ்சட்டைத் தோழர்கள் செங்கற்பட்டு காவல் நிலையத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டனர். அடுத்தடுத்து வந்த ரயில்களிலும் இதே தர்பாரை அவர்கள் நடத்தினர். எழும்பூர் ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் வருகிற போகிற கருஞ்சட்டையாளர்களையெல்லாம் மூர்க்கத்தனமாக போலீசாரும் ஆளுங்கட்சியினரான அ.தி.மு.க. மற்றும் இந்திரா கட்சியினரும் தாக்கினர்.
கருப்பு ஜாக்கெட் அணிந்து வந்த ஒரு தாயின் ஜாக்கெட்டையும் ஒரு போலீஸ் கிழித்தார்! கோடம்பாக்கம் கழகத் தோழர் கே.ராஜன், கிண்டியில் மூர்க்கத்தனமாகத் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வடசென்னை மாவட்ட துணைத்தலைவர் க. பலராமன், வில்லிவாக்கம் சிங்காரவேலு ஆகியோரும் போலீசாரின் மூர்க்கத் தாக்குதலால் படுகாயப்பட்டனர்.
சென்னை பொது மருத்துவமனை (ஜெனரல் ஆஸ்பிடல்) போர்க்கால மருத்துவமனையாக மாறிப்போனது. மண்டை உடைந்தோர், காலில் குண்டு பாய்ந்தோர், கண்ணிழந்தோர், முகம் கிழிந்தோர் என பலதரப்புக் காயங்களுடன் கழகத் தோழர்கள் அனுமதிக்கப்பட்டனர் மருத்துவமனையில்.
வட ஆற்காடு மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்த கழகத் தோழர் சுப்ரமணியம் அவர்கள், காலை 6 மணியளவில் எழும்பூர் ஓட்டல் ஒன்றில் தேநீர் பருகிவிட்டு வெளியே வந்தார். மேலே கறுப்புத் துண்டு அணிந்திருந்தார். அப்போதைய டிப்டி கமிஷனர் தேவாரம் தோழர் சுப்ரமணியத்தைப் பிடித்து இழுத்து, எண்பது வயதில் என்னடா கறுப்புக் கொடி? என்று கேட்டு, கன்னத்தில் தடியால் அடித்து தலையையும் தடியால் தாக்கினார். ரத்தம் பீறிட்டது. தள்ளாடி வந்துகொண்டிருந்த அவரைத் தோழர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர்.
வயது முதிர்ந்த திருவல்லிக்கேணி கழகத் தோழர் ஏ.வி.துரைசாமி, கிண்டியில் ஒரு தேநீர் கடை வாசலில் கருஞ்சட்டையுடன் நின்று கொண்டிருந்தபோது, தடியால் அடித்து மண்டையை உடைத்தனர். உடை முழுதும் ரத்தத்தால் நனைந்த கழகத் தோழரை, மருத்துவமனைக்கு மற்ற தோழர்கள் எடுத்துப்போயினர்.
பெத்துநாயக்கன் பேட்டையைச் சேர்ந்த தினகரன் என்ற தோழர் போலீசாரால் தாக்கப்பட்டதால் முழங்கால்மூட்டு உடைந்தது. திருச்சி மாவட்டம் துணிஞ்சப்பாடி கிராமக் கழகத் தோழர் எஸ்.சடையப்பன், மூர்க்கத்தனமாக கிண்டியில் தாக்கப்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
வட ஆற்காடு மாவட்ட தி.க. துணைச் செயலாளர் கே.கே.சின்னராஜ், தலையில் பலத்த காயமுற்று பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தென் சென்னை மாவட்ட பொருளாளர் சைதை பாலுவை முதுகில் அடித்து படுகாயப்படுத்தினர். கழகம் எவ்வளவு இன்னல்களையும் இழிவுகளையும், அடக்குமுறைகளையும் சந்தித்து வந்திருக்கிறது என்பதை இன்றைய இளைஞர்கள் நினைத்துப் பார்த்து காரியம் ஆற்றவேண்டும். அய்யாவிற்குப் பிறகு அம்மா அவர்கள் தலைமையில் இயக்கம் செயல்பட்டபோது நாம் சந்தித்த இரண்டாவது மிகப்பெரிய அடக்குமுறை இதுவாகும். கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த நிலையில் என்னுடைய தந்தை திரு.சி.எஸ்.கிருஷ்ணசாமி அவர்கள் தனது 92 வயதில் 10.11.1977 அன்று கடலூரில் காலமானார்கள். அப்போது நான் சிறையிலிருந்து கடலூருக்குச் சென்று தந்தையின் உடலிற்கு மாலையிட்டு மரியாதை செலுத்தினேன். என்னுடைய தந்தையின் இறப்பு குறித்து என்னுடைய நினைவுக் குறிப்பிலிருந்து…
எனது நினைவு அலைகள்!
எனது அருமைத் தந்தையார் திரு. சி.எஸ்.கிருஷ்ணசாமி அவர்கள் மறைந்து 35 ஆண்டுகள் ஓடிவிட்ட நிலையில், இன்று அவரது நினைவு நாளை நினைவுகூர்ந்தோம் _- அதுவும் கழகத் தோழர்களின் அன்பிற்கேற்ப. கடலூரில் நடுத்தரமான குடும்பத்தின் தலைவர் அவர். நல்ல வசதியோடு, தையற்கலைஞராகி வளமாக தொழில் நடத்தி சம்பாதித்தவர்.
மல்யுத்தம், சிலம்பாட்டம் முதலிய கோஷ்டிகள் எல்லாம் அவரை அண்ணனாகவும் குருவாகவும் கொண்டு மரியாதை செலுத்திடும் நிலையில், நகரத்தின் ஒரு முக்கிய பிரமுகராக வாழ்ந்தவர் அவர். உடல்நலக் குறைவு காரணமாக பலமாத படுக்கையில் இருந்தார். பழைய வீட்டை இடித்துப் புதிதாக கட்டியதால் சற்று பொருளாதாரத்தில் நலிந்தார். தையற்கலைச் சங்கத்தினர் அனைவரும் அக்காலத்தில் அவரிடம் பயின்றவர்கள்; அச்சங்கத்தின் முதல் கடலூர் வட்டாரத் தலைவரும்கூட!
புறா பந்தயத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்; சேவல் சண்டைகளுக்கு நடுவராக இருக்குமாறு புதுவை கோழிகுபேர் என்று பெயர் எடுத்த, பிரென்ச் புதுவை முதல் அமைச்சர் எதுவர் குபேர் அவர்களிடம் நெருக்கமாக தெரிந்தவர். புதுவை அன்சாரி துரைசாமி இவரது நெருங்கிய நண்பர்.
உடல்நலக்குறைவு காரணமாக தளர்ந்தும் 98 வயதுவரை வாழ்ந்தார்; கடைசி வரையிலும் கடையில், சென்று அமர்ந்து, நண்பர்களோடு உரையாடியே திரும்புவார் ஒவ்வொரு நாளும்!
என்னைப் பெற்ற அன்னை திருமதி மீனாட்சி எனக்கு அடையாளமோ, நினைவோ தெரியாத நிலையில் ஓராண்டில் மறைந்துவிட்டார். அதற்கடுத்து என்னையும் எனது இரு மூத்த சகோதரர்களையும் (கி.கோவிந்தராசன், கி.தண்டபாணி) மற்றும் குடும்பத்தையும் கவனிக்க மறுமணம் புரிந்ததன்மூலம் எனக்கு வளர்ப்புத் தாயாக வந்தவர் ஆக்கூரைச் சார்ந்த திருமதி பட்டம்மாள். அவர்தான் என்னை தன் பிள்ளையாகவே வளர்த்து ஆளாக்கியவர்.
எனது வாழ்வில் நான் எனது பெற்ற தந்தையிடம் இருந்த காலத்தைவிட, எனது ஞானத் தந்தையாம் தந்தை பெரியாரிடம்தான் அதிக காலம் நெருங்கி அவருக்குப் பணிசெய்தேன். அதில் எல்லையற்ற மகிழ்ச்சி எனக்குக் கிடைத்தது! எனது தந்தையோ, சகோதரர்களோ, என்னை இயக்கத்திற்கு மனமுவந்து தந்துவிட்டார்கள். ஒருபோதும் சங்கடப்பட்டதில்லை. மாறாக மகிழ்ச்சியே அடைந்தனர். வேறுபல குடும்பத்தில் எளிதில் காணாத, காணமுடியாத ஒரு நிகழ்வு. எனக்குத் தந்தையாகவும், தாயாகவும் அய்யா பெரியாரும் அன்னை மணியம்மையாரும் ஆனநிலையில் இயக்கத்தில் முழுநேரத் தொண்டனாக ஒப்படைத்துக் கொண்டபோது எனது கடலூர் தொடர்புகள் விட்டுவிட்டு நிகழ்வனவாயின!
எனது தந்தை உடல்நலக் குறைவு ஏற்பட்டு கடலூரில் படுக்கையில் இருந்தபோது, திருமதி இந்திராகாந்திக்கு எதிராக கறுப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் சென்னையில் கலைஞர் அவர்களும் அன்னை மணியம்மையாரும் நானும் கழகத் தோழர்களும் கைது செய்யப்பட்டோம். அம்மாவை மட்டும் விட்டுவிட்டு எங்களை 15 நாள் ரிமாண்ட் வழக்குப் போட்டு சிறையில் அடைத்தது எம்.ஜி.ஆர். தலைமையிலான அ.தி.மு.க. அரசு 1977இல். நான் சென்னை மத்திய சிறையில் இருந்தபோதுதான் கடலூரில் எனது தந்தை காலமான செய்தி சிறையில் கிடைத்தது. எனது அறைக்கே வந்து கலைஞரும் பேராசிரியரும் தி.மு.க., தி.க. நண்பர்களும் இரங்கலும் ஆறுதலும் சொன்னார்கள்.
என்னை ஜாமீனில் வெளியே சென்று எனது தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள வேண்டுமென கலைஞரும், பேராசிரியரும் வற்புறுத்தினர். அதுவரை நான் சிறையைவிட்டு வெளியே சென்று கலந்துகொள்ள மறுத்திருந்தேன். அவர்கள் கூறியதைத் தட்ட இயலாமல், வெளியில் இருந்த கழகத்தலைவர் அம்மாவும் நண்பர்களும் நான் கலந்துகொள்ள ஏற்பாடு செய்துவிட்டார்கள். அனுமதிபெற்று காலை காரில் புறப்பட்டு கடலூர் சென்றேன்.
கடலூர் இல்லத்தில் எனது தந்தையின் உடல் என் வருகைக்காகக் காத்திருந்தது. இறுதி மரியாதையைச் செலுத்தினேன். சுடுகாட்டிற்குச் சென்று எரியூட்டித் திரும்பினோம். ஏராளமான கழகப் பொறுப்பாளர்களும் தந்தையாரின் நெருங்கிய நண்பர்களும், உறவினர்களும் வந்து கலந்துகொண்டனர்!
மயானத்திலிருந்து திரும்பும்போது கடும்மழை, புயல். வீடு வந்தோம். இந்த இறுதி நிகழ்ச்சியோடு சரி; வேறு தனியே எந்த படத்திறப்பு நீத்தார் நினைவேந்தல் நாள்கள் நடத்திடவில்லை.
(நினைவுகள் நீளும்)