கேள்வி : அணுஉலை இழப்பீடு விவகாரத்தில் ஏற்கத்தக்க முடிவு எடுக்கப்படாத நிலையில், கூடங்குளம் அணுஉலையில் மின் உற்பத்தி செய்வது சாத்தியமாகுமா?
– எஸ்.உமா, பெரம்பூர்
பதில் : மின் உற்பத்தி நடந்துவிட்டதே; இயங்கும் நிலையில் இப்படி ஒரு கேள்வி ஏன்?
கேள்வி : கவிஞர் கனிமொழி எம்.பி. அவர்கள் நடத்திய தமிழ்க்(இசை) கலாச்சாரத்தை வெளிப்படுத்(தும்)திய சங்கமம் நிகழ்ச்சி ஏன் தடைப்பட்டது? மீண்டும் தமிழகத்தில் நடைபெறுமா? – ச.வீரநிதி, காஞ்சி
பதில் : நடைபெறும் நாள்கள் விரைந்து வந்து கொண்டுள்ளன; ஏற்கெனவே தனித்தனியே அது நடைபெற்றே வருகிறது!
கேள்வி : புலிகள் பற்றி தவறான செய்திகளை ஊடகத்தின் மூலம் சொல்லிவிட்டு பிறகு வருத்தம் தெரிவித்த திருமதி சிவகாமி (இ.ஆ.ப. ஓய்வு) அவர்களைப்பற்றி என்ன நினைப்பது? – தி.இரமணன், தண்டையார்பேட்டை
பதில் : இப்படியெல்லாம் கேள்வி கேட்டு எமது நேரத்தைத் தயவுசெய்து வீணடிக்காதீர்கள்.
கேள்வி : பாமக தலைமையில் ஜாதிகளின் கதம்பமாக சமூக ஜனநாயக கூட்டணி அமைந்துள்ளது தமிழக அரசியலில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும்? – எஸ்.கோவிந்தசாமி, பெரம்பலூர்
பதில் : ஜாதிச் சண்டைகள் கிளம்புவதற்கு இவை தூண்டுகோலாய் அமைந்தால் வியப்புக்குரியதல்ல.
கேள்வி : ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்முறையாக பெண்கள் கோவில்களில் அர்ச்சகராகப் பணியாற்ற 30 சதவீதம் இடஒதுக்கீடு அளித்திட முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தேவஸ்தானத் துறை ஆணையர் பவானிசிங் தெரிவித்துள்ளாரே? – மன்னை சித்து, மன்னார்குடி
பதில் : பாராட்டத்தக்க முடிவு. ஆகமம்பற்றி அலசுவோர் இதற்கென்ன பதில் கூறப் போகிறார்களோ தெரியவில்லை.-
கேள்வி : இறை நம்பிக்கை உடையவர்கள் தியாகம் செய்யத் தயங்க மாட்டார்கள் என்ற தமிழக முதல்வரின் கருத்து குறித்து?
– அ.செண்பகம், திருச்சி
பதில் : பாவம், பகத் சிங் பற்றி அவர் அறிந்திருக்க வில்லை போலும்; நேருவின் தியாகம் என்ன சாதாரணமா? எல்லாவற்றையும்விட தந்தை பெரியார் சொத்துகளை மக்களுக்கே ஆக்கி, 95ஆம் வயதில் உடல் நலிவுற்ற நிலையிலும் உழைத்தாரே _ அவரை அறிந்தவர் இப்படிப் பேசியுள்ளாரே! என்ன சொல்வது?-
கேள்வி : ஜாதிகளை உருவாக்கியவர்கள் ஆரியர்களும் அல்ல இந்து சமயத்தவர்களும் அல்ல, உருவாக்கியவர்கள் சமணர்களும், பௌத்தர் களும் ஆவார்கள் (நூல்: அருட்கவியும் மகாகவியும், பக். 60, 61. நா.மகாலிங்கம்) என சொல்வது உண்மையா? – கு.ப.புதன், சென்னை-
பதில் : அபத்தமான, அடிப்படைத் தெளிவற்ற, அபாண்டப் பிரச்சாரம்! ஒரு ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர் இதைத்தானே கூறுவார்!
கேள்வி : மனிதநேயத்தைப் போதிக்காத, வெறும் வணிக மயமான கோவில்களை யேசுநாதர் கள்ளர் குகை என்றும், காந்தியார் வேசையர் விடுதி என்றும் கூறியது எதைக் காட்டுகிறது? – இல.சங்கத்தமிழன், செங்கை
பதில் : உண்மையை யேசுவும், காந்தியும் அப்போதே பேசத் தயங்கவில்லை என்பதைக் காட்டுகிறது!
கேள்வி : செவ்வாய் கிரகத்திற்கு செயற்கைக் கோள் அனுப்பிய பின்பாவது செவ்வாய் தோஷம் பற்றிய மூடநம்பிக்கை ஒழியுமா?
– வெ.காவிரிமைந்தன், தஞ்சை
பதில் : எப்படிங்க… ராதாகிருஷ்ண நாயரே, திருப்பதி ஏழுமலையான் தயவையும் காளஹஸ்தி சிவனின் கிருபா கடாட்சத்தைத் தானே வேண்டி படையல் போட்டு பிறகு ஏவியிருக்கிறார்! சாதாரண படிக்காத பாமரனின் பக்தி (அறியாமை) மூடநம்பிக்கை எளிதில் போய்விடுமா?