திருநங்கைகள் சமூகத்தில் தீண்டத்தகாதவர்களாக நடத்தப்படுகின்றனர். பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் அவர்களைச் சேர்த்துக் கொள்ள அனுமதிக்கப்படுவதில்லை. அவர்களுக்கு மறுக்கப்படும் பல வசதிகளும் உரிமைகளும் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
– கே.எஸ்.ராதாகிருஷ்ணன், ஏ.கே.சிக்ரி, நீதிபதிகள், உச்ச நீதிமன்றம்.
இந்தியாவில் ஒரு பெண் விளையாட்டுத் துறையில் அனைவரும் அறிந்தவர், பிரபலமானவர் என்ற நிலையில் இருப்பது மிகவும் கடினமான விஷயமாக உள்ளது.
என்ன உடை நீங்கள் அணிகிறீர்கள், என்ன மாதிரியாக நீங்கள் பேசுகிறீர்கள், நீங்கள் எப்போது குழந்தை பெற்றுக் கொள்வீர்கள் என்பது போன்ற கேள்விகளையெல்லாம் என்னிடம் ஊடகத்துறையினர் அடிக்கடி கேட்கிறார்கள். ஆனால் எனது கணவரிடம் (பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்) உங்களுக்குக் குழந்தை எப்போது என்று யாரும் கேட்பது இல்லை. ஒரு பெண் தன்விருப்பப்படி ஏதாவது காரியத்தைச் செய்ய நினைத்தால், அவளைப் பெரிதாகக் குறை கூறுகின்றனர். சமூகத்தின் எதிராளியாக சித்தரிக்கின்றனர்.
– சானியா மிர்சா, இந்திய டென்னிஸ் வீராங்கனை
முன்பெல்லாம் மத மோதல்கள் அதிகமாக இருக்கும். இப்போது ஜாதி மோதல்கள் அதிகமாகிவிட்டன. மோதலுக்குக் காதலும் ஒரு காரணமாகிவிட்டது.
நல்ல படிப்பும் வேலை வாய்ப்பும் சமூகத்தைப் பற்றிய புரிதலும் நல்லிணக்கத்தை நாடக்கூடிய மனப்பக்குவமும் வளர வேண்டும். ஒரு தனி மனிதன் பக்தியையும் ஜாதி மதத்தையும் வீட்டுக்குள்ளேயே வைத்துக்கொள்ள வேண்டும். வாசலை விட்டு வெளியில் இறங்கினால், அவற்றை மறந்துவிட்டு இந்தியனாக இருக்க வேண்டும். மதவெறியையும் ஜாதிவெறியையும் வளர்ப்பது சமூகத்துக்குப் பெரிய தீங்கைக் கொண்டு சேர்க்கும். ஜாதியை வைத்து யாரும் பிழைப்பு நடத்தக்
கூடாது.
– குஷ்பு, திரைப்பட நடிகை