காவியை முறியடிக்கும் கருப்பின் எழுச்சி

நவம்பர் 16-30 - 2013

திருச்சிராப்பள்ளி உழவர் சந்தை மைதானத்தில் எத்தனை எத்தனையோ நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன என்றாலும் 9.11.2013 அன்று மாலை பல்லாயிரக்கணக்கான மக்களால் திணறியது என்றே சொல்ல வேண்டும். இது குவார்ட்டர் பாட்டிலும், பிரியாணிப் பொட்டலமும் கொடுத்து அழைத்து வரப்பட்ட கும்பல் அல்ல; இலட்சிய வெறியோடு திரண்டு வந்த தியாகத் தமிழர்களின் கூட்டம். திருச்சி நகரெங்கும் கருப்பு சிவப்பு வண்ணத்தில் ஜொலிக்கும் கழகக் கொடிகள் பட்டொளி வீசிப் பறந்தன. பதாகைகளும், வளைவுகளும் மாநாட்டுக்குக் கட்டியம் கூறின.

மதவாத சக்திகள் தலை தூக்கியுள்ள இந்தக் காலகட்டத்தில் இந்து ராஷ்டிரத்தைக் கொண்டு வருவோம் என்று புறப்பட்டுள்ள தருணத்தில் அதற்கான எதிர்ப்பு சக்திகளை, மதச் சார்பின்மையில் நம்பிக்கையுள்ளவர்களை ஓரணியில் திரட்டும் வரலாற்றுக் கடமையை திராவிடர் கழகமும், அதன் தலைவரும் செய்திருந்ததை மனித நேயத்தை வளர்க்க விரும்பும் மக்கள் அனைவரும் பாராட்டினர்.

தந்தை பெரியார் இருந்திருந்தால் எதைச் செய்திருப்பாரோ அந்த வரலாற்றுக் கடமையைத் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் சிறப்பாகச் செய்திருக்கிறார் என்று மாநாட்டில் பங்கேற்ற தலைவர்கள் புகழாரம் சூட்டினார்கள்.

சென்னையிலிருந்து வந்திருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அருட் தந்தை ஜெகத்கஸ்பார் அவர்கள், திராவிடர் கழகம் இந்த முயற்சியை எடுத்திருப்பது பொருத்தமானதே என்றார். இந்தியாவில் தமிழ்நாட்டு மக்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்றால் அதற்கு அடிப்படைக் காரணம் தந்தை பெரியார்தான். தந்தை பெரியாரின் முதல் புள்ளி, கடவுளிடமிருந்து தோன்றிடவில்லை. மானுட நேயத்தின் புள்ளியிலிருந்து அது தொடங்கப்பட்டது.

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக அவர் போரிட்டார் என்றால் அதற்குக் காரணம் அந்த மானுடம்தான். தந்தை பெரியார் இந்த மண்ணுக்குக் கிடைக்கவில்லையென்றால் இந்த ஜெகத்கஸ்பார் படித்திருக்க மாட்டான்; கூலி வேலை செய்து கொண்டுதானிருந்திருப்பான்.

எந்த சக்தி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தலைதூக்கி  நின்றதோ அது மீண்டும் தலைதூக்கப் பார்க்கிறது. -அதற்கு  இடம் கொடுக்கக் கூடாது என்று எச்சரிப்பதற்குத் தான் பொருத்தமான காலத்தில் இந்த மாநாடு இங்கே!

நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம் – மதவாத சக்திகள் தமிழ்த் தேசியத்தில் அடைக்கலம் கொண்டிருக்கின்றன என்று கூறவும் தவறவில்லை ஜெகத்கஸ்பார்.

எதற்காக திராவிடர் எழுச்சி மாநாடு? ஏன் தமிழர் எழுச்சி மாநாடு என்று நடத்தவில்லை? இந்தக் கேள்வியை எழுப்பிய திராவிடர் இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன், அதற்கு உரிய முறையில் விடையையும் சொன்னார்.

தமிழர் எழுச்சி மாநாடாக இருந்திருந்தால், அதில் பொன். ராதாகிருஷ்ணனும், அர்ஜுன் சம்பத்தும் இடம் பெற்றிருப்பார்களே!

தமிழர் எழுச்சி மாநாடு என்றால் அங்கே ஜெகத்கஸ்பாருக்கும், பேராசிரியர் காதர்மொய்தீன் அவர்களுக்கும் இடம் கிடையாது.

தஞ்சையில் முள்ளிவாய்க்கால் நினைவு குறித்த அருங்காட்சியகம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது, வரவேற்கிறோம். அதே நேரத்தில் தமிழ்நாட்டு மக்களுக்காகப் பாடுபட்ட தலைவர்களின் படங்கள் வைக்கப்பட்டுள்ளனவே _- அதில் தந்தை பெரியாருக்கு இடம் இல்லாதது – ஏன்? என்ற வினாவை பேராசிரியர் சுப.வீ. அவர்கள் எழுப்பிய போது, அந்தத் தகவல் அதிர்ச்சியாகவே இருந்தது. ஆழமான அமைதி ஒன்று ஆழமான சிந்தனையின் கொள்கலனாக இருந்தது. இப்படிக்கூட தமிழ்நாட்டில் நடக்குமா? நடத்துபவர்களும் உண்டா? என்ற வினாக்குறி ஒவ்வொருவர் முகத்திலும் எள்ளும் கொள்ளுமாக வெடித்தது.

தமிழ்த் தேசியம் என்றால் தந்தை பெரியாரை ஏற்க மறுப்பது என்ற பொருளை இப்பொழுது தமிழர்கள் எளிதாகவே புரிந்து கொண்டிருப்பார்கள் அல்லவா?

இதில் ஒரு வெட்கக் கேடு என்ன தெரியுமா? சனாதன வெறியோடு, ஆஷ் துரையைச் சுட்ட வாஞ்சிநாதன் படம்கூட அதில் இடம் பெற்றுள்ளதாம். தமிழ்த் தேசியம் என்றால் பெரியாரை வெறுக்கும்; வாஞ்சிநாதய்யர்களைக் கட்டிப் பிடித்துக் கொள்ளும் என்பதை ஓர் அருங்காட்சியகம் அமைத்துப் பறைசாற்ற வேண்டும் போலும்!

பேராசிரியர் சுப.வீ. நறுக்கத் தெறித்தது போல ஓர் உண்மையைச் சுட்டிக் காட்டினார்.

எந்தத் தொலைக்காட்சி தூய தமிழைத் தூக்கிப் பிடிக்கிறதோ அந்தத் தொலைக்காட்சிதான், தூயதாக ஜாதியையும் தூக்கிப் பிடிக்கிறது என்றாரே பார்க்கலாம் (சபாஷ், மிகவும் சரியான முகத்திரைக் கிழிப்பு!).

கடவுள் இல்லை என்று சொன்ன தந்தை பெரியார்தான் கோவிலுக்குச் சென்று சாமி கும்பிட எல்லோருக்கும் உரிமை உண்டு என்று போராடினார். தாலி கூடாது என்று சொன்ன பெரியார்தான், தேவதாசிகளுக்குத் தாலி கட்டுவது பற்றி வாதாடினார்.

ஆணாகப் பிறந்த பெரியார், பெண்களுக்காகக் குரல் கொடுத்தார். உயர்ந்த ஜாதியில் பிறந்த அவர், கீழ்ஜாதியென ஒதுக்கப்பட்ட ஒடுக்கப் பட்ட மக்களின் உரிமைக்காகப் போராடினார். பணக்காரக் குடும்பத்தில் பிறந்த பெரியார் ஏழை -_ எளியவர்களுக்காக உழைத்தார்.

99 சதவீத மக்கள் கடவுள் நம்பிக்கையானவர்கள், அந்த 99 சதவீத மக்களும் கடவுள் இல்லை என்று சொன்ன ஒருவரைத் தலைவராக ஏற்றுக் கொண்டது தந்தை பெரியாரைத்தான். அந்தப் புரட்சி இங்குதான் நடந்திருக்கிறது என்று மிக அருமையாக நுண்மையாகப் படம் பிடித்துக் காட்டினார் சுப.வீ.

பெரியார் வரலாற்றை உருவாக்கியவர், அவரை வரலாற்றிலிருந்து எப்படி மறைக்க முடியும் என்ற அழகான வினாவையும் தொடுத்தார். ஜாதி மதவாத எதிர்ப்பைத் தூக்கிப் பிடிக்க கருஞ்சட்டைப் படையைவிட வேறு யாரும் கிடையாது. திராவிடர் கழகம் அனைத்துக் கழகத்துக்கும் தாய்க் கழகம் என்ற கருத்து மணிகளைக் கோர்த்து அழகான ஆரமாகப் பரிணமிக்கச் செய்தார் சுப.வீ.

அடுத்துப் பேசிய இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர், பேராசிரியர் கே.எம். காதர்மொய்தீன் உரை கண்ணியத்தின் வடிவமாய் மிளிர்ந்தது.

எடுத்த எடுப்பிலேயே நிறைவேற்றிய கடைசித் தீர்மானமான திருச்சிராப்பள்ளியில் உள்ள பன்னாட்டு விமான நிலையத்திற்குத் தந்தை பெரியார் பெயரைச் சூட்ட வேண்டும் என்ற தீர்மானத்தை வழிமொழிந்த பேராசிரியர், மண்ணில் மட்டுமல்ல; விண்ணிலும் பகுத்தறிவுப் பகலவன் பெயர் ஒலிக்க வேண்டும் என்றார்.

தந்தை பெரியாரின் கடவுள் மறுப்புக்கும், மத எதிர்ப்புக்கும் அடிப்படை மனிதநேயமே! ஒன்றே குலம் என்பது தமிழர் நெறி, யாதும் ஊரே என்பதும் தமிழர் நெறி, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதும் தமிழர் நெறி!

இவற்றைத் தமிழன் மறந்த நேரத்தில் தந்தை பெரியார் நினைவூட்டி அதற்குப் பகுத்தறிவு என்று பெயர் சூட்டினார்.

மண்டல் குழு அறிக்கையிலே ஒன்று குறிப்பிடப்பட்டுள்ளது. வட நாட்டிலே ஒரு கிராமத்துக்கு மின் இணைப்புக் கொடுக்கப்பட்டது. அந்தக் கிராம மக்கள் அதனை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டனர். என்ன காரணம் தெரியுமா? அந்த மின்சாரம் அதற்கு முந்தியுள்ள தாழ்த்தப்பட்டவர்கள் வாழும் கிராமத்திலிருந்து வருகிறதாம் (மின்சாரத்தில்கூட தீண்டாமையோ!) தீட்டுப்பட்டு விட்டதாம். இதுதான் வடநாட்டின் நிலைமை. தமிழ்நாட்டில் அப்படிக் கூற முடியுமா? காரணம் இது பெரியார் பிறந்த மண். பெரியார் பிறந்த மண்ணிலே மதவாதத்தை விதைக்க அனுமதிக்க மாட்டோம் என்று அறிவிப்பதுதான் இந்தத் திராவிடர் எழுச்சி மாநாடு என்று குறிப்பிட்டார் பேராசிரியர் கே.எம். காதர்மொய்தீன்.

தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜி.ஏ.வடிவேலு பேசும் போது, ஒரு பெரிய தீமை நாட்டைச் சூழ்ந்து நிற்கிறது. பி.ஜே.பி. ஆட்சிக்கு வரத் துடிக்கிறது. எங்குப் பார்த்தாலும் மோடியே பிரதமர் ஆகிவிட்டது போல ஒரு பிரச்சாரம்! இந்த நிலையை எதிர்த்து அழிக்க மதச் சார்பற்ற சக்திகள் ஒன்று திரட்டப்பட வேண்டும். அதற்காகத்தான் இந்த மாநாடு. அந்த வகையிலும் தீர்மானம் இங்கு நிறைவேற்றப்பட்டுள்ளது.

யார் வரக் கூடாது என்பது மிகவும் முக்கியம், முதலில் மதச்சார்பின்மைச் சக்திகள் தமிழ்நாட்டில் ஒன்று திரட்டப்பட வேண்டும். அதனை வட மாநிலங்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும். அதற்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களோடு ஒத்துழைக்கத் தயார் என்று குறிப்பிட்டார்.

தி.மு.க. அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி. பேசும்போது, திராவிடமா? ஆரியமா? இன்னும் தேவையா என்று சிலர் கேட்கின்றனர்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பது திராவிடம். சதுர்வர்ணம் மயா சிருஷ்டம் என்பது ஆரியம். பெண்ணிற் பெருந்தக்கயாவுள என்பது திராவிடம். பெண்கள் பாவ ஜென்மம் என்பது ஆரியம்.

திராவிட இயக்கம் என்பது இழந்ததை யெல்லாம் மீட்க வந்த இயக்கம். எங்கள் கொள்கை மானுடக் கொள்கை. எங்கள் வீட்டில் எல்லா ஜாதியும் உண்டு _ மதங்களும் உண்டு. -இவற்றைக் கடந்துதான் எங்கள் வீட்டில் திருமணங்கள் _- பெரியார் வழி வந்தவர்கள் நாங்கள்.

இப்பொழுது நாட்டை ஆள்வது அரசியல் கட்சிகளல்ல; நீதிமன்றங்கள் ஆளுகின்றன. தொழில் நிறுவன அதிபதிகள் ஆளுகின்றனர். ஊடகங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. இவர்கள்தான், இவைதான் ஒருவரை பிரதமராகக் கொண்டு வர முயற்சிக்கின்றன.

காகித ஊடகங்களைவிட மின்னூடகங்கள், தொலைக்காட்சிகள் மக்கள் மூளையை மாற்றி வருகின்றன. மீண்டும் மீண்டும் பெரியாரைப் படியுங்கள். இல்லையேல் மீண்டும் நாம் சூத்திரர்கள், பஞ்சமர்கள் என்ற நிலைதான் உருவாகும், எச்சரிக்கை என்று குறிப்பிட்டார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் எம்.பி. எரிமலையாய் கொந்தளித்தார்.

இப்படி ஒரு மாநாட்டைக் கூட்டியதற்காக திராவிடர் கழகத்துக்கு, தமிழர் தலைவருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது என்று எடுத்த எடுப்பிலேயே குறிப்பிட்டார்.

தருமபுரியிலே ஜாதி வெறியர்கள், தாழ்த்தப்பட்டோர் வாழும் கிராமங்களைக் கொளுத்தினார்கள். அந்தக் காலகட்டத்திலேயே அந்தத் தருணத்திலேயே தருமபுரியில் ஜாதி ஒழிப்பு மாநாட்டைக் கூட்டி அதில் திருமாவளவனும் கண்டிப்பாகக் கலந்து கொள்ள வேண்டும் என்று ஏற்பாடு செய்தவர் தமிழர் தலைவர். தாழ்த்தப்பட்டவர்களை அழித்து விடலாம் என்று யாரேனும் நினைத்தால் அதனை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்காது என்று கருஞ்சட்டைப் படை எச்சரிக்கை விடுத்த மாநாடுதான் அந்த ஜாதி ஒழிப்பு மாநாடு.

மோடி அலை என்று ஒன்றைக் கிளப்பி விட்டுள்ளார்களே -இதற்கு முறையான எதிர்ப்பினைத் தெரிவிக்க வேண்டாமா என்று நினைத்த நேரத்திலே இந்த மாநாட்டை நடத்திட தமிழர் தலைவர் முன் வந்துள்ளார்.

தந்தை பெரியார் இருந்திருந்தால் என்ன செய்து இருப்பாரோ அந்தக் கடமையைத்தான் நமது தமிழர் தலைவரும் செய்துள்ளார்.

மாநாட்டோடு இது நின்றுவிடக் கூடாது. மதச்சார்பற்ற தோழமைக் கட்சிகளை ஒன்றிணைத்தாக வேண்டும். இதற்குத் தலைமை தாங்க பொருத்தமானது திராவிடர் கழகம்தான். இதே போல வடநாட்டிலும் இந்துத்துவாவை எதிர்க்கக் கூடியவர்களை ஒன்றிணைக்க வேண்டும். தமிழர் தலைவரே அதற்கும் தலைமை தாங்கி வழிநடத்திட வேண்டும். இந்த மாநாட்டின் மூலம் தமிழர் தலைவர் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளுக்கு ஓர் எச்சரிக்கை கொடுத்துள்ளார்.

எந்தக் காரணத்தைக் கொண்டும் பி.ஜே.பி.யோடு கூட்டு வைத்துக் கொள்ளக் கூடாது என்று நம்மையெல்லாம் எச்சரிப்பதற்குத்தான் தமிழர் தலைவர் இந்த மாநாட்டைக் கூட்டியுள்ளார். மோடி பிரதமரானால் தாழ்த்தப்பட்டோர் நிலைமை என்ன? சிறுபான்மை மக்களின் நிலை என்ன? இட ஒதுக்கீடு ஒழிக்கப்பட்டு விடும்.

இன்றைக்கு மோடியின் பின்பலமாக இருக்கக் கூடியவர்கள் யார்? ஆர்.எஸ்.எஸ். போன்ற இந்துத்துவா சக்திகளுக்கு, பன்னாட்டு நிறுவனங்களும், கார்ப்பரேட் நிறுவனங்களும்தான். தமிழ்நாட்டில் ராஜபக்சேயானாலும், ராமபக்சே ஆனாலும் அவர்களைக் கொள்கை ரீதியாக எதிர்த்துப் போராடக்கூடிய இயக்கம் திராவிடர் கழகம். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அதற்கு உறுதுணையாக இருக்கும் என்றார். அவருடைய 25 நிமிட உரை அனல் பறப்பதாகவும், தமிழ் மண்ணின் உரிமைக் குரலாகவும் ஒலித்தது என்றால் அது மிகையாகாது.

நிறைவாக முழங்க வந்தார் தமிழர் தலைவர் கி.வீரமணி. “இது கூட்டிவரப்பட்ட கூட்டமல்ல. இலட்சிய தாகத்தோடு திரண்டு வந்த கூட்டம் என்று சொன்னபோது கைத்தட்டல் இடியென ஒலித்தது.

நாங்கள் அரசியல் கட்சியல்ல; எங்கள் சிந்தனைக்குத் தோன்றியதைச் சொல்லக் கூடியவர்கள்.

இப்பொழுது நம்முன் உள்ள பெரிய ஆபத்து -_ ஆபத்து என்பதைக்கூடப் புரிந்து கொள்ள முடியாத _ இயலாத ஆபத்து.

சாக்ரடீசுக்கு அன்று கொடுத்த நஞ்சு, அது என்னவென்று தெரியும். ஆனால் இப்பொழுது  கொடுக்கப்படுவதோ ஸ்லோ பாய்சன் முறை! ஒரு கட்டத்துக்குப் பிறகுதான் அதன் ஆபத்து புரியும். இதனைப் புரிந்து கொள்ள ஆய்வுதேவை.

மோடி வந்தால் இப்பொழுதுள்ள சிஸ்டத்தை மாற்றி அமைப்பார் என்கின்றனர். மீண்டும் மனுதர்ம முறைக்கு நாடு மாறக்கூடிய ஆபத்து இருக்கிறது. (குஜராத்தில் மனுதர்மம் பாடத்திட்டமாக இடம்பிடித்து விட்டதே) என்று கூறியவர் ராஜஸ்தானில் நடைபெற்ற ஒரு நிகழ்வை நினைவூட்டினார். குழந்தைத் திருமணத் தடுப்புப் பணியில் ஈடுபட்ட ஒரு பெண்ணை, பார்ப்பனர் ஒருவர் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தினார்.

வழக்கின் தீர்ப்பு என்ன தெரியுமா? ஒரு கீழ்ஜாதிப் பெண்ணை உயர்ஜாதி பிராமணர் எப்படிக் கற்பழித்திருக்க முடியும் என்று வழக்கைத் தள்ளுபடி செய்தனரே! அந்த நிலை இங்கு வர வேண்டுமா? என்பதுதான் நமது கேள்வி.

குஜராத் வளர்ச்சி பற்றிச் சொல்கிறார்களே, அதுபற்றி இணையதளத்தில் வெளிவந்த ஒரு தகவல் என்ன தெரியுமா? கடந்த 16 ஆண்டுகளில் குஜராத்தில் 60 ஆயிரம் சிறுதொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன என்கிற அந்தத் தகவலை வெளியிட்டார்.

மதவாதத்தைப் போலவே ஜாதீயவாதமும் ஆபத்தான ஒன்று.

தந்தை பெரியார், அன்று ஆதிக்கவாதிகளான பார்ப்பனர்களைத் தனிமைப்படுத்தி, பார்ப்பனர் அல்லாதார் இயக்கத்தைத் தொடங்கினார்.

இப்பொழுது சிலரோ பார்ப்பனர்களைச் சேர்த்துக் கொண்டு ஆண்டாண்டுக் காலமாக ஒடுக்கப்பட்ட மக்களைத் தனிமைப்படுத்த  ஜாதிக் கட்சிகளை ஒருங்கிணைத்து அரசியல் கூட்டம் ஒன்றை உருவாக்குகிறார்கள்.

தாழ்த்தப்பட்டோர் வாழும் வீடுகளைக் கொளுத்துகிறார்கள், தருமபுரி மாவட்டத்தில் அதுதானே நடந்தது.

யார் அதிக அளவு ஒடுக்கப்பட்டார்களோ, உரிமைகள் மறுக்கப்பட்டார்களோ, அவர்களைத் தூக்கிவிடுவதுதான் முதல் கடமை.

தாழ்த்தப்பட்டவர்களும், பிற்படுத்தப்பட்டவர்களும், இரு காரணிகளாக இருந்து ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருந்து உரிமைகளை ஈட்ட வேண்டிய கடமை அவர்களுக்கு இருக்கிறது. அந்தக் கண்ணோட்டத்தில்தான் திராவிடர் கழகம் பாடுபட்டுக் கொண்டிருக்கிறது.

அதில், சிறுத்தைகளும் இணைந்து பாடுபடும். சிறுத்தைகளில் கருஞ்சிறுத்தை, வெள்ளைச் சிறுத்தை என்று பாகுபாடு கிடையாது. சிறுத்தை என்றால் சிறுத்தைதான் என்று தமிழர் தலைவர் குறிப்பிட்ட போது, பெரும் ஆரவாரத்துடன்  மக்கள் கடலிலிருந்து கையொலி எழுந்தது.

மத உணர்வுகளைவிட மனித நேயமே முக்கியம் என்பதை எடுத்துக் காட்டும் மண்ணாக தமிழகத்தை பெரியார் அவர்கள் பக்குவப்படுத்தி வைத்துள்ளார்கள். அந்த அமைதிப் பூங்காவில் இந்துத்துவ நச்சுக் காற்றைப் பரவவிடும் தீச்செயலை திருச்சியில் மோ(ச)டிப் பேர்வழிகள் செய்துவிட்டுச் சென்றதற்கு தக்க பதிலடியாக திராவிடர் எழுச்சி மாநாடு அமைந்திருந்தது.

அன்று காலை ரோஸ் மஹாலில் தி.க.செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு தலைமையில் நடந்த கருத்தரங்கில் பேராசிரியர் சபாபதி மோகன், முனைவர் துரை.சந்திரசேகரன், பேராசிரியர் அ.மார்க்ஸ், கவிஞர். நந்தலாலா ஆகியோர் கருத்துமழை பொழிந்தனர்.

திராவிடர் கழகப் பொருளாளர் வழக்குரைஞர் கோ.சாமிதுரை அவர்கள் நினைவு அரங்கு திருச்சி உழவர் சந்தையில் அழகு மலர் குலுங்கினாற் போல அமைக்கப்பட்ட மாநாட்டு மேடையில்  நாட்டுப்புறக் கலைநிகழ்ச்சியுடன் தொடங்கப்பட்டது. கழகப் பொருளாளர் கோ.சாமிதுரை அவர்களின் படத்தினை கழகத் தலைவர் திறந்து வைத்தார். திருச்சி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் எம்.சேகர் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.

கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அறிமுகவுரை ஆற்றினார்.

அவர் தமது உரையில், 2003இல் இதே இடத்தில் வி.எச்.பி. மாநாடு நடைபெற்றதையும், அப்பொழுது தங்கத்தினாலான திரிசூலத்தை காஞ்சி சங்கராச்சாரியார், வி.எச்.பி. தலைவர் அசோக் சிங்கால், பொதுச் செயலாளர் பிரவீன் தொகாடியாவுக்கு வழங்கியதையும் நினைவூட்டி, அப்பொழுதும் உடனடியாக திராவிடர் கழக மாநில மாணவர் மாநாட்டினை, மிகப் பெரிய பேரணியுடன் நடத்திக் காட்டியதையும் நினைவூட்டினார். டாக்டர் அதிரடி அன்பழகன் இணைப்புரையைச் சிறப்பாக வழங்கினார்.

காமன்வெல்த் புறக்கணிப்பு!

பாபர் மசூதி குற்றவாளிகளுக்குத் தண்டனை

மதவாத எதிர்ப்பு அணி

திராவிடர் எழுச்சி மாநாட்டின் தீர்மானங்கள்:

> மக்களாட்சியான ஜனநாயகத்தைக் கேலிக் கூத்தாக்கும் வகையில் நாட்டு மக்கள் மத்தியில் மதவாதத்தையும், ஜாதீயவாதத்தையும் தூண்டி அரசியல் ஆதாயம் தேட முயலும் சக்திகளுக்கு இம்மாநாடு தனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. இலட்சியங்களும், சித்தாந்தங்களும், முற்போக்குச் சிந்தனைகளும் கைவரப் பெறாதவர்கள், வெறும் ஜாதியை முன்னிறுத்தி குறுக்குவழியில் பதவி தேடிட, தேர்தல் ஆதாயம் பெற ஆசைப்படுவது – சமூகப் பொறுப்பற்ற பிற்போக்குத்தனமானது என்பதை இம்மாநாடு சுட்டிக் காட்டுகிறது.

அதுவும் ஆண்டாண்டுக்காலமாக வருணாசிரம தர்மத்தின் நுகத்தடியில் எல்லா வகையிலும் உரிமை மறுக்கப்பட்ட, இழிவுபடுத்தப்பட்ட, தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களைத் தனிமைப்படுத்தி, பிறப்பின் அடிப்படையில் உயர்வான தன்மையை வரித்துக்கொண்டு, எல்லா வகையிலும் ஆதிக்கம் செலுத்தக்கூடிய பார்ப்பனர்களையும் உள்ளடக்கி, ஜாதிக் கூட்டணியை உருவாக்குவது -தந்தை பெரியார் கொள்கைக்கும் அவர்தம் உழைப்பால் ஏற்பட்ட விளைவுகளுக்கும், சமூக நீதிக்கும், சமத்துவ நிலைக்கும் முற்போக்குச் சிந்தனைகளுக்கும் எதிரான ஒரு நிலை என்பதை இம்மாநாடு தெரிவித்துக் கொள்கிறது.

ஜாதீய சிந்தனைகள் வளர வளர தமிழன் என்ற இனவுணர்வு குன்றி, அதன் காரணமாக பல இழப்புகளையும் சந்திக்க வேண்டிய ஆபத்தையும் எண்ணி, தமிழர்கள் ஒட்டுமொத்தமாக எழுந்து நின்று, ஒரே குரலில் ஜாதீயக் கட்சிகளுக்கும், கூட்டணிக்கும், அத்தகு சிந்தனைக்கும் தமிழ்நாட்டில் இடமில்லை – இல்லவே இல்லை என்று சூளுரைத்து நிராகரித்துத் தள்ளுமாறு தமிழ்நாட்டுப் பெருமக்களை மிகுந்த பொறுப்புணர்ச்சியுடன் இந்தத் திராவிடர் எழுச்சி மாநாடு கேட்டுக் கொள்கிறது.

> இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள மதச்சார்பின்மைக்கு விரோதமாக, இந்து நேஷனலிஸ்டு என்று தம்மைத் தாமே அறிமுகப்படுத்திக் கொள்ளும் ஒருவரை, அடுத்து நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பிரதமருக்கான வேட்பாளர் என்று பி.ஜே.பி. அறிவித்திருப்பது சட்ட ரீதியாக குற்றம் மட்டுமன்றி, இந்தியாவின் எதிர்காலத்தை மத அடிப்படையில் கலவர பூமியாக மாற்றும் அபாயகரமான போக்காகும்.

1992இல் ராம ஜென்ம பூமி என்ற பெயரால் 450 ஆண்டுகால சிறுபான்மை மக்களின் வழிபாட்டுத் தலமான பாபர் மசூதியை அயோத்தியில் இடித்ததால், நாடு தழுவிய அளவில் கலவரம் நடந்ததை நாட்டு மக்கள் மறந்திருக்கவே முடியாது.

அதனைத் தொடர்ந்து 2002இல் குஜராத்தில் கோத்ரா ரயில் நிலையத்தில் ஏற்பட்ட விரும்பத்தகாத ஒரு நிலைமையை மய்யப்படுத்தி, அம்மாநில முதல் அமைச்சராக இருந்த நரேந்திர மோடியே முன்னின்று, சிறுபான்மை மக்களுக்கு எதிராக பெரும் அளவில் மதக் கலவரத்தைத் தூண்டி, இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட சிறுபான்மை மக்கள் கொல்லப்பட்டதும், அவர்களின் வீடுகள், வணிக நிறுவனங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டதும், அதன் காரணமாக உலக நாடுகள் மத்தியில் இந்தியாவைத் தலைகுனியச் செய்த கொடுமையும் சாதாரணமான ஒன்றல்ல.

அதற்குப் பிறகும் நாடு தழுவிய அளவில் ஆங்காங்கே மதக் கலவரங்கள் உருவாக்கும் வேலையைத் திட்டமிட்டுச் செய்து வருவதை இந்தியாவின் உள்துறை அமைச்சர்கள் அதிகாரப்பூர்வமாகவே வெளிப்படுத்திவிட்டனர்.

இந்தியாவின் மதச் சார்பின்மையைக் காவி உடைகளின் காலில் போட்டு மிதிக்கும் அந்த இந்துத்துவா தீய சக்திகள் 2014இல் நடக்க இருக்கும் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று, இந்தியாவையே மீண்டும் மனுதர்ம ஆட்சியின் கீழ்க் கொண்டுவரத் துடியாய்த் துடித்துக் கொண்டுள்ளன.

மாநிலங்களே இருக்கக் கூடாது என்பதன் மூலம் இனம், மொழி, பண்பாட்டுத் தலங்களை முற்றிலும் அழித்திட எண்ணுவது; ஹிந்து ராஷ்டிரா என்பதன் மூலம் பிறப்பின் அடிப்படையில் ஜாதிக் கட்டமைப்பை நிலைநிறுத்துவது; குலக்கல்வித் திட்டத்தை அரங்கேற்றுவது; பெண்ணடிமைத்தனத்தைப் பாதுகாப்பது; ஒரே மதம் -அது இந்து மதம், ஒரே நாடு – அது பாரதம் (மாநிலங்கள் கிடையாது). ஒரே மொழி -அது சமஸ்கிருதம் என்கிற கோட்பாட்டை சட்ட ரீதியாகச் செயல்படுத்துவது என்கிற ஆபத்துகளை உண்டாக்குவதுதான் பி.ஜே.பி. கூறும் ஹிந்து ராஷ்டிரம்!

மத்தியில்  பி.ஜே.பி. ஆட்சியிலிருந்தபோது ஓர் ஆண்டையே சமஸ்கிருத ஆண்டு என்று அறிவித்து கோடிக்கணக்கான ரூபாய்களை அதற்குச் செலவழித்ததையும், வேதகணிதம் என்பதை பல்கலைக்கழகங்களில் திணித்ததையும், சரஸ்வதி வந்தனத்தை அறிமுகப்படுத்தியதையும், பாடத் திட்டங்களில் ஹிந்துத்துவா சிந்தனைகளை விதைத்ததையும், கல்வியாளர்கள் மாநாட்டில் ஆர்.எஸ்.எஸ். நிபுணர் சிட்டியங்லா என்பவரால் தயாரிக்கப்பட்ட கல்வியை -இந்திய மயமாக்குதல், தேசிய மயமாக்குதல், ஆன்மீக மயமாக்குதல் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியதையும் நாடு மறந்துவிட முடியாது.

பெரும்பான்மை கிடைத்தால் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில், ராமர் கோவிலைக் கட்டுவோம் என்று அமெரிக்காவின் ஸ்டேட்டன் தீவில் நடைபெற்ற விசுவ ஹிந்து பரிஷத் மாநாட்டில் அன்றைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பேயி சொன்னதையும், அயோத்தியை அடுத்து காசி, மதுரா உள்ளிட்ட நூற்றுக்கணக்கான முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலங்களை இடிப்பது குறித்து ஒரு பட்டியல் கைவசம் இருக்கிறது என்று கூறியுள்ளதையும் நினைவு கொண்டால், 2014 மக்களவைத் தேர்தலில் இந்த மதவாத சக்தியை எந்தக் காரணத்தைக் கொண்டும் தலைதூக்க அனுமதிக்கக் கூடாது என்பது எளிதில் விளங்கும்.

மதச்சார்பின்மை காப்பாற்றப்பட, சமூகநீதி உறுதிப்பட, சமத்துவ சமதர்மம் மலர, எல்லா வகையிலும் தத்துவ ரீதியிலும், சிந்தனை ரீதியிலும் எதிராக இருக்கும் பிஜேபியையும், அதற்குத் துணைபோகும் கூட்டணிக் கட்சிகளையும் வரும் மக்களவைத் தேர்தலில் உறுதியாக, ஒருமுகமாக எழுந்து நின்று தோற்கடித்தே தீருவது என்று திராவிடர் எழுச்சி மாநாடு தீர்மானிக்கிறது.

> மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக் கூடிய சுஷ்மா சுவராஜ் நாடாளுமன்றத்திலேயே பாபர் மசூதியை நாங்கள்தான் இடித்தோம் -சந்திக்கத் தயார் என்று (8.12.2009) சொன்னார். இதற்குப் பிறகும் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை. இதன் காரணமாக மக்களுக்குச் சட்டத்தின் மீதும், நீதிமன்றங்கள் மீதும் நம்பிக்கை குறைவதோடு, வன்முறைகள் சர்வசாதாரணமாகத் தலைதூக்கவும் தூண்டுகின்றன. பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனையைப் பெற்றுத் தர விரைந்து செயல்படுமாறு மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

> நடக்க இருக்கும் மக்களவைத் தேர்தலில் யார் வரவேண்டும் என்பதைவிட, யார் வராமல் தடுக்கப்பட வேண்டும் என்று தீர்மானிப்பதே முக்கியமானதாகும். அந்த வகையில் ஹிந்து ராஷ்டிரத்தை அமைக்கவிருப்பதாகக் கூறும் பி.ஜே.பி. மற்றும் அதன் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளை எதிர்க்கும் வகையில், மதச் சார்பின்மைக் கொள்கையில் நம்பிக்கையுள்ள அமைப்புகளை ஒன்றிணைத்து, மதவாதத்தை வீழ்த்தும் வகையில் காலம் தாழ்த்தாது செய்யப்பட வேண்டிய அந்தக் கடமையைச் செய்வது என்று இம்மாநாடு தீர்மானிக்கிறது. அதற்கான முயற்சியை திராவிடர் கழகம் மேற்கொள்ளும் என்றும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

> இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 17ஆவது பிரிவில் தீண்டாமை ஒழிக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது. தீண்டாமை என்பது ஜாதியின் விளைவு என்கிற காரணத்தால் தீண்டாமை ஒழிக்கப்படுகிறது என்பதற்குப் பதிலாக ஜாதி ஒழிக்கப்படுகிறது என்று இந்திய அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று இம்மாநாடு, மத்திய அரசை வலியுறுத்துகிறது.

அரசு அலுவலகங்களில் பூஜைகள், நடைபாதைக் கோவில்கள் நீக்கம், ஜாதி மறுப்பு மற்றும் மத மறுப்புத் திருமணங்கள், காதல் திருமணங்களை ஊக்குவித்தல், இந்திய அரசு – இலங்கை காமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிக்க வேண்டும், மக்கள் நல ஊழியர்களைப் பணியில் அமர்த்தல், ஆசிரியர் தகுதித் தேர்வில் சமூகநீதிப் பாதிப்பு, திருச்சி – பன்னாட்டு விமான நிலையத்திற்கு தந்தை பெரியார் பெயர் சூட்டுதல் -ஆகிய தீர்மானங்கள் இயற்றப்பட்டன.

திராவிடர் எழுச்சி மாநாட்டில் மகிழினி  மணிமாறனின் புத்தர் கலைக்குழுவினரின் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சி சிறப்பு அம்சமாக அமைந்திருந்தது. 9.11.2013 சனி அன்று மாலை 5.30 மணியிலிருந்து இரவு 7 மணிவரை தூள் கிளப்பியது.

திருச்சி பெரியார் நூற்றாண்டுக் கல்வி வளாகத்தில் நவம்பர் 7, 8, 9 ஆகிய மூன்று நாள்களிலும், பறை இசைப் பயிற்சி புத்தர் கலைக் குழுவினரால் பயிற்சி அளிக்கப்பட்டது. கல்வி வளாகப் பிள்ளைகள் 46 பேர் பங்கேற்றனர்.

வெளியூர்களிலிருந்து பயிற்சிக்கு வந்தவர்கள் மூவர். புத்தர் கலைக் குழுவின் சார்பில் பங்கேற்பு 17 பேர். பெண்கள் சமமான எண்ணிக்கையில் இருந்தனர்.

மிகப்பெரிய மேடை முழுவதும் ஆக்கிரமித்து சின்னஞ் சிறுவர்களும் பறையடித்த காட்சி கண்கொள்ளாக் காட்சி!

குழந்தைகள் 7 அடிகளில் பறை இசைத்தனர். கால்கள் மாறி மாறி பத்து விதமான நடனம் ஆடினர்.

பறையடித்தல், ஆடுதல், கருத்துப் பகிர்தல், பாடுதல் என நால்வகை அம்சங்களில் கலை நிகழ்ச்சிகளை நடத்திக் காட்டி பல்லாயிரக்கணக்கான மக்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டனர்.

நீலகிரி மாவட்டம் -குன்னூர் லிங்கப்பன் _- மலர்க்கொடி ஆகியோரின் மகன் வெங்கடேஷ் பி.சி.ஏ., சென்னை மண்ணிவாக்கம் இரா. பத்மாசூரன் _ -சிவபாக்கியம் ஆகியோரின் மகள் ப. அருணா எம்.எஸ்சி ஆகியோருக்கு மாநாட்டு மேடையில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் பலத்த கரவொலிக்கிடையே மணவிழாவினை நடத்தி வைத்தார்.

மணமகன், மணமகள் ஆகியோர் மணமுறிவு பெற்றவர்கள் மட்டுமின்றி மணமகளுக்கு மூன்று வயதில் பெண் குழந்தையும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒரு ஜாதி மறுப்புத் திருமணம், தாலி விலக்கப்பட்ட திருமணம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்தத் திருமணத்தில் வழக்கம்போல உறுதிமொழிகளைக் கூறச் செய்த கழகத் தலைவர் அவர்கள், மணமகனுக்குக் கூடுதலான சில உறுதி மொழிச் சொற்களையும் சேர்த்துக் கூறச் செய்தார்.

எந்த நிலையிலும் பழைய வாழ்க்கை நினைவுகளைக் சுட்டிக்காட்டுவதில்லை என்றும்; இந்தக் குழந்தையை, தன் சொந்தக் குழந்தையைப் போலப் பாவிப்பேன் என்றும் கூறச் செய்தார். இத்தகைய உறுதிமொழிகளைக் கூறச் சொன்னபோது வெள்ளம்போல் திரண்டிருந்த மக்கள் திரள் பெருத்த கரஒலி எழுப்பியது.

– நமது சிறப்புச் செய்தியாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *