சட்டத்தை மதிக்கும் நீதிபதி
இது மதச்சார்பற்ற நீதிமன்றம். இங்கு இந்துமதப் பண்டிகையான ஆயுதபூஜைக்கான செலவை யார் ஏற்பது? நீதிமன்றச் செலவுகளுக்கு அரசு கொடுக்கும் பணத்தில் பூஜை நடத்துவது சட்ட விரோதம். ஊழியர்கள் தங்கள் சொந்தச் செலவில் கொண்டாடினால் அதனால் ஏற்படும் செலவினங்களை அவர்கள் எப்படி ஈடுகட்டுவார்கள். அது தவறு செய்ய அவர்களைத் தூண்டிவிடும் செயலாக மாறிவிடும். எனவே, இந்த பூஜைக் கொண்டாட்டங்கள் எல்லாம் நான் நீதிபதியாக இருக்கும் நீதிமன்றத்தில் நடத்தக் கூடாது. இப்படிச் சொல்லி இருப்பவர் ஒரு நீதிபதி. தமிழ்நாட்டில் உள்ளவர் அல்ல; கர்நாடக மாநிலத்தில் இருப்பவர். அவர் பெயர் முடிகவுடா. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்து வருபவர் இவர்தான். இந்தியாவின் அரசியல் சட்டம் மதச்சார்பற்ற நாடு என்கிறது. ஆனால், இங்கே அரசு இயந்திரங்கள் எல்லாம் இந்து மதச் சாயம் பூசிக்கொள்கின்றன. கொஞ்சமும் கூச்சமில்லாமல் தமது சொந்த மத நம்பிக்கையை எல்லோருக்கும் பொதுவான அரசின் மீது திணிக்கிறார்கள்.
அரசு ஆணைகள் எல்லாம் அவமதிக்கப்படுகின்றன. அரசை வழிநடத்தும் ஆட்சியாளர்கள் வாழ்த்து சொல்கிறார்கள்; அதிகாரிகள் அலுவலகங்களில் பூஜை போடுகிறார்கள். நீதிபதிகளே தங்களின் அலுவலகத்தில் மதக் கடவுள் படங்களை வைத்துக் கொள்கிறார்கள். மத விழாக்களுக்குச் செல்கிறார்கள்; மதவாதிகளுக்கு அடி பணிகிறார்கள். இத்தகைய நேர்மையில்லாத சூழலில் நீதியரசர் முடிகவுடாவின் நேர்மைக்கு ஒரு வணக்கம் சொல்வோம்; முடிகவுடா அவர்களுக்கு மதச்சார்பற்ற மனிதநேயர் என்ற மகுடம் சூட்டுவோம்.