– கர்நாடகத்தில் ஓர் மாற்றம்!
கோவில் கருவறைக்குள் பெண்கள் நுழையவே அனுமதியில்லாத நம் நாட்டில் விதவைப் பெண்களான இந்திரா சாந்தி, லட்சுமி சாந்தி என இருவர் அர்ச்சகராகியுள்ளனர்.
மங்களூர் குத்ரோலியில் இருக்கும் கோகர்னாதேஸ்வரர் கோவிலில் இரண்டு விதவைப் பெண்கள் தினமும் சிவனுக்கு அர்ச்சனை செய்து வருகின்றனர். கோவிலுக்குள் வந்ததும் பாரம்பரிய முறைப்படி மேளதாள வரவேற்பு அர்ச்சகர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த மாற்றத்திற்கான பெருமை மேனாள் மத்திய நிதி அமைச்சரும், தற்போது கோவிலின் ஆலோசனைக் குழுத் தலைவருமான ஜனார்த்தன பூஜாரியைச் சாரும்.
கோவிலுக்குப் பக்கத்து ஊரான பன்னூர் கிராமத்திலிருந்து வரும் இந்திராசாந்தி திருமணமான சிறிது காலத்திலேயே கணவனை இழந்து சமுதாயக் கொடுமைகளுக்கு ஆளானவர். இவரை அழைத்த கோவில் நிர்வாகம், கோவிலில் பூஜை செய்ய வேண்டும் என்று சொன்னபோது பயந்தவர், பின்பு, சமூகத்தில் விதவைப் பெண்கள் மீதான மூடநம்பிக்கையை ஒழிக்க வேண்டும் என்பதற்காக ஒத்துக் கொண்டதாகக் கூறியுள்ளார். மேலும், தான் செய்யும் பூஜையை ஏற்றுக்கொண்ட பக்தர்கள், தன்னிடம் தீர்த்தம், பூ, பிரசாதம் வாங்கிச் செல்வது மகிழ்ச்சியாக உள்ளது என்று பூரித்துள்ளார்.
இது குறித்து ஜனார்த்தன பூஜாரி,
எந்த ஜாதியைச் சேர்ந்த பெண்களாக இருந்தாலும், எந்த மதத்தைச் சார்ந்த பெண்களாக இருந்தாலும் ஒரு நாள் பயிற்சி எடுத்துக்கொண்டு இந்தக் கோயில் கருவறைக்குள் சென்று பூஜை செய்யலாம். விதவைப் பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். கோவில் நிர்வாகத்தின் சார்பாக விதவைகளுக்கு மறுமணமும் இலவசமாக செய்து வைக்கிறோம். இதை யாரும் எதிர்க்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. காரணம், அவர்களும் ஒரு பெண்ணின் வயிற்றில்தான் பிறந்திருப்பார்கள் என்று கூறியுள்ளார். மேலும், மாறிவரும் காலத்திற்கேற்ப நாமும் மாற்றத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். பெண்களை பூமா தேவியாக மதிக்கும் நம் நாட்டில், அவர்கள் கணவனை இழந்துவிட்டால் எந்த நல்ல காரியத்திலும் பங்கு கொள்ள அழைக்காமல் புறக்கணிப்பது மூடநம்பிக்கையின் அடையாளம். இந்த வழக்கம் நாட்டிலிருந்து ஒழிய வேண்டும் என்றும் கூறியுள்ளார் பூஜாரி.
விதவைப் பெண்கள் அர்ச்சகர் நியமனத்தை கர்நாடகாவிலுள்ள பல பெண்கள் அமைப்பினர் வரவேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.