பதிலடி – மத அழைப்பாளரா பெரியார்? – கி.தளபதிராஜ்

நவம்பர் 01-15

மானுட சமூகத்தை மானமும் அறிவும் உள்ள சமுதாயமாக மாற்றுவதே தன் வாழ்நாள் பணியாய்க் கொண்டு, கடவுள் மத ஜாதித் தடைகளைத் தகர்த்தெறிந்து சமத்துவ சமுதாயம் படைக்க, தள்ளாத வயதிலும் மூத்திரச்சட்டியைச் சுமந்தபடி சுற்றிச்சுற்றித் தொண்டாற்றிய ஒப்பாரும் மிக்காரும் இல்லாத மாபெரும் உலகத் தலைவர் பெரியார்!

 

மானுடப்பற்றைத் தவிர வேறு எதன்மீதும் எனக்குப் பற்று இல்லை என பறை சாற்றியவர்! சமூக நீதிக்குரல் எழுப்பி 1925ஆம் ஆண்டு காங்கிரசை விட்டு வெளியேறி சுயமரியாதை இயக்கம் கண்ட பெரியார், சாகும் தருவாயிலும் தான் கொண்ட கொள்கையில் சாயாத சிங்கமாய் சிலிர்த்து நின்றார்!

காங்கிரசை ஒழிப்பதே முதல்வேலை என்று சூளுரைத்து வெளியேறிய பெரியார்தான் பச்சைத்தமிழர் காமராசரை ஆதரித்தார். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் இரட்சகர் காமராசர் என்றார். அவரது ஆட்சியில்தான் ஆயிரக்கணக்கான பள்ளிகள் திறக்கப்பட்டன. ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் வேர்களில் கல்வி நீரோடை பாய்ந்தது. அரசுப் பணிகளில் அடக்கப்பட்ட சமூகம் அடியெடுத்து வைத்தது. காமராசரை வலுப்படுத்துங்கள்! என்று முழங்கினார் பெரியார். காரணம் பெரியார்! காரியம் காமராசர்! என்று ஏடுகள் எழுதின.

மனித வளர்ச்சிக்குப் பயன்படாத மதக்குப்பைகளை மண்ணோடு மண்ணாக புதைக்கச் சொன்னவர் பெரியார். அதே பெரியார்தான் சூத்திரப்பட்டம் ஒழிய வேண்டி புத்த மதத்திற்கும், இஸ்லாத்திற்கும் செல்லுங்கள் என்று அறிவுறுத்துகிறார்! ஆனால் புத்த மதத்தைத் தழுவ முடிவெடுத்து அம்பேத்கர் அழைப்பு விடுத்தபோது பெரியார் அதை மறுக்கிறார். இஸ்லாத்துக்கோ, புத்த மதத்திற்கோ செல்வதைக்கூட சூத்திரப்பட்டம் ஒழிய ஒரு தற்காலிக ஏற்பாடாகவே கருதினார் பெரியார். கேவலம் வயிற்றுச் சோற்றுக்காக 100க்கு 90 சதவீத மக்கள் இழிவான குற்றமான காரியம் என்று சொல்லப்படுவதையெல்லாம் செய்கிறார்கள். அப்படி இருக்க இசுலாத்துக்குச் செல்வதில் என்ன இழிவோ குற்றமோ இருக்கிறது? உலகில் மதங்கள் ஒழிக்கப்படும்போது இஸ்லாம் மதமும் ஒழிந்து போகும்!  என ஓங்கி ஒலிக்கிறார்.

பெரியாரின் சொல்லிலும் செயலிலும் நேர்மை இருந்தது. தாம் கொண்ட கொள்கையில் கடைசிவரை உறுதியாய் இருந்தார். தமிழ்ச் சமுதாயம் அவர்மீது நம்பிக்கை வைத்தது. பெரியாரை வளைக்கவோ, திரிக்கவோ முயற்சிப்பவர்கள் என்றும் அம்பலப்பட்டுப்போவார்கள் என்பதை வரலாறு அவ்வப்போது உணர்த்திக் கொண்டேயிருக்கிறது.

திரு.சேஷாச்சலம் அவர்கள், சிலநாட்கள் பூங்குன்றனாக பவனிவந்து, பின் பெரியாரின் கொள்கைகள் தன்னை ஆட்கொண்டதாகச் சொல்லி பெரியார்தாசன் என பெயர் மாற்றி அதன் பின்னர் புத்தமதம் தன்னை ஈர்த்ததாகக் கூறி அதற்குத்தாவி உடன் சித்தார்த்தன் என பெயர் மாற்றி இறுதியில் இஸ்லாமே இனிய மார்க்கம் என்று கருதி அப்துல்லாஹ் வாக வேடமேற்று அண்மையில் மைத்தானவர்.  தன் நா வன்மையால் தமிழ்நாட்டு மேடைகளில் வலம்வந்தவர். அவர் எழுதிய இஸ்லாத்தை பெரியார் ஏற்றாரா? எதிர்த்தாரா? எனும் நூலை இஸ்லாமிய அழைப்பு மற்றும் ஆய்வு மையம் அண்மையில் வெளியிட்டிருக்கிறது. அப்துல்லாஹ் என்ற பெயரிலேயே இந்த நூல் எழுதப்பட்டுள்ளதால் இனி அப்துல்லாஹ் என்றே குறிப்பிடுவோம்.

நபிகள் நாயகம் விழா போன்ற இஸ்லாமிய விழாக்களில் பெரியார் பேசிய ஒன்றிரண்டு பேச்சுக்களை எடுத்து, அதையும் முழுமையாக வெளியிடாமல், சிற்சில வரிகளை மட்டும் பொறுக்கி பக்கத்திற்குப் பக்கம் மேற்கோள் காட்டி தன் கருத்துக்கு வலுசேர்க்க முயற்சித்திருக்கிறார் அப்துல்லாஹ்!.

1923 லிருந்து 1973 வரை, பெரியார் இஸ்லாத்தைப் பற்றி பேசி வந்திருக்கிறார் என்று குறிப்பிடும் அப்துல்லாஹ்க்கு 50 ஆண்டுகளில் காணக் கிடைத்தது இரண்டு மூன்று கட்டுரைகளே என்பதும், அதிலும் முன்னுக்குப் பின் வெட்டப்பட்ட சில வரிகளே என்று நினைக்கும்போது வருத்தமாகத்தான் இருக்கிறது. பெரும்பாலும் எனது கருத்துகளை மட்டுமே பேசிவந்த நான் இந்த விசயத்தில் எனது கருத்துகளைக் கூறாமல் பெரியாரின் கருத்துகளையே கூற விரும்புகிறேன் என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த நூலுக்கான மறுப்பை நாமும் எமது சொந்தக் கருத்தாக எதையும் வைக்கப்போவதில்லை; பெரியாரின் மத ஒழிப்புக் கொள்கையைக் கொச்சைப்படுத்த முயல்வோரைத் தோலுரிக்க, அவர் வழியிலேயே, அவர் எடுத்துக் கொண்ட, பெரியார் கட்டுரைகளின் மறைக்கப்பட்ட பகுதிகளோடு, மேலும் சில பேச்சுகளையும், கட்டுரைகளையும் எடுத்துக்காட்டியிருக்கிறோம். பெரியார் இஸ்லாத்தின் அழைப்பாளராகவே (Representative) இருந்தார் என்று எழுதுகிறார் அப்துல்லாஹ்! பெரியாரோ, 1927லேயே நான் எந்த மதத்துக்காரனுக்கும் ஏஜென்டு அல்ல என்று எச்சரித்திருக்கிறார்! நான் எந்த மதக்காரனுக்கும் ஏஜென்டு அல்ல; அல்லது எந்த மதத்துக்காரனுக்காவது நான் அடிமையுமல்ல; அன்பு, அறிவு என்கிற இரண்டு தத்துவங்களுக்கு மாத்திரம் ஆட்பட்டவன்.   மதம் என்பது நாட்டிற்கோ ஒரு சமூகத்திற்கோ ஒரு தனி மனிதனுக்கோ எதற்காக இருக்க வேண்டியது? ஒரு தேசத்தையோ, சமூகத்தையோ கட்டுப்படுத்தி ஒற்றுமைப் படுத்துவதற்காகவா? பிரித்து வைப்பதற்காகவா? அது ஒரு மனிதனின் மனசாட்சிக்குக் கட்டுப்பட்டதா? அல்லது ஒரு மனிதனின் மனசாட்சியைக் கட்டுப்படுத்தக் கூடியதா? மனிதனுக்காக மதமா? மதத்துக்காக மனிதனா? என்பவைகளை தயவுசெய்து யோசித்துப் பாருங்கள். – குடிஅரசு 11.9.1927

நமது நிலைக்குக் காரணம் என்ன? நமது தரித்திரத்திற்கு யார் காரணம்? நமது செல்வமும் பாடும் என்ன ஆகின்றன? என்கின்ற அறிவு நமக்கு இல்லாமல் இருக்கிற முட்டாள்தனமே நமது இன்றைய இழிவு நிலைக்குக் காரணம்.

மதத்தையாவது, ஜாதியையாவது, கடவுளையாவது உண்மை என்று நம்பி அவைகளைக் காப்பாற்ற முயற்சிக்கும் எவனாலும் மக்களுக்குச் சமத்துவமும், அறிவும், தொழிலும், செல்வமும் ஒருக்காலும் ஏற்படவே ஏற்படாது. – குடிஅரசு 14.9.1930

மதத்தையோ கடவுளையோ உண்மை என்று நம்பி காப்பாற்ற முயற்சிப்பவர்களால், மக்களுக்கு எதுவும் செய்ய முடியாது என்று சொல்லும் பெரியாரை ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு அழைப்பாளராக அடையாளப்படுத்தும் அப்துல்லாஹ், பெரியார் இறைவனைப் பற்றியும் தொடர்ந்து பேசியிருப்பதாக கூறுகிறார். அப்படி அவர் இறைவனைப் பற்றிப் பேசியிருப்பாரேயானால் அந்த வரிகளை எடுத்துக்காட்டியிருக்க வேண்டியதுதானே? இறைவனைப் பற்றி பெரியார் பேசியிருக்கிறார். எப்படித் தெரியுமா? கடவுள் இல்லை!  இல்லவே இல்லை! என்று பேசியிருக்கிறார். பெரியார் இஸ்லாத்தைப்பற்றி பேசியிருக்கிறார். இஸ்லாத்தில் சகோதரத்துவம் இருக்கிறது. சூத்திரப்பட்டம் ஒழிய தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களே இஸ்லாத்துக்குச் சென்று உங்கள் இழிவைப் போக்கிக் கொள்ளுங்கள் என்றார். அதேசமயம் அவர் இஸ்லாத்தின் மூடநம்பிக்கைகளைச் சுட்டிக்காட்டவும் தயங்கியதில்லை.

மனிதனின் அறிவிற்குப் பயப்படும் கடவுளும் மார்க்கமும் உலகத்தில் யாருக்கு என்ன பயனை அளிக்கக்கூடும்? அறிவையும், ஆராய்ச்சியையும் கண்டால் ஏன் பயந்து ஓடுகிறீர்கள்? அறிவிற்கும், ஆராய்ச்சிக்கும் பயந்த கடவுளையும், மதத்தையும் வைத்திருக்கிறவனை விட கடவுள், மதம் இவைகளைப் பற்றிக் கவலைப்படாதவனே, இல்லை என்று கருதிக்கொண்டிருப்பவனே வீரனென்று நான் சொல்லுவேன்.

சமாதை வணங்கவேண்டாம், பூசை செய்யவேண்டாம் என்றால் உங்கள் மார்க்கம் போய்விடுமா? அப்படியானால் இந்து மதத்திற்கும் இஸ்லாம் மதத்திற்கும் வித்தியாசமென்ன? இஸ்லாம் மார்க்கத்தில்தான் ஒரே ஒரு கடவுள் என்பதும், அதற்கு உருவமில்லை என்பதும், அதைத்தவிர மற்றதை வணங்கக்கூடாதென்றும் சொல்லப்படுகிறது. அது மாத்திரமில்லாமல் அல்லாசாமி பண்டிகையிலும் கூண்டு முதலிய பண்டிகைகளிலும், திருவிழாக்களிலும் இஸ்லாமியர் சிலர் நடந்துகொள்வது மிகவும் வெறுக்கத்தக்கது. இவைகளையெல்லாம் ஒரு மார்க்க கட்டளை என்று சொல்வதானால் அந்த மார்க்கம் ஒரு நாளும் அறிவு மார்க்கமாகவோ, உண்மையில் நன்மை பயக்கும் மார்க்கமாகவோ இருக்க முடியாது.

இன்று இந்துவும், கிறிஸ்தவனும் பகுத்தறிவைக் கண்டால் பயப்படுகிறார்கள். இஸ்லாம் மார்க்கத்தில்தான் தங்கள் மார்க்கம் பகுத்தறிவுக்கு ஏற்றது என்று பந்தயம் கட்டுகிறார்கள். ஆனால் சமாது வணக்கமும், கொடி வணக்கமும், கூண்டு உற்சவமும், அல்லாசாமி பண்டிகையும் கொண்ட மக்களை ஏராளமாய் வைத்துக்கொண்டு அவற்றையும் மார்க்கக் கொள்கையோடு சேர்த்துக் கொண்டிருக்கிறவர்களையும், சேர்த்து வைத்துக்கொண்டு இஸ்லாம் மார்க்கம் பகுத்தறிவு மார்க்கம் என்று எப்படிச் சொல்ல முடியும்? மற்ற மதங்களைவிட இசுலாம் மதம் மேலானது என்பது எனது அபிப்ராயம். ஆனால் அதில் இனிச் சிறிதுகூடச் சீர்திருத்தம் வேண்டியதில்லை என்பவர்களுடன் நான் முரண்பட்டவன். ஏனெனில் நான் கண்களில் பார்ப்பதைக் கொண்டுதான் சொல்லுகிறேன். இன்று இசுலாம் மதச் சடங்குகள் சீர்செய்யப்பட வேண்டியவை என்று துணிந்து கூறுவேன். – குடிஅரசு 1.2.1931

மற்ற மதங்களைவிட இசுலாம் மதம் மேலானது என்பது எனது அபிப்ராயம். ஆனால் அதில் இனிச் சிறிதுகூடச் சீர்திருத்தம் வேண்டியதில்லை என்பவர்களுடன் நான் முரண்பட்டவன் என்று கூறும் பெரியார் அவர்கள் ஒட்டுமொத்த மதத்தைப்பற்றிய தனது பொதுவான கருத்தாக, மனிதனின் அறிவிற்குப் பயப்படும் கடவுளும் மார்க்கமும் உலகத்தில் யாருக்கு என்ன பயனை அளிக்கக்கூடும்? அறிவையும், ஆராய்ச்சியையும் கண்டால் ஏன் பயந்து ஓடுகிறீர்கள்? அறிவிற்கும், ஆராய்ச்சிக்கும் பயந்த கடவுளையும், மதத்தையும் வைத்திருக்கிறவனைவிட கடவுள், மதம் இவைகளைப் பற்றிக் கவலைப்படாதவனே, இல்லை என்று கருதிக்கொண்டிருப்பவனே வீரனென்று நான் சொல்லுவேன் என்று அறிவிக்கிறார்.

காந்தியை ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற பெரியார், காந்தி இறந்தபோது இந்த நாட்டுக்கு காந்தி தேசம் என்று பெயரிட வேண்டும் என்றார். இப்படி பெரியார் முன்பு சொன்ன கருத்துகள் பலவற்றை பின்னால் மாற்றிக் கொண்டிருக்கிறார் என்று எழுதுகிறார் அப்துல்லாஹ்.

பெரியார் கொள்கையை மாற்றிக் கொண்டார் என்பது சரியா? காந்தியார் பார்ப்பனத் தலைவர்களோடு சேர்ந்து, சமூகநீதிக்கு எதிராகச் செயல்பட்டபோது காந்தியை ஒழித்துக்கட்டுவேன் என்ற பெரியார், அதே காந்தி இந்து மதத்திற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தபோது பார்ப்பன ஆர்.எஸ்.எஸ் கும்பலைச் சேர்ந்த நாதுராம் கோட்சேவால் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், பெரியார் இந்த நாட்டுக்கு காந்தி தேசம் என பெயர் சூட்ட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறார். பெரியாரை முழுமையாகப் புரிந்தவர்களுக்கு இதில் முரண்பாட்டுக்கே இடம் இல்லை என்பது புரியும்.

பெரியார் 1932இல் ரஷ்யா சென்று வந்தார். அவ்வருடம் தொடங்கி 1938 வரை முழுமையான நாத்திகப் பிரச்சாரம் செய்தார். அதற்கு முன்னும் பின்னும் சமயங்களைப்பற்றி அவர் கொண்டிருந்த கருத்துகளை நாம் அறிந்து கொள்ள வேண்டும் என்று சொல்கிறார் அப்துல்லாஹ்.

1953இல் பிள்ளையார் சிலை உடைப்புப் போராட்டம்! 1956இல் இராமர் படஎரிப்புப் போராட்டம்! 1967இல் திருவாரூர் மாவட்டம் விடயபுரத்தில்

கடவுள் இல்லை! கடவுள் இல்லை!
கடவுள் இல்லவே இல்லை!!
கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்!
கடவுளைப் பரப்புகிறவன் அயோக்கியன்!
கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி!

ஆத்மா, மோட்சம், நரகம், பிதிர்லோகம் ஆகியவைகளை கற்பித்தவன் அயோக்கியன், நம்புகிறவன் மடையன், இவற்றால் பலன் அனுபவிக்கிறவன்               மகாமகா அயோக்கியன்!!

என்கிற கருத்தாழமிக்க கடவுள் மறுப்பு வாசகத்தை அறிவித்து, அதைத் தன் சிலைகளுக்குக் கீழேயும் கொடிக்கம்பங்களிலும் கல்வெட்டுக்களாக பொறிக்கப்பட வேண்டும் என்கிற வேண்டுகோள்! இப்படி தன் வாழ்நாள் முழுதும் நாத்திகப் பிரச்சாரம் செய்த நாத்திகத் தலைவனை நா கூசாமல் பெரியார் 1932 முதல் 1938 வரையே முழுமையான நாத்திகப் பிரச்சாரம் செய்ததாக ஒரு பொய்யை அவிழ்த்து விட்டிருக்கிறார் அப்துல்லாஹ்.

ஆதிதிராவிடர்களை நான் ஏன் இஸ்லாம் மதத்தில் சேருங்கள் என்று கூறுகிறேன்? எனக்கேட்டு, அதற்கான பதிலையும் தருகிறார் பெரியார்!

ஆதிதிராவிடர்களை நான் இசுலாம் மதத்தில் சேருங்கள் என்று சொல்வதற்காக அநேகம்பேர் என்மீது கோபித்துக் கொண்டார்கள். அவர்களுக்குச் சொந்த அறிவும் இல்லை. சொல்வதைக் கிரகிக்கக்கூடிய சக்தியும் இல்லை.

மோட்சம் அடைவதற்காக என்று நான்  ஆதிதிராவிடர்களை இசுலாம் கொள்கைகளைத் தழுவுங்கள் என்று சொல்லவில்லை. அல்லது ஆத்மார்த்தத்திற்கோ, கடவுளை அடைவதற்கோ நான் அப்படிச் சொல்லவில்லை. ஆதிதிராவிடர்களின் தீண்டாமையைப் போக்குவதற்கு சட்டம் செய்வது, சத்தியாகிரகம் செய்வது போலவே இசுலாம் கொள்கையைத் தழுவுவது என்பது ஒரு வழி என்றே சொன்னேன். இனியும் சொல்வேன்.

கேவலம் வயிற்றுச் சோற்றுக்காக 100க்கு 90 மக்கள் என்னென்னவோ, அவர்களாலேயே இழிவான குற்றமான காரியம் என்று சொல்லப்படுவதையெல்லாம் செய்கின்றார்கள். அப்படி இருக்க இதில் என்ன இழிவோ குற்றமோ இருக்கிறது? உலகில் மதங்கள் ஒழிக்கப்படும்போது இசுலாம் மதமும் ஒழியும்.

நான் இசுலாம் மதக்கொள்கைகள் முழுவதையும் ஒப்புகொண்டதாகவோ, அவைகள் எல்லாம் சுயமரியாதைக் கொள்கைகள் என்பதாகவோ யாரும் தீர்மானித்து விடாதீர்கள். அதிலும் பல விரோதமான கொள்கைகளைப் பார்க்கிறேன். இந்து மதத்தில் எதைக் குருட்டு நம்பிக்கை, மூடப்பழக்கம், பாமரத்தன்மை என்கின்றோமோ அவை போன்ற நடவடிக்கைகளை இசுலாம் மதத்திலும் செய்கிறார்கள்.

சமாதி வணக்கம், பூசை, நெய்வேத்தியம் முதலியவைகள் இசுலாம் மதத்திலும் இருக்கின்றன. மாரியம்மன் கொண்டாட்டம் போல், இசுலாம் சமூகத்திலும் அல்லாசாமி பண்டிகை நடக்கிறது. மற்றும் நாகூர் முதலிய ஸ்தல விசேஷங்களும், சந்தனக்கூடு, தீமிதி முதலிய உற்சவங்களும் நடைபெறுகின்றன. இவை குர்ஆனில் இருக்கின்றதா? இல்லையா? என்பது கேள்வியல்ல. ஆனால் இவை ஒழிக்கப்பட்ட பின்புதான் எந்தச் சமூகமும் தங்களிடம் மூடநம்பிக்கை இல்லை என்று சொல்லிக்கொள்ள முடியும். – குடிஅரசு 2.8.1931.

தொடர்ச்சி அடுத்த இதழில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *