செவ்வாயுலக யாத்திரை
– புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்
நாங்கள் ஆறு நண்பர்களும் திட்டம் போட்டபடி எங்கள் ஆகாய விமானத்தை செவ்வாயுலகத்தை நோக்கி முடுக்கினோம். அது பறந்துபோய் குறித்த இடத்தை அடைந்தது.
மனிதர்கள் சிவப்பு நிறமுடையவர்கள்; நம்மினும் சிறிது உயரமுடையவர்கள். இந்த இரண்டு அம்சங்கள் தவிர செவ்வாயுலகத்தவர் எல்லா விஷயத்திலும் நம்மையொத்தவர்களே. ஆனால் அம்மனிதர்களனைவரும் எப்போதும் தங்கள் தலையின்மேல் ஒரு பெரிய கல்லைச் சுமந்தபடி இருந்தார்கள்.
எங்கள் விமானம் செவ்வாயுலகத்தில் ஒரு கிராமத்தின் வயற்புறத்தில் இறங்கிற்று. நாங்கள் முதலிற் பார்த்த ஓர் உழவன் தன் தலையில் ஒரு கல்லைச் சுமந்து கொண்டு நடந்தான். ஏதோ தூக்கிக் கொண்டு போகிறான் என்று நினைத்தோம். சிறிது தூரம் நடந்தான். உழுது கொண்டிருந்த சுமார் பத்துப் பேர்களும் தலையில் கற்சுமை உடையவர்களாய் இருந்தார்கள். அதையும் தாண்டினோம். ஓரிடத்தில் ஒரு விழா நடந்தது. மனிதர்களின் பெருங் கூட்டம். சிறு குழந்தைகள் முதல் கிழவர் ஈறாகவுள்ள அனைவரும் கல்லைச் சுமந்து கொண்டிருந்தார்கள். நாங்கள் சிரித்தால் அது குற்றமாக முடியுமோ என்று எங்கள் உள்ளம் நினைத்ததுண்டு. எனினும் அடக்க முடியாத சிரிப்புடன் நாங்களும் கட்டிப்புரண்டோம்.
எங்களில் ஒருவர் சாதாரண விஷயத்திற்கே அதிகமாய்ச் சிரிப்பவர். கல்சுமக்கும் மனிதர் கூட்டத்தைப் பார்த்தும் அவர் விழுந்து விழுந்து சிரித்தார். செவ்வாயுலகப் பெண்ணொருத்தி ஒரு கையில் தன் ஆண் குழந்தையைப் பிடித்தபடி மற்றொரு கையில் தலையில் பாறாங்கல்லைப் பிடித்தபடி நடந்தாள். குழந்தையின் தலையிலும் ஒரு கருங்கல் இருந்தது. விழாவிற் கலந்து கொள்ள அவள் விரைவாய் நடந்தாள். குழந்தையின் தலைச்சுமை கீழே வீழ்ந்தது. தாய் அதைத் தூக்கி அவசரமாய்ப் பிள்ளையின் தலையில் வைத்தாள். அவசரமாய் நடந்தாள். எங்களில் அதிகமாய்ச் சிரிக்கும் மேற்படி நண்பர் இந்தக் கல்லை எங்கே எடுத்துப் போகிறீர்கள் என்று கேட்டார். அவளுக்கு எங்கள் பாஷை புரியவில்லை. எங்களை மாத்திரம் அவள் கவனித்தாள். உடனே வீதியின் இருபக்கத்திலும் வரிசையாய் வைக்கப்பட்டிருந்த கற்களில் ஒன்றைத் தூக்கி வந்து எங்களில் ஒருவர் தலையில் வைத்தாள். பிறகு, மற்றொரு கல்லை மற்றொரு நண்பர் தலையில்! தடுத்தால் உதை விழக்கூடுமென்று நாங்களும் பெரிய பெரிய கற்களைத் தலைகளில் சுமந்து கொண்டோம். எங்கள் தலையில் கல்லைச் சுமத்திய பெண் _ அதனோடு சென்றுவிடவில்லை. நாங்கள் கறுப்பு நிறமாய் இருப்பதை அவள் உற்றுக் கவனித்தாள். ஓடினாள். தன் இனத்தாரோடு சொன்னாள். எங்களுக்கோ பயம்! செவ்வாயுலகம் சிறிது நேரத்தில் எங்கள் பக்கம் திரும்பிற்று. அவர்கள் எல்லோரும் நாங்கள் கறுப்பு நிறமா யிருப்பதையும், குட்டை வடிவமாயிருப்பதையும் கவனிக்க ஆரம்பித்தார்கள். நாங்கள் எந்தப் பக்கமாக ஓடி _ எப்படித் தப்பி _ ஆகாய விமானத்தை அடைந்து செவ்வாயுலகை விட்டுப் பறப்பது என்று நினைத்தோம். அவர்களில் சிலர் எம்மை நெருங்கினர். ஏதோ சொல்லினர். அர்த்தம் புரியவில்லை. நாங்கள் அதற்கு விடையாக _ வானத்தைக் காட்டினோம். கைச்சாடைகள் வளர்ந்தன. ஊமை நாடகம் நடந்தது. எங்கள் உயிருக்கு ஆபத்தில்லை என்ற விஷயத்தை நாங்கள் சீக்கிரம் தெரிந்து கொண்டோம். நாங்கள் கொஞ்ச நேரத்தின் பின் மெதுவாய் எங்கள் தலையில் ஏற்றப்பட்ட கற்களைக் கீழே இறக்கினோம். அதற்காக அவர்கள் எம்மைக் கோபிக்கவில்லை. இதனால் நாங்கள் வானத்திலிருந்து செவ்வாயுலகத்துக்கு வந்தோம் என்று குறிப்பிட்டதை அவர்கள் ஒருவாறு கண்டறிந்து கொண்டார்கள் என்று நிச்சயித்தோம். பிறகு அவர்கள் எங்களை உணவு அருந்தச் சொன்னார்கள். சிலவிதப் பழங்கள் பலவிதக் கிழங்குகள் தந்தார்கள். புசித்தோம்; ஒருவித ருசியாய் இருந்தன.
இரண்டு மூன்று நாட்கள் சென்றன. எங்கள் ஆகாய விமானத்தின் உபயோகத்தை நாங்கள் காட்டினோம். எங்களிடம் அவர்கள் பக்தி விசுவாசம் காட்ட ஆரம்பித்தார்கள்.
ஆனாலும், நாங்கள் கல்சுமக்காதிருந்தது பற்றி அவர்கள் சிரிப்பதை நிறுத்தவில்லை; இவ்விதம் இரண்டு மாதங்கள் தீர்ந்தன. நாங்கள் அவர்கள் பேச்சை அறிய ஆரம்பித்தோம். அவர்களும் நாங்கள் பேசுவதைத் தெரிந்துகொள்ள ஆரம்பித்தார்கள்.
செவ்வாயுலக மக்கள் கல்லைச் சுமந்து கொண்டிருக்க என்ன காரணம்? _ நூதனமான காரணம் ஒன்றுமில்லை. அது கடவுள் ஏற்பாடு என்று அவர்கள் சொன்னார்கள். அந்த ஏற்பாட்டை வற்புறுத்தும் இதிகாசங்கள், புராணங்கள், மற்றும் சாஸ்திரங்கள் எல்லாம் சொன்னார்கள் ஆகக் கூடி கல்லைச் சுமப்பது கடவுள் ஏற்பாடு. சிரிப்பைத்தான் எம்மால் அடக்க முடியவில்லை. ஆனால் நாங்கள் சிரிப்பது போல் அவர்கள் இரண்டு பங்கு சிரித்தார்கள். சிரித்துக் கொண்டே இருந்தார்கள். அவர்கள் சிரிப்பதற்கு இரண்டு காரணங்கள் சொன்னார்கள். நாங்கள் கல்லைச் சுமக்காமலிருப்பது ஒன்று. கல் சுமப்பவர்களைப் பார்த்து நாங்கள் சிரிப்பது மற்றொன்று. செவ்வாயுலகின் பத்திரிகைகள் எல்லாம் எங்களைக் கேலி செய்தன. எம்மைப் பார்ப்பவர்கள் எல்லாம் விழுந்து விழுந்தும் புரண்டு புரண்டும் சிரித்தார்கள். இதற்கிடையில் ஒருநாள் _ அங்குள்ள கிழங்குகளும் கனிகளும் எங்களுக்கு ஒத்துக் கொள்ளாததால் நாங்கள் இங்கிருந்து கொண்டுபோன அரிசியைச் சமைத்துச் சாப்பிட எண்ணிச் சமைக்க ஆரம்பித்தோம். எங்களில் ஒருவர் பிராமணர். அவர் சமையல் பண்ணத் தனியிடத்தில் மறைப்புத் திரை கட்டினார். மற்றொருவர் வேளாளர். அவர் ஒரு பக்கம் மறைவாகச் சமைத்தார். முகமதியர் ஒருவர் _ அவர் ஒருபுறம் சமையல். கிறிஸ்தவர் ஒருவர். அவர் ஒருபுறம். நாயுடு ஒருவர். அவர் மற்றொரு புறம். இன்னொருவர் ஆதிதிராவிடர். அவர் ஒருபுறம். அனைவரும் சமையல்களை முடித்து விட்டோம். ஒரு பிராமணர், சைவர், நாயுடு மூவரும் வாழையிலையைத் தேடிக்கொண்டு வெளியிற் சென்றோம். மற்றவர் உண்கலங்களை மண்கொண்டு துலக்கிக் கொண்டிருந்தார்கள்.
அங்குள்ள ஓர் வீட்டு மிருகம் குணத்தில் பூனையையும், உருவத்தில் குரங்கையும் பருமனில் ஒரு பலாப்பழத்தையும் ஒத்தது. அது ஆதிதிராவிடர் சமைத்து வைத்திருந்த சோற்றை, பாத்திரத்தோடு தூக்கிப் போய் பிராமணர் சமையலோடு வைத்து விட்டது. பிராமணர் வைத்திருந்த ரசத்தை மாத்திரம் கிறிஸ்தவர் சமையலுடன் கொண்டு போய் வைத்தது. பிராமணர் வந்து பார்த்தார். இங்கு வந்தும் பறையன் தன் போக்கிரித்தனத்தை விடவில்லையா என்றார். ஆதிதிராவிடர் நண்பர்க்கு இது பொறுக்க முடியவில்லை. பிராமணர் கன்னம் கிழிந்து போயிற்று. மீதியுள்ள நாங்கள் இருகட்சியிலும் சேராதிருக்க முடியவில்லை. நடந்தது சண்டை; சிரித்தது செவ்வாயுலகு! எம்மைச் சுற்றிலும் செவ்வாயுலக மக்கள். மற்றவரும் எங்கள் கோலத்தைக் காண வந்து கொண்டிருந்தார்கள். இது தெரியாதிருப்பவர்களும் அழைக்கப்பட்டனர். எங்கள் கைச்சண்டை சோர்ந்து போனபின் வாய்ச்சண்டை ஆரம்பித்தது. இந்த இரண்டாவது அத்தியாயம் செவ்வாயுலகத்தைச் சிரிப்புலகமாக்கி விட்டது. இவர்கள் சிரிப்பதற்காக நாங்கள் கோபிப்பதென்றால் எங்கள் சண்டையில் எமக்குள்ள ஊக்கத்தையல்லவா குறைத்துக் கொள்ள வேண்டும்?
செவ்வாயுலக மனிதர் சிலர் விலக்கினார்கள். அவர்கள் எம்மை விலக்காவிட்டாலும் அதற்கு மேல் நாங்கள் சண்டை போட்டிருக்க முடியாது. கைச்சண்டையாலும், வாய்ச்சண்டையாலும் சோர்ந்து போனோம்.
பிராமணர் _ கோபமாய்ச் செவ்வாயுலக மக்களைப் பார்த்து, எனக்கு மாத்திரம் ஒரு தனி வீடு கிடைக்குமா? என்றார். செவ்வாயுலகினர், ஏன்? என்ன காரணம்? என்று விவரமாய்ச் சொல்லும்படி வேண்டினார்கள். நாங்கள் அனைவரும் விவரத்தைச் சொன்னோம். பிராமணன் உயர்வு. அவன் கடவுளின் முகத்தில் பிறந்தவன். ஆதிதிராவிடன் மட்டம். தொட்டால் தீட்டு… இந்த வரிசையில் எங்கள் புராணம், இதிகாசம், சாத்திரங்கள், வேதங்கள், சமயங்கள் எல்லாவற்றையும் சொன்னோம். ஆகக் கூடி கடவுள் ஏற்பாடுதானே என்று செவ்வாயுலகினர் கேட்டனர். ஆம், ஆம் என்று சொன்னோம்.
செவ்வாயுலகினர் எங்களைப் பார்த்துச் சொல்லுகிறார்கள்:
எங்கள் கடவுளின் ஏற்பாடு மிக்க நல்லாதாயிருக்கிறது. நாங்கள் தலையில் கல்லைத் தூக்கி வைத்துக் கொள்வது மெய்தான். அந்தோ! நீங்கள் உங்கள் தலையில் தூக்கி வைத்துள்ள கற்கள் மிக்க ஆபத்தானவை. சண்டை விளைப்பவை. எங்கள் கற்கள் கண்ணுக்குத் தெரிகின்றன. ஆயினும் நாங்கள் போகுமிடத்திற்கெல்லாம் எம் தலையோடு அக்கற்கள் வருகின்றன. உங்கள் தலையில் நீங்கள் சுமக்கும் கற்கள் கண்ணுக்குத் தெரியவில்லை. ஆயினும் அவைகள் உங்களை ஆகாத வழியிலெல்லாம் செலுத்தி கைகால்களையெல்லாம் முறிக்கின்றன.
மேலும், செவ்வாயுலகினர் எமக்குச் சொல்லியவை:-_
ஓ! பூலோகத்தார்களே! உங்கள் தலையில் நீங்கள் சுமந்துள்ள ஜாதி ஏற்பாடு, மத ஏற்பாடு முதலிய கடவுள் ஏற்பாடு, என்னும் பாறாங்கற்கள் கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் அச்சுமையால் நீங்கள் சண்டையிட்டுப் பிரிவுபட்டிருக்கிற மாதிரியைப் பார்த்தோம். நாங்கள் இரக்கங்கொள்ளுகிறோம். அக் கண்ணுக்குத் தெரியாத சுமையை இறக்கிவையுங்கள். இறக்கிப் போடாத வரைக்கும் நீங்கள் உங்கள் பூமியையடைவது எப்படி?
– புதுவை முரசு, 5.1.1931