எம்.ஜி.ஆர். நிறுவிய பெரியார் சிலை
ஈ.வெ.கி.சம்பத் மறைவு – அம்மா அவர்கள் இரங்கல்
தமிழ்நாடு காங்கிரசின் துணைத் தலைவராக இருந்த தோழர் ஈ.வெ.கி.சம்பத் அவர்கள் மாரடைப்பு ஏற்பட்டு சென்னை அரசு பொது மருத்துவமனையில் இருதய நோய் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு பிரபல டாக்டர்களால் சிகிச்சையளிக்கப்பட்டு உடல் நலம் தேறி வந்தார்.
தமிழக ஆளுநர் அவர்களும், ஏனைய முக்கிய பிரமுகர்கள் மற்றும் கழகத் தலைவர் அம்மா அவர்களும் மருத்துவமனையில் சென்று பார்த்து வந்தனர்.
திடீரென நிலைமை மோசமாக இருப்பதாக தகவல் வந்ததைத் தொடர்ந்து பகல் 12 மணிக்கு கழகத் தலைவர் அவர்கள் பொது மருத்துவமனைக்கு விரைந்தார்கள். சுமார் 11.50 மணி அளவில் மாரடைப்பு காரணமாக தோழர் ஈ.வெ.கி. சம்பத் இயற்கை எய்தினார். உடனே கழகத் தலைவர் அம்மா அவர்களுடன் நானும், செங்கற்பட்டு மாவட்ட தி.க. தலைவர் சி.பி.ராஜமாணிக்கம் மற்றும் கழகத் தோழர்கள் மறைந்த சம்பத் அவர்களின் இல்லத்திற்குச் சென்றோம். பிற்பகல் 2.25 மணி அளவில் மறைந்த சம்பத் அவர்கள் உடலுக்கு கழகத் தலைவர் அம்மா அவர்கள் மாலை அணிவித்து இறுதி மரியாதை செலுத்தினார்கள். அம்மா அவர்கள் எழுதிய இரங்கல் செய்தியை விடுதலை 23.02.1977 அன்று முதல் பக்கத்தில் வெளியிட்டது. அதில்,
தந்தை பெரியார் அவர்கள் தான் மட்டுமல்ல, தனது குடும்பத்தையே தமிழ்நாட்டின் பொது வாழ்வில் கரையேறச் செய்தவர்களாவார்கள். மறைந்த நமது சம்பத் சிறுவயது முதற்கொண்டே தந்தை பெரியார் அவர்களைச் சுற்றிச் சுற்றிப் படர்ந்த ஒரு இளங்கொடியாக வளர்ந்தவர். சிறுவயது முதற்கொண்டே சுறுசுறுப்பும் எடுத்துக் கொண்ட பணிகளில் நல்ல விழிப்பும் கொண்டு பணியாற்றும் சுபாவம் கொண்டவர். 51 வயதில் அவர் மறைந்திருக்கிறார் என்பதை நினைக்கும்போது பெரும் வேதனை நம்மைக் கவ்வுகிறது. பொது வாழ்வின் முக்கியத் திருப்பங்கள் எல்லாம் இதற்குப் பின்பேதான் நடக்க வாய்ப்புகள் உண்டு.
பொதுவாழ்வில் தனது முத்திரைகளைப் பொறிக்கப் புறப்பட்டு நின்ற ஒரு சுயமரியாதை வீரரை இயற்கை பறித்துக் கொண்டு விட்டது என்று தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து இருந்தார்கள்.
அம்மா அவர்கள் தலைமையில் கொண்டாடிய அய்யாவின் கடைசி பிறந்த நாள் விழா 17.9.1977 அன்று தந்தை பெரியாரின் 99ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவாகும். விழாவானது சென்னை பெரியார் திடலில் எழுச்சியுடன் தொடங்கியது. திடலிலுள்ள அய்யாவின் சிலைக்கு என்னுடைய தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. பின்னர் நினைவு இடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.
சென்னை மாவட்ட திராவிடர் கழகம் மற்றும் மாணவர் திராவிடர் கழகம் இணைந்து எடுத்த இப்பெருவிழாவினை கழகப் பொதுச் செயலாளர் என்ற முறையில் நான் தொடங்கி வைத்தேன்.
கலை நிகழ்ச்சியில் சிறப்பாக இசை மாமணி டி.ஆர்.பாப்பாவின் பாட்டரங்கம், மாலையில் கருத்தரங்கு போன்றவை நடைபெற்றன. விழாவில் கழகத் தலைவர் அம்மா அவர்களும், பேராசிரியர் ந.ராமநாதன், பகுத்தறிவாளர் கழகத் தலைவர் பண்டரிநாதன் அய்.ஏ.எஸ். (ஓய்வு) ஆகியோரும் கலந்துகொண்டனர். தந்தை பெரியாரின் பிறந்த நாள் விழா மலரில் என்றும் அணையாச் சுடர் ஏந்துவோம் என்ற தலைப்பில் அம்மா அவர்கள் எழுதிய கட்டுரையில், எனது உடல் நிலை மிகவும் சங்கடமும், வேதனையும், நூற்றாண்டு விழாவைக்கூட அல்ல. இந்தப் பிறந்த நாள் விழாவில்கூட இருப்பேனா என்று எண்ணவேண்டிய அளவுக்கு ஆகிவிட்டது. உடல்நிலை குன்றியும் அய்யா தந்த அரிய உள்ள உணர்வால்தான் நான் ஓரளவு வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்று குறிப்பிட்டு இருந்தார்கள். அம்மா அவர்கள் தன் உடல் நிலை குறித்து எண்ணியது போலவே அய்யா அவர்களின் நூற்றாண்டு விழாவிற்கு முன்பாக இறக்க நேரிட்டது.
அ.தி.மு.க. சார்பில் 18.9.1977இல் சென்னை அண்ணா மேம்பாலம் அருகே நிறுவப்பட்ட தந்தை பெரியார் சிலையை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் பாபு ஜெகஜீவன்ராம் திறந்து வைத்தார்கள். முதலமைச்சராக இருந்த திரு. எம்.ஜி.ஆர். தலைமையில் நடைபெற்ற விழாவில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டார்கள். கழகத்தின் சார்பில் கழகத் தலைவர் அம்மா அவர்கள் இவ்விழாவில் பங்கேற்று சிறப்பித்தார்கள். விழாவில் அம்மா அவர்கள் பேசும்பொழுது, தந்தை பெரியார் அவர்கள் இறுதியாக அறிவித்த அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக உரிமை பெற்றாக வேண்டும் என்று தந்தை பெரியார் அவர்களின் விருப்பத்தை சட்டரீதியாக நிறைவேற்றுவதில் தமிழ்நாடு அரசு தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்கள். விழாவில் பெருந்திரளாக பொதுமக்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியினைத் தொடர்ந்து 22.9.1977 அன்று அரசு அலுவலகங்களில் தந்தை பெரியார் படத்தை வைக்கலாம் என்று அரசு ஆணையும் பிறப்பித்தது. இந்த ஆணையின் நகல் 6.10.1977 விடுதலையின் முதற்பக்கத்தில் வெளியிட்டது. அதனை அப்படியே தருகிறேன்.
அரசு அலுவலகங்களில் தந்தை பெரியார் படத்தை வைக்கலாம் என்ற அரசு ஆணையின் நகல்
(அரசாணையை மேலே காண்க) அம்மா அவர்கள் ஆணையும், இந்திராவுக்கு கறுப்புக் கொடியும்
தமிழகம் வரவிருந்த இந்திராவிற்குக் கறுப்புக் கொடி காட்ட 21.10.1977 அன்று திருச்சி மருத்துவமனையில் உடல் நலிவுற்ற நிலையில் இருந்த அம்மா அவர்கள் ஆணை பிறப்பித்து அறிக்கை வெளியிட்டார்கள். தனது அறிக்கையில் அம்மா அவர்கள் குறிப்பிட்டதாவது…
கடந்த 60 ஆண்டு காலமாக நமது தலைவர் தந்தை பெரியார் அவர்கள் எந்த இனநல உணர்வைத் தோற்றுவிக்க இடையறாது பாடுபட்டார்களோ, அந்த இன உணர்வினையும் அதன் தொடர்பான இயக்கங்களையும் அழிக்க தமிழ்நாட்டில் தன் அடக்குமுறை அதிகார தர்பாரினை -_ அவசரநிலை என்ற வாய்ப்பினைப் பயன்படுத்தி ஏவிய இந்திரா அம்மையார் அவர்கள், தமிழ்நாட்டுக்கு இம்மாதம் 30ஆம் தேதி வர இருக்கிறார்களாம்.
…. தமிழ்நாட்டை ஒழுங்கற்ற தனித்தீவு போன்றுள்ளது என வர்ணித்து, தேசிய நீரோட்டத்துடன் இணைக்கிறேன் என்ற பெயரால் அவரது பார்ப்பன ஆலோசகர்களான ஆர்.வி.சுப்ரமணியம் ஆகியோரைக் கொண்டும், அவரது மற்றொரு ஆமாம்சாமியான ஓம்மேத்தா அய்யரைக் கொண்டும் இந்திரா அம்மையார் நடத்திய தமிழர் ஒழிப்புக் காரியங்கள் கொஞ்சநஞ்சமல்ல…
… தமிழ் மக்களின் அதிருப்தியும் வெறுப்பும் எவ்வளவு என்பதைக் காட்டவே நமது இயக்கச் சார்பில் கறுப்புக் கொடிகள்…
… கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் தோழர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெறும் என்றும், நானே கலந்துகொள்ள இருந்தும் எனது உடல்நிலை காரணமாக டாக்டர்கள் அனுமதிக்க மறுப்பதால் கலந்துகொள்ள இயலவில்லை.
நமது கழகத் தோழர்களும், தமிழர் உணர்வுள்ள பெருமக்களும், அமைதியாக நமது வெறுப்பை _ எதிர்ப்பைக் காட்ட சென்னையில் கடல்போல் திரள வேண்டுகிறேன் என்று குறிப்பிட்டு இருந்தார்கள். இதன் பிறகு, அகில இந்திய சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் 6-_ஆவது மாநாட்டையொட்டி எம்.கே. காந்தி பெயரில் கண்காட்சி ஒன்றை டில்லி அரசு டில்லியில் நடத்தியது.
அனைத்து மாநில சுதந்திரப் போராட்ட வீரர்களின் படங்களும், குறிப்புகளும் இடம் பெற்றிருந்த இக்காட்சியில் _ தமிழகத்தில் தந்தை பெரியார் ஈடுபாடு பற்றிய குறிப்போ, உருவப் படமோ இடம் பெறாததையடுத்து _ மாநாட்டுப் பிரதிநிதியான தமிழர் தா.மு.தனபால் (காங்கிரஸ்காரர்) பிரதமர் தேசாய்க்கு வருத்தக் கடிதம் எழுதினார்.
இருந்தும் – இருட்டடிப்பிற்கு விடிவில்லை 30.10.1977 ஞாயிறு காலை 8 மணிக்கு கிண்டி மேம்பாலமருகில், எனது தலைமையில் கறுப்புக்கொடி காட்டப்படும் என இடமும், வேளையும் குறித்து விடுதலையில் கழகத் தலைமை அறிக்கை விடுத்தது. அந்த அறிக்கைக்கு ஆதரவாக இந்திராவுக்கு கறுப்புக்கொடி காட்டும் கிளர்ச்சியை நடத்த தி.மு.கழக செயற்குழுவும் முடிவெடுத்ததை யொட்டி கலைஞர்
விடுத்த அறிக்கையில்…
நெருக்கடி காலத்தில் கொடுமைகளுக்கு ஆளான திராவிடர் கழகமும் இந்தக் கறுப்புக் கொடி பேரணியை நடத்துகிறது. அண்ணா அன்றே சொன்னாரல்லவா? திராவிடர் கழகமும், தி.மு.கழகமும் இரட்டைக் குழல் துப்பாக்கி என்று. அந்த இரு கழகமும் இணைந்து நடத்துகிற அறப்போர் எனக் குறிப்பிட்டார். 29ஆம் தேதி மதுரை, திருச்சியிலும், 30 அன்று சென்னையிலும், காஞ்சியிலும் தி.மு. கழகம் கறுப்புக்கொடி காட்ட அக்கட்சியின் செயற்குழு திட்டமிட்டது.
வெளியூர் தோழர்கட்கு என்ற தலைப்பில் 28.10.1977இல் அம்மா அவர்கள் விடுத்த அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிட்டார்கள்:
…நேற்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு அவசரமாகக் கூடி, கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு நடத்துவது என நல்ல முடிவு எடுத்துள்ளதைக் கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைவதோடு, வரவேற்கவும் செய்கிறேன். தமிழ்நாட்டில் இந்திராகாந்தி அம்மையார் அவர்கள் எங்கெங்கு செல்கிறார்களோ, அந்த நகரங்களில் எல்லாம் (மதுரை, திருச்சி, காஞ்சி, சென்னை) கறுப்புக்கொடி காட்டுவது என்று தி.மு.க. முடிவு எடுத்து அறிவித்தது.
ஏற்கெனவே நாம் சென்னையில் அம்மை யாருக்குக் கறுப்புக்கொடி என்று அறிவித்தபோது, அந்த அம்மையாரின் சுற்றுப்பயணம் நடைபெறுமா என்பது சந்தேகத்தில் இருந்ததால் சென்னையில் என்னுடைய தலைமையில் நடத்த முடிவு செய்தேன்.
மதுரை, திருச்சி, காஞ்சி போன்ற ஊர்களில் உள்ள நமது இயக்கத் தோழர்கள் அங்கும் கறுப்புக்கொடி காட்டுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று இடைவிடாமல் வற்புறுத்திக் கொண்டு வருவதால், ஆங்காங்கே உள்ள நமது இயக்கத்தோழர்களும், நமதுஇரு இயக்கமும் இணைந்து இந்த அறப்போரினை நடத்துவதால், திராவிடர் கழகத் தோழர்கள் அனைவரும் அந்தந்த ஊர்களில் 29, 30 தேதிகளில் கலந்துகொண்டு, கட்டுப்பாட்டுடன் நடந்துகொண்டு, நமது கழகத்தின் நற்பெயரை நிலைநிறுத்திட வேண்டுகிறேன் என்று கழகத் தோழர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
மதுரையில், பகல் ஒன்றே முக்கால் மணியளவில் லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்திரா அம்மையாரை எதிர்த்துக் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்ட முன்னணியில் கழகத் தோழர்கள் கருஞ்சட்டையுடன் பங்கேற்றனர். போலீஸ் தடியடி நடத்தி, கண்ணீர்ப் புகையும் வீசி பல நூறு பேரைப் படுகாயப்படுத்தி அமைதியைக் குலைத்தது. மதுரை, ராமநாதபுரம், நெல்லை மாவட்ட கழகத் தோழர்கள் கருஞ்சட்டைகளுடன் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
மதுரை தெற்கு வாசல் போலீஸ் நிலையம் அருகில் நடந்த ஆர்ப்பாட்ட சம்பவங்களைக் குறித்து அறிக்கையொன்றில் கழகத் தலைவர் அம்மா அவர்கள் குறிப்பிட்டதாவது:
… கறுப்புக்கொடி காட்ட முன் வருவதற்கு அரசு அனுமதியளித்து, இடத்தையும் ஒதுக்கிக் கொடுத்துவிட்டு, கறுப்புக்கொடி காட்டுவது ஜனநாயக உரிமை என்று விளக்கமும் கொடுத்துவிட்டு, இன்று (29-.10.77) பகலில் நமது மாண்புமிகு முதல் அமைச்சர் அவர்கள், அரசியலில் கறுப்புக்கொடி காட்டுவது அனுமதிக்கப்பட்ட ஒன்றாகும். ஆனால், கருணாநிதியின் ஆட்சியின்போது அனுமதித்தாரா? தடுப்பதற்கு என்னென்ன செய்ய முடியுமோ அதனைச் செய்தார். இப்போது நாங்கள் அவர்களு-க்குப் பாதுகாப்புக் கொடுக்கிறோம். எந்த ஆபத்தும் வராமல் பாதுகாப்புத் தருகிறோம். ஆனால், இந்திரா இதுபற்றிக் (கறுப்புக்கொடி காட்டுவதுபற்றி) கவலைப்பட்டதாக நான் கருதவில்லை என்று பத்திரிகை நிருபர் பேட்டியில் கூறி, மாலை ஏடுகளிலும் அது வந்துள்ளது.
ஆனால், மாலை ஆறரை மணி வானொலி மாநிலச் செய்தியில், சென்னையில் நாளை நடைபெறவிருக்கும் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் தடைசெய்யப்பட்டது என்று செய்தி வருகிறது. சென்னையில் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை தாங்கும் நமது கழகப் பொதுச் செயலாளர் திரு. கி.வீரமணி கைது செய்யப்பட்டால், கறுப்புக்கொடி போராட்டத்திற்கு நானே தலைமை தாங்குவேன் என்று அம்மா அவர்கள் அறிவித்தார்கள். உடல் நலிவுற்று, திருச்சி மருத்துவமனை-யிலிருந்து இன்றுதான் சென்னை திரும்பிய நான், அமைதி வழியில் அறப்போர் நடத்த நண்பர்களுக்கு அறிவுரை கூறவே வந்தேன். வாய்ப்பு இப்படி எனக்கும் கிட்டும் நிலை ஏற்பட்டதைக் குறித்து மகிழ்ச்சி அடைகிறேன்.
– (நினைவுகள் நீளும்)