– சு.மதிமன்னன்
சென்ற மாதம் இந்தியப் பிரதமர் ரஷ்யாவுக்குப் போனார். இந்தியப் பிரதமர் எனலாமா, பாரதப் பிரதமர் என்று சொல்ல வேண்டுமா? ஏதோ ஒன்று! அவர் போனபோது ரஷ்யப் பிரதமர் புடினைச் சந்தித்தாராம்.. இந்திய நாடு தொடர்பான விசயங்கள், இந்திய_ரஷ்ய உறவுபற்றிய விசயங்கள், உலக நடப்புகள், அவற்றின் தொடர்பாக இரண்டு நாடுகளும் எடுக்கவேண்டிய முயற்சிகள், அவற்றில் ஏற்பட வேண்டிய கூட்டுறவு முயற்சிகள் என்று எவ்வளவோ இருக்கும் பேசுவதற்கும், விவாதிப்பதற்கும், முடிவு எடுப்பதற்கும்!
அத்தனையையும் விட்டுவிட்டு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், புடினிடம் நீண்டகாலமாகத் தீர்க்கப் படாமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கும் பிரச்சினை பற்றிப் பேசப் போகிறார்கள் என்று சொல்லப்பட்டது.! சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த அந்தப் பிரச்சினை என்னவாம்? ஏற்கெனவே ஃபிரான்சு நாட்டுக்குப் போனபோது அந்நாட்டு அதிபர் சர்கோசியிடம் இந்தியப் பிரதமர் பேசியது நினைவிருக்குமே! சீக்கியர்கள் தலைப்பாகை கட்டிக் கொண்டு வெளியே திரிய அனுமதி கேட்டுப் பேசினார். கிடைக்கவில்லை என்பது வேறு விசயம்! அது அவர் மதம் சம்பந்தப்பட்ட கோரிக்கை. இப்போது வைக்கப்போவது இந்துமதம் பற்றியது. அதுகூடத் தப்புதான். இந்துமதத்தில் ஒரு பிரிவு பற்றியது. பிரிவு என்றால், மிக மிகச் சிறிய பிரிவு. 90 கோடி இந்துக்களில் 900 பேர் பற்றிய பிரச்சினை.
இஸ்கான்
அரே கிருஷ்ணா என்ற ஓர் இயக்கம் இஸ்கான் (ISKCON) என்று அழைக்கப்படும் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம். இந்தியாவில் சில இடங்களில் சலவைக்கல் கோவில்கள் கட்டிக் கொண்டாடும் இயக்கம். பித்துக்குளி வெள்ளையர்களைப் பிடித்து பாரிஸ், லண்டன், மாஸ்கோ என்று பல ஊர்களில் இருக்கும் இயக்கம். இந்த மாபெரும் இயக்கம் பற்றித்தான் மன்மோகன்சிங் பேசப் போகிறார் என்று சொன்னார்கள்.!
என்ன அவர்களுக்குப் பிரச்சினை? கோவில் கட்டமுடியவில்லையாம், மாஸ்கோ நகரத்தில்! ரஷ்யாவில்! ஒரு காலத்தில் லெனினும் ஸ்டாலினும் ஆட்சிசெய்து பகுத்தறிவையும் மதக் கிறுக்கற்ற நிலையையும் உருவாக்கி வளர்த்த மண்ணில் கோவில் கட்ட வேண்டுகிறார்கள். அன்றைக்கு அந்த மண் இருந்த நிலையில் அந்நாட்டுக் குடிமகனாகவே ஆகித் தங்கிட பெரியார் விரும்பிய அளவுக்கு விளங்கிய அறிவார்ந்த மக்களும் ஆட்சியும் சமதர்மக் கொள்கையும் சிறந்து விளங்கிய நாடு! சீரழிந்துவிட்ட இன்றைய நிலையில் காமக் கடவுளுக்குக் கோவில் கட்ட வேண்டுகிறார்கள்.
கிருஷ்ணன் கோவில் இடிப்பு
மாஸ்கோ நகரத்தில் பெகோவயா தெருவில் அவர்கள் கட்டியிருந்த கோவில் 2004இல் இடித்துத் தள்ளப்பட்டது அரசால்! மாற்றாக வேறு இடம் கொடுத்தது அரசு. லெனின் கிராடு ஸ்கை பிராஸ்பக்ட் எனும் இடத்தில் ஒதுக்கினார்கள். ரஷ்ய நாட்டில் இருக்கும் ரஷ்ய பழமைவாத கிறித்துவம் எனும் மதத்தினர் எதிர்த்தனர்.
அந்த இடத்தில் 1896இல் நடைபெற்ற ஜார் மன்னன் நிக்கோலசின் முடிசூட்டு விழாவின்போது நெரிசலில் ஆயிரக்கணக்கானோர் மாண்ட நிகழ்வின் நினைவாக இருக்கும் இடம். ஆகவே எதிர்ப்பு.
வேறு இடம் மாஸ்கோ நகரின் புறப்பகுதியில் அளிக்கப்பட்டது. 700 லட்சம் ரூபிள் (ரஷ்ய நாணயம்) மதிப்பில் கோவில் கட்டத் திட்டமிட்டனர். கட்டட அனுமதி கோரி விண்ணப்பித்தனர். எங்கிருந்து இவ்வளவு பணம் வந்தது? கிருஷ்ண பக்தர்கள் கொடுத்தனராம்! அந்த நிலையில் அனுமதி மறுக்கப்பட்டது. அது என்ன புண்ணிய பாரத பூமியா, என்ன வேண்டுமானாலும் செய்யலாம், அரசு கண்டு கொள்ளாது _ மதம் பற்றிய விசயங்களில், என்று இருப்பதற்கு?
மாஸ்கோ மக்களின் எதிர்ப்பு
மாஸ்கோ நகர மக்கள் பெருமளவில் எதிர்ப்புத் தெரிவித்ததால் அனுமதி மறுக்கப்பட்டது என்று மாஸ்கோ மாநகர மேயர் கூறினார். மக்களின் எதிர்ப்பு எப்படி இருந்தது தெரியுமா? கோவிலுக்கு அடிக்கல் நாட்டிடப் பெருவிழா! யாகசாலைகள் கட்டப்பட்டு தடபுடலாகத் தொடக்க விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அந்தப் பகுதிவாழ் கிறித்துவர்களும் இசுலாமியர்களும் ஆயிரக்கணக்கில் கூடிவிட்டனர். பலத்த எதிர்ப்பு முழக்கம். ஆர்ப்பாட்டம். அரசு வேறு வழி இல்லாமல் அனுமதியைத் திரும்பப் பெற்றது. மக்கள் குரலுக்கு அவ்வளவு மதிப்பு அங்கே!
ஆகவே அதுபற்றி புடினுடன் பேச வேண்டுமாம், மன்மோகன் சிங்! கிருஷ்ண பக்தி இயக்கத் தலைவர் சாது பிரியதாஸ் கடிதம் எழுதியிருக்கிறாராம். இந்தக் கோவில் மதம் சார்ந்தது மட்டும் அல்லவாம்! கலாச்சாரப் பிரதிபலிப்புச் சின்னமாம்? இந்தியர், சிங்களர், வங்க தேசத்தினர், நேபாளிகள், மொரீசஸ் நாட்டினர் ஆகிய அனைவருக்கும் சமூக, கலாச்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் இடமாம்! கிருஷ்ணனைக் கும்பிடுவது இப்படி இப்படி என்று கூறினால் எப்படிச் சிரிப்பது? வாயினாலா?
மன்னனா? அவதாரமா?
இந்தியாவின் மேற்குப் பகுதியில் அரபிக் கடலில் அமிழ்ந்து போய் இருக்கிறது என்று இந்துமதவாதிகள் பிதற்றிக் கொண்டுள்ள துவாரகா எனும் நாட்டை ஆண்ட மன்னன் கிருஷ்ணன் என்கிறார்கள். மாடுகளை மேய்த்த கோபாலன் என்கிறார்கள். விஷ்ணு எனும் கடவுள் எடுத்த முக்கிய 10 அவதாரங்களில் ஒன்று என்கிறார்கள். பாகவத புராணம் சொல்கிறபடி, இவனைக் கோபிகையர் ஆசைப்பட்டதன் மூலமாகத் தொழுதார்களாம். அச்சப்பட்டதன் மூலமாக கம்சன் தொழுதானாம். வெறுப்புக் காட்டியதன் மூலம் சில மன்னர்கள் தொழுதார்களாம். அவனது அடியார்கள் பாசம் காட்டியதன் மூலம் தொழுதார்களாம். ஏதோ ஒரு வகையில் எல்லோருமே அவனது பக்தர்களாம்!
மாஸ்கோவின் கிறித்துவர்களும், முசுலிம்களும் பக்தர்கள் பட்டியலில் வரவில்லையோ? பாரதப் பிரதமரிடம் கிருஷ்ண பக்தர்கள் மனுகொடுக்க அதுதான் காரணமோ? அல்ல, அல்ல! 1988 முதல் ரஷ்யாவில் கிருஷ்ண பக்தர்கள் இருக்கிறார்கள் என்றாலும் அவர்களைச் சந்தேகக் கேஸ்கள் பட்டியலில்தான் ரஷ்யர்கள் வைத்திருக்கிறார்கள். அந்நாட்டின் சமூக நல்லிணக்க இயக்கச் செயல்வீரர் அலக்சாண்டர் ட்வார்கின் என்பார் ரஷ்ய நீதித்துறை அமைச்சகத்தின் மதச் சார்பான வல்லுனர் கவுன்சிலின் தலைவர். இந்த கவுன்சில் இஸ்கான் அமைப்பை இந்துமதம் சார்ந்தது அல்ல என்று வகைப்படுத்தியுள்ளது. ஏனைய மதங்களை அழித்து மேலே வரும் நோக்கத்தோடு செயல்படும் சர்வாதிகார அமைப்பு (TOTALITARIAN SECT) என்று முத்திரை குத்தியுள்ளது.
ரத யாத்திரையாம்
ரஷ்யாவில் சுமார் 15 ஆயிரம் பேர் இந்தியாவிலிருந்து இடம் பெயர்ந்து சென்று வசிப்பவர்கள். இவர்களுக்காக இயங்கும் இஸ்கான் அமைப்பு 120 கிளைகளை அமைத்துச் செயல்படுகிறது. என்ன செயல்பாடு? ரத யாத்திரை நடத்துகிறார்கள்! அத்வானி நடத்திய ரத யாத்திரை, பாபர் மசூதியை இடிப்பதில் முடிந்ததை ரஷ்யர்கள் நினைவில் வைத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்தியக் கலாச்சார விழா எனப் பெயர் சூட்டி ரத்த யாத்திரை நடத்தத் திட்டமோ?
ரஷ்யர்கள் விழிப்பாக இருக்கிறார்கள், கலாச்சார விழா என்று அறிவித்து அனுமதிவாங்கி, வெட்கங்கெட்ட வகையில் மதப் பிரச்சாரம் செய்கிறார்கள் என்று ரஃபெல் எனும் பாதிரியார் குமுறுகிறார். மதப் புத்தகங்களை இனாமாகத் தந்து கிருஷ்ணனின் புகழ் பாடுகிறார்கள். பிரசாதம் தருகிறார்கள். உலகத்தின் முடிவு நாள் என்கிற ஜப்பானிய இயக்கம் (DOOMS DAY CULT) ஓம் ஷின்ரிக்யோ போலவே இஸ்கான் இயக்கம் என்கிறார் இவர்.
ஜப்பானிய இயக்கத்தினர் உலகம் அழியப் போகிறது, எங்களுடன் சேருங்கள், கடவுளிடம் அடைக்கலம் தேடலாம் என்று கூறி மக்களைத் தற்கொலைக்குத் தூண்டியது, மறுத்தவர்களைக் கொன்றது என்பதை நினைவு கூரவேண்டும்.
மண்டை ஓடு மதப்பிரிவு
20_25 ஆண்டுகளுக்கு முன்பு ஆனந்த மார்க்கம் என்ற பெயரில் சிலர், சைவர்கள் என்று கூறி, சிவனைப் போலவே காபாலிகப் பிரிவைக் குறிக்கும் வகையில் மனித மண்டை ஓடுகளை வைத்துக் கொண்டு திரிந்தனர். அதில் அதிகமானோர் வெள்ளையரும் வங்காளிகளும் இருந்தனர். ஆஸ்திரேலியாவில் இவர்களைப் பிடித்து உள்ளே போட்டனர். இங்கு இருந்தவர்களை உள்ளே போட்டதும் ஆனந்த மார்க்கம் அடியோடு காணாமல் போனது. இந்த நிலை இஸ்கானுக்கு என்றைக்கு ஏற்படும்? ஆனந்த மார்க்கம் ஆரம்பிக்கப்பட்டது வங்காளத்தில்தான். கிருஷ்ண பக்தி தொடங்கப்பட்டதும் அங்கேதான்!
ராதை யார் மனைவி?
அந்தப் பகுதியில் ஆண்ட மன்னன் லட்சுமணசேனன் (1179_1209) என்பவனின் ஆதரவில் ஜெயதேவன் எனும் கவிஞன் பாடியது கீதகோவிந்தம். கிருஷ்ணன் எனும் கடவுள் அவனது மனைவியர், காமக் கிழத்தியர்களுடன் நடத்திய லீலைகள் பற்றிய விவரங்களைப் பச்சைப் பச்சையாகப் பாடி வைத்து பக்தியை வளர்த்தான். கிருஷ்ணனின் மனைவிகளில் குறிப்பிடத்தக்கவர்கள் ராதையும் ருக்மணியும். ராதாவின் காலைத் தூக்கித் தன் தலையில் வைத்துக் கொண்டாடினானாம். அப்பேர்ப்பட்ட அன்பு மனைவி, கிருஷ்ணனின் மனைவியா? தாலி கட்டிய பெண்டாட்டியா?
அல்லவே. அடுத்தவனின் மனைவி ஆயிற்றே! கிருஷ்ணனுக்கு அத்தை உறவுதானே! அத்தையை வைத்துக் கொண்டு கூடிக் குலவிக் குடும்பம் நடத்தியவன்தானே கிருஷ்ணன்? ஆய்வாளர்கள் குறிப்பிடுவதைப் போல சோரம்போன ஜோடி தானே! (ADULTEROUS LOVERS)
வங்காளக் கவிஞன் சந்திதாஸ் என்பவன் தன் கவிதையில் எழுதி இருக்கிறான் (14ஆம் நூற்றாண்டில்). 16ஆம் நூற்றாண்டில் சமக்கிருத ஆசிரியன் ரூபகோஸ்வாமி என்பவன் சைதன்யரின் சீடன். இவன் எழுதியவாறு, இந்த ராதை அபிமன்யுவின் மனைவியாம். அபிமன்யு யார்? அர்ஜூனனின் மகன். பாரதப் போரில் மாண்டுபோனபோது அவனுக்கு 16 வயது. அவனின் மனைவிக்கு 12 வயது இருக்கலாம், அக்காலப் பழக்கப்படி! அபிமன்யு மாண்டபிறகு அவனின் விதவை ராதாவைக் கிருஷ்ணன் வைத்துக் கொண்டானா?
சந்திதாஸின் காதல் கவிதைகள் என்ற பட்டாச்சார்யா தொகுத்த நூலில் வரும் கவிதை ஒன்று கிருஷ்ணனின் குழல் ஓசை பற்றிப் பேசாதே, அதைக் கேட்டால் எல்லாப் பெண்களும் தத்தம் கணவர்களை விட்டுவிட்டு இவனிடம் ஓடி வருகிறார்கள். தண்ணீர் குடிக்க ஓடிவரும் மான்களைப் போல அவர்கள் ஓடி வருகிறார்களே! என பாடுகிறார். இந்த ஒழுக்கங்கெட்டவன் கடவுளாம். அவனைக் கும்பிட வேண்டுமாம். அதைப் பரப்ப ஓர் இயக்கமாம். வேறு நாட்டில், வேறு மதத்தவர் மத்தியில் இதற்குக் கோவிலாம். அதற்கு இந்தியப் பிரதமர் ஏற்பாடு செய்ய வேண்டுமாம்.
கிருஷ்ண சைதன்யா
இந்தக் கோமாளித்தனங்களின் கர்த்தா சைதன்யா (1486_1533) இவனும் வங்காளத்தைச் சேர்ந்த பார்ப்பனன். உலகப் பற்றைத் துறந்து விட்டேன் என்று பசப்பி, கிருஷ்ணலீலைகளைச் செய்தவன். நான் கிருஷ்ணனும் ராதாவும் சேர்ந்த டூ இன் ஒன் என பிறரை நம்பச் செய்தவன். வலிப்பு நோயின் காரணமாகக் குளிக்கும்போது ஆற்றில் மூழ்கி இறந்தவன். கிருஷ்ண பக்தியைப் பரப்பியதில் இவனுக்கு முக்கியப் பங்குண்டு. அவனைப் போன்றே, செயல்படுபவர்கள் இஸ்கான் அமைப்பினர்.
வங்காள மாநிலத்திற்கு ஒரு பெயர் உண்டு. இந்தியா விழிப்பதற்கு முன்பே வங்காளிகள் விழித்துக் கொள்வார்களாம். எந்தவகை விழிப்பு என்பதுதான் பிரச்சினை! இந்திய நாட்டின் மேற்குப் பகுதியில் துவாரகாவை ஆண்டவன் கிருஷ்ணன் என்பது பழங்கதை (புராணம்). அத்தகைய கிருஷ்ணனின் அருமை, பெருமைகளை(?) எடுத்துக் கூறிப் பரப்பியவர்கள் இந்தியாவின் கிழக்கே இருக்கும் வங்காளிகள். இந்தியாவின் முதல் தொழிற்சங்கம் சென்னையில் 1920இல் ஏற்பட்டது என்றாலும் அச்சுக்கோர்ப்பவர்கள் சங்கம் கல்கத்தாவில் தோன்றியது என்று கூறி முந்தப் பார்ப்பார்கள். சுதந்திர வேட்கை இங்கேதான் என்பார்கள்! பிரிட்டிஷ் அரசுக்குப் பதில் இட்லர் அரசுக்கு ஆதரவு தருவதாக கடல் கடந்துபோனவர்களும் இவர்கள்தான். இரண்டொரு ஆங்கிலேயர்களைக் கொல்வதால் சுயராஜ்யம் கிடைக்கும் என்று நம்பி வெடிகுண்டு வீசியவர்கள் இவர்கள். போலீஸ் தேடுகிறது என்பதும் முக்காடுபோட்டுத் தப்பித்து புதுச்சேரியில் பதுங்கிக் கொண்டதும் இவர்கள்தான். பின்னர் பக்தி, பஜனை, வேதாந்தம் என்று மாறி ஆசிரமம் வைத்து அரவிந்த கோஷ் பிரபலமானதும் நினைவிருக்கும். அதுபோலத்தான் கிருஷ்ண சைதன்யனும்.
பிரபு பாதா
அந்த வரிசையில் வந்த பக்திவேதாந்த என்பவன் 1965இல் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஏற்படுத்திய இயக்கம் இஸ்கான். இந்த ஆளை பிரபுபாதா என்று கூறுவார்கள். 1896இல் பிறந்த இவர் 81 ஆண்டுகள் வாழ்ந்து 1977இல் இறந்தார். எதையும் மோகிக்கும் அய்ரோப்பியர்கள் இதையும் மோகித்து உறுப்பினர்களாக உள்ளனர். நீண்ட தலைமயிர், பார்ப்பனர் போல உச்சிக் குடுமி, பஞ்சகச்சம் வேட்டி, ஜிப்பா என வேடம் புனைந்து, கிருஷ்ண பக்தி எனும் போர்வையில் பழைய ஹிப்பிகள் போல இருக்கிறார்கள்.
பாரிசில் பார்த்தது
பாரிஸ் நகரில் பகல் காட்சி சினிமா பார்த்துவிட்டு வந்த வேளையில் தெருவில் ஆடிக்கொண்டும் பஜனை பாடிக்கொண்டும் கூத்தாடிய இந்த அமைப்பினர் நம் ஊர் லட்டுகளைப் பிரசாதமாகக் கொடுத்தனர் என்பதை இக்கட்டுரையாளர் 1993இல் ஆகஸ்ட் மாதத்தில் நேரில் பார்த்தார். இப்படி ஆடிப்படி, கொண்டாடும் அளவுக்கு குணநலன்கள் பெற்றவனாகவா இந்தக் கடவுளை உண்டாக்கியிருக்கிறார்கள்?
தில்லுமுல்லுப் பேர்வழி
பாரதப் போரில் அர்ஜூனனுக்குத் தேர் ஓட்டியாக இருந்து ஏகப்பட்ட தில்லு முல்லுகள் செய்து பாண்டவர் பக்கம் வெற்றி தேடித் தந்தான் என்றுதானே பாரதம் பேசுகிறது! போர் முடிந்ததும் தேரைவிட்டு இறங்குமாறு அர்ஜூனனிடம் சொன்னானாம் கிருஷ்ணன். நீங்கள் முதலில் இறங்குங்கள், பிறகு நான் இறங்குகிறேன் என்றானாம் அர்ஜூனன். கிருஷ்ணன் கண்டிப்புடன் பேசி இறங்கச் சொன்னானாம். அர்ஜூனன் இறங்கினானாம். பின்னர் கிருஷ்ணன் இறங்கினானாம்.
கிருஷ்ணன் இறங்கியதும் தேர் எரிந்து சாம்பலாகி விட்டது. எப்படி? ஏன்? அர்ஜூனன் கேட்டான். கிருஷ்ணன் சொன்னான். நான் எவ்வளவோ அயோக்கியத்தனங்கள் செய்து உங்களை ஜெயிக்க வைத்தேன். அந்தக் கெட்ட செயல்களாலும் கெட்ட எண்ணங்களாலும் தேர் எரிந்தே போயிருக்க வேண்டும். ஆனால் எரியாததற்குக் காரணம் நான் தேரில் இருந்தது. இப்போது நான் இறங்கி விட்டதால் தேர் எரிந்து விட்டது. நான் முதலில் இறங்கியிருந்தால் தேரோடு சேர்ந்து நீயும் எரிந்து போய் இருப்பாய். அதனால்தான் முதலில் உன்னை இறங்கச் செய்தேன் என்றானாம்.
என்ன தெரிகிறது? கிருஷ்ணனின் தில்லுமுல்லுப் பித்தலாட்டங்கள் அந்த அளவுக்குக் கொடுமையானவை. அவன் கடவுளா? அவனுக்கு வழிபாடா? அதற்கு ஓர் இடமா? அதுவும் வேறு நாட்டில்! அதைக் கேட்டுப் பெறுவதுதான் இந்தியப் பிரதமரின் வேலையா?
யாருக்குமே வெட்கமில்லையா?
– தொடரும்