கற்றதனால் ஆன பயன்

நவம்பர் 01-15

அந்தப் பேருந்து சென்னையிலிருந்து திருவாரூருக்கு விரைந்து சென்று கொண்டிருந்தது. சாலை வளைந்து வளைந்து இருப்பதால் பேருந்தின் ஓட்டத்திற்குத் தகுந்தவாறு அதிகாலை நேரக் காற்று சிலுசிலுவென்று வீசிக் கொண்டிருந்தது. ஓவியாவையும் பேருந்து ஓட்டுநரையும் தவிர நடத்துநர் உள்பட அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தனர். குமாரவேல் ஓவியாவின் தோளில் சாய்ந்திருந்தான்.

திருமணமாகி நாலாவது நாள் குமாரவேலின் ஊருக்குப் போய்க் கொண்டிருக்கிறார்கள். ஓவியா M.Sc., B.Ed. படித்துவிட்டு, சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள தந்தை பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து கொண்டிருந்தவள். எட்டாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை பாடம் எடுத்துக் கொண்டிருந்தவள். தன்னால் முடிந்தவரை பிள்ளைகளுக்கு நல்லமுறையில் பாடம் கற்பித்து, அவர்களை ஊக்கப்படுத்தி, உற்சாகப்படுத்தி நல்ல மதிப்பெண்களையும் பெற வைத்தவள்.

26 வயது நிரம்பிய ஓவியாவிற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு குமாரவேலு M.A., B.Ed. அவர்களுக்கு நிச்சயிக்கப்பட்டது.

மாப்பிள்ளையின் ஒரே கண்டிஷன் ஓவியா வேலைக்கெல்லாம் போகத் தேவையில்லை. எங்கள் வீட்டையும், தோட்டத்தையும் பார்த்துக் கொண்டு என் அம்மாவிற்கு உதவியாக இருந்தால் போதும் என்பதுதான்.

இதற்கு நான் ஏன் படிக்க வேண்டும்? படிப்பு என்பது சம்பளத்திற்கு மட்டுமல்ல. நாலு குழந்தைகளுக்கு நம்மால முடிந்தவரை அறிவு வளர்ச்சிக்கு உதவுவதுதானே. இந்த மாப்பிள்ளை தேவைதானா அப்பா? என்று போராடியும் பார்த்துவிட்டாள். உனக்குப் பின்னால் தங்கைகளையும் பார். நான் இன்னும் இரண்டு வருடத்தில் ஓய்வு பெற்று விடுவேன். அதற்குள் இவர்களைக் கரையேற்ற வேண்டும் என்று முடிவாக இருந்துவிட்டார்.

அப்பா சொல்வதுதான் வேதவாக்காகக் கருதும் அம்மா. பெண்களை உயிராகப் பார்க்காமல் பொருளாகப் பார்க்கும் வரை பெண் பிள்ளைகளின் நிலை இதுதான்.

அவளுடைய பள்ளியில் விடைபெறும் பொழுது தலைமையாசிரியரும், மாணவர்களும் மிகவும் வேதனைப்பட்டார்கள்.

சன்னாநல்லூர் என்று நடத்துனர் குரல் கொடுக்க, தூக்கத்திலிருந்த குமாரவேல் விருட்டென்று கண்விழித்து இறங்கணும் என்று கூறிக் கொண்டே ஓவியாவை எழுந்திருக்கச் சொல்லி சூட்கேஸ்களை எடுத்துக் கொண்டு கீழே இறங்கினான்.
காலைப்பொழுது விடிந்து கொண்டிருந்தது. என்னண்ணே கல்யாணம் நல்லபடியா முடிஞ்சுடுச்சா என்று கேட்டுவந்த ஆட்டோ டிரைவரின் வண்டியில் ஏறி அமர்ந்தான்.

ஆட்டோ, அழகிய வயல்வெளிகள் இருபுறமும் இருக்க நடுவில் இருக்கும் சிமெண்ட் சாலையில் சென்றது. 3 கி.மீ. தூரம் போனதும் நெடுஞ்சேரி எனும் சிறிய கிராமத்தில் உள்ள ஒரு பெரிய வீட்டின் முன் நின்றது. அவனுடைய அம்மா வாசலிலே வரவேற்றாள். மருமகளின் கையைப் பிடித்துக்கொண்டு உள்ளே அழைத்துச் சென்றாள். முனியம்மா என்று கூப்பிட்ட குரலுக்கு வேலைக்காரி ஓடிவந்தாள். வாங்கய்யா என்று சொல்லிக்கொண்டே உள்ளே வந்தாள்.

இதுதான் முனியம்மா. நம்ம வீட்டு வேலைக்காரி. இவளோட புருசன் நம்ம தோட்டத்திலே வேல பார்க்கிறான். ஓவியாவிற்கு அறிமுகப்படுத்தினான் குமாரவேல். முனியம்மா பவ்யமாகக் கும்பிட்டாள். சென்னையில் எல்லோரிடமும் சகஜமாகப் பழகியவளுக்கு இங்க இவர்கள் எல்லாம் அடிமைகள் போலவும், தான் எஜமானி போலவும் மாறிப்போனது ஓவியாவிற்குச் கூச்சமாக இருந்தது.

அன்று முழுவதும் வீடு, வாசல், தோட்டம் என்று பொழுது போனாலும் ஓவியாவால் இன்னும் இந்தக் கிராமச் சூழலை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மாணவர்களுக்கு ஆங்கிலம், கணக்கு, அறிவியல் என்று சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தவளுக்கு இங்கு எப்படிப் பொழுது போக்குவது என்பதே நினைக்க நினைக்க கஷ்டமாக இருந்தது.

அத்தை நன்றாகப் பேசுகிறார்கள், குமாரவேலும் அன்புடன் நடந்து கொள்கிறான். ஆனால், இன்னமும் இவளால்தான் ஒன்றிப் போக முடியவில்லை.

குமாரவேலு விடுமுறை நாட்கள் முடிந்து பள்ளிக்குச் செல்லத் தொடங்கிவிட்டான். நன்னிலத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் பணி புரியும் குமாரவேல், மாலையில் சன்னாநல்லூரில் மாணவர்களுக்கு டியூசன் சொல்லிக் கொடுக்கின்றான். சுற்று வட்டார எல்லாப் பகுதியிலிருந்தும் மாணவர்கள் இங்கு படிக்கிறார்கள். பள்ளியில் எப்படியோ டியூசன் வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு நன்றாகச் சொல்லித் தருவான். இந்த நான்கைந்து வருடங்களாக திருவாரூர் மாவட்டத்தில் நல்ல மதிப்பெண் பெறும் பிள்ளைகள் எல்லாம் இவனிடம் டியூசன் படித்தவர்கள்தான்.

இன்னும் 3 மாதங்களில் நடக்கவிருக்கும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் மாநிலத்திலேயே முதல் மதிப்பெண் பெறும் பிள்ளையை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நன்கு படிக்கும் மாணவர்களுக்கு மேலும் பயிற்சியளித்துக் கொண்டிருந்தான்.

ஓவியாவிற்கு, தன்னை வீட்டுச் சிறையில் வைத்து விட்டார்களோ என்கிற அளவுக்கு வீடு, தோட்டம் என்றுதான் இருக்க முடிந்ததே தவிர வேறு எந்த வகையிலும் நேரத்தைக் கடத்த முடியவில்லை. தொலைக்காட்சி பார்க்கின்ற ஆர்வமும் அவளுக்கு இல்லை. அத்தை தொலைக்காட்சித் தொடர்களைப் பற்றி ஏதாவது சொல்லுவார்கள். இவளுக்கு ஒன்றுமே புரியாது. காலம் முழுக்க இப்படியேதான் கழியப் போகிறதா? என்னைப் போன்ற எத்தனை பெண்கள் படித்துவிட்டு அந்தப் படிப்பில் எந்த நன்மையும் விளைந்துவிடாமல் இப்படித் திருமணம் செய்து கொண்டு அவதிப்பட்டுக் கொண்டு இருக்கிறார்களோ!

அம்மா!

முனியம்மா வாசலில் நின்று கூப்பிட்டாள். பக்கத்தில் ஒரு சிறிய பெண். பள்ளிப் பையோடு நின்றிருந்தாள். அத்தை வீட்டிற்குள் வரச் சொன்னார்கள். என்ன செவ்வந்தி எப்படியிருக்க? நல்லாப் படிக்கிறீயா?

படிக்கிறேன் பாட்டி. துறுதுறுவென்றிருந்தாள். குமரியாக மாறக்கூடிய பருவத்திலிருந்தாள்.

ஓவியா இதுதான் முனியம்மா பொண்ணு. 10ஆம் வகுப்புப் படிக்குது. நல்லாப் படிப்பா. நம்ம குமாரவேலு மட்டும் இந்தப் பிள்ளைய டியூசன்ல சேர்த்துக்கிட்டிருந்தா, இந்தப் பொண்ணு இன்னும் நல்லாப் படிப்பா. பாப்பாரப் பிள்ளைங்களும், மேல் ஜாதிப் பிள்ளைகளும் படிக்கிறதால இந்தப் பிள்ளையைச் சேர்க்க மாட்டேனுட்டான்.

ஓவியா செவ்வந்தியைப் பக்கத்தில அழைத்தாள். நீ எங்கு படிக்கிறாய்?
ஆதிதிராவிட நலப்பள்ளியில் படிக்கிறேன்.

என்ன மார்க் எடுப்ப?

70, 75 மார்க் எடுப்பேன் அக்கா.

இதற்கு முன்னால் இவள் குடும்பத்தில் யாருக்கும் படிப்பு வாசனையே கிடையாது. காலங்காலமாய் கூலிவேலை மட்டுமே பார்த்து வயிற்றுக்கு வஞ்சனை இல்லாமலிருந்தால் போதும் என்றிருப்பவர்கள்.

ஆதிக்க ஜாதிகளின் அதிகாரப் பிடிக்குள் சிக்கிக் கொண்டிருப்பதுகூட உணராது வேலை செய்ய மட்டுமே பிறப்பு எடுத்திருப்பது போலிருப்பவர்கள்.

அந்தச் சமூகத்திற்குள் இருந்து வந்த பெண் பத்தாம் வகுப்பில் இவ்வளவு மதிப்பெண் எடுக்கிறாள் என்றால், சரியான வாய்ப்புக் கிடைத்தால்…

என்ன ஓவியா யோசிக்கிற!

ஒன்னுமில்லத்தை.

நீ என்ன யோசிக்கிறேன்னு எனக்குத் தெரியும். அத்தை நம்மை நன்றாகப் புரிந்து வைத்திருக்கிறார். நீ நினைத்தால் அந்தப் பெண்ணை நன்றாகப் படிக்க வைத்து வாழ்க்கையில் முன்னேற வைக்கலாம் என்று சொன்ன அத்தையிடம்,
ஆனால் அவருக்கு இது தெரிந்தால்?

எப்படித் தெரியும்மா? காலையில் பள்ளிக்கூடத்துக்குப் போய்ட்டு சாயங்காலம் டியூசன் சென்டருக்குப் போய்ட்டு இரவு ஒன்பது மணிக்குத் தானே வீட்டிற்கு வர்றான். சாயங்காலமா செவ்வந்திய வீட்டிற்கு வரச்சொல்லி இரண்டு மணி நேரம் பாடம் சொல்லிக்கொடு. புத்திசாலிப் பிள்ளை. நல்லாப் படிச்சிக்குவா. நல்ல படிப்புப் படிச்சு முன்னேறிப் போகட்டுமே. இவளாவது அந்தச் சமுதாயத்தை மாத்திக் காட்டட்டுமே.

அத்தையை ஆச்சரியத்தோடு பார்த்தாள்.

என்னம்மா அப்படிப் பார்க்கிற!

அவர் என்ன சொல்வாரோன்னு…

அந்தப் பெண்ணுக்குச் சொல்லிக் கொடுக்கிறது அவனுக்குத் தெரிஞ்சாத்தானம்மா. நான் சொல்ல  மாட்டேன். நீயும் சொல்லாம மறைச்சுடு. நீ நல்ல காரியம்தானே செய்யப் போகிறாய். தவிர, நீ படிச்ச படிப்பு ஏன் யாருக்கும் பயன்படாமல் இருக்கணும். நன்மை பயப்பதாக இருந்தால் ஆண்களுக்குத் தெரியாமல் பெண்கள் சில காரியங்கள் செய்வதுண்டுதானே.

என் கணவனை நான் இழந்து 15 வருடங்களாயிற்று. அப்பயிருந்து எனக்கு முனியம்மாதான் எல்லா வகையிலும் உதவியாயிருந்தா. அவ குழந்தைக்கு ஒரு நல்லது செய்றதுன்னா எனக்கு மகிழ்ச்சிதானம்மா.

சரி அத்தை, செவ்வந்திக்கு நாளையிலயிருந்து சொல்லிக் கொடுக்கிறேன்.

ஏம்மா நாளைக்கு! இன்னைக்கே ஆரம்பி!

ஓவியா சொல்லிக் கொடுக்கத் தொடங்கினாள். செவ்வந்தி ஆர்வமாகப் படிக்கத் தொடங்கினாள். மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக்கொடுப்பது எல்லா ஆசிரியர்களுக்கும் வருவதில்லை. எந்த ஆசிரியரின் வகுப்பை மாணவன் ஆவலோடு எதிர்பார்க்கிறானோ அவரே நல்ல ஆசிரியர். அத்தகையவளாக இருந்தாள் ஓவியா. தமிழின் அழகான உச்சரிப்பையும் ஆங்கிலத்தில் இலக்கணம், கணிதத்தில் தேற்றங்களையும் சூத்திரங்களையும் நன்றாகப் புரியும்படியாக அதேநேரத்தில் மறக்காமலிருக்க சில பயிற்சிகளையும் செவ்வந்திக்குச் சொல்லிக் கொடுத்தாள். ஊரில் (பள்ளியில்) பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுத்ததையெல்லாம் இங்கு ஒரே பிள்ளைக்குச் சொல்லிக் கொடுத்தாள். இந்த மூன்றுமாத காலத்திற்குள் செவ்வந்தி நன்கு கற்றுத் தேறியிருந்தாள். தேர்வுகள் முடிந்து இரண்டு மாதங்கள் கழிந்தன. குமாரவேலு காலையிலிருந்து தொலைக்காட்சி முன்னால் உட்கார்ந்திருந்தான். இன்று எஸ்.எஸ்.எல்.சி முடிவுகள் அறிவிக்கப்படும். தான் சொல்லிக்கொடுத்த பிள்ளைகள்தான் இந்த முறை கண்டிப்பாக அதிக மதிப்பெண் பெறுவார்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையுடன் இருந்தான்.

தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. தமிழ்நாட்டில் முதலிடத்தைப் பிடித்திருப்பது ஒரு மாணவி. அதுவும் திருவாரூர் மாவட்டம் என்று சொல்லும்போது அந்த அரை விநாடிக்குள் தன்னிடம் படித்த ஹேமாவா, பத்மாவா, காயத்ரியா, பங்கஜமா என்று அவன் மனதிற்குள் ஓடியது. ஆனால் ஆதிதிராவிட நலப்பள்ளி மாணவி செவ்வந்தி 498 மதிப்பெண் பெற்றிருக்கிறாள் என்ற செய்தியைக் கேட்டபோது அவனுடைய மனதிற்கு ஏமாற்றமாய்ப் போய்விட்டது.

ஆதிதிராவிடப் பள்ளியில் படித்த பெண் முதல் இடமா? இவனால் நம்பவே முடியவில்லை. என்னிடம் உள்ள அத்தனை திறமையையும் காட்டிச் சொல்லிக் கொடுத்தேனே, அப்படியிருந்தும் தலைமுறை தலைமுறையாய் படித்த வீட்டுப் பிள்ளைகளைவிட மிகச் சாதாரணமான பெண் மதிப்பெண் வாங்கி விட்டாளே என்று நினைத்து தோல்வியுற்ற மாணவன்போல் மனம் வெதும்பிப் போனான்.

வீட்டு வாசலில் முனியம்மாவின் குரல் கேட்டது. பக்கத்தில் செவ்வந்தி மகிழ்ச்சித் துள்ளலோடு நின்று கொண்டிருந்தாள். குமாரவேலுவின் அம்மாவும், ஓவியாவும் வாசலுக்கு வந்தார்கள். ஓவியாவைப் பார்த்ததும் செவ்வந்தி நன்றியை வெளிப்படுத்த பெருகிய கண்ணீரோடு காலில் விழப் போனாள். அதற்குள் ஓவியா அவளைத் தூக்கி யார் காலிலும் விழக்கூடாது என்பதுதான் சுயமரியாதை. அந்தச் சுயமரியாதை உனக்கு வரச் செய்வதற்கு உதவிதான் இந்தப் படிப்பு. இனி உன்னால் எல்லாவற்றையும் நன்றாகக் கற்க முடியும். இயல்பாக உனக்கு உள்ள மூளைத் திறமையும் கற்ற கல்வியறிவும் உனக்கு ஒரு நல்ல எதிர்காலத்தையும் உண்டுபண்ணும். வருங்காலத்தில் உன் சமுதாய மக்களுக்கு விழிப்புணர்ச்சி உண்டாக்கிக் கைகொடுத்துத் தூக்கிவிடு! அதைத்தான் நான் விரும்புகிறேன் என்ற மருமகளை அத்தை பெருமையாகப் பார்த்துக்கொண்டு நின்றாள்.

சரியக்கா நான் பள்ளிக்குச் சென்று வருகிறேன் என்று முனியம்மாவை அழைத்துக்கொண்டு போய்விட்டாள். அதுவரையில் வீட்டின் உள்ளேயிருந்து கவனித்துக் கொண்டிருந்த குமாரவேல் முறைத்துக்கொண்டே வெளியில் வந்தான். ஓவியா சற்று பயந்திருந்தாள். ஆனால் அத்தை, என்னடா பார்க்கிறாய்? மாநிலத்தில் முதலிடம் பெற்ற பெண்ணை நினைவுக்கு வருகிறதா? ஆறு மாதங்களுக்கு முன் முனியம்மா மகளுக்கு டியூசன் சொல்லிக்கொடு என்று சொன்னேனே, அந்தப் பெண்ணை நிமிர்ந்துகூடப் பார்க்காமல் வெளியில் அனுப்பச் சொன்னாயே, அந்தப் பெண் செவ்வந்திக்கு ஓவியா தான் கற்ற கல்விக்குத் துரோகம் செய்யாமல் கற்றுக் கொடுத்தாள். ஒரு குடும்பம் முன்னேற வேண்டுமானால், அந்தக் குடும்பத்தில் உள்ள பெண்ணுக்குக் கல்வியைக் கொடு என்று சொல்வார்கள். அதைத்தான் என் மருமகளும் செய்தாள். அவள் அப்படிச் செய்தது உனக்குச் செய்த துரோகம் என்றால் அந்தத் துரோகத்தைச் செய்யத் தூண்டியதே நான்தான் என்றார். குமாரவேலு எதுவும் பேசாமல் வீட்டிலிருந்து வெளியே போய்விட்டான். மாலை வீட்டிற்குத் திரும்பியவன் கையில் கொண்டுவந்த விண்ணப்பப் படிவத்தை ஓவியாவிடம் நீட்டினான். நாளை நாகமணியம்மை மெட்ரிக் மேனிலைப்பள்ளியில் நீ வேலைக்குச் சேருகிறாய். படிவத்தைப் பூர்த்தி செய். இனியும் உன் திறமையை வீணாக்க விரும்பவில்லை என்றான் புன்சிரிப்போடு. ஓவியா மகிழ்ச்சி மிகுதியால் அத்தை இருப்பதைப் பற்றிக் கவலைப்படாமல் குமாரவேலுவை அணைத்துக் கொண்டாள். மகனுடைய மாற்றத்தைக் கண்டு சந்தோசப்பட்டு அவர்கள் அணைத்துக் கொண்டு நிற்பதைப் பார்த்து வெட்கப்பட்டு  வெளி வாசலுக்கு வந்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *