கேள்வி : பிடிக்காதவரைப் பழிவாங்குவதாக நினைத்து அவர்மீது பொய் வழக்குப் போட்டு, சட்டத்தையும் கேவலப்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடமுண்டா? – நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்
பதில் : நிச்சயம் இடம் உண்டு. Vexatious litigation false allegation வேண்டாத வீண்வழக்கு, பொய்க் குற்றச்சாட்டு அடிப்படையில் நிரூபித்து வழக்குப் போட இடம் உண்டு.
கேள்வி : நிலுவை வழக்குகளை முடிக்க நானூறு ஆண்டுகூட ஆகலாம் என்று உயர் நீதிமன்ற நீதிபதி சுந்தரேஷ் பேசியுள்ளாரே! இதுதான் இந்தியாவில் நீதி பரிபாலனம் நடைபெறும் அழகா? – இ.கிருபாகரன், சோளிங்கர்
பதில் : வெட்கப்பட வேண்டிய வேதனை மிகுந்த நிலை. இந்தியாவைத் தவிர, வேறு நாடுகளில் இப்படி ஒன்று கேள்விப்பட முடியாது.
கேள்வி : இந்தியாவில் பெரும்பான்மையோர் இருக்கும் மதத்தில் மூடநம்பிக்கையைத் தவிர வேறு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லையே?
– ஜே.அய்.எ.காந்தி, எரும்பி
பதில் : மதத்தில் மூடநம்பிக்கை என்பது உடலில் உயிர் போன்றது. மூடநம்பிக்கையைக் கேள்வி கேட்காமல் ஏற்பது, நம்புவதுதான் மதத்தின் அடிப்படையாகும்.
கேள்வி : போராட்டங்களே தமிழரது வாழ்க்கையாக அமைந்துவிட்டதற்குக் காரணம்… ஜாதி, மத வேறுபாடுகளா? அறியாமையா? ஒற்றுமையின்மையா? தன்னலவெறியா? பார்ப்பனியத் தாக்குதலா?
– கி. அன்பரசன், காஞ்சி
பதில் : நீங்கள் குறிப்பிட்ட அத்தனையையும் சேர்த்துக் கூட்டிடுவதன் விளைவுதான்! 50 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்து ஆதார் அட்டை தயாரித்தும் மக்களிடம் முறையாகச் சென்றடையவில்லை. மத்திய அரசின் தேவையற்ற செயல்களில் இதுவும் ஒன்று.
கேள்வி : இந்தியாவில் உள்ள வளர்ச்சி பெறாத மாநிலங்களுக்கு ரூ.1000 கோடி வீதம் அளித்திருந்தால் நன்மை விளைந்திருக்குமே?
– பி. கூத்தன், சிங்கிபுரம்
பதில் : எத்தனையோ அரசு விரயங்களில் இதுவும் ஒன்று என்றே கருத வேண்டும்.
கேள்வி : இசைக்கு இலக்கணம் வகுத்தவர்கள் கர்நாடக இசை வல்லுனர்களே என்ற கருத்து குறித்து? – எஸ். கோவிந்தசாமி, பெரம்பலூர்
பதில் : இசைப் பேரறிஞர்களிடம் கேட்க வேண்டிய கேள்வி இது. என்னிடம் கேட்கிறீர்களே! இதற்குப் பதில் கூறும் அளவுக்கு இசை அறிவு படைத்தவன் அல்ல நான்!
கேள்வி : கருத்தைக் கருத்தால் வெல்ல முடியாமல் வெறியாட்டம் நடத்தும் கயவர்களைப் பற்றி? – வெங்கட. இராசா, ம.பொடையூர்
பதில் : வள்ளுவர் காலம் முதல் இன்றுவரை கயவர்களுக்கா பஞ்சம்? தேவரனையர் கயவர் . தேவர்_(ஆரியர்), அசுரர்_(திராவிடர்). எனவே நமது இலட்சியப் பயணத்தில் இவை நமக்குப் பூச்செண்டுகளே!
கேள்வி : திருப்பதி குடையைத் தரிசித்தால் கோடி புண்ணியம் கிடைக்கும் என இங்கு இருப்போர் பஜனை பாட, இந்த நிகழ்ச்சியில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் கலந்துள்ளாரே. இது சட்டப்படி சரிதானா?
– ஜி.சாந்தி, பெரம்பலூர்
பதில் : என்ன செய்வது? படிப்புக்கும் பதவிக்கும் பகுத்தறிவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லையே!
கேள்வி : செப்.29 டெல்லியில் மோடி பங்கேற்ற பா.ஜ.க. கூட்டத்தில் 36 நாட்டு தூதரக அதிகாரிகள் கலந்துகொள்ள சம்மதம் தெரிவித்துள்ளதாக அக்கட்சியின் வெளிநாட்டுப் பிரிவு அமைப்பாளர் விஜய் ஜாலி ஊடகங்களிடம் தெரிவித்தார். ஆனால், எந்த நாட்டு தூதரக அதிகாரியும் கலந்துகொள்ளவில்லையே – கவனித்தீர்களா? – மன்னை சித்து, மன்னார்குடி
பதில் : புருடாக்களிலேயே _ மோடி பற்றிய புருடாக்களே இந்தியாவில் தலைசிறந்த கொயபெல்ஸ் பிரச்சாரமாக உள்ளது என்பதற்கு இதுவும் ஒரு சான்று ஆகும்!
கேள்வி : வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டு திராவிடக் கட்சிகள் அனைத்தும் ஒரே அணியாய் நின்றால் 40 இடங்களையும் கைப்பற்ற முடியுமே? அதன்பின் அமைச்சரவையில் சேராமல் இருந்தால் தமிழ்நாட்டின் உயிர்ப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முடியுமே. எனது கனவு பலிக்குமா?
– சீர்காழி கு.நா. இராமண்ணா, சென்னை
பதில் : உங்கள் கனவு ஒருபோதும் நடக்காது; ஏற்கெனவே நாம் திராவிட பார்முலா சொன்னபோதும் பலனில்லை. தமிழ்நாட்டில் சாவு வீட்டிற்குக்கூட ஒன்றாக சேர்ந்து போக மறுக்கும் வெட்கக்கேடான நிலை உள்ளதே! இதுவா நடக்கும்?