தமிழர்களின் வரலாற்றில் நிச்சயமாக சரஸ்வதி என்ற கடவுள் இல்லை. காரணம், சரஸ்வதி என்ற பெயரே தமிழ் இல்லை. (பின்னாட்களில் பக்திமான்களான சில தமிழ் ஆர்வலர்கள் இந்த சரஸ்வதியை கலைமகள் என்று மொழிபெயர்த்தார்கள்.) பட்டறிவும், பகுத்தறிவும் வழிநடத்திட வாழ்ந்த தமிழினத்தில் தொல்காப்பியமும், திருக்குறளும் தோன்றி மொழியை வளப்படுத்தின. சங்க இலக்கியங்கள் தோன்றின.
திருவள்ளுவர் கல்வி குறித்து நிறையவே எழுதியுள்ளார். கல்வியின் தேவையை வலியுறுத்தியுள்ளார். பொருளாதார பலம் உள்ளவர்களே அந்நாட்களில் ஓரளவு கல்வி பெற்றிருக்க முடியும். பெரும்பான்மையரான ஒடுக்கப்பட்ட மக்கள் உழைப்பிலேயே காலம் கடத்தியிருக்க வேண்டும்.
இந்தப் பின்னணியில் தமிழகத்திற்குள் நுழைந்த ஆரியம் கொண்டு வந்த கேடுகளில் முதன்மையானது கடவுள்களும், அதனை ஒட்டிய சடங்குகளும், பண்டிகைகளும்தான். தமிழர்களின் உழைப்பைச் சுரண்டும் கருவிகளாக இவற்றை உருவாக்கினார்கள்; அவற்றிற்குக் கதை புனைந்தார்கள். அவை அத்தனையும் ஆபாசக் குவியல்கள். அதில் ஒன்று கல்விக் கடவுள் சரஸ்வதி என்பது. இதற்காக ஆண்டுதோறும் பூஜை நடத்தினால் நல்ல பலன் கிடைக்கும் என்றார்கள். தமிழர்களும் தமது முன்னோர்களின் வரலாறு அறியாது, பகுத்தறிவைப் பயன்படுத்தாது அப்படியே நம்பினார்கள். கல்விக் கடவுளை உருவாக்கிய பார்ப்பனர்கள்தான் மனுதர்மத்தையும் உருவாக்கியவர்கள்.
சரஸ்வதிக்கு பூஜை போடு; உனக்கு அருள் பாலிக்கும் என்று ஒருபக்கம் கூறி பூஜைகளால் கிடைக்கும் வருவாயைக் கொண்டு வயிற்றைக் கழுவியவர்கள், உனக்குக் கல்வி கற்கும் உரிமை இல்லை என்று தமது இன்னொரு பக்கத்தைக் காட்டினார்கள். இதன் விளைவுதான் 19ஆம் நூற்றாண்டு வரை நமக்குக் கல்வி இல்லை. 1910ஆம் ஆண்டுகளில் படித்தவர்களின் விழுக்காடு 1 மட்டுமே.
ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவாய் சில பள்ளிகளும், சில கல்லூரிகளும் தொடங்கப்பட்டன. சமூகத்தின் மேல்தட்டு மக்கள் பணம் கட்டிப் படித்தார்கள். ஆனால், பெருவாரியான பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அந்த வாய்ப்புக் கிடைக்கவில்லை. இந்திய விடுதலைக்குப் பின் ராஜாஜியின் ஆட்சியில் இருந்த பள்ளிக்கூடங்களும் மூடப்பட்டன. பின்னர் தந்தை பெரியாரின் ஆதரவோடு அமைத்த பச்சைத் தமிழர் காமராஜர்தான் 12 ஆயிரம் பள்ளிக்கூடங்களைத் திறந்தார். இலவசக் கல்வியை அளித்தார். பள்ளிக்கூடத்தை நோக்கி மக்களை ஈர்க்க மதிய உணவு தந்தார். இதன் விளைவு தமிழகத்தின் படிப்பறிவு நிலை உயர்ந்தது. கடந்த 2011ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் தமிழகத்தில் படித்தோரின் எண்ணிக்கை 80.3 விழுக்காடு (ஆண்கள் 86.8, பெண்கள் 73.9). இத்தகைய கல்விப் போராட்டத்தில் எங்காவது ஓர் இடத்திலாவது கல்விக் கடவுள் சரஸ்வதிக்குப் பங்கு உண்டா? சரஸ்வதி கடவுளாக ஏற்கப்பட்ட 19ஆம் நூற்றாண்டுவரை கல்வி நிலை பூஜ்ஜியமாக இருந்ததே! சரஸ்வதியின் கடைக்கண் பார்வை ஏன் அவளை நம்பிய பக்தர்களுக்குக் கிட்டவில்லை.
6 ஆண்டுகளே பள்ளிக்கூடத்திற்குச் சென்ற காமராஜருக்கு இருந்த சமூகப் பொறுப்புணர்ச்சி, கல்விக்கடவுள் சரஸ்வதிக்கு அத்தனை ஆண்டுகளாகியும் இல்லையே ஏன்? இதற்குக் காரணம் என்ன? காமராஜர் உயிருள்ள மனிதர். சரஸ்வதி இல்லாத கடவுள். இந்தக் காரணமின்றி வேறுண்டா?
சரி, அந்த சரஸ்வதியின் கதைதான் என்ன? சரஸ்வதி என்கிற ஒரு பெண், படைப்புக் கடவுள் பிரம்மாவுடைய உடலிலிருந்து உருவாக்கினாராம். அதன்பின் அவள் அழகைக் கண்டு பிரம்மனே அவள் மீது மோகம் கொண்டானாம். அதன் காரணமாக சரஸ்வதியைப் புணர அழைக்கும்போது, பிரம்மா தந்தை என்பதால் அதற்கு உடன்படவில்லை. பின், பிரம்மாவிடமிருந்து தப்பிக்க எண்ணி பெண் மான் உருவம் எடுத்து ஓடினாளாம். உடனே பிரம்மனும் ஆண் மான் உருவமெடுத்து சரஸ்வதியை விரட்டியுள்ளான். சிவன் வேட உருவமெடுத்து ஆண் மானைக் கொல்லவும், பின்னர் சரஸ்வதி அழுது சிவபிரானால் மறுபடியும் பிரம்மனை உயிர்ப்பிக்கச் செய்து, பிரம்மாவுக்கு மனைவியாக மீண்டும் சரஸ்வதி சம்மதித்தாள் என்று சரஸ்வதி உற்பவக் கதை கூறுகிறது.
இது போக இன்னொரு கதையும் உண்டாம்.
ஒரு விதத்தில் சரஸ்வதி பிரம்மாவுக்குப் பேத்தியாம். ஒரு காலத்தில் ஊர்வசியின் மீது ஏற்பட்ட ஆசையினால் வெளிப்பட்ட இந்திரியத்தை(விந்து) ஒரு குடத்தில் நிரப்பிவைக்க, அக்குடத்தில் இருந்து அகத்தியன் என்பவன் வெளியாகி அந்த அகத்தியனே சரஸ்வதியைப் பெற்றான் என்கிறது அந்தக் கதை.
இவ்வளவு ஆபாசம் நிறைந்த கதைக்கு உரிய சரஸ்வதிதான் நமக்குக் கல்விக்கடவுள் என்று கற்பித்த ஆரியத்தை என்னவென்பது? சரஸ்வதி பூஜை செய்துவிட்டு பாடப் புத்தகத்தை மூடி வைத்துவிட்டால் தேர்வில் தேர்ச்சி அடையமுடியுமா? கல்வி என்பது முயற்சியிலும், பயிற்சியிலும் கிடைக்கும் செல்வம் அல்லவா. அதில் கடவுளுக்கு என்ன வேலை?
நம் பாட்டன் வள்ளுவன் எங்காவது இந்த சரஸ்வதிகளைப் பற்றிச் சொல்லியிருக்கிறாரா? `கேடில் விழுச்செல்வம் கல்வி, `கற்றனைத்தூறும் அறிவு, `கற்க கசடற -என்பனவல்லவா வள்ளுவரின் வாக்கு. இந்த மாதிரிக் கதைகள் எதுவும் இல்லாத, கல்விக் கடவுள் சரஸ்வதி என்றால் என்னவென்றே தெரியாத இந்தியாவைத் தவிர்த்த மற்ற உலக நாடுகளில் எல்லாம் கல்வி நிலை மேம்பட்டுள்ளதே அது எப்படி? நமக்கு முன்பேயே உலக நாடுகள் பலவும் கல்வி முறையை உருவாக்கி அதனைத் தாமும் கற்று மற்ற நாட்டு மக்களுக்கும் அளித்தார்களே! அவர்களுக்கு இப்படி ஓர் கடவுள் கிடையாதே. கல்விக்குக் கடவுள் இல்லாத நாட்டுக்காரன், கல்விக்குக் கடவுளைக் கற்பித்த நாட்டுக்காரனுக்கு கல்வியைக் கொடையாக அளித்தது அவனது மனிதாபிமானம் அல்லவா? ஆனால், தனது சொந்த மக்களுக்கே கல்வி உரிமை அளிக்காத மதாபிமானிகள் கற்பித்த சரஸ்வதி பூஜையை தமிழ் மக்கள் இன்னும் கொண்டாடலாமா?
இந்துக்களாக ஆக்கப்பட்ட தமிழர்களே… அறிவுக்குப் பொருந்தாத, அனுபவத்திலும் உதவாத அர்த்தமற்ற இந்து மதப் பண்டிகைகளை இன்னும் எத்தனைக் காலத்திற்குத்தான் கொண்டாடப் போகிறீர்கள்?
– அன்பன்