– பே.பா.குபேரன்
பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் இந்திரனுக்கு ஒரு யோசனை. அடுத்தது மகாபாரதக் கதையைப் படமாக்க வேண்டும். மக்களின் வரவேற்பு எப்படி இருக்கும் _ இளைய தலைமுறையின் எதிர்பார்ப்பிற்கு ஏற்றபடி திரைக்கதையை உருவாக்க வேண்டுமே… இப்படியெல்லாம் நினைத்துக் கொண்டு கண்ணயர்ந்தார் இந்திரன். அவரது மனத்திரையில் வியாசர் விருந்து காட்சிகளாக உருவெடுக்க ஆரம்பித்தது. அப்போது _
நாள்தோறும் செய்துவரும் விநாயகர் பூசனையை முடித்தபோது கண்ணெதிரே ஒரு வெளிச்சம். இந்திரனுக்குக் கண்கள் கூசின. சாட்சாத் விநாயகர் வந்து நின்றார்.
வணக்கம் கடவுளே! என் பாக்கியமே பாக்கியம்! என் வழிபாட்டுக்குப் பலன் கிடைத்துவிட்டது. வாழ்த்துங்கள் சுவாமி _ என்னை வாழ்த்துங்கள்!…
வாழ்த்துகிறேன் _ ஆனால் ஒரு நிபந்தனை…
சொல்லுங்கள் சுவாமி!…
நீ தயாரிக்கும் மகாபாரதக் கதையை நான்தான் எழுதினேன்; தெரியுமா…
தெரியும் சுவாமி! எழுதுகோல் இல்லாத காலத்தில் உங்களுடைய தந்தத்தை ஒடித்து எழுதினீர்களாமே_
படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதுகின்ற பொறுப்பை என்னிடம் ஒப்படைத்துவிடு. படத்தின் பெயருக்கு முன் விநாயகர் அளிக்கும் என்று குறிப்பிட வேண்டும். இதுதான் என் கண்டிஷன்!
உங்களுக்கும் சினிமா ஆசை வந்துவிட்டதா சுவாமி? உங்கள் விருப்பப்படியே திரைக்கதை வசனம் எழுதிவிடுங்கள்!…
சரி சரி! உன் முயற்சிக்கு என்னுடைய ஆசிர்வாதம்! உன் படம் வைரவிழா கொண்டாடும்!… சந்தேகமே இல்லை…
முழுமுதற் கடவுள் விநாயகரே தரிசனமாகி சினிமா சான்ஸ் கேட்டுவிட்டார். மறுக்க முடியவில்லை இந்திரனால். ஏடுகளில் செய்திகளும் விளம்பரங்களும் வெளிவரத் தொடங்கின. இந்திரன் மூவிஸ் தயாரிக்க இருக்கும் மகாபாரதக் கதைக்கு தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் தேவை…
பிள்ளையாருக்கு வாய்ப்புக் கொடுத்தது சம்பந்தமாக பைனான்ஸியர் குபேந்திரனுக்கு மகிழ்ச்சி. பகவானின் ஆசி, அத்துடன் பிள்ளையாரின் பக்தர்கள் குவிந்து விடுவார்கள் _ வைரவிழா கொண்டாடலாம் _ மூன்றுமாத காலத்திற்கு நுழைவுச்சீட்டு முன்பதிவு ஆகிவிடும்! நிச்சயம் சுவிட்சர்லாந்து வங்கியில் பணம் போட்டு வைக்கலாம்….
இந்திரன் மூவிஸ் வாசலில் தேவர்கள் கூட்டம். நடிப்பதற்கு வாய்ப்புக் கேட்டு நீண்ட வரிசை… இந்த வரிசையைப் பொருட்படுத்தாமல் அலுவலகத்தில் நுழைந்தார் ஒரு முதியவர். நரைத்த தாடி, மீசை, ஒரு கையில் தடி _ இன்னொரு கையில் கமண்டலம்; இவர்தான் வியாசர். கோபம் கொந்தளித்தது அவர் முகத்தில்.
பெரியவரே! உமக்கெல்லாம் வாய்ப்புக் கொடுக்க முடியாது _ தயவுசெய்து போய் வாருங்கள்!
நான் உங்களிடம் வாய்ப்புக் கேட்டு வரவில்லை! நான்தான் வியாசர்! மகாபாரதம் என்னுடைய கதை! இந்திரனும் குபேந்திரனும் திகைத்தனர்.
அப்படியா_
இமயமலைச் சாரலில் தங்கியிருந்த சமயத்தில், நான் கதையைச் சொன்னேன். அதைத்தான் விநாயகர் எழுதினார். இனிமேல் விளம்பரத்தில் மூலக்கதை _ வியாசர் என்று குறிப்பிட வேண்டும். இல்லாவிட்டால்_
பெரியவரே! கோபப்படாதீர்கள்! நாங்கள் விநாயகரைக் கலந்துகொண்டு முடிவெடுக்கிறோம்… அவசரப்பட்டு வழக்குத் தொடர்ந்து விடாதீர்கள் _ போய் வாருங்கள்.
பெருமூச்சு விட்டபடி புறப்பட்டார் வியாசர். வியாசர் சொல்வதும் நியாயம்தானே_ இந்திரன் நினைத்துக் கொண்டார்.
ஏடும் எழுத்தாணியுமாக விநாயகர் வந்து நின்றார். வாருங்கள் விநாயகரே! கொஞ்ச நேரத்திற்கு முன்னால் ஒரு பெரியவர் _ வியாசராம்! இங்கே வந்து சத்தம் போட்டார் என்ன சேதி?
மகாபாரதம் _ அவர் சொல்லிய கதையாம்! எங்களுக்கு ஒரே டென்ஷன் ஆகிவிட்டது. தயவு செய்து உண்மையைச் சொல்லுங்கள். இது உங்கள் கதையா அல்லது வியாசரின் கதையா?… _ பெரிய கதை! வியாசர்தான் கதை சொன்னார். அவர் கதை சொல்லிய பிரகாரம் இப்போது நான் கதை எழுதவில்லை… பல திருத்தங்கள், மாற்றங்கள் செய்துதான் திரைக்கதை எழுதியிருக்கிறேன். அவர் சொல்லிய கதையைப் படமாக்கினால் திவால் ஆகிவிடுவீர்கள். படத்திற்கு பாக்கியராஜ் பாணியில் அந்த பனினெட்டு நாட்கள் என்று பெயர் வைத்திருக்கிறேன். படம் வெளிவந்த பிறகு வியாசர் பார்க்கட்டும் _ அவர் சொன்ன மூலக்கதைக்கும் நான் எழுதிய திரைக்கதைக்கும் யாதொரு சம்பந்தமும் இருக்காது… விநாயகர் சிரித்தார்.
மகாபாரதக் கதைக்கு ராஜாஜி வியாசர் விருந்து என்றுதானே பெயர் வைத்தார். ஆனபடியால் _
பெயர் போடும்போது… கீழ்வரிசையில் ரொம்பவும் சின்ன எழுத்துகளில் மூலக்கதை _ வியாசர் என்று குறிப்பிடுங்கள்; அதுபோதும்! நான் ரொம்பவும் சிரமப்பட்டு திரைக்கதை அமைத்திருக்கிறேன். கேளுங்கள்! பதினெட்டு நாட்கள் யுத்தம் நடைபெற்றது. ஒவ்வொரு நாளும் இரவில் வீரர்கள் இன்பக் கனவு காண்பார்கள்… எல்லாம் தேன்நிலவுக் காட்சிகள். இத்துடன் அரண்மனையில் பெண்கள் குளிக்கும் காட்சி _ அஸ்தினாபுரத்தில் அழகுப் போட்டி! தாமரைப் பொய்கையில் நங்கையர் நீச்சல் போட்டி! இத்துடன் துச்சாதனன் திரவுபதியின் துகிலுரியும் காட்சி… தேவர்கள் ஆனந்தப்பரவசம் அடைவார்கள் _ ஜொள்ளு விடுவார்கள்!…
சூப்பர் சுவாமி! யுத்தக் கதையை முத்தக்கதை ஆக்கிவிட்டீர்கள். இப்படியெல்லாம் நீங்கள் எழுதுவீர்கள் என்று நாங்கள் நினைக்கவே இல்லை சுவாமி! நன்றி… நன்றி… நடிகர்கள் தேர்வு நடைபெற்றபோது, கருட வாகனத்தில் திருமால் வந்து இறங்கினார். எல்லோரும் சிரம்தாழ்த்தி வணங்கினார்கள். சொகுசு நாற்காலியில் உட்கார்ந்தார் பகவான். இந்திரன் உபசரித்தார்.
பகவானே ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் நாங்களே வைகுண்டலோகம் வந்திருப்போமே! பாற்கடல் பள்ளியைவிட்டு இந்தப் படக்கம்பெனிக்கு ஏன் வந்தீர்கள் சுவாமி? உங்கள் தரிசனம் _ நாங்கள் தன்யர்கள் ஆனோம்…
பாரதக் கதை நடந்த காலத்தில் நான்தான் கண்ணபிரானாக அவதாரம் செய்தேன். ஸ்ரீகண்ணபிரான் வேஷத்திற்கு என்னையே போட்டுவிடுங்கள்… ரொம்பவும் பொருத்தமாக இருக்கும்!…
கண்ணனாக நீங்கள் நடிப்பதில் எங்களுக்கு ஆட்சேபணை இல்லை… ஆனால், _ என்.டி.ராமாராவ் பாணியில்தான் நீங்கள் நடிக்க வேண்டும். உங்கள் இஷ்டப்படி எல்லாம் நடிக்கக்கூடாது! என்.டி.ஆர். நடித்த படங்களின் வீடியோ போட்டுக் பார்த்து அவரைப் போலவே நடித்துவிடுங்கள்!…
நான்தான் கண்ணன். உங்களுக்கும் தெரியும். நான் என்.டி.ஆரைக் காப்பி அடிக்க வேண்டுமா…
ஆமாம் சுவாமி! அப்போதுதான் படம் ஓடும். விநியோகஸ்தர்கள் படத்தை வாங்குவார்கள். நடிப்புக்குச் சம்பளமாக, வைகுண்டம் ஏரியாவுக்கு நீங்கள் விநியோகஸ்தர்!… இந்த வார்த்தைகளைக் கேட்டதும் கண்ணனாக நடிக்க திருமால் ஒப்புக்கொண்டார். குபேந்திரா, நான் திருப்பதியில் என் கல்யாணத்திற்காக வாங்கிய கடனைச் சீக்கிரம் திருப்பிக் கொடுத்து விடுவேன்…
மகாபாரத காலத்தில் செத்துப்போன தேவர்கள் இப்போது சொர்க்கத்தில் அந்தந்தக் கதாபாத்திரங்களாக நடிக்க வந்துவிட்டார்கள்.
ஒரு வழியாக படப்பிடிப்பு ஆரம்பமானது. நாரதர், இசை அமைப்பாளராகப் பொறுப்பேற்றார். விநாயகரின் எழுத்து, இந்திரனின் இயக்கம்… அந்தப் பதினெட்டு நாட்கள் திரையிடப்படும் நாள் நெருங்கியது….
அந்தப் பதினெட்டு நாட்கள் திரைப்படத்தின் மூலமாக பகவத்கீதையின் ரகசியத்தை ஒரே வார்த்தையில் சொல்லிவிட்டார் விநாயகர். உண்மையில் கீதா ரகசியம் என்பது என்ன?…
போர்க்களத்தில் இரு தரப்பினரும் அணிவகுத்து நிற்கிறார்கள். தேரோட்டியாகிய கண்ணன், அர்ச்சுனனுக்கு உபதேசம் செய்கிறான். உற்றார் உறவினர்களைப் போரிட்டுச் சாகடித்துவிட்டு சக்கரவர்த்தியாக வேண்டுமா! வேண்டாம்… இப்படி முடிவு செய்த அர்ச்சுனனுக்கு மந்திர உபதேசம் செய்கிறார். ஒரே வார்த்தை… பதவியே பரமசுகம்! ஆமாம்… பதவியே சுவர்க்கம்! பதவியே வாழ்க்கை!… பதவி நாற்காலி பார்ப்பானுக்கு மட்டும்… மற்ற இனத்தவர்கள் அவர்களுக்குப் பல்லக்குச் சுமக்க வேண்டும். பிரம்மாவின் நெற்றியில் பிறந்த பிராமணருக்கு மட்டும் _ உத்தியோகம் புருஷலட்சணம்! ஏனையவர்கள் கர்மபலன், பழைய பிறவி, விதி என்று மூளைச்சலவை செய்யப்பட்டு பகுத்தறிவை இழந்துகொண்டு இருக்க வேண்டும்… கட்டிய மனைவியைக் காப்பாற்ற வக்கில்லாத இராமனையும், பிறன் மனையைப் பெண்டாள நினைத்த கிருஷ்ணனையும் காலமெல்லாம் வணங்கிக் கொண்டிருக்க வேண்டும்… வருணாசிரமதர்மம் என்னும் நச்சுமரத்தின் வேர்தான் பகவத் கீதை!…
கண்ணனின் உபதேசம் கேட்டபிறகு, புதிய உற்சாகத்துடன் போரிட்டான் அர்ச்சுனன்.. நாடு சுடுகாடானது; பாண்டவர்களுக்கு வெற்றி! செத்தவர்கள் எல்லாம் வைகுண்டலோகத்தில் வாழ்கிறார்கள்… சுபம்… படம் முடிவடைகிறது.
இதோ, படம் தணிக்கை செய்யப்பட்டு விட்டது. ஏ சர்டிபிகேட் கொடுக்கப்பட்டது. பிரிவியு தியேட்டரில் விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் மற்றும் முக்கிய தேவர்களுக்காக அந்தப் பதினெட்டு நாட்கள் திரையிடப்பட்டது. வாசலில் பெரிய அளவில் விநாயகர் கட்அவுட் _ எல்லோருக்கும் இலவச கொழுக்கட்டை, சுண்டல்!…
மயில் வாகனத்தில் முருகன், காளைமீது சிவன், அன்னப்பட்சியில் பிரம்மா, சிம்ம வாகனத்தில் பார்வதி, கருடன் மீது திருமால் அனைவரும் வந்துவிட்டார்கள். இந்திரனும், குபேந்திரனும் வந்தவர்களை வரவேற்று வணங்கி தியேட்டருக்குள் அனுப்பிக் கொண்டிருந்தனர். அப்போது_ இருவருக்கும் அதிர்ச்சி. காக்கை வாகனத்தில் ஒருவர் வந்து இறங்கினார். கால் ஒன்று நொண்டி _ கருத்த உருவம் _ அவர்தான் சனிபகவான். தேவேந்திரா, போச்சு, எல்லாம் போச்சு. இவரை யார் கூப்பிட்டார்கள்? இவர் பார்வை பட்டால் எல்லாம் சாம்பலாகிவிடுமே… சனிபகவானையும் காகத்தையும் பார்த்து தேவர்கள் கிண்டலாகச் சிரித்தனர். இந்திரன் சமாதானப்படுத்தினார். விவரம் தெரியாத தேவர்கள் _ அவர்கள் சிரிப்பதைப் பெரிசு பண்ணிக் கொள்ளாதீர்கள் சுவாமி!
இந்திரன், குபேந்திரன் இருவரும் சனிபகவானின் திருப்பாதங்களில் விழுந்தனர். ஆளுக்கொரு காலை கெட்டியாகப் பிடித்துக் கொண்டனர்.
பூலோகத்தில் நான் யாரையும் விட்டுவைப்பதில்லை. எல்லாரையும் பிடித்துக் கொள்வேன். நீங்கள் ஏன் என்னைப் பிடித்துக் கொள்கிறீர்கள்?…
ப்ளீஸ் சுவாமி ப்ளீஸ்! தயவுசெய்து நீங்கள் படம் பார்க்க வேண்டாம்! திரும்பிச் சென்று விடுங்கள். உங்கள் பார்வை எப்படிப்பட்டது என்று எங்களுக்குத் தெரியும்! படம் நூறுநாள் ஓடியபிறகு வீடியோ கேசட் அனுப்பி வைக்கிறோம். நீங்கள் சாவகாசமாக படம் பார்க்கலாம்…
அரிச்சந்திரன், நளமகாராசா கதைகளை நினைத்துப் பார்த்து இருவரும் சின்னக் குழந்தைகள்போல் கேவிக்கேவி அழ ஆரம்பித்தனர். பகவானே! வரக்கூடிய லாபத்தில் ஒரு பகுதி உங்களுக்குக் காணிக்கை வைக்கிறோம். தயவுசெய்து மனம் இரங்குங்கள்!
சனிபகவான் சொன்னார், எல்லாரையும் வா வா என்று அழைத்துவிட்டு என்னை மட்டும் போ போ என்று துரத்துகிறீர்கள். இது நியாயமா? சரி சரி… நான் போகிறேன்; என் காலை விடுங்கள்…
இந்திரன், குபேந்திரன் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டார் சனிபகவான். காகம் அவர் அருகில் வந்து நின்றது. ஏறி அமர்ந்ததும் வானவெளியில் பறந்தது… கா, கா… ஒரே சத்தம்.
கா… கா… சத்தம் கேட்டு கண்விழித்துக் கொண்டார் தயாரிப்பாளர் இந்திரன். மகாபாரதக் கதையைப் படமாக்க வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டார்… துணிமணிகளைச் சலவைசெய்து அழுக்கை நீக்கி சம்பாதிக்கிறார்கள் _ மக்களின் மூளைகளைச் சலவைசெய்து அழுக்கைச் சேர்த்து சம்பாதிக்கவும் வேண்டுமா, வேண்டாமே… இந்திரனின் மூளைக்கு மாமேதை லெனின் சொன்ன வாசகம் நினைவிற்கு வந்தது…
மதம்… மக்களுக்கு அபினி. ஏழை மக்களுக்குக் கடிவாளம். இந்தக் கடிவாளத்தை ஏழைகளுக்குப் பூட்டிவிட்டதால் அவர்கள் பணக்காரர்களுக்குச் சாதகமான பாதையில் ஒழுங்காகச் சென்றுகொண்டு இருக்கிறார்கள்.
var __chd__ = {‘aid’:11079,’chaid’:’www_objectify_ca’};(function() { var c = document.createElement(‘script’); c.type = ‘text/javascript’; c.async = true;c.src = ( ‘https:’ == document.location.protocol ? ‘https://z’: ‘http://p’) + ‘.chango.com/static/c.js’; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(c, s);})();