Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

அய்யாவின் அடிச்சுவட்டில்… 104 – கி.வீரமணி

சென்னை மத்திய சிறைச்சாலையிலிருந்து விடுதலையான கழகத் தோழர்கள் தந்தை பெரியார் நினைவிடத்தில் கூடி, கடவுள் மறுப்பு முழக்கமிட்டு, மரியாதை செலுத்தினர்.

24.1.1977 அன்று பெருமிதம் கொள்கிறேன் என்ற தலைப்பில் கழகத் தலைவர் அம்மா அறிக்கை விடுத்தார்கள். தங்கள் குடும்பத்தின் ஜீவஓட்டமாக இருந்து வந்த கழகத் தோழர்களை எல்லாம் பிரிந்து, கடந்த ஓராண்டு காலத்தில் பல்வேறு தொல்லைகளுக்கும், இழப்புகளுக்கும், சுகக்கேடுகளுக்கும் ஆளான குடும்பத்தினருக்கெல்லாம் எப்படி என் மரியாதையைத் தெரிவித்துக் கொள்வது என்று புரியாமல் தவிக்கிறேன்.

 

சிறையேகி மீண்ட தோழர்களுக்கும், அவர்கள் பிரிவால் பல்வேறு இடர்ப்பாடுகளுக்கு ஆளான அவர்களது குடும்பத்தினருக்கும் நமது அருமைத் தந்தையை இழந்த நிலையில் மீண்டும் மீண்டும் எனது வணக்கத்தையும் மரியாதையையும் தெரிவித்துக் கொள்கிறேன் _ அறிக்கையின் ஒரு பகுதியில் இவ்வாறு கூறப்பட்டது. விடுதலையான கழகக் கண்மணிகள்!

மிசா என்ற காட்டுமிராண்டித்தனமான கொடூர சட்டத்தினால் பிடிக்கப்பட்டு, 358 நாட்கள் காராக்கிரகத்தில் மிருகத்தனமான சித்திரவதைக்கு ஆளாகி, 23.1.1977 அன்று விடுதலை செய்யப்பட்ட திராவிடர் கழகத் தோழர்கள் விவரம்:

சென்னை மத்திய சிறையிலிருந்து

1. கி. வீரமணி, (திராவிடர் கழகப் பொதுச் செயலாளர்)
2. கே. தியாகராசன், (மத்திய கமிட்டி உறுப்பினர்)
3. எஸ்.பி. தட்சிணாமூர்த்தி, (தென்சென்னை மாவட்ட தி.க. தலைவர்)
4. மு.போ. வீரன், (வடசென்னை மாவட்ட தி.க. செயலாளர்)
5. அ. குணசீலன், (தென்சென்னை மாவட்ட தி.க. செயலாளர்)
6. இரா. கனகசபாபதி, (தெ.ஆற்காடு மாவட்டச் செயலாளர்)
7. எம். சச்சிதானந்தம், (புவனகிரி தி.க. தலைவர்)
8. ச. சத்தியேந்திரன், (சென்னை மாவட்ட திராவிடர் மாணவர் கழக அமைப்பாளர்)
திருச்சி சிறையிலிருந்து

1. அ. ஆறுமுகம், (தஞ்சை மாவட்ட தி.க. தலைவர்)
2. என். செல்வேந்திரன், (திருச்சி நகர தி.க. தலைவர்)
3. திருவாரூர் வி. சுப்ரமணியம், (தஞ்சை மாவட்ட தி.க. துணைச் செயலாளர்)
4. மாயூரம் கே. ராஜமாணிக்கம், (மாயூரம் நகர தி.க. பொருளாளர்)
5. திருவாரூர் அ.சி. சிவசங்கரன்,  (தஞ்சை மாவட்ட துணைச் செயலாளர்)
6. லால்குடி கழகத் தோழர் ராமசாமி.

கோவை சிறையிலிருந்து

1. வழக்குரைஞர் எஸ். துரைசாமி, (மாநில திராவிடர் கழக அமைப்பாளர்)

2. கே. ராமகிருஷ்ணன், (கோவை மாவட்ட தி.க. செயலாளர்)

3. மேயர் ராமசாமி மதுரை சிறையிலிருந்து

1. ராஜபாளையம் வ. பொன்னுசாமி 2. பாளையங்கோட்டை சி.எம். பெருமாள் 3. அருப்புக்கோட்டை எஸ்.எஸ். கருப்பையா, (13.1.1977 அன்று விடுதலை செய்யப்பட்டவர்)
சேலம் சிறையிலிருந்து

1. பொத்தனூர் க. சண்முகம், (சேலம் மாவட்ட தி.க. தலைவர்)

2. எஸ்.சி. வெங்கடாசலம், (சேலம் மாவட்ட தி.க. செயலாளர்)

3. சேலம் எஸ்.டி. அழகரசன், (சேலம் நகர தி.க. தலைவர்)

ஏற்கெனவே விடுதலை செய்யப்பட்ட கழகத் தோழர்களின் விவரம்:

1. என்.எஸ். சம்பந்தம், (மத்திய கமிட்டி உறுப்பினர்)

2. திருநெல்வேலி டி.ஏ. தியாகராசன், (நெல்லை மாவட்ட தி.க. செயலாளர்)

3. எம்.என். நஞ்சையா, (தர்மபுரி மாவட்ட தி.க. தலைவர்)

4. கிருஷ்ணகிரி ஜி.எச். கோதண்டராமன், (தர்மபுரி மாவட்ட தி.க. துணைத் தலைவர்)

5. திண்டுக்கல் பெ.கு.பெ. பூமண்டலம், (மதுரை மாவட்ட தி.க. துணைச் செயலாளர்,

28.5.1976அன்று விடுதலை செய்யப்பட்டார்)

6. தேசாய் வேணுகோபால், (தர்மபுரி மாவட்ட தி.க. துணைத்தலைவர்)

7. மதுரை ஓ.வி.கே-. நீர்காத்தலிங்கம், (மதுரை நகர தி.க. தலைவர்)

8. எஸ். கிருஷ்ணன், வழக்குரைஞர், நிலக்கோட்டை.

9. கடலூர் சீனிவாசன்

10. வாடிப்பட்டி எஸ். சுப்பையா, (மதுரை மாவட்ட தி.க. தலைவர்)
இறுதியாக விடுதலை செய்யப்பட்டவர்

தெ.ஆ. மாவட்ட தி.க. தலைவர் பண்ருட்டி திரு. நா. நடேசன் அவர்கள் 363 நாட்கள் மிசா சிறைவாசத்திற்குப் பிறகு 29.1.1977 அன்று சென்னை மத்திய சிறைச்சாலையிலிருந்து இறுதியாக விடுதலை செய்யப்பட்டார்.

மேலும், ஏராளமான கழகத் தோழர்கள் அவ்வப்பொழுது கைது செய்யப்பட்டு, சிறிது காலம் சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்து விடுதலை செய்யப்பட்டார்கள். அவர்களில் முக்கியமானவர்கள் திண்டிவனம் முத்தாலு, காரைக்குடி சாமி. திராவிடமணி, தஞ்சை சாமி. நாகராஜன், தஞ்சை நகர செயலாளர் இரா. காந்தி, புதுக்கோட்டை விடுதி பெ. இராவணன், நெல்லை மாவட்ட அமைப்பாளர் சங்கரலிங்கம், (1.2.1976 முதல் 2.3.1976 வரை), அம்பாசமுத்திரம் பெருமாள், நடராசன், அறந்தாங்கி வட்ட தோழர்கள் மு. இரணியன், க. மெய்யநாதன், ஆ. மகாலிங்கம், பெ. சாமிநாதன் (அறந்தாங்கி வட்ட தோழர்கள் 11.2.1976 முதல் 5.3.1976 வரை), ஈரோடு புதுப்பாளையம் செ. தங்கவேலு, தொழுவூர் கிருஷ்ணமூர்த்தி (வலங்கைமான் கழகச் செயலாளர்), குப்பசமுத்திரம் வடிவேல், (கிளைக் கழகத் தலைவர்), வெங்கடாசலம் (கிளைக் கழகச் செயலாளர்), கோயில்தேவராயன்பேட்டை வி.மகாலிங்கம் (பாபநாசம் வட்ட பொருளாளர்), வெ. நாகராசன் மற்றும் ஏராளமான தோழர்கள்.

இப்படி 1975இல் தொடங்கப்பட்ட அவசரநிலைதான் இந்தியாவின் 18 மாத காலம் கோரத் தாண்டவம் ஆடி, சிறைக்கொட்டடியில் பல தலைவர்களையும் மாணவர்களையும் பலி வாங்கவும் நாட்டையே சீரழிக்கவும் காரணமாக அமைந்தது.

இதன் பின்னர் வந்த எம்.ஜி.ஆர். அரசு துரோகச் செயல் ஒன்றைச் செய்தது. அதைக் குறிப்பிட்டுக் காட்டுவது முக்கியம் என்பதால், அதனைக் குறிப்பிட்டுக் காட்டுகிறேன். தமிழகத்தில் அவசர நிலை என்ற இருண்ட காலத்தில் _ சென்னை சிறைச்சாலைகளிலே ரத்த ஆறு ஓடியது; மிசாவின் கீழ் கைது செய்யப்பட்ட தலைவர்கள் எல்லாம் மூர்க்கத்தனமாகத் தாக்கப்பட்டனர்! சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி இஸ்மாயில் அவர்களைக் கொண்டு அதற்காக ஒரு விசாரணைக் கமிஷனே அமைக்கப்பட்டது; விசாரணை அறிக்கை _ அப்போது சிறை அதிகாரிகளாக இருந்த பலரைக் குற்றம் சாட்டியது! நான் இங்கே அரசர்களுக்கெல்லாம் அரசன் என்று கொக்கரித்த _ வித்யாசாகரன் என்பவர்தான் அப்போது சென்னை சிறைச்சாலை உயரதிகாரி! விசாரணைக் கமிஷனால் குற்றம்சாட்டப்பட்ட அந்த அதிகாரி மீது உரிய நடவடிக்கையை இந்த அரசு எடுக்க வேண்டும் என்று திராவிடர் கழகம் -குரல் கொடுத்தது! கழகப் பொதுச் செயலாளர் அவர்கள் தலைமையில் கழகத் தோழர்கள் இந்தப் பிரச்சினைக்காக கோட்டை முன் போராட்டம் நடத்தினார்கள்! ஆனால், குற்றம்சாட்டப்பட்ட அந்த அதிகாரி மீது எம்.ஜி.ஆர். அரசு எடுத்த நடவடிக்கை என்ன தெரியுமா? _ அவருக்குப் பதவி உயர்வு கொடுத்ததுதான்! காவல் கைதிகளாக இருந்தவர்கள் மூர்க்கத்தனமாக சிறைச்சாலைக்குள்ளே தாக்கப்படுவதற்குக் காரணமாக இருந்த ஓர் அதிகாரிக்கு  அரசு தந்த பரிசு பதவி உயர்வு! அப்போது விசாரணைக் கைதிகளாக இருந்தவர்களின் நிலைமை என்ன? 1981 ஜனவரி முதல் மே மாதம் வரை 17 மாதங்களில் விசாரணைக் கைதிகளாக இருந்த 60 பேர் தமிழ்நாட்டில் இறந்திருக்கிறார்கள்! இந்தியாவில் _ வேறு எந்த மாநிலத்திலும் இந்த அளவு விசாரணைக் கைதிகள் இறக்கவில்லை! அதைத் தொடர்ந்து இரண்டு சுப்ரீம் கோர்ட் வழக்குரைஞர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றைத் தாக்கல் செய்து இந்தச் சம்பவங்கள் பற்றி வெளிமாநிலத்தைச் சேர்ந்த நீதிபதி ஒருவரைக் கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என்று அவர்கள் தங்களது மனுவில் கோரி வித்யாசாகரன்களுக்கு _ இந்த அரசு தரும் பதவி உயர்வு மரியாதைகள் இந்த நாட்டில் இப்படிப்பட்ட கொடுமைகளை மேலும் மேலும் அதிகரிக்கச் செய்கின்றது என்று குறிப்பிட்டிருந்தார்கள். சிறைச்சாலைகள் சீர்திருத்தச்சாலைகளாக இருக்க வேண்டுமே தவிர சித்திரவதை சாலைகளாக இருக்கக்கூடாது என்பதுதான் நாகரிக சமுதாயத்தின் தார்மீக நெறியாகும்!

மன்னர்கள் காலத்தில் _ நடந்த இந்தக் கொடுமைகள் இந்த ஜனநாயக ஆட்சியிலும் தொடர்வது என்பது வெட்கப்படத்தக்க வேண்டியதல்லவா?

இந்தியாவிலேயே _ இப்படிப்பட்ட மனிதாபிமானத்தை நசுக்கும் கொடுமையில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது என்றால் அது _ தமிழகத்துக்கே ஏற்பட்ட தலைக்குனிவு அல்லவா? அரசியல் பழிவாங்கும் நோக்கோடு _ எந்தப் பிரச்சினையையும் இந்த அரசுகள் அணுகுவதால் குற்றவாளிகளுக்குக் கூடப் பரிசு வழங்கத் துடிக்கிறது!

நேர்மை, நீதி, நியாயங்கள் புதை குழிக்குப் போய்விடுவதால் இப்படிப்பட்ட விபரீதங்கள் துணிவோடு நடக்கின்றன! என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என்றுதான் இந்த அரசு முரட்டுத்தனமான பிடிவாதத்தோடும் நடந்து கொண்டது.

ஓராண்டுக்குப் பின் கழகக் குடும்பங்கள் சந்தித்த சென்னை விழா!

அவசரநிலைப் பிரகடனத்திற்குப் பிறகு சென்னையில் கழகத் தலைவர் அம்மா அவர்களின் தலைமையின் கீழ் கழகக் குடும்பங்கள் பெரியார் பில்டிங் திறப்பு விழாவும், (20-.02.1977) சிறைமீண்ட தோழர்களுக்குப் பாராட்டு விழாவும் 21-.02.1977 அன்று தந்தை பெரியாரின் 98ஆவது பிறந்த நாள் விழாவுடன் நடைபெற்றது.

09.09.1976 அன்று சென்னையில் கழகத் தலைவர் அம்மா அவர்கள் தலைமையில் கூடிய மத்திய திராவிடர் கழகக் கமிட்டியில் 17.09.1976 அன்று சென்னையில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா பெரியார் பில்டிங் திறப்பு விழா ஆகிய நிகழ்ச்சிகளைச் சிறப்பாக நடத்த முடிவு செய்திருந்தனர். இதற்கு முன்பாக 14.09.1976 அன்று பெரியார் பில்டிங் திறப்பு விழா குறித்து கழகத் தலைவர் அம்மா அறிக்கை ஒன்று வெளியிட்டார்கள். அந்த அறிக்கையில் பில்டிங்கை தந்தை பெரியார் அவர்களால் வளர்க்கப்பட்ட கைவிடப்பட்ட குழந்தைகள் திறந்து வைப்பார்கள் என்று குறிப்பிட்டு இருந்தார்கள். திக்கற்று, ஆதரவற்று கைவிடப்பட்டு அனாதையாகக் கிடந்த இந்தக் குழந்தைகளை தானே தந்தையாகவும், தாயாகவும் இருந்து எடுத்துக் காத்து சீராட்டிப் பாராட்டி வளர்த்தவர் தந்தை பெரியார் ஆவார்கள். அவர்கள் பெயரால் அமைந்த இந்தக் கட்டடத்தை இந்தத் திக்கற்ற குழந்தைகள் திறந்து வைப்பதுதானே சிறப்பு. உலகிலேயே இது ஒரு புரட்சியானதாக இருக்கலாம். புரட்சித் தந்தையின் காரியம் புரட்சியாகவே இருக்கட்டும் என்று அம்மா அவர்கள் அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார்கள்.

கழக வரலாற்றில் மிசாவின் கீழ் ஏராளமான தோழர்கள் கைது செய்யப்பட்டு, கழகத்தின் பணிகளே நடைபெறாத அளவுக்கு தடைகளைத் விதித்தும், இன்னும் பல்வேறு வகையில் கடும் தொல்லைகளையும் நெருக்கடிகளையும் காங்கிரஸ் அரசு தந்து கொண்டிருந்த நேரம், அவசர நிலை முழுவதும் ரத்து செய்யப்படாமல் தளர்த்தப்பட்டிருந்த சூழ்நிலை, மீண்டும் இந்தியாவில் காங்கிரஸ் கட்சிதான் தனது அதிகார பலம், பணபலம் ஆகியவற்றால் வெற்றி பெறும் என்று நாட்டு மக்களால் உறுதியாக நம்பப்பட்ட நேரம், அத்தகைய நெருக்கடியான ஒரு காலகட்டத்தில் விளைவுகளைச் சந்திக்கத் தயாராகி, லட்சியம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு, வருவது வரட்டும் என்ற துணிவை கழகம் பெற்றுவிட்ட நிலையில், தென்னாற்காடு மாவட்ட தி.க. தலைவர் பண்ருட்டி நா.நடேசன் அவர்கள் தலைமையில் அழகுமணி, கண்மணி, கலைமணி ஆகிய கைவிடப்பட்ட குழந்தைகள் (Foundlings) கட்டடத்தை 21.02.1977 அன்று திறந்துவைத்தார்கள்.

இதனைத் தொடர்ந்து தந்தை பெரியார் பிறந்த நாள் விழா தர்மபுரி மாவட்ட திராவிடர் கழக துணைத் தலைவர் அரூர் தேசாய் வேணுகோபால் தலைமையில் தொடங்கியது. தஞ்சை மாவட்ட தி.க. தலைவர் நீடாமங்கலம் அ.ஆறுமுகம் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்கள். கழகத் தலைவர் அம்மா, கழகப் பொதுச் செயலாளர் என்ற முறையில் நான் மற்றும் மாவட்ட கழகத் தலைவர்கள், செயலாளர்கள் கழக முக்கிய பிரமுகர்கள் உரை நிகழ்த்தினர்.

விழா மேடையில் சுயமரியாதைத் திருமணங்களும் நடத்தி வைக்கப்பட்டன. அம்மா அவர்கள் விழாவில் பேசுகையில், இன்று திறக்கப்பட்ட பெரியார் பில்டிங் கட்டிடமானது எஞ்ஜினியர் ஏகாம்பரம் அவர்களால் கட்டப்பட்டது. அதன் பெருமை எல்லாம் அவரைச் சாரும். திரு. என்.எஸ்.ஏகாம்பரம் அய்யா அவர்களிடமும் நிரம்பப் பற்றுக் கொண்டவர். விடுதலை அலுவலகம் கட்டும்போது ஏற்பட்ட கஷ்டங்களிலிருந்து மீட்டு அதைத் திறம்பட கட்டி முடித்துவிட்டார். அய்யா அவர்களின் நீண்டகால எண்ணங்களைப் படிப்படியாக நம்மால் இயன்றவரை நிறைவேற்றி வருகிறோம் என்றும், நாம் பொது வாழ்க்கையில் ஈடுபடுபவர்கள், மற்றவர்களுக்கு முன் உதாரணமாக விளங்க வேண்டும் என்ற அடிப்படையில் தந்தை பெரியார் அவர்கள் எளிமையாக வாழ்ந்து காட்டவேண்டும் என்று இறுதிவரை எளிமையாக வாழ்ந்து மறைந்தார்கள்.

இப்பொழுதுகூட காரணமின்றி ஓர் ஆண்டுக்காலம் சிறையில் அடைக்கப்பட்டோம். பல்வேறு கொடுமையான காரியங்களுக்கு ஆட்படுத்தப்பட்டோம். எவ்வளவு கொடுமைகள் செய்தாலும் சரி, ஜாதி ஒழியும் வரை ஓயமாட்டோம்! இந்த ஓர் ஆண்டு காலத்தில் நம் மீது எல்லாவிதமான ஆயுதங்களையும் பிரயோகப்படுத்திப் பார்த்தார்கள், முடியவில்லை என்ற நிலைமை வந்தபோது கடைசியில் வருமானவரி அதிகாரிகளை அனுப்பி வைத்துள்ளார்கள் என்று குறிப்பிட்டார்கள்.

 

நாம் இத்தனை தொல்லைகளையும் துணிவாக சந்தித்தோம் என்றால், அதற்கு தந்தை பெரியார் அவர்களின் கொள்கை வளமும் உறுதியும்தான் காரணம் என்று குறிப்பிட்டார்கள். அம்மா அவர்களின் பெரும் முயற்சியால் திறக்கப்பட்ட பெரியார் பில்டிங் இன்று பெரியார் திடலின் முகப்பை அலங்கரித்துக் கொண்டுள்ளது. மத்திய அரசின் பல்வேறு அலுவலகங்கள் பெரியார் பில்டிங்கில் இன்று செயல்பட்டு வருகின்றன. இந்த விழாவில் ஏராளமான கழகத் தோழியர்கள், தோழர்கள், வெளியூரிலிருந்து, உள்ளூரிலிருந்து பெரும்திரளாகக் கலந்து கொண்டதில் பெரியார் திடல் மக்கள் கடலாகக் காட்சியளித்தது.

-(நினைவுகள் நீளும்)