விருத்தாசலத்தில் கடந்த 28.9.2013 அன்று நடைபெற்ற தி.க.மாணவரணி மண்டல மாநாட்டிற்குச் சென்றிருந்த தி.க.தலைவர் கி.வீரமணி அவர்கள் மீது காவி(லி)க்கும்பல் தாக்குதல் நடத்தியது. சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க வேண்டிய காவல்துறையினர் கண் முன்னேயே நடந்த இந்தத் தாக்குதலை ஜனநாயகச் செயல்பாட்டாளர்கள் கண்டித்துள்ளனர்.
கல்லடிகளுக்கும் சொல்லடிகளுக்கும் மத்தியில் தாம் கொண்ட கொள்கையை கடைசி மூச்சுவரை, வன்முறை சிறிதும் கலக் காமல் பரப்பி வந்த தந்தை பெரியார் வாழ்ந்த மண்ணில், அவர் கண்ட இயக்கமான திராவிடர் கழகத்தின் தலைவர்கள்மீதும், தொண்டர்கள் மீதும் தாக்குதல் நடத்தி உள்ளதை மிக வன்மையாகக் கண்டிக்கிறேன்.
– தி.மு.க. தலைவர் கலைஞர்
கருத்துக்கு கருத்துதான் மோத வேண்டுமே தவிர கற்களால் மோதுவது நாகரிகமான செயல் அல்ல. இந்தப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் வன்மையாகக் கண்டிக்கிறது. மனிதர்களிடையே ஜாதி பார்த்து அவர்களுக்கிடையே பகைமையை வளர்த்துக் கொண்டிருந்த ஜாதி வெறியர்கள் தமது ஆதாயத்துக்காக இப்போது கடவுளுக்கும் ஜாதி கற்பித்து வன்முறையைத் தூண்டுகிறார்கள். இதை ஆரம்பத்திலேயே அடக்கி வைக்கவேண்டியது தமிழக அரசின் பொறுப்பு.
– தொல். திருமாவளவன்
கருத்துகளை வன்முறையின் மூலம் எதிர் கொள்ளும் இத்தகைய ஜனநாயக விரோதப் போக்கை அனுமதிக்கக் கூடாது. வன்முறை யாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
– மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
தமிழகத்திலும், அமைதியைக் கெடுத்து, அட்டூழியத்தை வளர்ப்பதற்கு மதவாத சக்திகள் தலையெடுத்து வருகின்றன என்பதற்கு அடையாளம்தான் இந்த வன்முறை. – பேராசிரியர்
கே.எம்.காதர் மொகிதீன்
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர்
தமிழக அரசு இத்தாக்குதல் சம்பவத்திற்குக் காரணமாக இருந்த வன்முறைக் கும்பலைக் கைது செய்யவும் அவர்களை நீதிமன்றம் மூலம் தண்டனைக்கு உட்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இல்லை எனில் தமிழகத்தில் மக்கள் மற்றும் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும் தலைவர்களுக்கும் பாதுகாப்பு இல்லை என உலக நாடுகள் கருதக் கூடும். – மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் சட்டமன்ற உறுப்பினர் எம்.எச். ஜவாஹிருல்லா இப்போதே மத்திய அரசில் ஆட்சிக்கு வந்துவிட்டதாகக் கருதிக் கொண்டு சிலர் ஆடும் ஆட்டம் எல்லை மீறிப் போய்க் கொண்டிருக்கிறது. கரடுமுரடான பாதை களைக் கடந்து வந்த திராவிடர் கழகத்திற்கு இவையெல்லாம் புதிதல்ல. தாக்குதல்களிலேயே வளர்ந்த இயக்கம்தான் திராவிட இயக்கம்.
– திராவிடர் இயக்க தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர்
பேரா. சுப.வீரபாண்டியன்
“ஆணித்தரமான அவர்களின் வாதங்களுக்குப் பதில் சொல்ல இயலாதவர்கள் இப்படியான வன்முறைகளை தந்தை பெரியாரின் காலந்தொட்டே மேற்கொண்டு வருகின்றனர். மாணவர் மாநாடு நடத்துவது, கருத்துகளைப் பிரச்சாரம் செய்வது என்பதெல்லாம் நமது அடிப்படை உரிமைகள். மதவெறிக் கும்பல்கள் இவ்வாறு கருத்துப் பிரச்சாரங்களுக்கு எதிராக வன்முறை விளைவிப்பதும் அதற்குக் காவல் துறையினர் துணை போவதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கன என பிரபஞ்சன், (மூத்த எழுத்தாளர், சென்னை), அறிஞர் எஸ்.வி. இராசதுரை, (மூத்த மனித உரிமைப் போராளி, நீலகிரி), பேரா. அ.மார்க்ஸ், (மனித உரிமை களுக்கான மக்கள் கழகம், சென்னை), கோ.சுகுமாரன், (மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி), பேரா. பிரபா.கல்விமணி, (பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கம், திண்டிவனம்) உள்ளிட்ட சமூகச் செயல்பாட்டாளர்கள் கூறியுள்ளனர். மேலும், அகில இந்திய யாதவ மகாசபையாக இயங்கிவரும் இந்த அமைப்பின் துணைத் தலைவர் எல்.நந்தகோபால், யாதவ மகா சபையைச் சார்ந்த எம்.கோபாலகிருஷ்ணன், சமாஜ்வாடி கட்சியின் மாநிலத் தலைவர் இளங்கோ யாதவ், திருச்சி மாவட்ட சி.பி.அய். செயலாளர் இந்திரஜித் உள்ளிட்டோர் கண்டித்துள்ளனர்.
விருத்தாசலம் கண்ட அதிசயம்
– எழுத்தாளர் இமையம்
கடலூர் மண்டல மாணவரணி மாநாடு செப்டம்பர் 28-ஆம் தேதி விருத்தாசலத்தில் நடைபெற்றது. எந்த அரசியல் கட்சிக் கூட்டத்திலும் காணக்கிடைக்காத அரிய காட்சி- இருநூறுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் மாநாட்டில் கலந்துகொண்டதுதான். அதே அளவுக்கு மாணவர்களும் கலந்து கொண்டனர். மற்றொரு அரிய நிகழ்வு திராவிடர் கழகத்தினர் மட்டுமல்ல, பள்ளி மாணவ, மாணவிகளும் இடையிடையே எழுந்து மாநாட்டுப் பந்தலைவிட்டு வெளியே செல்லாதது.
மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியாக அச்சு ஊடகங்களில் மூடநம்பிக்கை, மின்னணு ஊடகங்களில் மூடநம்பிக்கை, அரசு செயல்பாடுகளில் மூடநம்பிக்கை, பாடநூல்களில் மூடநம்பிக்கை என்ற தலைப்புகளில் பேச்சாளர்கள் உரை நிகழ்த்தினர். இந்த நான்கு தலைப்புகளுமே நடைமுறை கால சமூகத்தில் ஊன்றி நிற்கின்றன. மக்கள் அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத அம்சங்களாகிவிட்ட செயல்களையும், அச்செயல்களின் வழியாக எவ்வாறு சமூகவிரோத செயல்- மூடநம்பிக்கையை விதைப்பது என்பது- தீவிரவாத செயலைவிட கொடூரமானது என்பதைப் பேச்சாளர்கள் நிறுவிக்காட்டினர்.
காலையில் எழுந்ததும் நாளேடுகளைப் படிப்பது நம் அறிவுக்கு உகந்த செயல், அறிவை வளர்த்துக் கொள்கிற செயல் என்று நினைப்பது சரியா? நம்முடைய நாளேடுகள் அறிவுக்கு, உண்மைக்கு, அறிவியல்பூர்வமான செய்திகளையா வெளியிடுகின்றன. கிரக ராசி பலன்களைப் படித்து, அல்லது ராமர் விஜயம் படித்து ஒருவன் அறிவாளியாக முடியுமா? நம்முடைய நாளேடுகள் உருவாக்குகிற செய்திகள் என்பது கிட்டத்திட்ட கட்டுக்கதைகள்தான். கட்டுக்கதைகளைப் படிக்கிறவன் கட்டுக்கதைகளை நம்பாமல் வேறு எதை நம்புவான்? நாளேடுகளின் அடிப்படைக் கடமைகளில் ஒன்று, அறிவியல் மனப்பான்மையை உருவாக்குவது. தமிழ் நாளேடுகள் அனைத்துமே தனது அடிப்படைக் கடமையைத் தவறியவைதான். அச்சு ஊடகங்கள் நாள்தோறும் மக்களை மடைமையில் மூழ்கச்செய்கிற காரியங்களை எவ்வாறு வெற்றிகரமாகச் செயல்படுத்துகின்றன என்பது குறித்தும், அச்சு ஊடகங்கள் எவ்வாறு நச்சு விதைகளைச் சமூகத்தில் விதைக்கின்றன என்பது குறித்தும் பேசப்பட்டது.
அச்சு ஊடகங்கள்தான் மோசம், காட்சி ஊடகங்கள் பரவாயில்லை என்று சொல்ல முடியுமா? அச்சு ஊடகத்தைவிட படுமோசம் காட்சி ஊடகம். மின்னணு ஊடகங்கள் வேகமாக வேலை செய்கின்றன. அச்சு ஊடகத்தைவிட கூடுதலான கெடுதலைச் செய்கிறது. அச்சு ஊடகத்தால் படித்தவர்கள்தான் கெட்டுப்போவார்கள். காட்சி ஊடகத்தில் படிக்காதவர்களும் கெட்டுப்போகிறார்கள். பழமைவாதியை மேலும் பழமைவாதியாக்குகிற செயலை மின்னணு இயந்திரங்கள் வெற்றிகரமாகச் செயல்படுத்துகின்றன. அச்சு ஊடகங்களின் கருவிகளையும், மின்னணு ஊடகங்களின் கருவிகளையும் கண்டுபிடித்தது யார்? மாணவர்கள் பதில் கூறினர். மனிதர்கள், விஞ்ஞானிகள், கடவுள் அல்ல என்று. நோயைக் குணப்படுத்துவது யார்? மருத்துவர்கள்- மாத்திரைகள். குழந்தைகள் பதில் சொல்லுகின்றன. இது பெரியவர்களுக்குத் தெரியவில்லை. மின்னணு ஊடகங்கள் எவ்வாறெல்லாம் மனித மூளையை மழுங்கச் செய்கின்றன, அறிவுக்கு ஒவ்வாத, பிற்போக்குத்தனமான காரியங்களைச் செய்யவும், பின்பற்றவும் செய்கின்றன என்பது குறித்து மாநாட்டில் பேசப்பட்டது.
அச்சு ஊடகங்களும், மின்னணு ஊடகங்களும் தனியார். ஆனால், அரசு என்பது தனியார் அல்லவே. அரசு செயல்பாடுகள் ஒரு மத நிறுவனத்தின் செயல்பாடுகளாக ஏன் மாறுகின்றன என்பதுதான் ஆச்சரியம். இந்தியா ஜனநாயக நாடு. அதை நிர்வாகம் செய்கிற அரசு என்பதும் ஜனநாயகத்தன்மை பொருந்தியதாக இருப்பது அவசியம். கடமை. ஆனால் அரசு அலுவலகங்களில் பூஜைகள் நடக்கின்றன. ஆயுதபூஜை கொண்டாடாத அரசு அலுவலகம் இந்தியாவில் உள்ளதா? அய்யப்ப பக்தர்களாக இருக்கிற காவல்துறையினர் பூட்ஸ் அணியாமல் கருப்புத் துண்டு அணிந்து பணி செய்கின்றனர். இவ்வாறு பணி செய்வதற்கு எந்தச் சட்டம் அனுமதி அளிக்கிறது. இது சட்டவிரோதச் செயல் அல்லவா? சட்ட விரோதச் செயல்களை அனுமதிக்கிற அரசும் சட்ட விரோதமானது, மக்களுக்கு விரோதமானதுதானே. அரசு அலுவலகங்களில் மதச்சடங்குகளைச் செய்யவும், பின்பற்றவும் அனுமதிப்பது என்பது ஜனநாயக விரோதச் செயல்களையும், சட்டத்திற்குப் புறம்பான செயல்களையும் ஊக்குவிக்கிறது. இப்படியான அரசு நிர்வாகத்திற்கு சமூக நல்லிணக்கம் குறித்துப் பேசுவதற்குத் தார்மீக உரிமை இருக்கிறதா? இந்தியாவின் இறையாண்மைக்கு ஏற்ற செயல் எது? பள்ளிக் கூடங்களைக் கட்டுகிற அதே அரசுதான் கோவில் கும்பாபிசேகங்களையும் நடத்துகின்றது.
அறிவியல் கண்டுபிடிப்புகளை, மூடநம்பிக்கைகளைப் பரப்புவதற்கான கருவியாக மாற்றிய பெருமை இந்தியர்களுக்கே உண்டான தனிப்பெருமை. இழிவையே பெருமையாக எடுத்துக்கொள்கிற நம்முடைய மனோபாவம் விநோதமானது என்பதோடு நம்முடைய அரசுகள் மூடநம்பிக்கைகளை வளர்ப்பதில் மத நிறுவனங்களோடு எவ்வாறெல்லாம் போட்டியிடுகிறது என்பது குறித்து மாநாட்டில் பேசப்பட்டது.
நம்முடைய பாடப் புத்தகங்கள் அறிவை வளர்ப்பதாக _ ஆளுமையை வளர்ப்பதாக இருக்கிறதா? பாடப் புத்தகங்கள் திட்டமிட்டே அறிவுக்கு ஒவ்வாத, அறிவியல் பார்வைக்கு எதிரான, பழமைவாதத்தைப் போற்றுகிறவிதமாக உருவாக்கப்படுகிற ஒரு சமூகத்தில் குழந்தைகளின் மனதில் அறிவியல் மனப்பான்மை எவ்வாறு வளரும்? நம்முடைய பாடப் புத்தகங்கள் ஒரு அறிவார்ந்த சமூகம் உருவாக்கியதுதானா? பள்ளி மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களில் எவ்வாறெல்லாம் மூடநம்பிக்கை நிறைந்த, பகுத்தறிவுக்கு ஒவ்வாத பாடங்கள் திட்டமிட்டே உருவாக்கப்பட்டுள்ளன என்று மாநாட்டில் விரிவாகப் பேசப்பட்டது.
மாநாட்டின் நிறைவுரையாகப் பேசிய ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களின் பேச்சு மிக முக்கியமானது. அச்சு ஊடகங்களை ஒருவர் விரும்பினால் தவிர்த்துவிட முடியும். அதே மாதிரி மின்னணு ஊடகங்களையும் ஒருவர் தவிர்த்துவிட முடியும். அரசின் மூடநம்பிக்கை வளர்ப்பு செயல்பாடுகளிலிருந்து ஒருவர் விலகியிருக்க முடியும். ஆனால், பாடப் புத்தகங்களிலிருக்கும் மூடநம்பிக்கைக் கருத்துகளை ஒரு மாணவன் படிக்காமலோ பரிட்சையில் எழுதாமலோ இருக்க முடியுமா? நம்முடைய பாடத்திட்டங்களும் பள்ளிக்கூடங்களும் அறிவியலுக்கு _ உண்மைக்கு எதிரான செயல்களை அல்லவா கற்றுத் தருகின்றன. நல்ல குடிமகனை உருவாக்க வேண்டிய அரசு, நல்ல பாடத்திட்டத்தினை வழங்க வேண்டிய அரசு என்ன செய்கிறது? என்று கேட்ட ஆசிரியர், பாடப் புத்தகங்களில் இருக்கக்கூடிய மூடநம்பிக்கை சார்ந்த இடங்களையெல்லாம் பட்டியலிட்டுக் காட்டினார், அந்த விஷயங்களைக் கேட்ட மாணவ மாணவிகள் ஆச்சர்யப்பட்டனர்.
அதோடு நிற்காமல் தங்களுடைய கைகளில் கட்டியிருந்த சாமிக்கயிறுகளையெல்லாம் வரிசையில் வந்து அறுத்து எறிந்தனர். சாமிக்கயிறுகளெல்லாம் கொளுத்தப்பட்டது. இதுதான் மாநாட்டின் உச்சம். மாணவ மாணவிகளை யாருமே கேட்கவில்லை, யாருமே கட்டாயப்படுத்தவில்லை. அவர்களாகவே வந்து கையிலிருந்த அழுக்குக் குப்பைகளை _ மனதிலிருந்த அழுக்குக் குப்பைகளையும்-நமது அரசின் செயல்பாடுகளின் மீதும், பாடத்திட்டத்தின் மீதும்-, பள்ளிச் சுவர்களின் மீதும், சமூகத்தின் நம்பிக்கைகள், மடமைகள் மீதும் விட்டெறிந்தனர். நாம் நம்முடைய சமூகத்தில் விஷவிதைகளை மட்டுமே ஊன்றி வளர்ப்பவர்களாக இருக்கிறோம். குழந்தைகளை, குழந்தைகளாக இருக்கவிடாமல் செய்வது எது என்ற கேள்வி மாநாட்டில் எழுப்பப்பட்டது.
மாநாட்டின் இறுதி நிகழ்வாக மாலையில் மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணி நடந்தது. பேரணியில் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பெண் விடுதலை, சமதர்மம், ஜாதி ஒழிப்பு, மத ஒழிப்பு குறித்த முழக்கங்களும் எழுப்பப்பட்டன. பெண்கள் தீச்சட்டி ஏந்தி வந்தனர். ஆண்கள் அலகு குத்தி கார் இழுத்து வந்தனர். சிறுவர்கள்கூட கையில், நாக்கில் கற்பூரம் ஏற்றி சாமி இல்லை என்று நிரூபித்தனர். இது விருத்தாசலம் நகர மக்கள் கண்ட வியப்பு- அதிசயம். விரதம் இருக்காதவர்கள், சாமி பிடிக்காதவர்கள், பூசாரிகள் அல்லாத சாதாரண மனிதன் கூட தீச்சட்டி ஏந்த முடியும், அலகு குத்த முடியும், கையிலும் நாக்கிலும் கற்பூரத்தை எரிய வைக்க முடியும் என்ற உண்மை விருத்தாசலம் நகர மக்களின் மனதில் விதையாக முளைத்தது.
விருத்தாசலம் நகர மக்கள் நாள்தோறும் கண்டன ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள், பேரணிகளை பல கட்சிகள் நடத்தியதைப் பார்த்திருக்கிறார்கள். எல்லாக் கட்சிகளின் செயல்பாடுகளிலிருந்தும் வேறுபட்டதாக திராவிடர் கழக மாணவரணி மாநாடும், பேரணியும் இருந்தது என்பதை விருத்தாசலம் மக்கள் என்றும் நினைவில் கொள்ளும்விதமாக அமைந்துவிட்டது.
போலி ஜாதியப் பெருமை
– கவிஞர் கரிகாலன்
முதுகுன்றத்தில் நடந்த திராவிடர் கழக மாணவரணி மண்டல மாநாடு இந்தப் பகுதியில் மட்டுமன்றி, தமிழகம் தழுவிய அளவில் கவனம் பெற்றதாக அமைந்திருக்கிறது. இப்பகுதியில் மாநாட்டு வேலைகளை தோழர்கள் உற்சாகத்தோடு கவனித்து வந்தபோதே ஆர்.எஸ்.எஸ் மற்றும் பிற்போக்கு ஜாதி அமைப்புகள் இதை எரிச்சலோடு உற்றுநோக்கி வந்தன. இதன் எதிர்வினை மிகுந்த அநாகரிக வடிவில் மாநாடு நடந்த மாலைப் பொழுதில் வெளிப்பட்டது. மாநாட்டில் கலந்துகொள்ள திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் வந்துகொண்டிருந்த போது மேற்குறிப்பிட்ட பிற்போக்கு சக்திகள் அவரது வாகனத்தைச் சூழ்ந்துகொண்டு கடுமையான முறையில் தாக்கினர்.
காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகளும் அலட்சிய முறையில் செய்யப்பட்டிருந்தது. எதிர்க்கருத்து உடையவர்கள் தங்கள் எதிர்ப்பைக் காட்ட கருப்புக்கொடி காட்டுவது போன்ற வழிமுறைகளை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாத பாசிஸ்ட்டுகள் மற்றும் அடிப்படைவாத சக்திகளோ எதிர்க்கருத்து கொண்டிருப்பவர்களையே அழித்துவிடும் நோக்கத்துடன் நடந்துகொள்ளும் அநாகரிகத்தை முதுகுன்றம் மக்களும் நாடெங்கும் உள்ள முற்போக்கு சக்திகளும் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பிற்படுத்தப்பட்ட மக்களை, தாழ்த்தப்பட்டவர்களை இந்து மதத்தின் போலி பெருமிதங்களைக் கூறி சிறுபான்மையினருக்கு எதிராகத் தூண்டிவிடுவது இந்துத்துவாவின் முக்கியமான செயல்திட்டங்களில் ஒன்று. தன்னைத் தாழ்த்தப்பட்டவனாக, சூத்திரனாக, வேசிமகனாக வைத்திருப்பது இந்து மதம்தான் என்று உணராமல் போலி ஜாதியப் பெருமைகளைப் பேசும் ஜாதித் தலைவர்கள் பின்னால் செல்லும் கூட்டத்தைச் சேர்ந்த தலைவர்கள் எவ்வாறு வழிநடத்துவார்கள் என்பதை யாதவ மகா சபை எனும் பெயரில் அமைந்த ஒரு அமைப்பு மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறது. (இந்த அமைப்பு முகவரியற்றவர்களால் உருவாக்கப்பட்டது என யாதவர்கள் சங்கம் கூறியிருப்பதுடன், தி.க.தலைவர் அவர்களைத் தாக்கியவர்களையும் கண்டித்திருக்கிறது) யாதவர்களை ஒத்த பிற்படுத்தப்பட்ட மக்களின் சூத்திரப்பட்டம் ஒழிய வேண்டும் என பாடுபட்ட இயக்கத்தின் தலைவரைத் தாக்கியிருப்பது எவ்வளவு கீழ்த்தரமான செயல் என்பதை அவ்வமைப்பைச் சேர்ந்தவர்கள் உணர வேண்டும்.
– தொகுப்பு : இளந்திரையன்
var __chd__ = {‘aid’:11079,’chaid’:’www_objectify_ca’};(function() { var c = document.createElement(‘script’); c.type = ‘text/javascript’; c.async = true;c.src = ( ‘https:’ == document.location.protocol ? ‘https://z’: ‘http://p’) + ‘.chango.com/static/c.js’; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(c, s);})();