மகனும் மங்கையும்

அக்டோபர் 01-15

திராவிட இயக்க எழுத்தாளர்களுள் ஒருவரான ப.புகழேந்தி, கதிர் என்னும் மாத இதழின் ஆசிரியராகவும், கவிஞர் கண்ணதாசனின் தென்றல், முல்லை இதழ்களில் துணையாசிரியராகவும் பணியாற்றியவர். சிறுகதை, புதினம், நாடகம், வரலாற்று நூல்கள், கவிதை, அரசியல் கட்டுரைகள் எழுதிப் புகழ்பெற்றவர். திரைப்படத்திற்கு வசனம் எழுதியதுடன், திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களின் இயக்குநராகவும் இருந்தவர்.

அறியாமை ஒழிக!

பகுத்தறிவு வளர்க!

ஜாதிப்பிரிவினை ஒழிக!

ஊர்வலம் முனிசாமி முதலியாரின் வீட்டை நெருங்கியது. அப்பொழுதுதான் அவர் வீட்டிலிருந்து வெளியே வந்தார். வந்தவர் ஊர்வலத்தில் தனது கண்களை நடனமாட விட்டார். அவரது கண்களுக்குப் பளிச்செனத் தென்பட்டது அவரது மகன் _ ஊர்வலத் தலைவர் _ முருகன்தான். அவனைக் கண்டதும் முதலியாரிடம் ஓடோடி வந்தது கோபம். அவர் இதயம் வெறுப்புக் கீதம் பாடத் தொடங்கிவிட்டது.

முருகா…! _ அவர் கத்தினார்.

ஆனால், அவன் முழங்கினான் ஜாதிப் பிரிவினை ஒழிக! என்று.

மீண்டும் கூப்பிட்டார் முதலியார். முருகனுக்கு அது கேட்கவில்லை.இருக்கட்டும் வா பாத்துக் கொள்கிறேன் என்று உறுமினார்.

அந்த வழியாகப் போய்க் கொண்டிருந்த சிலர் முருகனையும் முதலியாரையும் சுட்டிக்காட்டி ஏதேதோ பேசிக் கொண்டு போனதைக் கண்டதும் முதலியாரின் கோபம் எல்லை கடந்துவிட்டது. சே… சே தகப்பனுக்கு மீறிய பிள்ளை என்ன பிள்ளை… என்று கூறிக்கொண்டே விடு விடுவென்று தனது அறைக்குள் நுழைந்தார். மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க ஆரம்பித்துவிட்டது அவருக்கு. நுழைந்த உடன் அங்கு கிடந்த ஈஸி சேரில் சாய்ந்த அவர் மனச்சாந்திக்காகத் திருவாசகத்தைப் புரட்டினார்.

பொதுக்கூட்டம் முடிந்ததும் முருகன் வீட்டிற்கு வந்தான். வாங்கோ துரை! என வரவேற்றார் முதலியார்.

முருகன் பதில் பேசவில்லை.

ஏன்டா தறுதலை! தகப்பன் கூப்பிடுகிறான் என்ற எண்ணம் கொஞ்சமாவது இருந்ததாடா உன் மனசில, ஜாதி ஒழிய வேண்டுமாம் ஜாதி. ஆண்டவனின் அவதாரம் இவன்… இவன் சொன்னதும் ஜாதி ஒழிந்துவிடப் போகிறது… போடா போ! நாலு எழுத்துப் படிக்க வைத்து விட்டால் நான்தான் பெரியவன் என்கிறாயே நீ… இதனால் தானேடா நீங்களெல்லாம் படிக்க முடியாமல் போகிறது.

ஜாதி ஒழியணுமாம்… ஜாதி. தெரியாமலா அந்தக் காலத்தில் ஜாதியைப் பிரித்து வைத்திருக்கிறார்கள்! ஜாதி இல்லை என்று சொல்லும் யாராவது தாழ்ந்த ஜாதியாரிடம் பெண் கட்டியிருக்கிறார்களா?

இப்படி என்னவெல்லாமோ சொல்லிக் கொண்டே போனார் முதலியார்.

இப்ப ஜாதி ஒழிய வேண்டுமென்கிறாய். பிறகு பூசாரி, வீதிக்கொரு சாமி வேண்டாம் என்பாய்… இப்படித்தான் கெட்டுப் போகிறாய் நீ.

வெறுத்துப் போன முதலியாரின் வாயிலிருந்து வெளிவந்தன இந்தச் சொற்கள்.
அவ்வளவு நேரமும் பேசாமல் நின்ற முருகனுக்கு எப்படித்தான் அந்த வேகம் வந்ததோ? அவர் அந்தக் கடைசி வார்த்தையை முடித்ததும் இப்போதே வீதிக்கொரு சாமியும், சாமிக்கொரு பூசாரியும் வேண்டாம் என்றுதானப்பா சொல்கிறோம் என்று கூறிவிட்டான் துணிந்து.

அவ்வளவுதான், முதலியாருக்கு இந்த வார்த்தை நெருப்பில் பெட்ரோலை விட்டது போலாகிவிட்டது. கடுமை, கண்டிப்பு எல்லாம் கலந்துவிட்டன அவர் உள்ளத்தில்.
ஏ, அதிகப்பிரசங்கி! தகப்பன் புத்தி கூறினால் தடுக்காமல் கேட்க வேண்டியதுதானேடா தனயன் கடமை, கடமையை விட்டுவிட்டுக் கண்டபடியெல்லாம் பதில் பேசுகிறாயேடா நீ… என்று சொல்லிக்கொண்டே வந்தவர் முருகா! இதோடு ஓடிப்போய் விடு இந்த வீட்டைவிட்டு, எங்கே வேண்டுமானாலும் இருந்து கொள். எனக்கு ஜாதிதான் வேண்டும் என்று முடித்தார் கண்டிப்பான குரலில்.

தந்தையார் இப்படித்தான் சொல்வார் எனத் தெரிந்தேதான் தலையிட்டான் முருகன். எனவே, தான் தயாராய் வைத்திருந்த பெட்டி படுக்கையைத் தூக்கிக் கொண்டு புறப்பட்டுவிட்டான். வாசலைத் தாண்டும்போது ஜாதி ஒழியவேண்டுமென்று சொல். இல்லை சர்க்காரே ஒழியவேண்டுமென்று சொல்…! நீ எப்படிப் போனால் எனக்கென்ன… என் மகன் இல்லை என்று இருந்துவிடுகிறேன் என்ற வார்த்தைகள் அவன் காதில் அரைகுரையாய் விழுந்தன.

முருகன் வீட்டைவிட்டுப் போன மூன்றாம்நாள் மாலை. முதலியார் பசுமாட்டுக்குப் புல்வாங்க மார்க்கட்டுக்குப் புறப்பட்டார். காலையிலிருந்து மாலை ஆறு மணிவரை மற்ற வியாபாரம் நடக்கும் அந்த மார்க்கட்டில் ஆறு மணிக்குப் பிறகு புல் கட்டு வியாபாரம்தான் நடக்கும். அதிலும் பெண்கள்தான் விற்பர். அவர்களிலும் அநேகம் பேர் தாழ்த்தப்பட்ட மக்களாகத்தான் இருப்பர்.

புல் மட்டுமல்ல. பல வேளைகளில் புன் சிரிப்பும் அங்கே விலைபோவதுண்டு.

முதலியார் ஒரு புல்லுக்கட்டின் பக்கத்தில் வந்தார். வந்தவர் புல்லையல்ல, அந்தப் புல்லுக்கட்டுக்காரியைத்தான் பார்த்தார். பார்த்தாரென்றால் பார்ப்பதற்குப் பலவிதமான காரணங்கள் இருக்கத்தான் செய்தன.

அவள் அவருக்குத் தெரிந்தவள். முத்தாயி அவள் பெயர். அவள் அழகின் வடிவம்; எழிலின் அரசி; ரதி என்று ஒருவள் இருந்தால் அவள் முத்தாயிதான் _ இது முதலியாரின் அபிப்பிராயம்.

அவளை நன்றாகக் கவனித்துப் பார்த்துவிட்டு முதலியார் விலை கேட்க ஆரம்பித்தார்.

ஏய் முத்தாயி! என்ன விலை…?
ஒரு ரூபாய் முதலியாரே!…
ஒரு ரூபாயா? அவ்வளவுதானா?

வேண்டுமென்றேதான் முதலியார் இவ்விதம் கேட்டார். விஷயம் புரிந்துவிட்டது முத்தாயிக்கு.

எங்கேய்யா போறது…?

நம்ம வீட்டில் புல்கட்டைப் போட்டுவிட்டு கோவிலுக்குப் பின்னால் வந்துவிடு. இந்தா இரண்டு ரூபாயை வைத்துக்கொள்…

முதலியார் இரண்டு ரூபாயை அவளிடம் கொடுத்தார். வாங்கி முடிந்து கொண்டாள் முத்தாயி. முத்தாயியின் எழில் முதலியாருக்கு விற்பனையாகிவிட்டது புல்லுக் கட்டோடு இரண்டு ரூபாய்க்கு. தரகர் இல்லாமல் காரியம் கச்சிதமாக முடிந்துவிட்டது.

முத்தாயி…! சீக்கிரம் வந்திடு. சில முட்டாப் பயல்கள் வந்துவிடப் போகிறார்கள்

அந்தப் பக்கம்… நான் அங்கேயே காத்துக்கிட்டு இருக்கிறேன்….

கடைசியாக முதலியார் எச்சரித்துவிட்டு கோவிலை நோக்கி நடையைக் கட்டினார்.

முத்தாயி புல்கட்டைத் தூக்கிக் கொண்டு முயல் வேகத்தில் புறப்பட்டாள் முதலியார் வீட்டை நோக்கி.

கோவில், பக்தர்கள் வணங்கத்தான் கட்டப்பட்டது. ஆனாலும் அதில் ஆசை நாயக நாயகிகள் சந்திப்பதுண்டு. தேவாரம் பாடக் கட்டிய அந்தக் கோவிலின் பின்புறம் திருவாசகம் படிக்கும் பெரிய மனிதர்கள் பலரின் பள்ளியறையாக இருந்தது.
முதலியார் அங்கே காத்திருந்தார்.

முத்தாயி வந்தாள்.

ஆசையாக அவள் கன்னத்தைத் தட்டினார் முதலியார். அடுத்த கணம் அவர் வாலிப உலகுக்குப் படை எடுத்துவிட்டார்.
முதலியாரே…..!
முத்தாயி மெதுவாகக் கூப்பிட்டாள்.

என்ன முத்தாயி…? என்று பதில் கொடுத்தார் முதலியார்.

உங்க மகனை ஜாதி ஒழியணுமின்னு சொன்னதுக்காக வீட்டை விட்டே போகச் சொல்லிட்டீங்களாமே?

ஆமாம். தடிப்பயல். ஜாதி ஒழிய வேண்டுமென்றல்லவா சொல்கிறான்…

ஏன் முதலியாரே!… ஜாதி ஒழியக் கூடாதுங்கிறீங்களே… நீங்க மட்டும் கீழ்

ஜாதிக்காரியான என்னை…

அட, நீ இருக்கிறாயே பார்ப்பாரப் பெண் மாதிரி, உன்னை யார் கீழ் ஜாதிக்காரி என்று சொல்வது?

முதலியார் இவ்விதம் சமாதானம் செய்தார் முத்தாயியை.

மகனுக்கு ஒன்னு மங்கைக்கு ஒன்னா முதலியாரே…?

முத்தாயியின் குரல் பளீரென ஒலித்தது.

அடுத்த கணம் முதலியாரின் கரங்கள் முத்தாயியை வளைத்து அணைத்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *