நிலவு என்றேன் நிலவைக் காட்டினார்கள்
குடை என்றேன்
குடையைக் காட்டினார்கள்
தென்னை என்றேன்
தென்னையைக் காட்டினார்கள்
கடவுள் என்றேன் நாய் முதல் நந்தி வரை
அத்தனையையும் காட்டுகிறார்கள் …..
********
எந்த மாடும்
திருநீறு பூசுவதில்லை,
அவைகளுக்குத் தெரியும்
அது சாணச் சங்கதியென்று ….
********
வறுமையும்
கடவுளும்
ஒரே சமூகத்தில் வாழ்வதே
வேடிக்கையின் உச்சம் ….
*********
கரையான்களுக்குத்
தெரிவதில்லை,
கீதைக்கும்
குரானுக்கும்
பைபிளுக்கும்
உள்ள வித்தியாசம் …..
**********
அமைதியாய்
நிற்கும் வரை ஆசாமி,
அவரே நாக்கை மடித்து
குதித்து ஆடினால்
சாமி ……….
********
நூற்றுக்கணக்கான பேர்
சாமி தரிசனத்திற்கு
வரிசையில் கால்கடுக்க நிற்கையில்
சிறப்பு தரிசனக் கட்டணம் ( லஞ்சம்) செலுத்திவிட்டு
குறுக்கு வழியில் வருகிறவனை
கடவுள் தண்டிக்க வேண்டாமா? காசேதான் கடவுளடா … அந்தக் கடவுளுக்கும் இது தெரியுமடா …..
********
மாடு போல் உழைத்து
கஞ்சி தேடுது
ஒரு கூட்டம்,
மந்திரம் சொல்லியே
மடியை நிரப்புது
மறு கூட்டம் ….
******
கடவுள் இப்படிச் சொல்லலாமா? எது இன்று உன்னுடையதோ
அது நாளை மற்றொருவருடையதாகிறது
மற்றொருநாள், அது வேறொருவருடையதாகும்.
இதுவே உலக நியதியும் எனது படைப்பின் சாராம்சமாகும். – பகவான் கிருஷ்ணர்
வாசித்து முடித்தவன் தன் அருகிலிருந்த மனைவியைச் சோகத்தோடு ஒரு முறை பார்த்தான், பின் அவள் கரங்களை இறுகப் பற்றிக் கொண்டான்.
– பாசு.ஓவியச் செல்வன்