ஆணுக்குப் பெண் சமம்; எந்த விதத்திலும் ஆண்களுக்குக் குறைந்தவர்கள் அல்லர் பெண்கள் என்று நிரூபித்து வரும் நிலையில், வரதட்சணைக் கொடுமை மட்டும் பெண்களை விட்டு நீங்கியதாகத் தெரியவில்லை.
2012ஆம் ஆண்டில் மட்டும் 8 ஆயிரத்து 233 வரதட்சணை சம்பந்தப்பட்ட இறப்புகள் நிகழ்ந்துள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்.சி.ஆர்.பி) வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவித்துள்ளது.
இதன்படி, ஒரு மணி நேரத்திற்கு ஒரு பெண் வரதட்சணைக் கொடுமையால் இந்தியாவில் பலியாகிறாள். 2007_2011க்கு இடைப்பட்ட ஆண்டுகளில் வரதட்சணைக் கொடுமை தொடர்புடைய இறப்புகள் அதிகரித்துள்ளன. குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கும் விகிதமோ 35.8லிருந்து 32 ஆகக் குறைந்துள்ளது.
இந்த அறிக்கை குறித்து, 1983ஆம் ஆண்டு திருத்தி இயற்றப்பட்ட வரதட்சணைத் தடுப்புச் சட்டத்தில் உள்ள ஓட்டைகள் வரதட்சணை இறப்புகளில் பிடுபடும் குற்றவாளிகள் எளிதாக ஜாமீனில் வெளியில் வரவும், தண்டனையில் இருந்து தப்பிவிடவும் காரணமாக உள்ளது. இதனால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான வழக்குகளை விரைவாக விசாரித்து உரிய தண்டனையைப் பெற்றுத் தருவதில் தொடர்ந்து முட்டுக்கட்டைகள் நீடித்து வருகின்றன என்று சட்ட வல்லுனர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.