இலங்கை தலைநகர் கொழும்பு புறநகரில் வசித்தவர் மாக்சி காஸ்ட்ரோ (32). மந்திரவாதியான அவர் அப்பகுதியில் உள்ள ஒரு ஆசிரியரின் வீட்டிலிருந்து துஷ்ட ஆவியை விரட்டச் சென்றார். அதற்காக ஒரு பூனையை நரபலியிட்டார்.
பிறகு வீட்டருகே சிறிய குழிதோண்டி அதற்குள் சமாதியிலிருந்து மீண்டு வருவேன் என்றும், குழிக்குள் இருந்து வாளை நீட்டி சிக்னல் கொடுத்த பிறகே மண்ணைத் தோண்டவேண்டும் என்றும் கூறினார். அதுபோலவே குழிக்குள் அவரை வைத்து மண்ணைப் போட்டு மூடினர். 3 மணி நேரமாகியும் வாள் வெளியே தெரியவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் குழியைத் தோண்டியபோது மந்திரவாதி மயங்கிக் கிடந்தார். உடனே அவரை மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றனர். அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் கூறிவிட்டனர். இந்த விவரம் போலீசுக்குத் தெரியவரவே பிணத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்துகிறார்கள்.
இப்படி ஒரு செய்தி தினத்தந்தியில் வந்துள்ளது. சமாதியிலிருந்து மீண்டு வரலாம் என்று யாரோ சொன்னதைத் தவறாகப் புரிந்து கொண்டு செயல்பட்டுள்ளார் என்று தெரிகிறது.
சமாதியிலிருந்து உயிரை விடலாமே தவிர உயிரோடு மீண்டும் திரும்பிவர முடியாது. இதுவும் ஒரு வகையான தற்கொலை மாதிரித்தான். துறவிகள் இந்தத் தற்கொலையைச் செய்து கொள்வதால் அது சமாதி என்ற பெயரைப் பெற்றுக் கொள்கிறது.
மனிதர்களைப் போலவே துறவிகளுக்கும் சலிப்பு உண்டாகும். அந்தச் சமயத்தில் சமாதியாகப் போகிறேன் என்று பக்தர்களிடம் தெரிவித்து விட்டு, தனியறையில் போய் அமர்ந்து கொண்டு மூக்கைப் பிடித்து மூச்சை அடக்கி உயிரை விட்டு விடுவார்கள். இதற்கும் பெரிய மன உறுதி வேண்டும். என்றாலும் சில துறவிகள் பேர் வாங்கவேண்டும் என்பதற்காகவும் இப்படிச் செய்கிறார்கள். பொதுமக்கள் மத்தியில் தான் சமாதியாக வேண்டும் என்று நிபந்தனை ஏற்படுத்தினால் எந்தச் சாமியாராலும் சமாதி ஆக முடியாது. வாழ்க்கையில் விரக்தி அடைந்து தற்கொலை செய்து கொள்கிறவர்களில் சிலர் உயிர் போகவில்லை என்று தெரிந்தால் மூச்சை அடக்கி செத்துப் போவார்கள். எனவே சமாதி என்பது பெரிய ஏமாற்று வேலைதான்.
– தேன் தினகரன்