பெண்களை சீண்டும் காலி(வி)கள்
மும்பையில் வருடம் தோறும் விநாயகர் சதூர்த்தி முடிந்து 10 நாட்களுக்குப் பிறகு விநாயகரை ஊர்வலமாக எடுத்துச்சென்று கரைப்பது வழக்கம். சுற்றுப்புறச்சூழலை மிகவும் பாதிக்க வைக்கும் கடலில் கரைக்கும் விநாயகர் சிலைகளைத் தடைசெய்யக்கோரியும் எளிமையாக இந்த விழாவை நடத்தக்கோரியும் 1939-ஆம் ஆண்டு முதல் பல சமூக ஆர்வலர்கள், குரலெழுப்பி வருகின்றனர்.
ஆனால் மதவாதிகள் இதில் எதையும் காதில் போட்டுக்கொள்ளாமல் வருடம் தோறும் இந்த விழாவை சமூக நல்லிணக்கத்திற்கு அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்வதுமில்லாமல், தற்போது நாட்டின் பல நகரங்களிலும் இந்த ஆபத்தான கலாச்சாரத்தைப் பரப்பிக்கொண்டு இருக்கின்றனர். கடந்த 18-ஆம் தேதி விநாயகர் சிலை கரைப்பின் இறுதிநாள் ஊர்வலத்தில் பெண்களிடம் பாலியல் ரீதியாக துன்புறுத்தல் செய்யும் அசிங்கமான காரியம் நடைபெற்றுள்ளது. இது பல காலமாக நடந்து வந்தாலும் சமூகத்திற்கு அஞ்சி பெண்கள் வெளியில் சொல்வதில்லை. இது குறித்து விஜய் மானே என்ற பரேல் பகுதி சமூக ஆர்வலர் கூறியதாவது: வருடம்தோறும் விநாயகர் ஊர்வலத்தில் நூற்றுக்கணக்கான பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர்.
பெண்கள் இது குறித்து வெளியே சொல்வதில்லை. அப்படியே கூறினாலும் சிலர் இதை பெரிதுபடுத்தாமல் கூட்டத்தில் இதெல்லாம் நடக்கத்தான் செய்யும் அதைக் கண்டுகொள்ளக் கூடாது என்றும், இதை வெளியே சொன்னால் விநாயகர் ஊர்வலம் பற்றிய கெட்ட எண்ணம் பரவும் என்ற ரீதியில் இதை மறைத்துவிடுகின்றனர். போலீசாரும் இந்த 10 நாட்களாக சிறப்புப் படை என அமைத்து பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்குகிறோம் என்று கூறிவருகின்றனர். ஆனால் மும்பை லால்பாக் கணபதியின் ஊர்வலத்தில் நடந்த ஒரு சம்பவம் சமூகத்தையே தலைகுனிய வைத்துவிட்டது, இனிமேலும் இது போன்ற ஊர்வலங்கள் தேவைதானா என்று கேட்கும் அளவிற்கு அசிங்கப்பட வைத்துவிட்டது, மும்பை லால் பாக் விநாயகர், பல கட்டுக்கதைகளை வருடம் தோறும் பரப்பி விட்டு மிகவும் பிரபலமாக்கப்பட்ட கணபதியாகும். விநாயகர் ஊர்வலத்தின் இறுதிநாள் அன்று கூட்ட நெரிசலில் பல இளம்பெண்கள் மீது பாலியல் ரீதியான துன்புறுத்தல் நடைபெறுவதை தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று இரகசியமாகப் படம்பிடித்து வெளியிட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பெண்ணிடம் 4 சமூகவிரோதிகள் பாலியல் துன்புறுத்தலில் இறங்கியுள்ளனர். இது குறித்து இந்தப் பெண்ணோ அல்லது உடன் வந்தவர்கள் யாருமோ புகார் கொடுக்காத நிலையில் மும்பை போலீசார் தாங்களே முன்வந்து பொதுநல வழக்கும் பதிவு செய்து படத்தில் உள்ள சமூக விரோதிகளைப் பிடிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். மேலும், விநாயகர் சிலையை வணங்க வரிசையில் நிற்கும் பெண்களிடமும் பூசாரிகளே பெண்களின் அங்கங்களைத் தொட்டு அசிங்கமாக நடந்து கொண்டதை ஒரு தொலைக்காட்சி செய்தி நிறுவனம் நேரடியாக ஒளிபரப்பியது. கடவுளின் பெயரால் இது போன்ற விழாக்கள் நடத்தி பெண்கள் மீது தங்கள் வக்கிரங்களைக் காட்டும் சமூகவிரோதிகளுக்கு வசதிசெய்துகொடுக்கும் விநாயகர் ஊர்வலங்களை, இனி வரும் காலங்களில் தமிழகத்தில் தடைசெய்ய வேண்டும். இல்லையென்றால் இந்த அசிங்கமான செயல்கள் தமிழகத்திலும் ஈடேறும் காலம் வெகுதொலைவிலில்லை.
காவி ரிப்பன்களும்… புன்னகைக்கும் பிள்ளையாரும்!
சென்னை முழுக்க எங்கு பார்த்தாலும் அவர்கள் நிறைந்திருந்தனர். அவர்களை அடிக்கடி பார்க்க முடியாது. தலையில் காவி ரிப்பன். நெற்றியில் நீட்டித்து வைக்கப்பட்ட செந்தூர அல்லது குங்குமப்பொட்டு, கழுத்தில் காவித் துண்டு.. கண்கள் சிவக்க வேர்த்துக் கொட்டியபடி டெம்போவிலும் மினிலாரிகளிலும் பயணிக்கிற இவர்களை கடந்த சில ஆண்டுகளாக யானைமுகத்து விநாயகரோடு தரிசிக்க முடிகிறது.
இவர்களுக்குக் கடவுள் பக்தியெல்லாம் இருப்பதாகத் தெரியவில்லை. ஒரு விளிஙி விணிழிஜிகிலிமிஜிசீயோடு இயங்குகிற இளைஞர்களாகவே இவர்கள் இருக்கிறார்கள். கணபதியைக் கடலில் கரைப்பது தங்களுடைய ஜபர்தஸ்த்தைக் காட்டுகிற ஒரு நிகழ்வாக ஆண்டுதோறும் நடத்துகிறார்கள். இவற்றை நடத்துவதில் ஆர்எஸ்எஸ் இந்துமுண்ணனி மாதிரியான அமைப்புகளின் ஆதரவும் பண உதவிகளும் கணிசமாக இருக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் தங்கள் பலமென்ன என்பதைக் காட்டுவதற்கு விநாயகர் ஒரு கருவியாக இருக்கிறார். அவரும் இந்தக் காவி நாயகர்களோடு பயணிக்கிறார்.
இந்தப்பயணம் மிகவும் ஆபத்தானதாக இருக்கிறது. அவர்களுக்கல்ல நமக்கு.. நேற்று காசி திரையரங்க சிக்னல் அருகே குட்டியானை என்று அழைக்கப்படும் ஒருவித டெம்போ ஆட்டோவில் ஒரு பெரிய பிள்ளையாரும் சில பொறுக்கி பக்தர்களும் கடற்கரைக்குப் பயணித்துக் கொண்டிருந்தார்கள். டிஷர்ட்டும் ஷார்ட்ஸும் அணிந்த ஒரு குட்டிப்பெண் பதினைந்து வயது இருக்கலாம், அவள் அந்த டெம்போவை ஒட்டி தன் ஸ்கூட்டியில் முந்திச் செல்ல எத்தனித்தாள்… ஆட்டோவில் இருந்த வாலிபர்கள் முதலில் விசிலடித்தனர்,… பிறகு விநாயகர் மீதிருந்து பூக்களைக் கிள்ளி எறிந்தனர். அதற்குப் பிறகு அதில் ஒரு பொறுக்கி பக்தன் தண்ணீர்ப் பாக்கெட்டை எடுத்து அந்தப் பெண்ணின் மேல் பீய்ச்சி அடிக்கத் தொடங்கினான். அதோடு மோசமான வார்த்தைகளால் அந்தப் பெண்ணைப் பார்த்துக் கூறவும் ஆரம்பித்தான்.
அந்தப்பெண் ஏதோ பதிலுக்குத் திட்ட ஆரம்பிக்க.. ஆட்டோவை அந்தப் பெண் மேல் ஏற்றுவதைப்போல ஒடித்து ஓட்டுகிறார் ஆட்டோ டிரைவர். உதயம் தியேட்டர் அருகே நூறடிரோடு திரும்புகிற இடத்தில் அந்தப் பெண்ணை இடிப்பது போல ஓட்ட.. அந்தப் பெண் நிலைதடுமாறி அருகேயிருந்த தீயணைப்பு நிலையம் அருகிலிருக்கிற பஸ் ஸ்டாண்ட் அருகே தடுமாறி விழுந்தாள். பெரிய காயமில்லை.. விழுந்ததும் அருகில் பேருந்துக்குக் காத்திருந்த பயணிகள் உதவ ஆரம்பித்துவிட்டனர்.
ஆட்டோ கொஞ்சதூரம் போய்.. ஸ்லோவானது.. அங்கிருந்து, பெண் விழுந்ததைப் பார்த்து சிரித்தனர் பக்தர்கள். அதில் ஒருவன் சப்தமாகக் கத்த ஆரம்பித்தான். கணபதி பப்பா… மற்றவர்களும் அதையே சப்தமாகக் கத்த.. வண்டி அந்தத் திருப்பத்தில் காத்திருந்த பிள்ளையார் வண்டிகளின் நீண்ட வரிசையில் இணைந்தது.
இவர்களைப் பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்த நான் அந்த நீண்டவரிசையைப் பார்த்து அதிர்ந்துபோனேன். அங்கே இவர்களைப்போன்ற ஆயிரக்கணக்கான பக்தர்களும் கூடவே பிள்ளையாரும் சிரித்த முகத்தோடு அமர்ந்திருந்தனர். காவி எங்கும் வியாபித்திருந்தது. எல்லோர் கண்களும் சிவந்திருந்தது. அவர்களைப் பார்க்க ஒரு நீண்ட சண்டைக்காகக் காத்திருக்கிறவர்களைப்போல இருந்தது.
இந்தக் காவி ரிப்பன் பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்த வண்ணமிருக்கின்றது. அதோடு, இதில் இணைவோரில் கணிசமானவர்கள் இருபது வயதுக்கும் குறைவான இளைஞர்கள் என்பதும், இவர்கள் எல்லோருமே குடிப்பவர்களாக சின்ன தூண்டுதலிலும் ஆகப்பெரிய வன்முறையை நிகழ்த்திவிடுபவர்கள் என்பதும் அச்சத்தை ஏற்படுத்துகிறது.
விநாயகன் ஊர்வலத்தில் சந்தித்த அந்த டெம்போஆட்டோ இளைஞர்களின் முகத்தில், கண்களில் தெரிந்த வன்முறையை, அந்தப் பெண்ணின் மீது வன்மத்தோடு தண்ணீரைப் பீய்ச்சி அடித்து பகிர முடியாத வார்த்தைகளால் அர்ச்சித்த அந்த இளைஞனின் முகம் தூக்கத்திலும் பயமுறுத்தக்கூடியது… சாகும்வரை மறக்கவே முடியாதது.
_ ஆதிஷா வினோ, முகநூலில்.