விநாயகர் ஊர்வலம் என்றாலே மும்பைதான் நம் மனதில் நிழலாடும். உண்மையில் மும்பைக்கும் விநாயகருக்கும் பெரிய நூற்றாண்டுத் தொடர்பு இல்லை. சுயராஜ்யம் எனது பிறப்புரிமை என்று முழங்கிய பால கங்காதர திலகர், 1894ஆம் ஆண்டு பூனேவின் முதலாவது விநாயகர் ஊர்வல கமிட்டி ஒன்றை அமைத்தார் (Sarvajanik Ganeshotsav). அதுவரை மராட்டியப் பார்ப்பனர் மட்டும் விநாயகர் சிலையை வைத்து பூசை செய்து வந்தனர். பிறர் சிலையைத் தொடுவதற்குக் கூட அனுமதி இல்லை.
ஆங்கிலேயரை எதிர்த்துப் போராட மக்களைத் திரட்ட வேண்டுமென்றால் பெருந்திரளான மக்களைக் கூட்ட வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக பார்ப்பனர்கள் மட்டும் வழிபட்டு வந்த விநாயகரை நடுத்தெருவிற்குக் கொண்டு வந்து அனைவரும் வணங்கும் முறையைக் கொண்டு வந்தார்.
தந்தை பெரியார் கூறியதுபோல் திலகர் ஆங்கிலேய ஜார்ஜ் மோனோக்கிரசியை (மன்னராட்சி) விரட்டிவிட்டு பார்ப்பன ஆளுமையைக் (ப்ராமனோகிரசி) கொண்டுவரப் பாடுபட்டார். பார்ப்பனர்கள் எந்தக் காலத்தில் உடல் வலிக்க வேலை பார்த்துப் பழகியவர்கள்? அவர்கள் மத்திய ஆசியாவிலிருந்து வந்ததுமுதலே திராவிடக் குடிகளை அடிமையாக்கி அவர்களிடம் வேலைவாங்கிப் பழக்கப்பட்டவர்கள்தானே, அதேபோன்று ஆங்கிலேயர்களை விரட்டி மனுநீதி ஆட்சியைக் கொண்டுவர திலகர் ஏற்படுத்திய திட்டம் விநாயகர் ஊர்வலம். 1934ஆம் ஆண்டு மும்பை மேயராக இருந்தவர் குர்ஷித் பிரேம்ஜி நரிமன், இவர் சிறந்த சுற்றுப்புறச் சூழல் பாதுகாவலரும்கூட.
விநாயகர் சிலைகளை ஊர்வலமாகக் கொண்டு சென்று குளங்கள் மற்றம் கடலில் கரைப்பதால் இனி வரும் காலங்களில் மும்பையின் கடல்வளம் சீர்கெடும். அதை நம்பி வாழும் மீனவர்களின் வாழ்வாதாரம் அழிந்துபோகும். மேலும் சிலைகளில் பூசும் வர்ணங்களால் புதுவித நோய்கள் மக்களைத் தாக்கும், மத நம்பிக்கையைச் சீர்குலைக்கும் வகையில் இதைக் கூறவில்லை, மும்பை நகரின் எதிர்காலத்தை மனதில் கொண்டு இதைக் கூறுகிறேன். இதை மும்பை மாநகராட்சியில் 19.-10.-1936இல் அறிக்கையாக கொடுத்தார். விடுவார்களா சனாதனிகள், உடனே மதத்துரோகி என்று கூறி அவரைப் பதவியில் இருந்து தூக்கிவிட்டனர். ஆனால், சுதந்திரத்திற்குப் பிறகு மும்பையின் சுற்றுப்புறச்சூழலைக் காப்பாற்ற பல நல்ல திட்டங்களைக் கொடுத்தற்கு மதிப்பளிக்கும் வகையில் அவரின் பெயரை உலகில் பணக்காரப் பகுதிகளில் ஒன்றாகக் கருதப்படும் மும்பையின் மேற்குப் பகுதிக்கு நரிமன் பாய்ண்ட் எனப் பெயரிட்டு மரியாதை செய்தனர். அவர் அன்று கூறியது போலவே 70களிலேயே மும்பை கடற்கரைப்பகுதி மீன்வளம் காணாமல் போனது. காரணம் ப்ளாஸ்டர் ஆப் பாரீஸ் மற்றும் பல இராசாயன வேதிப்பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படும் பிள்ளையார் சிலைகளைக் கடலில் கரைப்பதால்தான் மீன்வளம் அழிந்தது, ஒரு நாள் நடக்கும் நிகழ்ச்சியினால் என்ன ஆகும் என்று கேட்கலாம். விநாயகர் சிலையின் மேல் உள்ள வண்ணம் பெட்ரோலியப் பொருளான வினையல் அக்ரலிக் பொருளால் தயாரிக்கப்படுகிறது, இதன் ஒரு லிட்டர் அளவு கூட சுமார் அரை கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட கடற்கரைப்பகுதியை நீண்டகாலமாக அசுத்தப்படுத்திவிடும். இந்தப் பெட்ரோலிய வண்ணப்பொருட்கள் நீரின் மூலக்கூறுகளுடன் கலந்து நீரின் அடர்த்தியை அதிகரிக்கிறது. விளைவு, கடற்கரை முழுவதும் உயிரோட்டமில்லாமல் போகவே மீன்கள் ஆழ்கடல் பகுதிக்குச் சென்று விடுகிறது.
இன்று மும்பை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இயற்கை குளிர்சாதன இயந்திரமான மாங்குரேவ் மரங்களை கடந்த 30 ஆண்டுகளில் 70% அழித்து விட்டது. மீன்வளம் என்பது மும்பைக் கடற்கரைகளில் இல்லாமல் போய்விட்டது. நான்குபுறமும் கடற்கரையைக் கொண்ட ஒரு பெருநகரத்தில்கூட மீன் உணவிற்காக குஜராத் பாகிஸ்தான் மற்றும் கேரளாவை நம்பி இருக்கவேண்டிய சூழல். மும்பை நகரின் மிகப்பெரிய அச்சுறுத்தல் என்னவென்றால் கடல்நீர் ஆவியாதல் மூலம் ஆக்சிஜனேற்றம் பெறப்பெற்ற எதலை க்ளைகோல் மழைமேகத்துடன் கலந்து மழையாக மீண்டும் பெய்து குடிநீர் தேக்கப்பகுதிகளில் கலக்கிறது. மும்பையில் உள்ள மிகப்பெரிய குடிநீர் ஏரியான வைதர்னா ஏரியில் உள்ள நன்னீர் மீன்களை ஆய்வு செய்தபோது அளவுக்கு அதிகமாக எதைல் க்ளைகோல் என்னும் ஆபத்து மிகுந்த வேதிப்பொருள் காணப்படுகிறது.
எதல் க்ளைகோல், இது அலங்காரப்பொருட்களை விரைவில் காயவைக்கவும் வழவழப்பாக வைப்பதற்கும் கலக்கப்படும் நச்சுவேதிப்பொருளாகும், நமது வீட்டுச் சுவற்றில் பூசப்படும் வண்ணம் விரைவில் காய்ந்து வழவழப்பை உருவாக்குகிறது என்றால் அதில் கலந்திருக்கும் எதைல் க்ளைக்கோல் தான் காரணமாகும். இது குடிநீர் மூலமாக மும்பை நகர மக்களின் உடலுக்குள் புகுந்துவிடுகிறது. எதைல் க்ளைக்கோலின் இதன் முதல்கட்ட அளவால் மும்பை நகரமக்களுக்கு சர்வசாதாரணமாக நெஞ்செரிச்சல், ஆஸ்துமா, தசை இறுக்கம், தலைவலி, நரம்புத் தளர்ச்சி போன்ற உடல் உபாதைகள் இருந்து வருகிறது. தற்போது எதைல் க்ளைக்கோலின் நிலை இரண்டாம் கட்ட அளவைத் தொட்டுக்கொண்டு இருக்கிறது. இதன் விளைவு சிறுநீரக நோய், இரத்த அழுத்தம், செரிமானம் குறைதல், உடற்கூற்று சிக்கலால் மும்பை நகரமக்கள் மெல்ல மெல்ல பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். 3ஆம் நிலையில் ஆண்மைக் கோளாறு மரபணு பாதிப்பு போன்றவைகளை உண்டாக்கிவிடும். மும்பை மாநகராட்சி சுகாதாரப்பிரிவு கடந்த 15 வருடமாக சுகாதாரம் தொடர்பான ஆய்வு மேற்கொண்ட போது இந்தச் சிக்கல்கள் பூதாகரமாக மாறிவருவது தெரியவந்தது. இந்த எதைல் க்ளைகோல் பரவுவதற்கு முக்கியக் காரணம் விநாயகர் சதுர்த்தி விழாவின் போது அலங்காரப் பொருட்களின் மேல் உள்ள வண்ணங்கள், அலங்காரத்திற்குப் பயன்படும் தெர்மாகோல், மற்றும் விநாயகர் சிலைகள் மீது பூசப்படும் வண்ணங்கள் போன்றவைகளின் மூலம் இந்த எதைல் க்ளைக்கோல் தண்ணீரில் கரைந்து ஆக்சிஜனேற்றம் பெற்று மிகவும் எளிதில் ஆவியாகி மழையாகப் பெய்து விரைவில் மக்களின் உடலில் சேர்ந்துவிடுகிறது. தாமதமாக விழித்த மும்பை மாநகராட்சி.
அன்று நரிமன் கூறியதை எதிர்த்த இந்து ஆதரவு அமைப்புகள் 1972இ-ல் சிவசேனாவாக உருவாகி இன்று மும்பை மாநகராட்சியை ஆள்கிறது. கடந்த 10 வருடங்களாக மேயர் சகன் புஜ்பால்(19-91) முதல் இன்றைய சுனில் பிரபு வரை விநாயகர் சதுர்த்தி வந்தாலே மக்களிடம் கொஞ்ச ஆரம்பித்து விடுகிறார்கள், வீட்டில் சிறிய கணபதி செய்யுங்கள், அதை வீட்டின் அருகிலேயே செயற்கைக் குளம் கட்டிக் கரையுங்கள், பெரிய கணபதிகள் செய்யும் போது அதில் செயற்கை வண்ணங்களைப் பூசாதீர்கள் என்று வேண்டாத குறைதான். தற்போது மும்பை மாநகராட்சி விநாயகர் சதுர்த்தி விழாவில் சுற்றுப்புறச் சீர்கேட்டைத் தடுக்க வலியுறுத்திப் பிரச்சாரம் செய்யவே ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் சுமார் 15 கோடிவரை செலவழிக்கிறது.
2010 முதல் தண்டமும் வசூலிக்கப்பட்டு வருகிறது, இருப்பினும் மக்கள் திருந்தவில்லை. தமிழகத்தைக் குறிவைக்கும் சுற்றுப்புறச் சீர்கேடு. ஆனால் கடந்த சில வருடமாக இந்த ஆபத்தான சிலைகரைப்பு ஊர்வலம் தமிழகத்தையும் தொற்றிக்கொள்ள ஆரம்பித்திருக்கிறது. இதற்கு ஒரு உதாரணமாக இந்த வருடம் மதுரை நகர ஆட்சியாளர் சிறப்பு விநாயகர் சிலைக்கரைப்பு பற்றி எந்த இடத்தில் சிலைகளைக் கரைக்கவேண்டும் என்று கூறி அறிக்கை விட்டிருக்கிறார். இதன் மூலம் சிலை கரைப்புக் கலாச்சாரம் எவ்வளவு வேகமாக தமிழகத்தில் பரவிவருகிறது என்று தெரியவரும்.
சென்னை நகரில் மும்பையைப்போல் மூலைக்கு மூலை பெரிய பெரிய விநாயகர் சிலைகளை வைத்து அவற்றை ஊர்வலமாக எடுத்துச்சென்று கடலில் கரைக்கும் முறை மெல்ல மெல்ல பெருகிவருகிறது.
இந்த சிலைக்கரைப்பின் போது தடைசெய்யப்பட்ட பகுதிகளில் ஊர்வலமாக சிலைகளை எடுத்துச்செல்வோம் என்று மிரட்டுவதும், குறிப்பிட்ட சமயத்தினரை ஊர்வலத்தின் போது வசைபாடுவதும் பிற சமயத்தினரின் நிறுவனங்களைத் தாக்குவதும், தொடர்கதையாகிக்கொண்டு இருக்கிறது. தமிழகத்திலும் நீண்ட நெடுங்காலமாக விநாயகர் சதுர்த்தி கொண்டாடி வருகின்றனர். சூற்றுப்புறச்சூழல் கேடில்லாமல் கொண்டாடி வந்த விழாவை காவிக்கும்பல் வேண்டுமென்றே தமிழகத்தில் பெரிய சிலைகளை வைத்து அதன் மூலம் சிக்கலை உருவாக்க முயன்று வருகிறது. தமிழக மீனவர்கள் சுதந்திரத்திற்குப் பிறகு தொழில்போட்டி இலங்கைக் கடற்படை பிரச்சினை போன்றவைகளால் ஆழ்கடல் செல்வதைத் தவிர்த்து கடற்கரைப் பகுதிகளில் காணப்படும் மீன்களை நம்பியே இருக்கவேண்டிய சூழலில் விநாயகர் சிலை கரைப்பு நிகழ்ச்சிகள் மும்பையைப்போல் இங்கும் தொடர்ந்தால் மீனவர்களின் வாழ்வாதாரமே அழிந்து போகும், ரியல் எஸ்டேட்காரர்களால் ஆக்ரமிக்கப்பட்ட குளம் மற்றும் ஏரிகளைத் தவிர்த்து மீதம் இருக்கும் நீர் நிலைகளில் விநாயகர் சிலைகள் கரைப்பு என்ற சடங்கு துவங்குமானால் தமிழகத்தில் நிலத்தடி நீர் மாசுபட்டு சுகாதாரச் சிக்கலை உருவாக்கிவிடும், கணபதி பப்பா மோரியா.
வடக்கே எதற்காக கணபதி பப்பா மோரியா என்று கூறிக்கொண்டு செல்கிறோம் என்று தெரியாமல் இருக்கும் போது தமிழக ஊர்வலத்தில் புதிதாக மோர்யா சத்தம் கேட்க ஆரம்பிக்கிறது, இந்த மோரியா என்பது 6-ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் விநாயகர் சிலையை எடுத்துவந்த போது மராட்டியத்திலும் நாக்பூரை ஆண்ட குறுநில மன்னர் திகம்பர்(இவர் சாளுக்கியர்களின் ஆளுமைக்கு உட்பட்ட குறுநில மன்னன் என யுவாங் சுவான் தனது பயணக்குறிப்பில் குறிப்பிடுகிறார்) என்பவரது மகன் மோரியன் என்பவர் கலிங்கத்தில் இருந்து விநாயகர் சிலை ஒன்றை எடுத்து வந்தான். அவன் வரும் போது கணபதி சிலையைக் கொண்டுவரும் மோரியா வாழ்க என்று கூறிக்கொண்டு அரன்மணை சேவகர்கள் பின் தொடர்ந்தனர். இந்தப் பழக்கம் அப்படியே தலைமுறை தலைமுறையாக வந்து கணபதி சிலைகளைக் கொண்டு செல்லும் போது கணபதி பப்பா மோரியா என்ற கோஷம் நிலைத்தது. இதை அப்படியே காப்பியடித்து தமிழகத்திலும் கணபதி பப்பா மோரியா சத்தம் கேட்கத் தொடங்கியிருக்கிறது. தமிழகத்தின் விநாயகர் ஊர்வலங்களும் கணபதி பப்பா மோரியா கோஷங்களும் ஆபத்தைக் கொண்டுவரும் எச்சரிக்கை சமிக்கைகள்தான்.