உலகில் பல அரசர்கள் மாறி மாறி ஆதிக்கம் செலுத்தியிருந்தாலும் மேற்குலகில் ஆதிக்கம் மாறாது ஆட்சி செலுத்திவருவது போப் எனப்படும் கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவர். வாடிகன் தான் உலக கத்தோலிக்க திருச்சபைகளின் தலைநகரம் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. போப் என்றால் தந்தை என்று பொருள். சரி இப்போது விசயத்திற்கு வருவோம். இந்தப் பதிவு போப் ஃபிரான்ஸிசின் சமீபத்திய ஒரு பேட்டியைக் குறித்தது என்பதால் கடந்த காலத்தில் வாடிகனில் நிகழ்ந்த, பதிவுக்குக் கொஞ்சமாய் சம்பந்தமுள்ள ஒரு சம்பவத்துடன் ஆரம்பிப்போம்.
17ஆம் நூற்றாண்டு அது. கிரகங்கள் மற்றும் சூரியனில் எதை எது சுற்றுகிறது என்றோ, அவை சுற்றுகிறதா, நிற்கிறதா என்றோ கூடத் தெரியாத ஆண்டு. பைபிளில், உலகம் நிலையாக இருக்கிறது. அதை ஆண்டவர் இறுக்கமான அடிவாரத்துடன் அமைத்து அசையாதிருக்கச் செய்திருக்கிறார் என்றும், சூரியன் உதித்து, மறைந்து பின் தன் இடத்திற்குச் சென்று விடுகிறது என்றும் கூறப்பட்டிருந்தது. பைபிளில் கூறியிருப்பதைத்தான் அந்தக் கால விஞ்ஞானிகளில் பலரும்கூட தீர்க்கமாக நம்பினார்கள். ஆனால் கோபர்நிகஸ் என்பவர் சூரியனை மய்யமாக வைத்து கிரகங்கள் சுற்றுகின்றன என்ற மாற்றுக் கருத்தொன்றை 16ஆம் நூற்றாண்டிலேயே வைக்க, அதை இத்தாலிய விஞ்ஞானி கலிலியோவும் தன் தொடர் ஆராய்ச்சிகளால், தான் கண்டுபிடித்த தொலைநோக்கிகளின் மூலம் உண்மை எனச் சொல்ல வாடிகன் சிட்டிக்கும் கலிலியோவிற்கும் பிரச்சினை ஆரம்பமானது.
அப்போதைய புகழ்பெற்ற விஞ்ஞானிகளான காசிமோ பொஸ்காலியா ஆகியோர் கூட கலிலியோவை அழைத்து இப்படி அட்வைஸ் செய்தார்கள், நீ சொல்றதெல்லாம் சரிதான்பா. தொலைநோக்கிய வச்சு சரியாதான் கண்டுபுடிச்சிருக்க. ஆனா பைபிளில் அப்படிச் சொல்லலையே.
1616இல் கோபர்நிகஸ் மீதான (அவரது தியரியைத்தான் தாக்க முடிந்தது. கோபர்நிகஸ் 16ஆம் நூற்றாண்டிலேயே செத்துவிட்டிருந்தார்) தேவாலயத்தின் தாக்குதல் உச்சக்கட்டத்தை எட்ட கலிலியோவை அழைத்து போப் அலுவலகம் கண்டித்தது. சரி இனிமே நான் அதை ஆதரிச்சுப் பேசமாட்டேன். சத்தியமா பேசவே மாட்டேன் எனச் சொல்லிவிட்டுச் சென்றும் விட்டார். இங்கே ஒரு சுவாரசியமான சம்பவம் நடந்தது. அப்போது கார்டினலாக இருந்த பார்பெரினி கலிலியோவிற்கு இந்த விசாரணையின் போது பல உதவிகளைச் செய்தார். இதே பார்னினிதான் போப் ஆனபிறகு பொதுச்சமூகத்தின் கோபத்திற்கும், தன் உயிருக்கும் பயந்து கலிலியோவிற்கு வாழ்நாள் சிறைத் தண்டனை விதித்தது! இதற்குப் பின் ஒரு மிகவும் சுவையான காரணமும் இருந்தது.
பின் 1633இல் போப் அலுவலகம் மற்றும் தேவாலயத்தின் அனுமதியுடன் தனது உலகின் முதன்மையான இரு முறைமைகள் என்ற தன் புத்தகத்தை வெளியிட்டார். இரு பெரும் அறிஞர்களுக்குள் நடக்கும் விவாதமாக இந்தப் புத்தகம் எழுதப்பட்டிருந்தது. அதாவது, சூரியன்தான் மய்யம் என்பதை ஒருவரும், பூமிதான் மய்யம் என்பதை ஒருவரும் விவாதிக்கும் வகையில் இருந்த புத்தகத்தில், பைபிள் கருத்திற்கு ஆதரவாகப் பேசிய கதாபாத்திரத்தின் பெயர் சிம்ப்ளிசியோ. முன்னதாக கலிலியோவை அழைத்த போப் பார்னினி, தன் கருத்துகளையும் புத்தகத்தில் சேர்க்குமாறு கேட்டுக் கொண்டிருந்தார். அதன்படி சிம்ப்ளிசியோவின் கருத்துகளாக அப்புத்தகத்தில் எழுதப்பட்டிருந்தவையில் பெரும்பாலானவை போப்பின் கருத்துகள். புத்தகம் வெளியானபின் அதைப் படித்த மக்களுக்கு சிம்ப்ளிசியோவின் கருத்துகள் மிகப்பெரிய முட்டாள்தனமாகத் தெரிந்தன. மற்றொரு கதாபாத்திரம் வைக்கும் தீர்க்கமான வாதங்களின் (அதாவது கோபர்நிகஸ் தத்துவத்தை ஆதரிக்கும் கலிலியோவின் வாதங்கள்) முன்னால் சிம்ப்ளிசியோவின் கருத்துகள் நகைச்சுவையாக இருந்தன. போப் பார்னினியால் இந்த அவமானத்தைத் தாங்க முடியாமல் கலிலியோவை விசாரணைக்கு அழைத்து வாழ்நாள் சிறைத் தண்டனையும் அளித்தார். இது, சில நாட்கள் கழித்து வாழ்நாள் வீட்டுக்காவலாக மாற்றப்பட்டது. பின் நடந்ததெல்லாம் எல்லோருக்கும் தெரிந்த வரலாறு. இதுபோல் ஏராளமான நகைச்சுவைகள் வாடிகன் தேவாலயத்தால் வரலாறு நெடுகே நடத்தப்பட்டிருக்கிறது. அதில் பல ரத்தச்சகதி நிறைந்தவை. சில நகைச்சுவை நிறைந்தவை.
இந்த மிகப்பெரும் வரலாற்றுத் தவறை 1992இல், அதாவது ஏறத்தாழ 350 ஆண்டுகளுக்குப் பின் போப் ஜான்பால் காலத்தில் வாடிகன் தேவாலயம் திருத்திக்கொண்டு அறிக்கை வெளியிட்டது தனிக்கதை.
இப்போது நம்மூரில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என திமுக அரசு இயற்றியவுடன் அலறிப் பதறி அந்தச் சட்டத்திற்கு எதிராக பார்ப்பனர்கள் வழக்குப் போட்டிருக்கிறார்கள் அல்லவா? அதைப் போல கத்தோலிக்கத் திருச்சபையிலும் ஒரு பிரச்சினை இருக்கிறது. பெண்கள் தேவாலயத்தில் உழைக்கலாம். கன்னியாஸ்த்ரிகள் ஆகலாம். கூட்டலாம். பெருக்கலாம். ஆனால், பாதிரியார் ஆக முடியாது!! (இந்து மதத்தில் மட்டும் பெண்கள் பூசாரிகள் ஆகலாமா எனக் கேட்காதீர்கள. பிற ஜாதி ஆண்களே ஆக முடியாதெனும் போது, பெண்கள் எங்கு போய் ஆவது?) இதுகுறித்து போப் ஃபிரான்சிஸ் சமீபத்தில் கொடுத்த பேட்டியில், பெண்கள் கண்டிப்பாக மதகுருமார்கள் ஆக முடியாது. அதைப் பற்றி ஏற்கெனவே போப் ஜான்பால் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். அதனால் அந்தக் கதவு நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது. என்று தீர்க்கமாகச் சொல்லியிருக்கிறார்.
ஏன் பார்ப்பனர்களைத் தவிர பிற ஜாதியினர் அர்ச்சகர்கள் ஆக முடியாது? ஏன் பெண்கள் மதகுருக்கள் ஆக முடியாது? இந்தக் கேள்வியை பாதிரியார்களிடமும், நம் ஊர் தீட்சிதர்களிடமும் கேட்டால் ஜாதி, தீட்டு என மொக்கைத்தனமான காரணம் எதையாவது சொல்வார்கள். ஆனால் கொஞ்சம் இந்த விஷயத்தை ஆழமாகச் சிந்தித்துப் பார்த்தால் உண்மையான காரணம் எது என்று விளங்கும்.
இந்து மதம் மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள எந்த மதமுமே ஆண்களால் கட்டமைக்கப்பட்டதுதானே. மதம் சார்ந்த கதைகளை எழுதியதும், புராணங்களை எழுதியதும் ஆண்களே. உதாரணத்திற்கு, தமிழனாகிய நாம் ஒரு கதையை எழுதுகிறோம் என வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு ஆங்கிலேயனையா முதன்மைக் கதாபாத்திரமாக உருவாக்குவோம்? நம் சினிமாக்களையே எடுத்துக்கொண்டாலும் ஆணாதிக்கம் நிறைந்த அந்த ஊடகத்தில் எத்தனை பெண் சார்ந்த கதைகள் வருகின்றன? விஷ்ணுவே ஆணாக இருந்ததும், தசாவதாரத்தில் அவரின் எல்லா அவதாரமும் ஆணாகவே இருந்ததும், தேவதூதர் இயேசுவே ஆணாக இருந்ததும், அவர் தேர்ந்தெடுத்த சீடர்கள் 12 (13) பேரும் ஆணாகவே இருந்ததும், சிவன்-பார்வதி சரிநிகர் என்றாலும் கோபம் வந்தால் பார்வதியை எரிக்க சிவனால் முடியும் எனப் புராணம் சொல்வதும், நபிகளும் ஆணாக இருந்ததும் எதேச்சையானதென்றா நினைக்கிறீர்கள்? (இயேசு ஏன் வெள்ளைக்காரராக இருக்கிறார்? இது தனி ட்ராக்!)
எந்த மதத்திலுமே பெண்களால் பாதிரியார்களாக, பூசாரிகளாக ஆக முடியாது (நம் ஊரில் வர்ண பேதம் என்னும் எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்கும் இருப்பதால் ஆண்களால் கூட ஆக முடியாது). மதத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள், கடவுளைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள். கடவுளைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள், அந்தச் சமூகத்தையே கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள்! அந்தக் காலத்தில் குடவோலை போன்ற ஜனநாயகத் திட்டத்திலெல்லாம் நம்பிக்கை வைத்திருந்த நம் ராஜராஜசோழன் போன்ற தமிழ் மன்னர்கள்கூட கடவுளின் புரோக்கர்களான பார்ப்பனர்களுக்கு அடிமையாய் இருந்து அள்ளி வழங்கிய பின்னணி இதுதான். இன்று அப்துல் கலாமில் இருந்து பிரணாப் முகர்ஜி வரை காஞ்சி காமகோடியைக் காண ஆளாய்ப் பறப்பதும் இதனால்தான். அதனால்தான் செல்வாக்கு நிறைந்த அந்தப் பிடியை எந்நாளும் அவர்கள் தளர்த்த விரும்புவதேயில்லை. நம் ஊரில் இன்னும் ஒரு படி மேலே போய், ஆண்கள் மட்டும்தான் கடவுளுக்குப் பூசை செய்வோம், அதிலும் குறிப்பிட்ட ஜாதி ஆண்கள் மட்டுமே பூசை செய்வோம் எனக் கூறுகிறார்கள். எல்லோரும் அர்ச்சகர்கள் ஆகலாம் என சட்டமியற்றினால் பதறித் துடிக்கிறார்கள், வழக்கும் போடுகிறார்கள்.
அனைவரும் சமம் எனச் சொல்லும் நம் சட்டமும், அதை நிறைவேற்றுவதற்காக இயங்கும் நீதிமன்றமும் பிறப்பை மய்யமாக வைத்து கடவுளை அவர்கள் தொட்டால் தீட்டு என்றால் வாதிடும் மடத்தனமான மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதே நகைமுரண். அதைவிடப் பெரிய நகைமுரண் ஒன்று இருக்கிறது. இட ஒதுக்கீட்டுக்கு எதிராக இல்லாத பொல்லாத கதைகளைக் கட்டும் ஊடகங்களும் சரி, அதை அப்படியே நம்பி செம்மறி ஆடுகளாய்த் தலையாட்டும் நம் ஆட்களும் சரி, ஒரு குறிப்பிட்ட சமூகம் மத விசயங்களிள் 100% இடஒதுக்கீட்டை அனுபவித்து வருவதைக் குறித்து எண்ணிப் பார்ப்பதேயில்லை!
அனைத்து ஜாதியினர் மட்டுமல்லாது அனைத்துப் பாலினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டம் இயற்றப்பட வேண்டும் என்பது என் தனிப்பட்ட கருத்து. மந்திரங்களை மனப்பாடம் செய்து கடவுள் முன் ஒப்புவித்து பக்தர்களிடம் காசு வாங்கும் மிக மிகக் கடினமான வேலையை எல்லோரும்தான் செய்யட்டுமே! என் வீட்டருகே இருக்கும் ஒரு எல்.கே.ஜி குழந்தை இந்தி ரைம்ஸ் மனப்பாடம் செய்து ஒப்பிக்க எவ்வளவு சிரமப்படுகிறது என்பதைப் பார்க்கும் போதுதான் நமக்காக இந்த அர்ச்சகர்கள் எவ்வளவு பாடுபடுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது.
இதிலே ஒரு நகைச்சுவையைக் குறிப்பிட வேண்டும். கருவறையில் கடவுளின் முன் அரங்கேற்றம் செய்யும் தேவநாதன்கள் பார்ப்பனர்களாய்ப் பிறந்த காரணத்தினாலேயே அர்ச்சகர் ஆகிவிட முடியும். ஆனால் ஒரு பிற்படுத்தப்பட்டவனோ, தலித்தோ ஆண்டாண்டு காலம் வெங்கடாஜலபதியை ஜபித்தாலும் அர்ச்சகர் ஆக முடியாது. வெங்கடாஜலபதிக்குத் தீட்டுப் பட்டுவிடும்!
இப்படி உலகெங்கிலும் மதகுருமார்கள் தங்கள் ஆளுமை போய்விடுமோ என்ற அச்சத்தில் பாகுபாடுகளை உருவாக்குவதிலும், அதைச் செவ்வனே காத்து வருவதிலும் குறியாக இருந்திருக்கிறார்கள், இருக்கிறார்கள்.
பெரும்பான்மை சமூகம் கடவுள், மத நம்பிக்கைகளில் திளைப்பதால் இவர்களின் பாகுபாடு வளர்க்கும் அபத்தங்கள் கண்டுகொள்ளப்படாமலே இருக்கின்றன. பெண்கள் அலுவலகத்தில் வேலை செய்யலாம், ஆனால் CEO போன்ற பெரிய உத்தியோகங்களில் அமரக்கூடாது என ஒரு நிறுவனத்தின் தலைவர் சொல்லியிருந்தால் இந்நேரம் உலகமே கொதித்திருக்கும் அல்லவா? ஆனால், ஒரு போப் அப்படிச் சொன்னால் அது வெறும் செய்தியாக மட்டுமே அமுங்கிவிடுகிறது.
ரோமின் போப் முதல் நம்மூரில் தட்சிணைத் தட்டேந்தும் கணபதி அய்யர் வரை தங்கள் பிடியைத் தக்கவைத்துக் கொள்ள படாதபாடு படுகிறார்கள். என்ன செய்ய? மக்கள் கடவுள்களை நம்புவதைவிட புரோக்கர்கள் மீதல்லவா மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்! நிலைமை இப்படி இருக்கும் வரை மக்கள் பாடும், கடவுள் பாடும் திண்டாட்டம்தான். மதத்தைத் தொழிலாகக் கொண்டவர்களுக்கு மட்டும் கொண்டாட்டம் தான்.