கேள்வி கேட்கும் இந்தி அல்லாத மாநிலங்கள்
தாய் மொழி, வடமொழி என்றெல்லாம் பேசினாலே திராவிட இயக்கங்கள் இப்படித்தான் பேசும் என்று கடந்து போய்விடுவார்கள் சிலர். ஆனால், பின்வரும் கட்டுரை ஆங்கில இதழான அவுட்லுக்கில் பிரணாய் சர்மா என்பவர் எழுதியது.
பெயரில் என்ன இருக்கிறது? இந்தக் கேள்வியை இந்திய கப்பற்படை விரும்பாது. அண்மையில் அய்.என்.எஸ். சிந்துரக்ஷக் என்ற நீர்மூழ்கிக் கப்பல் துண்டுதுண்டாக சிதறிப்போனது.
சற்று கூர்ந்து கவனித்துப் பார்த்தால் நமது பல கப்பல்கள், அவை உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டதாக இருந்தாலும், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டதாக இருந்தாலும் பெரும்பாலும் இந்துமதக் கட்டுக்கதைகளிலிருந்தோ சமஸ்கிருதத்திலிருந்தோதான் பெயரிடப்பட்டு உள்ளன.
1948லிருந்து புதுப்படைக் கப்பல்களுக்குப் பெயர் வைப்பதில் இந்தியா தனக்காக ஒரு கொள்கையை வகுத்திருந்தது. இந்தியாவில் தோன்றிய பெயர்களை அவை கொண்டிருக்க வேண்டும். அதன்படி இலகுரக கப்பல்கள் மலைகளின் பெயர்களையோ _ அதன் உச்சிகளின் பெயர்களையோ கொண்டுள்ளன. பெரும் போர்க் கப்பல்கள் தேசியத் தலைநகரங்களின் பெயர்களைக் கொண்டிருக்கும். தாக்கி அழிக்கும் கப்பல்கள் ஒரே முன்னெழுத்துக்களைக் கொண்டிருக்கும். பல ஆயுதங்களைக் கொண்ட விமானங்கள் ஆறுகளின் பெயர்களிலும், நீர்மூழ்கிக் கப்பல் தாக்கிகள் இந்திய ஆயுதங்கள் பெயரிலும், நீர்மூழ்கிக் கப்பல்கள் பல்வகை மீன்கள் பெயரிலும், புதைகுண்டுகள் அழிப்பான்கள், இந்திய மாநிலங்கள் பெயரிலும் அழைக்கப்படுகின்றன.
அரிஹந்த், விக்ரந்த் போன்ற பெயர்களை வடமொழியிலிருந்து எடுப்பது சில ஆண்டுகளாக இந்திய கப்பற்படை கடைப்பிடித்துவரும் முறைகளில் ஒன்றாகும்.
சில கப்பல்களின் பெயர்கள், சக்ரா, விக்கிரமாதித்யா, சிந்துகோஷ், சிந்துத்வாஜ், ஷங்குல், ஷால்கி, சங்குஷ், ஷிவாலிக், அய்ராவத், திரிசூல், நிர்பிக், வினாஷ், பிரபால் மற்றும் பிரளயா என்று உள்ளன. அவை முழுதும் வடமொழியே; சில மட்டும் இந்துக் கட்டுக்கதைகளிலிருந்து பெறப்பட்டுள்ளன. நமது ஏவுகணைகள் பிரித்வி, ஆகாஷ், திரிசூல், மற்றும் நாக் என்று பெயரிடப்பட்டுள்ளன. நமது போர் டாங்கி அர்ஜுன் என்றும் பல்முனைத் திறன் கொண்ட ஜெட் போர் விமானம் தேஜாஸ் என்றும் பெயரிடப்பட்டுள்ளது.
அண்டையில் உள்ள பாகிஸ்தான் மத அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்ட நாடு. கடந்த 60 ஆண்டுகளில் தனது இஸ்லாமியத்தனத்தைக் காட்ட அது தவறியதே இல்லை. நாட்டில் ஆயுதங்கள் முதலியவற்றிற்குப் பெயரிடும்போது, இந்தியாவின் மீது படையெடுத்த முஸ்லிம் மன்னர்களின் பெயர்கள் இடப்படுகின்றன. ஆனால் அவ்வாறு பெயர் வைக்கப்பட்ட மன்னர்கள் இந்துக்களை மட்டும் அல்லாது, ஏராளமான முஸ்லிம் குடிமக்களையும் வேதனைப்படுத்தியுள்ளனர்.
இந்தியா, பாகிஸ்தானின் செயல்களை ஒரு கண்ணாடி போல் பிரதிபலிக்க விரும்புகிறதா? இந்தியா அதிக அளவில் இந்துக்களைக் கொண்ட நாடாக இருக்கலாம். ஆனால் மதச் சார்பற்றதாக அறிவிக்கப்பட்டுள்ள ஒரு நாடு. இன்று பேசப்படும் பல மொழிகளுக்கு வடமொழி பெற்ற மொழியாக இருக்கலாம். ஆனால் நமது பல மொழிகள், வடமொழியுடன் சிறிதும் தொடர்பில்லாதவை. நவீன, மதச்சார்பற்ற, இந்தியாவை பல்வேறு கலாச்சாரங்களும் மொழிகளும், மதங்களும் உண்டாக்கியிருக்கின்றன. நாம் ஏன் நமது அறிவியலாளர்களின் சாதனைகளை, அவர்களது பெயர்களை வைத்துக் கவுரவப்படுத்தக் கூடாது? வடமொழியைப் பற்றி நாம் கொண்டுள்ள மயக்கத்திலிருந்து விடுபட வேண்டும்.
உண்மையில் மதச்சார்பற்ற பன்முக இந்தியாவின் உண்மையான கொண்டாட்டமாக, இனி நாம் நம் நாட்டிலேயே தயாரிக்கப்படும் ஏவுகணைத் தாங்கிகளுக்கு, பரந்த, ஆழமான சொற்களைக் கொண்ட ஒரு தொகுப்பிலிருந்து பெயர் பொறுக்குவோமாக.
மேற்கண்ட கட்டுரையில் குறிப்பிட்டுள்ளதுபோல கடற்படையில் மட்டுமல்ல; விமானங்கள், விண்கலங்கள், மத்திய அரசின் திட்டங்கள் என எல்லாமே சமஸ்கிருதப் பெயர்களுடனேயே உலா வருகின்றன என்பது கண்கூடு. அண்மையில் செவ்வாய்க் கோளுக்கு அனுப்பத் திட்டமிடப்பட்டுள்ள விண்கலத்துக்கு செவ்வாய் என்பதன் சமஸ்கிருதப் பெயரான மங்கள் என்று பெயரிடப்பட்டுள்ளது. திட்டங்களுக்கேற்ற பெயர்களை இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்டுள்ள அனைத்து மொழிகளிலும் சுழல் முறையில் ஏன் வைக்கக் கூடாது என்னும் கேள்வி இன்றைய இளைய தலைமுறையினரால் சமூக ஊடகங்களில் எழுதப்படுகிறது. இந்தி ஆதிக்கமும், சமஸ்கிருதத் திணிப்பும் பல்வேறு வழிகளில் நடப்பதை இன்று தமிழகம் மட்டுமல்லாமல் அனைத்து மாநிலங்களும் கவனித்து வருகின்றன. இதற்கென தனித்தனிக் குழுமங்களில் மொழிச் சமஉரிமைக்காக விவாதங்களும் நடக்கின்றன. இந்த உணர்வு வரவேற்கத்தக்கதேயாகும். இன்னும் இதை உணராமல் மத்திய அரசு செயல்படுமானால் வலுவான குரல்கள், போராட்டங்கள் எழும் என்பதே உண்மை.
– சமன், தமிழில் ராமதாஸ்