உலகம் எப்படித் தோன்றியது? படைத்தது யார்? உயிர்கள் தோன்றியது எப்படி? போன்ற பல வினாக்கள் நம்முன் தோன்றிக் கொண்டுதான் உள்ளன. இந்த வினாக்களுக்கு விடைதேடி விஞ்ஞானிகள் பலர் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.
இப்படி ஆய்வுசெய்துவரும் அமெரிக்க விஞ்ஞானி ஸ்டீவன் பென்னர், ஃப்ளோரன்சில் நடைபெற்ற 23ஆவது கருத்தரங்கில், மாலிப்டினத்தில் அதிக அளவில் ஆக்ஸிஜனேற்றம் நிகழ்ந்ததுதான் உயிரினங்கள் உருவாவதன் தொடக்கமாக இருந்தது. இந்த மாலிப்டினம் பூமியில் உயிர்கள் தோன்றிய காலத்தில் இருந்திருக்கவே முடியாது. காரணம், 300 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் மிகக் குறைவான அளவே ஆக்ஸிஜன் இருந்தது. ஆனால் அதே நேரம் செவ்வாய் கிரகத்தில் போதுமான அளவு ஆக்ஸிஜன் இருந்தது.
செவ்வாய் கிரகத்திலிருந்து பூமியில் வந்து மோதிய விண்கல்லால்தான் பூமியில் உயிர்கள் தோன்றியிருக்க முடியும் என்ற தத்துவத்துக்கு இந்த ஆதாரம் வலு சேர்ப்பதாக உள்ளது. உயிரிகள் உருவாக செவ்வாய்தான் பொருத்தமான கிரகம் என்றாலும், அவை பரிணாம வளர்ச்சியடைவதற்கு பூமி ஏற்ற கிரகமாக இருந்தது.
இந்த ஆதாரங்களிலிருந்து நாமெல்லோரும் செவ்வாய் கிரகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெளிவாகிறது. அங்கு உருவாகி, ஒரு பாறை மூலமாக பூமிக்கு வந்த உயிரிகளின் வழித்தோன்றல்கள்தாம் நாம் என்று கூறியுள்ளார்.