இவ்வளவுதான் ராமன் ‍‍- சு.அறிவுக்கரசு

அக்டோபர் 01-15

நினைவில் வைத்துக்கொள், இதையெல்லாம் நான் செய்தது உனக்காக அல்ல! உன் ஒழுக்கத்திற்கு ஓர் இழுக்கு ஏற்பட்டுள்ளது. உன் நடத்தை மீது மேகம் போன்ற சந்தேகப்படலம் படிந்துள்ளது. என் எதிரே நீ நிற்கிறாய், என்றாலும் உன்னைப் பார்க்க என் கண்களில் வலி ஏற்படுகிறது, ஒளிமிக்க வெளிச்சத்தைப் பார்க்க கண்கள் கூசுவதைப் போல!

 

உன் இஷ்டம் போல நீ எங்கு வேண்டுமானாலும் போய்க்கொள். பத்துத் திசைகளில் நீ எங்கு வேண்டுமானாலும் போ. என்னால் இனிமேல் உனக்கு ஒரு பிரயோசனமும் கிடையாது. அடுத்தவன் வீட்டில் ஓராண்டு அளவுக்குத் தங்கியிருந்த ஒருத்தியை எந்த நல்ல குடும்பத்து ஆணாவது நம்பிக்கை வைத்து வாழ்ந்திட விரும்புவானா?

நான் சூரிய குலத்தைச் சேர்ந்தவன். நான் தசரதனுக்குப் பிறந்தவன். ரகு குலத்தைச் சேர்ந்தவன். அதிலே நான் கர்வம் கொள்பவன். ராவணனின் மடியிலே படுத்துக்கிடந்த உன்னை நான் எப்படிச் சேர்த்துக் கொள்வேன்?

அந்த ராட்சசனிடமிருந்து உன்னை என் வீரத்தினால் மீட்டேன். என் புகழை நான் மீட்டெடுத்தேன். என் பெயரின் மீது கொஞ்ச காலமாகப் படிந்திருந்த களங்கத்தைத் துடைத்து எறிந்து விட்டேன். உன் மீது எனக்கு எவ்விதப் பிடிப்பும் கிடையாது. உன் மீது எனக்கு எவ்வித ஆசையும் கிடையாது.

என்னிடமிருந்து நீ இறுதி விடைபெற்று நீ விரும்பும் இடத்திற்குப் போய்க் கொள்ளலாம். நான் தீவிரமாக யோசனை செய்துதான் இந்த முடிவுக்கு வந்துள்ளேன்.

லட்சுமணன், பரதன், சுக்ரீவன், விபீஷணன் இந்த நான்கு பேர்களில் உன் ஆசையை வை. எனக்குக் கவலையில்லை. இவர்களில் யாரை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்துக் கொள். (சத்ருக்னனைச் சேர்த்து அய்ந்து பேர்களில் யாருடன் வேண்டுமானாலும் போய்க் கொள் என ராமன் கூறியதாக பம்பாயில் பதிப்பிக்கப்பட்ட ராமாயணத்தில் இருக்கிறதாம்.)

இந்த வாசகங்கள் ஏதோ புத்தகத்தில் யாரோ எழுதிய கீமாயணத்தில் வரும் வசனங்கள் என நினைத்து யாரும் விசனப்பட வேண்டாம். இவை அனைத்தும் ஏகபத்தினி விரதனாகக் கூறப்பட்டுப் போற்றப்படும் ராமனே பேசியவை. வால்மீகி ராமாயணத்தில் உள்ளவை. அதனை எடுத்துக்காட்டி ஆங்கிலத்தில் பேசிய வெள்ளிநாக்கு வலங்கைமான் சீனிவாச சாஸ்திரி மேற்கோள் காட்டியவை. எனவே, ராமபக்தர்களுக்கு விசனம் வேண்டாம்.

அவாளே சொன்னார்

ரைட் ஆனரபிள் வி.எஸ்.சீனிவாச சாஸ்திரி என்பவர் சென்னையிலிருக்கும் சமக்கிருத அகாடமியில் 5.4.1944 முதல் 8.11.1944 முடிய உள்ள காலத்தில் 30 பிரசங்கங்கள் செய்தார். இங்கிலீஷ் மொழியில், ஆங்கிலேயரே வியக்கும் வண்ணம் அருமையான உச்சரிப்புடன் பேசியவர் என்று அவாள் கூட்டம் போற்றிப் பேசும் சாஸ்திரியின் பேச்சு சுருக்கெழுத்தில் எழுதப்பட்டு, சரி பார்க்கப்பட்டு, நூலாக சமக்கிருத அகாடமியினரால் 1949இல் வெளியிடப்பட்டுள்ளது. ஆர்.நாராயண அய்யர்  I.C.S., கே. பாலசுப்ரமணிய அய்யர், டாக்டர் வி.ராகவன் முதலியோர் சரிபார்த்து அச்சிடப்பட்ட நூல் இது.

நூல் எப்போது வரும் என்று காந்தியார் கேட்டுக் கொண்டிருந்த பெருமை பெற்றதாம் இது.

அத்தகைய நூலில் கண்டுள்ள வைரவரிகள் இவை. 472 பக்கங்கள் கொண்ட இந்நூலில் இம்மாதிரி வசனங்கள் நிறைய பரவிக் கிடக்கின்றன.

அவற்றைப் படித்தால், ராஜாஜி ராமனைப் பற்றி எழுதிய எழுத்துகளைத் திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டிய கட்டாய நிலை எவருக்கும் ஏற்படும். சக்ரவர்த்தித் திருமகன் என்று 1956இல் எழுதிய ராஜாஜி, நூலின் 7ஆம் பக்கத்தில் எழுதியிருப்பார் – ராமன் கடவுளல்ல.

ராமன் கடவுள் அவதாரமல்ல. ராமன் தெய்வீக புருஷனுமல்ல. நற்குணங்கள் நிரம்பப் பெற்ற சிறந்த ராஜகுமாரன். அம்மட்டே என்று!

தொடக்கத்தில் கண்ட வசனங்களைப் படித்தால் ராமனை எவரும் சாதாரண மனிதன் என்றுகூட ஏற்றுக் கொள்ளத் தயங்குவர். தனி ஒருத்தியாக ஒரு மன்னனிடம் மாட்டிக் கொண்டு தவித்த அபலைப் பெண்ணிடம் இப்பேர்ப்பட்ட அபச்சார வார்த்தைகளைப் பேசிய மனிதன் அற்பனிலும் அற்பன் என்ற முடிவுக்குத்தான் வரவேண்டும்.

ராமாயணம் முழுக்கவும் இப்படிப்பட்ட வசனங்கள் நிறைய இருக்கின்றன என்பதை ரைட் ஆனரபிள் சாஸ்திரி எடுத்துக் காட்டிப் பேசியுள்ளார். ராம மாயை இனியாவது விலகட்டும்!

மனிதத் தன்மையே இல்லாமல்

கொஞ்ச காலம் அயோத்தியில் ராஜாவாக வாழ்ந்த ராமன், சீதையைப் பற்றி அபவாதப் பேச்சு நாட்டில் கிளம்பியதைக் கேள்விப்பட்டு அவளைக் காட்டுக்குத் துரத்தினான். சீதையைக் காட்டில் விட்டுவிட்டு வரும் பணியை லட்சுமணனிடம் ஒப்படைக்கிறான். வால்மீகி முனிவனின் பர்ணசாலையை அடைந்த நிலையில்தான் ராமன் தனக்குக் கொடுத்த தண்டனையைச் சீதை தெரிந்து கொண்டாள். அதிர்ச்சிக்கு ஆளான சீதை, லட்சுமணனிடம் தான் கருவுற்றி ருப்பதைப் பற்றிக் கூறி பெருத்த தன் வயிறைப் பார்க்குமாறு லட்சுமணனிடம் வேண்டுகிறாள். பார்த்த பிறகு அவளது நிலைபற்றி லட்சுமணன், தன் சகோதரன் ராமனிடம் பேசமாட்டானா என்கிற நப்பாசை. ஆனால் அவனோ அவளை ஏறெடுத்துப் பார்க்கத் தயாராக இல்லை. அவளின் முகத்தையோ உருவத்தையோ லட்சுமணன் பார்த்ததுகூடக் கிடையாதாம். அவன் பார்த்ததெல்லாம் சீதையின் கால் விரல்களில் அணிந்திருந்த மெட்டியை மட்டுமே தானாம். ஆகவே, அவன் சீதையிடம் கூறினான், நான் உங்களைப் பார்த்ததே கிடையாது. ராமன் இங்கே இல்லாத இந்த நேரத்தில் நான் உங்கள் உருவத்தைப் பார்த்த விசயத்தைத் தெரிந்து கொண்டால், ஏற்கெனவே உங்கள் மீது சந்தேகம் கொண்டிருக்கும் ராமன் மேலும் சந்தேகப்படுவானே! என்று மறுத்துவிட்டான். கடவுளாக, கடவுளின் அவதாரமாகக் கருதப்படும் ராமன் எவ்வளவு இழிவானவன் என்பதற்கு உடன் பிறந்தவனின் வார்த்தைகளே சாட்சியாக உள்ளனவே!

குரங்கினும் கீழான ராமன்

எந்த ராமபக்தரும் நியாயப்படுத்த முடியாத செயல், ராமன் வாலியை மரத்தின் பின்னால் பதுங்கி நின்று கொண்டு அம்பு எய்திச் சாகடித்தது. பேடித்தனமான சண்டையில் ஈடுபட்ட ராமனைக் கண்டனம் செய்து வாலி வசைமாரி பொழிந்ததாக வால்மீகி எழுதுகிறார். ஆமாம், நான் அப்படித்தான் கொன்றேன். ஆனால் நீ யார்? வெறும் குரங்குதானே! நானோ அரசன்! அரச தர்மப்படி எந்த விலங்கையும் மறைந்து நின்றோ, கண்ணி வைத்துப் பிடித்தோ கொலை செய்யலாம். உனக்குத் தெரிவித்துவிட்டுச் சண்டை போடவேண்டும் என்றோ, அவசியமில்லை. நீ எனக்குச் சமமான எதிரி அல்ல என்று வெட்டி வீராப்பு பேசுகிறான்.

ஆனால் ராம பக்தர்களிலேயே சிறந்த ராமபக்தன் அனுமன் என்பார்கள். அவன் கூறிய வார்த்தைகளாக ராமாயணம் கூறுவது வேறுவிதமாக அமைந்திருப்பதை சாஸ்திரி எடுத்துக் காட்டுகிறார். அனுமனுக்கும் ராவணனுக்கும் சண்டை நேருக்கு நேர் நடக்கிறது. அப்போது அனுமன் ராவணனைப் பலமாகத் தாக்குகிறான். அவனது பலத்தை மெச்சிப் பேசுகிறான் ராவணன். ராவணனின் புகழுரைக்கு அனுமன் நன்றி கூறிவிட்டுத் தொடர்ந்து கூறினான், என் தாக்குதலைத் தாங்கி இறக்காமல் இருக்கிறாயே, அதனால் எனக்கு அவமானம்தான் என்கிறான். கோபம் கொண்ட ராவணன் அனுமனை ஓங்கி ஒரு குத்துவிட்டான். அனுமனின் பொறி கலங்கியது. கண்கள் இருண்டன, காதுகள் பஞ்சடைத்து விட்டன. மயங்கிவிட்டான்.

அந்த நேரத்தில் ராவணன் தம் படைத்தலைவனான நீலனிடம் பேசத் தொடங்கினான். சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்து சுதாரித்துக் கொண்ட அனுமன், ராவணனைத் திருப்பித் தாக்கத் தயாரானான். ஆனால் நீலனுடன் பேசிக் கொண்டிருந்த ராவணனைப் பார்த்ததும், தாக்கும் நினைப்பைக் கைவிட்டுவிட்டுப் பேசினான். வேறு கவனத்தில் இருக்கும் ஒருவரைத் தாக்குவது முறையன்-று என்று கூறினான். எதிரி முழு கவனத்தையும் செலுத்த இயலாத நிலையில் அவனைத் தாக்க முயல்வது சரியல்ல என்ற நிலையை எடுத்த அனுமனின் செயலோடு ராமனின் செயலை ஒப்பிட்டுப் பார்த்தால் என்ன முடிவுக்கு வருவீர்கள். குரங்கு எனக் கூறப்பட்ட அனுமன், சத்திரிய குலத் தோன்றலான ராமனைவிட உயர்ந்து நிற்பது தெரியுமே! வாலி ராமனுடன் நேருக்கு நேர் சண்டையிடும் வாய்ப்பும் இல்லை; ராமன் அந்த இடத்தில் சண்டைக்குத் தயாராக இருக்கிறான் என்கிற விவரம்கூட வாலிக்குத் தெரியாது. ஆகையினால், மிகமிக மோசமான போர்முறையை ராமன் கையாண்டான் என்கிறார் ரைட் ஆனரபில் சாஸ்திரி!

தோலுரிக்கிறார் சாஸ்திரி

இந்த யுத்தத்தில் ராமன் கையாண்ட தந்திரம் அல்லது மோசடியை நியாயப்படுத்தும் நோக்கத்துடன்தானோ என்னவோ, எதிரியின் பலத்தில் பாதி வாலிக்கு வந்துவிடும் என்கிற கதையைக் கட்டிச் சேர்த்துவிட்டார்கள் என்கிறார் சாஸ்திரி. என்ன சமாதானம் கூறினாலும் வாலி வதையை நியாயப்படுத்த முடியாது என்று திட்டவட்டமாக எழுதியுள்ளார் ராஜாஜி, தன்னுடைய சக்கரவர்த்தித் திருமகன் நூலில்.! பேடித்தனமாகப் போர் செய்து வாலியைக் கொன்று அவன் வசம் இருந்த சுக்ரீவனின் மனைவி ரூமாவை அவள் கணவனிடமே ஒப்படைத்தான். இதற்காகத்தான் வாலி வதமே நடந்தது. உன் பெண்டாட்டியை நான் மீட்டுத் தருகிறேன், என் பெண்டாட்டியை மீட்க நீ உதவி செய் என்பதுதானே ராமன் சுக்ரீவனிடம் பேசிக் கொண்ட ஒப்பந்தம். அண்ணனாகவே இருந்தாலும் அடுத்தவனிடம், மனைவியாக வாழ்ந்தவளை (வைப்பாட்டியாக என்று சாஸ்திரி குறிப்பிடுகிறார்) எந்தவித முணுமுணுப்பும் இல்லாமல் தன்னுடன் சேர்த்துக் கொண்டான் சுக்ரீவன் என்கிறார். இருவரையும் சேர்த்து வைத்த ராமன் தன் மனைவி அப்பழுக்கற்றவள் என்று தெரிந்த போதிலும் கொடூரமாக நடந்துகொண்டான் என்ற அவனுடைய இரட்டை அணுகுமுறையைத் தோல் உரிக்கிறார்.

நீ எவ்வளவு பேரழகு பெற்றவள், தேவ மகள் போன்றவள் என்பது உனக்கே தெரியும். பூவுலகில் நீதான் பேரழகி. அந்த ராவணன் எவ்விதக் கட்டுப்பாடும் அற்றவன். ஒரு மிருகம் போன்றவன். ஓராண்டுக் காலம் அவனுடைய வீட்டில் அவன் தயவில் கிடந்த உன்னைக் கெடுக்காமல் விட்டிருப்பானா? அதற்கு வாய்ப்பு உண்டா? ஓராண்டுக் காலம் அவனைக் கட்டுப்படுத்திக் கொண்டு இருந்திருக்க முடியுமா? அபத்தம். நம்பவே முடியாது என்ற கடுஞ் சொற்களைக் கொட்டியவன் ராமன்.

அசோகவனத்தில் இருந்த சீதையின் நிலை பற்றியும் அவளது ஒழுக்கம் பற்றியும் ராமனின் நம்பிக்கைக்குரிய தூதுவனான அனுமனது வாய் வார்த்தைகளை ராமன் நன்றாகவே அறிவான். ஓராண்டுக் காலத்திற்கு சீதையைத் தொடக் கூடாது என்கிற சத்தியத்தை ராவணன் செய்து கொடுத்திருக்கும் விசயத்தை சீதை தெரிவித்திருந்ததை அனுமன் ராமனிடம் கூறியிருக்கிறான். அத்தோடு மற்றொன்றும் உள்ளது. இலங்கையிலிருந்து மீட்கப்பட்டதும் தன் தூய்மையைச் சீதை அக்னிப் பிரவேசம் செய்து எண்பித்திருந்தாள். அக்னிபகவான் அப்போது ராமனிடம், உன் மனைவியை ஏற்றுக்கொள், அவள் சுத்தமானவள், பாபம் செய்யாதவள் என்றெல்லாம் கூறி ஒப்படைத்தானே! நான் அவளைச் சந்தேகப்படவேயில்லை. அவளின் ஒழுக்கம் பற்றியும் எனக்குச் சந்தேகம் கிடையாது. தன்னிடம் இருக்கும் அக்னியாலேயே அவள் ராவணனை எரித்திருப்பாள். ராவணன்கூட தவறாகச் சீதையிடம் நடந்தால் தன் உயிர் போகும் என்பதை அறிந்தவன் தானே!

ஆனாலும் ஏன் கடும் சொற்களைக் கூறி சீதையைக் காட்டுக்குத் துரத்தினான்? நீ எங்கு வேண்டுமானாலும் போய்க் கொள் என்று கூறினான்? என்னால் உனக்கு எந்தப் பயனும் இல்லை என்று ஏன் கூறினான்? நீ செத்தாலும் நான் கவலைப்படமாட்டேன். உனக்கு என்ன நடந்தாலும் நான் கவலையே படமாட்டேன் என்று நிஷ்டூரமாக ஏன் பேசினான்? என்று அடுக்கடுக்காகக் கேள்விக் கணைகளைத் தொடுக்கிறார் சீனிவாச சாஸ்திரி.

ராமனைச் சாடினாள் சீதை

ராமன் கூறியவற்றையெல்லாம் மறுக்கிறாள் சீதை. ஓர் உத்தமமான மனைவியிடம் உத்தமமான கணவன் பேசக்கூடிய பேச்சா இவை என்று ராமனை நோக்கிக் கேட்கிறாள் சீதை. ராவணன் தன்னைத்  தொட்டபோது சீதை தன்னிலை இழந்தவளாக இருந்தாளாம். ராவணனைத் தொடவோ, தொட்டால் அவனது உணர்ச்சிகள் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ளவோ நான் அவனைத் தொடவில்லை. அப்படி ஒரு காரியம் செய்ய நான் நிர்ப்பந்திக்கப்பட்டேன். அப்படியிருக்க என்னைச் சாதாரண பெண்ணாக நினைத்துச் சாதாரணக் கணவனைப் போலப் பேசி விட்டாயே எனக் கேட்கிறாள்.

இப்படிப்பட்ட மோசமான நிலை சீதைக்கு ஏற்படுத்தப்பட்டது எதனால் தெரியுமா? சாஸ்திரியே சமாதானம் கூறுகிறார். அந்தக் காலத்தில் கணவனின் தனிச்சொத்துதான் மனைவி (PRIVATE PROPERTY). அவன் அவளை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற நிலை என்கிறார். பெண்ணே, உன் கதி இதுதானா, ராமராஜ்யத்தில்?

காட்டுக்குத் துரத்துவது என்கிற தனது முடிவையாவது வெளிப்படையாகத் தெரிவிக்கும் தன்மையாவது ராமனிடம் இருந்ததா? ஒருநாள் ரிஷிகளுடனும் ரிஷிபத்தினிகளுடனும் இருந்துவிட்டு வருவதற்காக அனுப்புவதாகக் கூறியிருக்கிறான். காட்டில் ஒருநாள் இருக்க வேண்டும் என்று சீதையே ஆசைப்பட்டதாகக் கூறியிருக்கிறான். இது பொய் அல்லவா?

ஆனால், லட்சுமணனிடம் மட்டும் சொல்லியனுப்பினான், காட்டில் கொண்டுபோய் விட்டுவிட்டு நீ உடனே திரும்பி வந்துவிடு என்று ரகசியமாகக் கூறியிருக்கிறான். இது நயவஞ்சகம் அல்லவா?

கடவுளாகவும், அவதாரமாகவும் பேசப்படுகிற ஒருவன் இவ்வளவு அயோக்கியத்தனமாக நடந்து கொள்ளலாமா?

தன் சகோதரர்களிடமும் மற்றவர்களிடமும் இதுபற்றி எதுவும் பேசக்கூடாது என்று வாய்ப்பூட்டு போடுகிறான், ராமன். இது தானே எல்லாம் எனும் அகங்காரத்தின் வெளிப்பாடு அல்லவா? தான்தோன்றித்தனம் அல்லவா? தலைக்கனம் பிடித்தவனின் செயல் அல்லவா?

சீதை மட்டும் யோக்கியமா?

புருஷோத்தமனான ராமன் இப்படிப் பேசினான் என்றால் அவன் தர்மபத்தினியாகிய லட்சுமியின் அவதாரமான சீதை பேசியதைப் பார்க்கலாமா? மாரீசன் எடுத்த மாயமானைப் பிடிக்க ராமன் போய் இருந்தபோது, வஞ்சகமாக ஓ, சீதா, ஓ லட்சுமணா என்கிற அபயக் குரலைக் கேட்ட சீதா லட்சுமணனிடம் கூறி ராமனைக் காப்பாற்றப் போகுமாறு கூறுகிறாள். ராமனின் உத்தரவுப்படி சீதையைக் காவல் காப்பதை விடுத்து வேறெங்கும் போகமாட்டேன் என்கிறான் லட்சுமணன். கோபம் கொண்ட சீதை அவனைப் பார்த்துக் கேட்கிறாள், என்னை அனுபவிக்கலாம் என்ற ஆசை உனக்கு இருக்கிறதா? அல்லது ராமனை அனுப்பிவிட்டு என்னைக் கொண்டுபோய் பரதனிடம் ஒப்படைக்க வேண்டுமென்று அவன் உன்னிடம் கூறியிருக்கிறானா? என்று நிஷ்டூரமாகக் கேட்டிருக்கிறாள். நான் என் உயிரை மாய்த்துக் கொள்வேன், கோதாவரியில் விழுந்து செத்துப் போவேன், கயிற்றில் சுருக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொள்வேன், உச்சியிலிருந்து கீழே குதித்துச் சாவேன், விஷம் குடித்துச் சாவேன் அல்லது தீக்குளித்துச் சாவேன் என்றெல்லாம் மிரட்டுகிறாள். அடிவயிற்றில் அடித்துக் கொண்டு அழுது அரற்றுகிறாள்.

வேறு வழியில்லாத லட்சுமணன், தன் கற்பைக் காப்பாற்றிக் கொள்ளக் கடமையை மறந்து சீதை இருக்குமிடத்தைத் துறந்து ராமனைத் தேடிப் போனான். ராமாயணக் கதைக்குக் கருவாக விளங்கும் காரியம் நடந்தது.

துடுக்குத்தனமாகப் பேசுவது லட்சுமியின் அவதாரமான சீதைக்குப் புதிது அல்ல. ராமன் காட்டுக்குப் போகவேண்டும் என்கிற நிலை  ஏற்பட்டபோது சீதையும் உடன் வரவேண்டும் என்று விரும்பினாள். ராமன் உடன்படவில்லை. ஆத்திரமடைந்த சீதை சொல்கிறாள். நான் ஒரு சத்திரியப் பெண்.

என் தந்தை உலகம் முழுவதும் தேடி உன்னைத் தன் மாப்பிள்ளையாகத் தேடிப் பிடித்தார். எனக்கு மிகவும் நல்ல கணவனாக இருப்பாய் என்று நினைத்த என் தந்தை ஒரு முட்டாள்.

அவர் தேடிப் பிடித்தவர் ஒரு பெண், கோழைப் பெண், ஆணைப்போல் உடை உடுத்தியிருக்கும் பெண் என்கிறாள். என்னதான் வருத்தம் மனதில் இருந்தாலும் கணவனை வேட்டி கட்டிய பெண் என வருணிப்பது என்ன நியாயம் என விளங்கவில்லை.

(தொடரும்…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *